துவர்ப்பும் இனிப்பும்- அசோகமித்திரன்

வெவ்வேறு காலகட்டங்களில் சுருக்கமான குறிப்புகளை எழுத்தாளர்கள் எழுதுவதுண்டு. நூல்களைப் பற்றிய மதிப்பீடுகள், தன்வாழ்வுக்குறிப்புகள், நினைவுப்பதிவுகள் என. இவை முன்பு அரிதாக இருந்தன. இன்று முகநூல்- வலைப்பக்கம் என்னும் வடிவங்கள் இந்தவகை எழுத்துக்கே உரியவை. ஆகவே இன்று அனைவருமே இவற்றை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். இவற்றை நூலாக ஆக்குவது அரிது, நூலாக்கினாலும் வாசிப்பு பெறுவதில்லை.

ஆனால் இச்சூழலிலும் எழுத்தாளர்களின் சுருக்கமான குறிப்புகளுக்கு முக்கியத்துவம் உள்ளது. அக்குறிப்புகள் அந்த எழுத்தாளரின் ஆளுமையைக் காட்டுகின்றன. அவருடைய ரசனையை, அவருடைய எண்ணப்போக்குகளை, அவருடைய வாசிப்புப்பரப்பை வெளிப்படுத்துகின்றன. அதனூடாக நாம் அவரை அணுகியறியமுடியும். எப்போதுமே ஓர் எழுத்தாளரின் ஆளுமையை அறிவது அவரது புனைவுலகை ஆராய்வதற்கு மிக உதவியானது

அசோகமித்திரன் எழுதிய 27 குறுங்கட்டுரைகளின் தொகுப்பு நர்மதா பதிப்பக வெளியீடான ‘நினைவோடை’. பெரும்பாலும் அவர் எழுதிவந்த சிற்றிதழ்களின் பக்கக்கணக்குக்குள் நின்று எழுதியிருக்கிறார். வாசித்த நூல்களைப்பற்றிய மதிப்புரைகளே பெரும்பகுதி. அஞ்சலிக்குறிப்புகள், இலக்கிய மதிப்பீடுகள், சினிமாக்களைப் பற்றிய நினைவுகள், பழங்கால நினைவுகள் என கலவையான பதிவுகள் இவை

குறைவாகச் சொல்லுதல் என்பதை அசோகமித்திரன் ஓர் இலக்கிய உத்தியாகக் கொண்டிருந்தார். அவருடைய இயல்புக்கும் அது ஒத்துவந்தது. அவருடைய குரலே மிகத்தாழ்ந்ததுதான். “டில்லியில் க.நா.சு. போன்று வேட்டிசட்டை அணிந்துகொண்டு பொதுப்பேருந்துகளை நம்பிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்களுக்கு வாய்ப்புகள் குறைவு” என்ற ஒற்றைவரியில் க.நா.சுவின் அந்நாளைய சித்திரத்தையும் அளிக்க அவரால் முடிகிறது.

க.நா.சு பற்றிய அந்தக் கட்டுரையில் தமிழகத்தில் க.நா.சு அவருடைய விமர்சனக் கருத்துக்களால் எப்படி தனிமைப்படுத்தப்பட்டார் என்பதை மிகச்சுருக்கமாக விவரிக்கிறார். அவருடைய ஒரு வரிகூட எங்கும் பிரசுரமாகமுடியாத நிலை உருவானது. எழுதியே வாழ்ந்த அவர் டெல்லிக்குச் சென்று ஆங்கிலத்தில் எழுதத் தொடங்கினார். அங்கும்  ‘தீவிர’ இலக்கியவாதிகள் அவருடைய எழுத்து பிரசுரமாகாதபடி செய்தார்கள் என்று அசோகமித்திரன் சொல்கிறார்.


“அனேகமாக எல்லா மணிக்கொடி எழுத்தாளர்களும் தீவிர எழுத்தாளர்களும் தீவிர பத்திரிகைகள் எல்லாரும் அவர் முதுகில் குத்திக்கொண்டிருந்தார்கள். இன்னொருவர் சார்பில் பணம் வாங்கிக்கொண்டு போய்விடுவார், பொய்சொல்லுவார், அவருடைய பட்டியல்கள் காலத்துக்குக் காலம் மாறிக்கொண்டிருக்கும் என்பதுபோன்ற குற்றச்சாட்டுக்கள் திரும்பத்திரும்ப சொல்லப்பட்டு நிறுவப்பட்டன” என்று அசோகமித்திரன் சொல்கிறார்.

அத்துடன் இடதுசாரிகளின் மூர்க்கமான எதிர்ப்பு. அவர் ராஜா ராம்மோகன் ராய் பற்றி ஒரு கட்டுரை எழுதினார். எளிமையான அறிமுகக் கட்டுரை. அது நன்றாக இருப்பதாக அசோகமித்திரன் அவரிடம் சொல்கிறார். “இடதுசாரிகளின் எதிர்ப்புக்கட்டுரை வரும் பார்” என்று க.நா.சு சொல்கிறார். அதைப்போலவே மட்டையடி எதிர்ப்புக்கட்டுரை, சாரமே அற்ற எதிர்ப்பு வருகிறது. “யார் யாரோ மிகப்பெரிய சமூகவிரோதச் செயல்களில் ஈடுபட்டிருப்பார்கள். லஞ்ச ஊழல் தலைவிரித்தாடும். அதெல்லாம் இவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. க.நா.சுவை மட்டம்தட்டவேண்டும், அவ்வளவுதான்” என்று அசோகமித்திரன் எழுதுகிறார்

அசோகமித்திரன் தமிழ்ச்சிற்றிதழ் சூழலுடன் ஒரு விலக்கத்தை தக்கவைத்துக்கொண்டவர். ஒருகட்டத்தில் மிக எளிய ஆணவப்பூசலாக சிற்றிதழியக்கம் மாறியது, அதில் சாரமான படைப்புக்கள் ஏதும் வரவில்லை என்று அவர் நினைத்தார். இக்கட்டுரைகளிலும் தமிழ்ச்சிற்றிதழ்ச்சூழல் பற்றிய அவருடைய மதிப்பின்மை  வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது.அவருடைய உளப்பதிவு பெரும்பாலும் உண்மை என்றே சொல்லவேண்டும்.

நகுலன் அசோகமித்திரனுக்கு அணுக்கமானவர். அவருடைய முதல்தொகுதியே ‘நான் எழுதலாம் என்று சொன்ன ராமநரசுவுக்கும் நான் எழுதுகிறேன் என்று சொன்ன நகுலனுக்கும்’ என்று எழுதித்தான் சமர்ப்பணம் செய்திருக்கிறார். நகுலன் இறந்தபோது அந்த தனிப்பட்ட இழப்பை ஒட்டி ஒர் உணர்ச்சிகரமான அஞ்சலிக்கட்டுரை எழுதியிருக்கிறார். சில நாட்களுக்குப்பின் நகுலனைப்பற்றி வந்த போலியான புகழ்மாலைகளைக் கண்டு எரிச்சலுற்றோ என்னவோ இன்னொரு கட்டுரை எழுதியிருக்கிறார். அது நகுலனை அவர் பார்வையில் கறாராக மதிப்பிட்டுச் சொல்வதாக உள்ளது.

முதல் கட்டுரை ’நகுலனுக்கு ஓர் இரங்கல்’ இரண்டாம் கட்டுரை ‘நகுலனுக்கு இன்னொரு இரங்கல்’. இந்த இரண்டாம் கட்டுரை நகுலன் ஒரு புனைவெழுத்தாளனாக கவிஞராக அடைந்த தோல்விக்கான இரங்கல்.அல்லது ஒரு வெற்றுப் பிம்பமாக அவர் மாற்றப்படுவதற்கு இரங்கல்.

‘ஜி.நாகராஜன் மறைந்தபோதும் ஏறக்குறைய இதேமாதிரியான சூழ்நிலை நிலவியது. அவ்வளவு உணர்ச்சிபூர்வமாக இரங்கல் தெரிவிக்கப்பட்டாலும் பின்னர் வேறு யாராவது ஒரு கட்டத்தில் அவரைப்பற்றி இலக்கியபூர்வமாக மேற்கோள் காட்டியதாக எனக்கு எட்டவில்லை. நகுலன் பற்றியு அப்படி நேர்ந்தால் வியப்பதற்கில்லை’ என்று அசோகமித்திரன் சொல்கிறார்.

நகுலனின் படைப்புக்களில் இலக்கணப் பிழைகள், வடிவப்பிழைகள் மலிந்திருக்கும், அவற்றை பதிப்பாளர் சரிசெய்தால்தான் உண்டு.பெரும்பாலும் அது நிகழ்வதில்லை. அவர் தன் ஆக்கங்களை இன்னொருமுறை படித்துப்பார்க்க வேண்டும் என தான் மன்றாடியதாகவும் நகுலன் செவிகொண்டதில்லை என்றும் அசோகமித்திரன் சொல்கிறார்

நகுலனை 1966 வாக்கில் முதலில் சந்தித்ததாக அசோகமித்திரன் எழுதுகிறார். “அப்போதே அவர் நடந்துகொண்ட விதம் பிரபலமான எழுத்தாளர் போல் இருந்தது. அதன் ஒரு காரணம் இன்று தெரிகிறது. எழுத்து இலக்கியவட்டம் இரண்டுமே குறுகிய வட்டத்தில் வெளியுலகைப்பற்றிய சிந்தனை வருவதே தரக்குறைவு என்ற மனப்பான்மையை வளர்த்தன. குறிப்பாக எழுத்து இதழ் அப்பத்திரிகை வட்டத்தில் இல்லாத எழுத்தாளர்கள், அவ்வெழுத்தாளர்கள் எழுதும் பத்திரிகைகள் எல்லாம் ஏளனத்துக்குரியவை என்பதை ஓர் இலக்கியப்போக்காகவே செய்துவிட்டது. நகுலனிடம் இந்த ஏளனப்போக்கு நிறையவே இருந்தது” என்று சொல்லும் அசோகமித்திரன் “பிறரைப்பார்த்து எள்ளி நகைக்கும்போது நீ என்ன பெரிதாகச் செய்துவிட்டாய் என்ற கேள்வி எழாதா?”என்று கேட்கிறார்

நகுலன் பற்றி அவருடைய சமகாலத்தவர் எழுதிய மிகக் கடுமையான விமர்சனம் அசோகமித்திரனின் இக்குறிப்பு. [ஏற்கனவே இந்த விமர்சனத்தையே நானும் எழுதியிருந்தேன், விரிவாக] ‘அவருடைய நாவல்களுக்கு நல்ல தொடக்கம் இருக்கும்.தொடக்கம்தான் நன்றாக இருக்கும் என்று சொன்னால்கூட தவறில்லை” என்கிறார். அவருடைய புனைவுலகின் சரிவுக்கு அவருடைய சுயமுனைப்பு ஒரு காரணம் என்று சொல்லும் அசோகமித்திரன் “பிறரை இவ்வளவு ஏளனத்துடன் பார்க்கும் ஒருவர் தன் சாதனைகள் என்ன என்பதையும் நினைத்துப் பார்க்கவேண்டாமா?” என்கிறார்.

நகுலனை அடுத்த தலைமுறையில் ஒருசாரார் செயற்கையாக பாராட்டுகிறார்கள் என்று கூறும் அசோகமித்திரன் அவர்கள் தங்கள் எண்ணங்களை அவர்மேல் சுமத்திவிடுகிறார்கள் என்கிறார். கட்டுரையின் முடிப்பு ஆச்சரியமானது. “இந்தச் சூழ்நிலை எனக்கு ருடாலி என்ற திரைப்படத்தை நினைவுபடுத்துகிறது” டுடாலி கூலிக்கு ஒப்பாரிபாடும் பெண்களைப் பற்றிய படம்.

அசோகமித்திரனின் விரிவான வாசிப்பை சுட்டும் பல கட்டுரைகள் இந்நூலில் உள்ளன. தமிழில் லத்தீன் அமெரிக்க எழுத்துக்களைப் பற்றி முதலில் எழுதியவர் அவரே என்று தோன்றுகிறது. எழுபதுகளிலேயே லத்தீனமேரிக்காவில் உருவாகிவரும் இலக்கிய அலையைச் சுட்டிக்காட்டி முக்கியமான எழுத்தாளர்களைப் பற்றி பேசி அவர்கள்மீதான தன்னுடைய வாசிப்பு சார்ந்த மதிப்பீடுகளையும் அசோகமித்திரன் முன்வைக்கிறார்

அமெரிக்க, பிரிட்டிஷ் எழுத்துக்கள் மீதும் அசோகமித்திரனுக்கு ஒரு தொடர்கவனம் இருந்திருக்கிறது. பெரும்பாலான எழுத்துக்கள் வெளிவந்த அவ்வாண்டே அவர் வாசித்திருக்கிறார். அதற்கான வாய்ப்புக்கள் அவருக்கு அமைந்தன, அவர் பெரும்பாலும் தூதரகங்கள் சார்ந்து வாழ்ந்தவர். அவர்களுக்கான மொழியாக்கங்களைச் செய்திருக்கிறார். தூதரகநிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருக்கிறார், நூலகங்களில் உறுப்பினராக இருந்திருக்கிறார். ஆகவே அன்று அரிதாக இருந்த நூலறிமுகங்கள் அவருக்கு வாய்த்தன.

இந்நூலில் கலையமைதி கூடிய பல கட்டுரைகள் உள்ளன. ஜெமினி நினைவுகள் எல்லாமே அழகான கதைகள். பழைய ஜெமினி தோழரான நரசிம்மராவை மீண்டும் சந்திக்கிறார் அசோகமித்திரன். கசப்பான நினைவுகளேகூட இனிமையான பரிசுகளாக முதுமையில் மாறிவிட்டிருப்பதை கண்டடைகிறார். [முப்பது வருடப் பழங்கதை]

சிகிந்திராபாதில் தந்தையுடன் இசைநிகழ்ச்சிகளை காணும் அனுபவம் இன்னொரு அழகான கவிதை. சிறிய கூடம். சற்று பிந்திப்போனால்கூட தூணுக்குப்பின்னால்தான் இடம் கிடைக்கும்.தலையை ஆட்டி ஆட்டி பாடுபவரை பார்க்கவேண்டும். அந்த கட்டுரை கச்சேரிநடுவே பேசுவது, கச்சேரியில் சைகைகள் செய்வது போல பாடகர்கள் உருவாக்கும் தடைகளைப் பற்றியது. இயல்பாக அந்த தூணை படிமமாக ஆக்க கலைஞனால் இயல்கிறது

சதன் ஹுசெய்ன் மன்றோ, அம்ருதா ப்ரீதம், மதர் இந்தியா பாபுராவ் பட்டேல் போன்ற ஆளுமைகளைப் பற்றிய குறிப்புகளும் புனைவிலக்கியச் சாயல்கொண்டவை. அவருக்கு அவ்வெழுத்தாளர்களின் ஆளுமைமீதுதான் ஆர்வம்.அதை ஓரிரு சித்திரங்கள் வழியாக உருவாக்கிக் காட்டுகிறார்.ஒரே ஒரு உயர்தர மதுப்புட்டிக்காக திரைக்கதையை விற்கும் மன்றோவும் சரி, சிகரெட்டை அனலில் இருந்து அனல்பற்றவைக்கும் அம்ருதா பிரீதமும் சரி, அவர் வரைந்துகாட்டும் விரைவோவியங்கள்.

அசோகமித்திரனின் வாசகர்களுக்கு சலிப்பில்லாத வாசிப்பனுபவத்தை அளிக்கின்றன இக்கட்டுரைகள். அவருடைய ஆளுமையில் ஒரு சிறு கரிப்பு இருந்துகொண்டிருக்கும். கூடவே மிகமென்மையாக உருவாகும் கவித்துவத்தின் இனிப்பும்.அவர்  மறைந்துவிட்டபின் அவருடன் அமர்ந்து இலக்கிய உரையாடலை நடத்தும் அனுபவத்தை தருகிறது இந்நூல்.

நினைவோடை அசோகமித்திரன்

முந்தைய கட்டுரைவிளைநிலத்தில் வாழ்வது-கடிதம்
அடுத்த கட்டுரைமூன்று எழுத்தாளர்கள்- வெண்முரசு