இளிப்பியல்- கடிதம்

இளிப்பியல்

இனிய ஜெயம்

தற்போதுதான் இளிப்பியல் பதிவை வாசித்தேன். இந்தியா காந்திக்குப் பிறகு நூலின் இறுதியில் குகா சுதந்திர இந்தியாவில் இந்தியர்கள் அனைவரையும்  பேதமின்றி ஏதேனும் கட்டிவைக்கும்  எனில் அது சினிமாவும் கிரிக்கெட்டும் என்று சொல்லி இருப்பார். கிரிக்கெட் சினிமா போல மொத்த இந்தியர்களையும் இப்போது கட்டி வைத்திருப்பது முகநூல்.

பெரும் பண முதலீட்டின் வணிகத்தின் பின்புலத்தில் சினிமாவும் கிரிக்கெட்டும்  சமூகத்தை கட்டிவைத்த  அதே சமயம்   அது சமூகத்தை ‘கையாளவும்’ செய்தது.

ஒரு தேநீர்க் கடை அரட்டை சராசரியின் பொச்சரிப்பும் அதற்க்கு தீர்வாக அவன் காணும் பகல் கனவு இந்த இணைப்பை கச்சிதமாக கைப்பற்றி, சராசரிகளின் பொச்சரிப்பின் பகல் கனவுக்கு நிகராக வரும் கேளிக்கை சினிமா எதுவும் மாபெரும் வெற்றி அடையும். விக்ரம் நடித்த தூள் முதல், விஜயகாந்த் அரசியல் படங்கள் தொடர்ந்து, தற்போதைய 96 திரைப்படம் வரை இதுவே விதி.

கள்ள ஒட்டு என்பது நிதர்சனத்தில் ஒரு சராசரி கண்ணால் கண்டு, எதையும் செய்யும் இயலாமை கொண்ட அவனது பொச்சரிப்பின் பகல் கனவே, தூள் பட நாயகனை கள்ள ஒட்டு பேர்வழிகளை தூக்கி போட்டு மிதிக்க வைத்தது. விஜயகாந்தை இயந்திர துப்பாக்கி கொண்டு அரசியல்வாதிகளை சுட்டு தள்ள வைத்தது. இந்திய சினிமாவில் இதே கணக்கின் வேறு சூத்திரம், ஹாலிவுட் சினிமாவில் அர்னால்டும் சில்வர்ஸ்டார் ஸ்டாலோனும் இதே சூத்திரத்தின் நாயகர்கள்தான்.

இதே நிலை தான் கிரிக்கெட் ஈடுபாட்டிலும். விக்கியார் வழங்கும் வரலாற்று குறிப்புகளை கிண்டிப் பார்த்தால்,பதினான்காம் நூற்றாண்டில் , கிரிக்கெட்டின் கரட்டு வடிவம் அதன் மோகம் ஆங்கிலேயர்கள் மத்தியில் பேய் பிடித்து ஆட்ட, குதிரையேற்றம் வில் வாள் பயிற்சிகளை விடுத்து அனைவரும் கிரிக்கெட்டில் குதிக்க, நான்காம் எட்வார்ட் மன்னன் (சந்திரன் சூரியன் உள்ளளவும்) கிரிக்கெட்டை தடை செய்து உத்தரவிட்டிருக்கிறான்.

நகர எல்லைக்கு வெளியே சட்டத்துக்கு புறம்பாக சூதாட்டமாக வடிவம் கொண்டதே இன்றைய கிரிக்கெட். இதில் புரளும் பணம் அரசின் கவனத்தை மீண்டும் இதன் பால் திருப்ப, அரசு ஆதரவுடன் மீண்டும் பற்றிக் கொண்டது கிரிக்கெட் மோகம். 1666 இல் நிகழ்ந்த லண்டன் தீ விபத்தில் தப்பி சென்ற உயர் குடிக்கள், கூல் டவ்ன் ஆக முதலில் செய்தது பந்தயம் வைத்து கிரிக்கெட் போட்டி நடத்தியதே.

அங்கிருந்து இந்தியா வந்த கிரிக்கெட் முதலில் பிடித்து ஆட்டியது பார்சிக்களை. இந்திய காங்கிரஸ் உதயம் காணும் முன்பாகவே கொல்கத்தாவில் கிரிக்கெட் க்ளப் உதயமாகிவிட்டது. ஆங்கிலேயர் உடன் நிகழ்ந்த போட்டி ஒன்றில் பார்சிக்கள் ஆங்கிலேயர்களை மண்ணைக் கெளவ வைக்க, அது இங்கிலாந்தில் எதிரொலிக்க, பதிலுக்கு இந்திய (பார்சி) அணியை இங்கிலாந்துக்கு கூட்டி சென்று ஆங்கிலேயர்கள் புல்லை தின்ன வைத்திருக்கிறார்கள். இப்படி ஒரு உடன்படிக்கை உடன் தான் அன்று முதல் இன்று  இந்தியா உலக கோப்பை வென்ற தொடர் வரை நிகழ்கிறது.

உலக கோப்பை தொடரில் நாம் வென்றவர்கள் வரிசையை பாருங்கள். ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை. இந்த உலக கோப்பை நடைபெறும் ஆண்டுக்கு முன்பு நிகழ்ந்தவைகளை பாருங்கள். ஆஸ்திரேலியாவில் கருப்பானாக அடி வாங்கினோம். பாகிஸ்தானிடம் மும்பை அட்டாக்கில் இந்தியனாக அடி வாங்கினோம். இலங்கையில் இறுதி யுத்தம் எனும் நிலையில் நாயடி வாங்கினோம். (அங்கே இறுதி யுத்தம் நிகழ்கையில் இங்கே கிரிக்கெட் தொடர் நிகழ்ந்தது). இந்த பொச்சரிப்பின் பகல் கனவுக்கு முகம் தந்ததே அன்றைய உலக கோப்பையின் இந்திய வெற்றி.  கிரிக்கெட் தேசிய விளையாட்டு அல்ல. கவுரவம் எய்த வேண்டிய ஹாக்கி கவனிப்பாரின்றி கிடக்கிறது. ஒலிம்பிக் போன்ற சர்வதேச அரங்கில் இந்திய இறையாண்மை சேர்ந்த விளையாடும் அல்ல. சதுரங்கம் போல அறிவுத் தகுதி சார்ந்த விளையாட்டும் அல்ல. (உலகை வென்ற இந்திய சாம்பியன் இந்தியாவின் கொண்டாட்டம் என ஏதும் இன்றி வீடு திரும்பிய செய்திகளை கேட்டிருக்கிறோம்). இப்படி எந்த தகுதிக்குள்ளும் வராத கிரிக்கெட்டுக்கு இந்திய பிரதமர் ஏன் பார்வையாளராக வந்து அமர்கிறார்?

ஆக கேளிக்கை சினிமாவும் கேளிக்கை கிரிக்கெட்டும்  இந்த அடிப்படையில் இந்தியர்களை கட்டிவைக்கும் அதே சூழலில், அவர்களை ‘கையாளவும்’ செய்கிறது. ஆஸ்திரேலியா மும்பை அட்டாக் இலங்கை யுத்தம் எனும் எரியும் பிரச்னைகள் இந்திய மனதை தீண்டிய அடுத்த கணம், கிரிக்கெட் கொண்டு தண்ணீர் தெளித்தாகி விட்டது. ( இந்த பின்புலம் கொண்டே அன்றும் இன்றும் இனியும் கிரிக்கெட் குறித்து எழுதிக் குவிக்கப் பட்ட அத்தனையும் மயிரை சுட்டு கரியை அள்ளிய கதை என்றாகி நிற்கிறது).

சினிமாவும் கிரிக்கெட்டும் எப்படி ஒரு பகல்கனவின் உலகை கையளித்து சமூகத்தை கட்டி வைத்து அதே சமயம் அதை கையாளவும் செய்கிறதோ, அதை சிரமமே இன்றி செய்கிறது இன்றைய முகநூல் களம். இக் களம் கையளிப்பது ஜனநாயகத்தின் குரல் எனும் மாயையை. இந்த மாயையை கையளித்த அடுத்த நொடி அது செய்வது மனிதர்கள் பௌதீகமாக இணைந்து நிற்பதை இல்லாமல் செய்வது. பௌதீகமாக பிரிந்து நிற்கும் மனிதர்கள் ஒரே கருத்து எனும் தொடர்பில்  இருந்தாலும், அந்த ஒரே கருத்தில் உள்ள உள் முரண்களை, ஜனநாயகம் எனும் பெயரில் வளர்த்து எடுப்பது. இந்த உள் முரண்கள் வழியே, ஒத்த கருத்து எனும் ஒருமைக்குள் பரஸ்பரம் உரசல்களை வளர்ப்பது. இந்த நிலை வளர்ந்து இறுதியாக, ஒருமித்த கருத்து ஒன்று திரண்டு, புறவயமாக இந்த கருத்து கொண்டோர் கூடி, ஒரு ஆற்றலாக மாறி, சமூகதில் விரும்பும் மாற்றங்களை நிகழ்த்தும் இயக்கமாக மாறும் இயங்கியலை அடியுடன் அழித்து விடும்.

எளிய உதாரணம் நீட் தேர்வுக்கு எதிரான நடிகர் சூர்யாவின் குரல். மனுஷ்ய புத்ரன் எதிர்க்கும் அதே நீட்டை தான் சூர்யாவும் எதிர்க்கிறார். ஆனால் சூர்யாவின் குரலை மனுஷ் சந்தேகத்துடன்தான் பார்ப்பார். நிட்டை எதிர்க்கும் மற்றொருவர் தி மு க வை சந்தேகம் கொண்டே பார்ப்பார் . காங்கிரஸ் கூட்டணியில் தி மு க இருந்த போதே கையெழுத்தானது நீட்டுக்கான அனுமதி என அவர் நினைப்பார். இதுதான் முகநூல் அளிக்கும் ஜனநாயக மாயையின் இடர்.

இந்த உள் முரண்கள், அதற்குள் இருக்கும் இயலாமை கொண்ட  பல்வேறு சராசரிகளின் தன்முனைப்புகள் அது அவர்கள் கொண்ட கருத்தைக் கொண்டு ஒரு கருத்தியல் மையமாக.அவர்கள் திரள்வதை தடுக்கிறது. ஆகவேதான் முகநூல் ஜனநாயகத்துக்கு வெளியே. ஒருங்கு திரண்ட வலிமையான கருத்தியல் அதிகாரம் கொண்ட குரல் எழுந்து சமூகத்தில் நிகழ்த்தும் தாக்கம் மீது, முகநூல் இத்தனை காழ்ப்பை கைக்கொள்ளுகிறது.  உதாரணமாக சமீபத்தில் வெளியான ராஜன் குறை அவர்கள் எழுதிய சமுக அறிவியல் பூர்வமான தலித்திய வெறுப்பு ஆய்வுக் கட்டுரை. முன்பே முகநூலில் புழங்கிய அது ஏன் எந்த தாக்கத்தையும் உருவாக்கவில்லை? ஜெயமோகன் தளத்தில் அது வெளியான பிறகு ஏன் இத்தகு தாக்கம் நிகழ்ந்தது? சிக்கல் எங்கே தீர்வு எது என்பதே மேலே கண்டது.

இந்த கருத்தியல் மையம் எனும் அதிகாரத்தை திரட்டிக் கொள்வதில் தன் இயல்பிலேயே இயலாமை கொண்ட முகநூல் களம், அந்த இயலாமையை இகழ்ச்சிப் போக்கின் வழியே ஜீரணிக்க முயல்கிறது. சமூகத்தில் ஒரு அசைவு நிகழ, கருத்தியல் மையம் கொண்ட மூளை, அதை பரவச் செய்யும் வாய்கள், ஆற்றலாக மாற்றும் கை கால்களின் குமுகம் இந்த மூன்றும் தேவை. முகநூல் கைகால்கள் திரள்வதை இல்லாமல் செய்து விட்டது. முகநூல் இயலாமை காரணமாக, ஏளனம் வழியே மூளையையும் புறக்கணிக்கிறது. வெறும் வாய்கள் மட்டுமே ஓலம் போட்டுக்கொண்டு நிற்கிறது. இந்த ஓலம் கொண்டு அதிகாரத்துக்கு எதிராக ஒரு புல்லைக்கூட நட்டு வளர்க்க முடியாது.

இந்த சராசரிகளைக் கையாள முக நூல் எனும் மாயக்களத்தில்  இவர்களை நிலை பெறச் செய்தால் போதும் என்று அதிகாரம் அறிந்தமையால்தான் முகநூலில் கோடிகளை முதலீடாக கொட்டுகிறது .தசாவதாரம் படத்தில் ஒரு காட்சி உண்டு. துரத்தி செல்லும் கார் ஒன்றில் பாட்டி அமர்ந்திருப்பார். முன்னால் கார் ஓட்டும் கமலை மூச்சா போணும் வண்டிய நிறுத்துது என்பார். காரோடுட்டும்  கமல் சொல்வார். பாட்டி இது சேசிங். அப்டில்லாம் நிறுத்த முடியாது. வேணும்னா ஜன்னல் வழியா எச்சி துப்பிக்கோ என்பார். அதுவே தமிழக முக நூல் களமும். மொத்த முக நூல் காரும்  அதிகாரத்துக்கு எதிரான சேஸிங்கில் இருக்கிறது. மூச்சா போக முடியாது. எச்சி துப்பி சமாளித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

கடலூர் சீனு

முந்தைய கட்டுரைவெண்முரசு – பீஷ்மர் முதல் சிகண்டி வரை- லக்ஷ்மி மணிவண்ணன்
அடுத்த கட்டுரைசுரேஷ்குமார இந்திரஜித்- கலையாகும் தருணங்கள்