புலிக்காலடி

நித்யாவால் எனக்கு தனிப்பட்ட பயில்வுக்காக அளிக்கப்பட்ட நூல் ஒன்று உண்டு. பொதுவெளிக்குரியது அல்ல. கைப்பிரதியாகவே எழுதி எடுக்கப்பட்டு என்னிடம் நைந்த காகிதங்களாக உள்ளது. அதில் ஒரு வரியில்  ஐயம் தோன்றியது. வியாஹ்ரபாதம் என்னும் சொல்லாட்சியை மேலும் அறிய நினைத்தேன். அதை தமிழில் புலிப்பாணி என்று மொழியாக்கம் செய்யலாம்.

இந்துத் தொன்மத்தில் உள்ள ஒரு முனிவர் வியாஹ்ரபாதர். புலியின் காலடிகள் கொண்டவர்.மகாபாரதத்தில் இந்த முனிவரின் பெயர் வந்துபோகிறது, இவருடைய மைந்தர்தான் உபமன்யூ.

இந்து படிமவியலில் வியாஹ்ரபாதர் தூண்களில் செதுக்கப்பட்டிருக்கும் பல பொது உருவங்களில் ஒன்றென தென்படுகிறார். சிவனை வழிபட்டபடி நின்றிருக்கிறார். பெரும்பாலும் மானுட உருவும் புலிக்காலடிகளும் கொண்டவர். அரிதாக இடைக்குக்கீழே புலியாகத் திகழ்கிறார்

கேரளத்திலும் ,தமிழ்நாட்டிலும், கர்நாடகத்தின் தெற்கிலும், ஆந்திராவின் தெற்கிலும் மட்டுமே புலிப்பாணி முனிவருக்கு குறிப்பிடத்தக்க இடம் இருக்கிறது. அதாவது திராவிடச் சிற்பக்கலையில். வட இந்தியாவில் அரிதாகப் பார்த்திருக்கிறேன். ஆனால் வட இந்தியாவின் தொன்மையான பேராலயங்கள் எவையும் இன்றில்லை என்ற நிலையில் அங்கே இச்சிற்பம் எந்த அளவுக்கு முக்கியமானதாக இருந்துள்ளது என்பதைச் சொல்லமுடியாது.

கேரளத்தின் புகழ்பெற்ற பேராலயமான வைக்கம் சிவன்கோயில் வியாஹ்ரபாத முனிவரால் உருவாக்கப்பட்டது என்று தொன்மம்.தமிழகத்தில் திருச்சி அருகே உள்ள திருப்பட்டூர் என்னும் ஊரில் வியாஹ்ரபாத வாழ்ந்து அங்கேயே மெய்நிறைவடைந்தார் என்றும், அவருடைய நிறைவிடம் அங்கு சிறு அணிக்காடாக அமைக்கப்பட்டது என்றும் நம்பிக்கை உள்ளது. சிதம்பரத்திலும் வியாஹ்ரபாதருக்கு வழிபாடு உள்ளது.

தமிழகத்தில் பெரும்பாலான சிவப்பேராலயங்களில் வியாஹ்ரபாதருக்குச் சிலைவடிவம் உள்ளது. பொதுவாக தூண்களில் புடைப்புச்சிற்பமாக திகழ்கிறார்.  பெரும்பாலான தமிழக ஆலயங்களில் பதஞ்சலி முனிவரும் வியாஹ்ரபாத முனிவரும் இரட்டையராகவே செதுக்கப்பட்டிருக்கிறார்கள். பதஞ்சலி முனிவர் இடைக்குக் கீழே நாக உடல்கொண்டவர். பாம்புச்சுருள்களின்மேல் உடலெழுந்து கைகூப்பி நின்றிருப்பவர்.

தமிழகத்திலுள்ள வியாஹ்ரபாதத் தொன்மம் மிகப்பிற்காலத்தையது எனத் தெரிகிறது.என்ன என்று தெரியாத ஒரு சிற்பத்தை எளிய பக்தர்களுக்கு விளக்கும் ஒரு குழந்தைக்கதை. அதன்படி வியாஹ்ரபாதர்  மத்யந்தனர் என்னும் முனிவரின் மைந்தர். அவருக்கு மழன் என்று பெயரிடப்பட்டது. [இந்தப்பெயர்கள் இந்துத் தொன்மக் கலைக்களஞ்சியங்களில் காணப்படவில்லை].

மழன் தன் மெய்நிறைவுக்கான வழி என சிவபெருமானுக்கு அணிசூட தொடப்படாத மலர்களை பறித்து அளிக்கும் கடமையை தலைக்கொண்டார். தேனீயும் தொடாத மலர்களை தேடிச்சென்றார். அவற்றை பறிக்கப்போகும்போது முட்கள் காலில் குத்தின. மரங்களில் ஏறமுடியவில்லை. ஆகவே சிவனை வேண்ட அவர் புலியின் காலடிகளை அளித்தார். மலர்க்கொடையின் வழியாக அவர் அமரநிலை அடைந்து விண்ணுலகில் சிவனடியில் அமரலானார்.

தமிழகத்தில் புலிப்பாணிச் சித்தர் என்னும் சித்தர் ஒருவரைப்பற்றி கதை உள்ளது. அவர் போகரின் மாணவர் என்றும் பழனி நவபாஷாணச் சிலையை போகருடன் இணைந்து செய்தார் என்றும் கதை. அவர் இயற்றிய நூல்களாக புலிப்பாணி வைத்தியம்,,புலிப்பாணி சோதிடம்,புலிப்பாணி ஜாலம்,புலிப்பாணி வைத்திய சூத்திரம் ,புலிப்பாணி பூஜாவிதி,புலிப்பாணி சண்முக பூசை,புலிப்பாணி சிமிழ் வித்தை,புலிப்பாணி சூத்திர ஞானம்,புலிப்பாணி சூத்திரம் ஆகிய நூல்கள் குறிப்பிடப்படுகின்றன.

ஆனால் அவையெல்லாமே மிக அண்மைக்காலத்தைய நூல்களாக தெரிகின்றன. பெரும்பாலும் ஆழமற்ற நாட்டார்ப்பாடல்களாகவும் உள்ளன. அவை பிற்காலத்தில் இயற்றப்பட்டு அவர்மேல் ஏற்றப்பட்டவை என்று நினைக்கிறேன். அவற்றில் எவை தொன்மையானவை என ஆய்வாளர்களே சொல்லமுடியும். ஆனால் சித்தர்பாடல்களுக்கு மூலச்சுவடிகள் இல்லை என்னும் நிலையில் ஆய்வாளர்கள் அவற்றை பொருட்படுத்துவதில்லை.

புலிப்பாணிச் சித்தர் பற்றிய சித்தர்மரபின் கதையும் ஒருவகையான பொதுப்புனைவே. பழனி நவபாஷாணச் சிலையை போகர் செய்துகொண்டிருந்தபோது குடிக்க நீர் கேட்டார் என்றும் உடனே புலிப்பாணிச் சித்தர் புலிமேல் ஏறிச்சென்று தண்ணீர்கொண்டு வந்தார் என்றும் ஆகவே அப்பெயர் வந்தது என்றும் கதை. இவர் பொற்கொல்லர் மரபைச் சேர்ந்தவர் என அக்குலத்தார் சொல்கிறார்கள்.

பின்னாளில் மகாபாரதத்தில் வரும் வியாஹ்ரபாதரின் கதையையும் இந்த வியாஹ்ரபாதரின் உருவத்தையும் இணைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் கதைகள் மிகக்குறைவாகவே உள்ளன.

மொத்தத்தில் என்னவென்றே தெரியாத ஒரு சிலைப்படிமத்தைக் கண்டு அதை பல்வேறுவகையில் பக்திக்குள்ளும், நாட்டார் மரபுக்குள்ளும் வைத்து எளிமையாக விளக்கமுயன்றுள்ளனர் என்று தெரிகிறது. பெரும்பாலான ஊர்களில் பதஞ்சலி முனிவரும் வியாஹ்ரபாதரும் இணைந்தே இருப்பது அவ்விரு உருவங்களும் யோகமரபைச் சேர்ந்தவை என்பதற்கான சான்று.

ஆலயங்களில் வெறுமே அந்த படிமங்கள் செதுக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை.பண்டைய யோகமரபில் முதன்மையானவையாக அவை இருந்திருக்கலாம். அந்த யோகமரபு மாபெரும் பக்திமரபால் பின்னடைவைச் சந்தித்து, சிறுகுருநிலைகளுக்குள் அடங்கி, காலப்போக்கில் மருவி மறைந்தது. அச்சிலைகள் மட்டும் எஞ்சின. அவற்றை இப்படி பொருள்கொள்கிறார்கள்.

வியாஹ்ரபாதர் சைவத்தின் நந்திநாத மரபைச் சேர்ந்த சிலை என்று ஆய்வாளர் சொல்கிறார்கள். இது தென்னிந்தியாவில் வளர்ந்த ஒரு சைவ மரபு. சைவ யோகமரபு என்று சொல்லலாம். திருமூலர் இம்மரபைச் சேர்ந்தவர். திருமூலர் திருமந்திரத்தில் சிவனை நந்தி என்று குறிப்பிடுவது எண்ணற்குரியது.

வைக்கம் ஆலயம் நந்திநாத மரபைச் சேர்ந்தது என்பார்கள். பல சைவ ஆலயங்கள் இவ்வாறு வெவ்வேறு சைவ யோகமரபுகளைச் சேர்ந்தவை. அவை ஆகம வழிபாட்டுக்குள்ளும் பக்திமுறைக்குள்ளும் வந்தபோது அவற்றின் யோகமரபு சார்ந்த அடிப்படைகள் மறைந்தன. அந்த யோகமரபின் குறியீடுகள் சிற்பக்கலையில் மட்டுமே நீடித்தன. பொருளறியாச் சிற்பங்களாக எஞ்சின. எளிய கதைகள் வழியாக அவை விளக்கப்பட்டன.

இன்று இந்த அடையாளங்கள் பற்றிய ‘விளக்கங்கள்’ ‘ஆய்வுகளுக்குள்’ நுழைவது என்பது மண்டையை உடைக்கும் ஓர் அறிவாணவச் செயல்பாடு. ஒவ்வொருவரும் அவரவர் சார்ந்திருக்கும் கொள்கையின்படி இழுப்பார்கள். அதில் நான் ஈடுபடுவதில்லை.

உலகமெங்கும் விலங்கும் மனிதனும் கலந்த உருவம்கொண்ட தெய்வ வடிவங்கள் உள்ளன. கிரேக்க மதத்திலும் ஆப்ரிக்கமரபிலும் புலிக்காலடிகள் கொண்ட தெய்வங்களென்ன என்று தேடலாம்—ஆனால் அப்படித் தேடுவது நான் கொண்டிருக்கும் அகப்படிமத்தை குலைத்துவிடும் என நினைத்தேன். எனக்கு அதை வரலாற்றில்வைத்து அறிய, மானுடவியல் வழியாக வரையறைசெய்ய உளமில்லை. என் தேவை வேறு

இத்தகைய உசாவல்களை ஒருவகையில் உள்ளுக்குள் ஒரு கொடித்தளிர் நுனியின் தவிப்பாக வைத்துக்கொண்டிருப்பதே உகந்தது. என்றோ எங்கோ சொல் தேடிவந்து நம்மைத் தொடும். அப்படி ஒரு விடையை இன்று கண்டடைந்தேன். “ஏலே ஆனைக்கு அடிசறுக்கும், புலிப்பாதம் தவறுமாலே?” என்று ஒரு சொலவடை செவியில் விழுந்தது. திகைத்து நின்றுவிட்டேன்.

வங்கிக்குச் செல்லும் வழியில், நட்டநடு சாலையில், உச்சிவெயிலில், மீன்சந்தையின் விளிம்பில் நின்று ஒரு கிழவர் இன்னொருவரிடம் சொல்லிக்கொண்டிருந்தார். நல்ல போதை வேறு. வெயிலில் கறுத்து சுண்டிய வற்றல்முகம். மெய்ஞானியர் எங்கே எவ்வுடலில் தோன்றுகிறார்கள் என்று எவர் அறிவார்?

குமரியின் பழமொழிகளில் ஒன்றாக இருக்கலாம். அதற்குமேல் அவர் தான் எந்த அளவுக்கு தேர்ந்த கொத்தனார் என்றும் தன்னை ஏமாற்றியவனை எப்படியெல்லாம் பழிவாங்குபவர் என்றும், எவருக்கும் அஞ்சாத ரஜினிகாந்துதான் அவர் என்றும் சொல்லத் தொடங்கினார். மீன் பார்ப்பவன் போல நின்று செவிகூர்ந்தேன். வேறேதும் வருகிறதா?

கிட்டத்தட்ட மெய்விதிர்ப்பை அடையும்படி அடுத்தவரி வந்தது. “லே தாயளி, பாம்புக்கு தேகத்திலே தடம் கேட்டுக்கோ”. எங்கேனும் அமர்ந்துவிடவேண்டும் என்று தோன்றுமளவுக்கு உடல் தளர்ந்துவிட்டேன். அருகிருக்கும் டீக்கடையில் டீ குடித்தேன்.

வங்கிக்குச் சென்று வியர்வை வழிய திரும்பி நடக்கும்போது அந்த இருவரிகளையும் நினைத்துக்கொண்டேன். புலியின்பாதம்! பாம்பின் உடல்! புலியால் நீந்தமுடியும், பாயமுடியும், மரமேறமுடியும். எங்கும் எப்போதும் புலிப்பாதம் பிழைபடுவதில்லை. கண்ணை காலாக்கியது புலி. பாம்பின் உடலே அதன் வழி. பாம்பே ஒரு பாதையின் வடிவம்கொண்டதுதான். அதன் தடமே அது.

புலிப்பாணிக்கும் பதஞ்சலிக்கும் இதைவிடச் சிறந்த விளக்கம் இருக்கமுடியுமா என்ன? அவ்வுருவங்கள் ஒரு கவியுருவகங்களாக நம்மில் எப்படி விரிகின்றன என்பது அல்லவா முதன்மையாக நாம் கருதவேண்டியது. பிழையற்றிருத்தல், பயின்று அறிந்தவையே ஆகமாகவும் அகமாகவும் ஆகிவிடுதல். யோகத்தின் இரு நெறிகள். அதுதானா அப்பொருள்?

இருக்கலாம், இல்லாமலிருக்கலாம். ஆனால் நான் வாசித்து, உசாவி, ஊழ்கத்திற்கு கொண்டுசெல்லவேண்டிய அந்த வரி மிகத்தெளிவாக நுண்பொருள் கொண்டுவிட்டது.

முந்தைய கட்டுரைஇந்திரஜித் எனும் மாயக்காரன்.-உமையாழ்
அடுத்த கட்டுரைமுதற்கனல் – சுரேஷ் பிரதீப்