ஆனந்தரங்கம்பிள்ளை- கடிதம்

காலப்பதிவு – ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்புகள்

ஆனந்தரங்கம் பிள்ளை விக்கி

அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்

செப்டம்பர் 18 லிருந்து 29 வரை 12 நாட்களாக அகநி வெளியீடு, ஆனந்தரங்கம் பிள்ளையவர்களின் 12 தொகுப்புக்களாக வந்திருக்கும் நாட்குறிப்பை குறித்த இணைய வழி தொடர் அறிமுக ஆய்வரங்கத்தை நடத்தினார்கள். மாலை 7 மணிக்கு மேல் என்பதால் வகுப்புகளை முடித்துவிட்டு நானும் எல்லா நாட்களிலும் கலந்துகொண்டேன். நான்  முதன்முதலாக கலந்துகொண்ட/கேட்ட வரலாற்று உரைகள் இவையே. நான்காம் நாளிலேயே அகநிக்கு அனுப்பாணை பிறப்பித்து 12 தொகுதிகளையும் வாங்கிவிட்டேன் அத்தனை சிறப்பாக  இருந்தது அறிமுக ஆய்வரங்கமும், நாட்குறிப்பின் உள்ளடக்கமும்.

ஒவ்வொரு தொகுதியையும் ஒவ்வொரு ஆளுமைகள் என  டாக்டர் சுதா சேஷையன், திரு இந்து என். ராம்,  பேராசிரியர் கு.ஞான சம்பந்தன், கவிஞர்,சாம்ராஜ், (2 தொகுதிகள்), ஆய்வாளர் கடற்கரய் மத்தவிலாச அங்கதம், எழுத்தாளர் ஜோ டி குரூஸ், திரு.கோம்பை அன்வர், முனைவர் பக்தவச்சல பாரதி, திரு சீனிவாசன் நடராஜன், பேராசிரியர் இ. சுந்தர மூர்த்தி, எழுத்தாளர் ச. தமிழ்செல்வன் ஆகியோர் பேசினார்கள்.

ஒவ்வொரு ஆளுமையும் அவரவர் கோணத்திலிருந்து ஒவ்வொரு தொகுதியின் மிக முக்கியமான பகுதிகளை எடுத்துக்கூறினார்கள், குறிப்பாக ஜோடி குரூஸ் அவர்கள் ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பிலிருந்த கடல்வணிகம் பற்றி கூறியது வெகு சிறப்பாக இருந்தது, அவர் குரல் ஆனந்தரங்கம்பிள்ளையின் குரலாகவே ஒலித்தது. ”வேகமாக வந்து துறையை பிடிச்சுட்டான். தீனி சேகரிக்க போன கப்பல்” போன்ற சொற்றொடர்களை அவர் கடல்வாழ்விலேயே இருந்தவராதலால்   மிகச் சிறப்பாக விளக்கினார். Ship chandling எனப்படும் கப்பல் நகர்கையிலேயே எரிபொருள், குடிநீர், உணவுப்பொருட்கள் ஆகியவற்றை சேகரிப்பதே தீனி சேகரித்தல் என பிள்ளையவர்களால் குறிப்பிடப்பட்டிருக்கிறது போன்ற பலவற்றை விளக்கினார். 12 பேச்சாளர்களுமே ஆனந்தரங்கம் பிள்ளை வாழ்ந்த காலமெனும் கடலுக்குள் எங்களை இழுத்துச்சென்ற அலைகள் என்றால் ஜோ டி குரூஸ்  பேரலையென வந்தார். கடல்வணிகம் குறித்து சொல்லுகையில் அவருடைய பாவனைகள் எல்லாம் அத்தனை அழகு.

ஆனந்தரங்கம் பிள்ளை அவர் வாழ்ந்த காலத்தின் சூழலை ஆழ்ந்து கவனித்து அதிலே தன்னை உணர்வுபூர்வமாக பிணைத்துக்கொண்டு 25 நீண்ட வருடங்களை மிக விளக்கமாக பதிவு செய்திருப்பது ஆச்சர்யமளிக்கின்றது.  பேரேடுகளில் எழுதப்பட்ட இந்த நாட்குறிப்புகள், 1736ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதியில் ஆரம்பித்து, 1761. ஜனவரி 12  வரை எழுதப்பட்டிருக்கிறது.

அப்போது இந்தியர்களுக்கு நாட்குறிப்பெல்லாம் எழுதும் வழக்கம் இருந்திருக்காது. பிரெஞ்ச் ஆட்சியாளர்களின் அந்த வழக்கம் பிள்ளையையும் தொற்றிக்கொண்டிருக்க வேண்டும்.

கல்கத்தாவில் ஒரு சிற்றறையில் நூற்றுக்கணக்கானவர்களை அடைத்து வைத்து மறுநாள் திறக்கையில், மூச்சுத்திணறியே பலர் உயிரிழந்த black hole tragedy,  பலரை தூக்கிலிட்டது, கசையடி கொடுத்தது, காதுகளை அறுத்தது, மிகப்பெரும் ஆளுமைகள் தலை கொய்யப்பட்டது, கொள்ளை, கொலை, சூது, ஊழல், என பல உச்சதருணங்களை பதிவு செய்திருக்கிறார் பிள்ளை.

என்னை மிகவும் கவர்ந்தது அவரது மொழிநடை. முன்னூறு வருஷங்களுக்கு முந்தைய பேச்சுவழக்கில்  எழுதியிருப்பதால் பின்தொடர ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமமாகவும் பின்னர் பழகியும்  பிடித்தும் விடுகிறது. அவர் பன்மொழிப்புலமை கொண்டிருந்ததால் பல மொழிகளை அவராகவே கலந்தும் பிரயோகித்திருக்கிறார் உதாரணமாக அறிவித்தான் என்பதை ஆங்கிலத்தையும் தமிழையும் கலந்து ’டிக்ளரித்தான்’ என்கிறார். வெகுவேகமாக என்பதை  உட்டாவுட்டியா’ அங்கே போய் சேர்ந்துட்டான் என்கிறார் . பரபத்தியமென்பது கடன், பதிலாமி என்பது மானக்கேடு, நடுக்காம்பீறோ என்று நடு அறையை, இப்படி. இவர் உபயோகபடுத்தியிருக்கும் சொற்களைக் குறித்தே தனியாக விரிவான  மொழியியல் ஆய்வை துவங்கலாம்.

பல இடங்களில் கவித்துவமாகவும் , துணிச்சலாகவும் எழுதியிருக்கிறார்

ஆனாலின்றைய தினம் பயந்தவர்களுக்குள்ளே வெள்ளைக்காரர் வெள்ளைக்காரச்சிகளுக்கு நம்முடைய தமிழர்கள் வெகு தைரியவான்களென்று நூறு தரம் சொல்லலாம்

*

அவர்களைப் பின் தொடர அனுப்பி வைக்கப்பட்ட உளவாளி அவர்களைத் தொடர்ந்து சென்றான். அவர்கள் பின் தொடர்வதனை உணர்ந்த ஒரு குதிரைக்காரன் அவனை நோக்கி வேகமாக வந்து வாளினால் தாக்க முயன்றான். உளவாளி தன் கையில் வைத்திருந்த தடியினால் ஓங்கி அடித்து குதிரைக்காரனின் வாளைத் தட்டி கீழே விழ வைத்துவிட்டு, உடனடியாக கடலூரின் செயிண்ட் டேவிட் கோட்டைக்குச் சென்று அங்கிருந்த கவர்னரிடம் இதனைக் குறித்துக் கூற, அவனுக்கு இரண்டடி அகல இடுப்புத் துணியும், ஏழு பகோடாப் பணமும், இருபது நாழி அரிசியும் பரிசாக வழங்கப்பட்டன 

*

அதே நாளில் சிறிது நேரம் கழித்து ஐம்பதிலிருந்து அறுபதுவரையுள்ள மராத்தா குதிரைப்படையினர் பாகூருக்கு அருகில் சுற்றிக் கொண்டிருப்பது தெரிந்தது

*

பின்னர் நம்பியானும் இன்னும் நான்கு பிராமணர்களும் அவர்களது அக்ரஹாரத்திற்கும், பிற தெருக்களில் இருந்த ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று ‘ஈஸ்வரனுக்கு பூஜை புனஸ்காரங்கள் எதுவும் நடக்காது. ஈஸ்வரன், பராசக்தியின் மீது ஆணையாக நீங்கள் வீட்டில் ஒன்றும் சமைக்கவோ அல்லது சாப்பிடவோ கூடாது’ என்று சொல்லியிருக்கிறார்கள்.

வியாழன், ஜூன் 11-1739, சித்தார்த்தி வருடம் ஆனி

*

செவாலியே டூமாஸ், பாண்டிச்சேரியின் கவர்னர் கீழ்க்கண்ட உத்தரவை இன்றைக்குப் பறையடித்து அறிவித்தார். ‘நகர எல்லைக்குள்ளோ அல்லது கடற்கரையிலோ அல்லது செயிண்ட் பால் சர்ச்சின் தெற்காக ஓடும் உப்பாற்றின் கரையிலோ அல்லது பொதுச் சாலையிலோ மலஜலம் கழிக்கக் கூடாது. இந்த உத்தரவை மீறும் எவரும் ஆறு பணம் அபராதம் செலுத்த வேண்டும். அதில் இரண்டு பணம் இந்தச் செயலைக் கையும், களவுமாகப் பிடிப்பவர்களுக்கும் மீதிப்பணம் கோர்ட்டின் நிதியிலும் சேர்க்கப்படும்.இந்த உத்தரவு உடனடியாக அமல்படுத்தப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டு மனமுடைந்த பொதுமக்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காது

இப்படி  ஒவ்வொரு சம்பவமாக ஒவ்வொரு பக்கங்களிலும் அவர் விளக்கமாக எழுதியிருக்கும் எல்லாமே வெகு சுவாரஸ்யமாக இருக்கிறது.. ஒரு கூட்டத்தில் கலவரமென்று எழுதுகையில் அந்த கூட்டத்திலிருந்த பலவகைப்பட்டவர்களையும் குறித்து தனித்தனியாக எழுதுகிறார். அக்கால சமூகத்தைப் பற்றிய மாபெரும் ஆவணம் இது.

ட்யூப்லெக்ஸும் மதாமும்  ஒரு கலியாணத்திற்கு வருகை தந்ததை, //அவர்கள் கலியாணப்பந்தலில் அமர்கையில், மாப்பிள்ளை பெண்ணை விசாரிக்க எழுந்திரிக்கையில், இனிப்பு சாப்பிடுகையில், மீண்டும் கலியாணத்திலிருந்து புறப்படுகையில் என்று 21 குண்டுகள் நான்கு முறை முழங்கியதையும் கல்யாணத்துக்கு வந்ததற்காக துரைக்கு ரூபாய் ஆயிரமும் மதாமுக்கு  நூறும் பன்னீரும் சர்க்கரையும், தாம்பூலமும் வைத்து கொடுக்கப்பட்டது// என்று எழுதியிருப்பதை  படிக்க அத்தனை சுவையாக இருக்கின்றது.

Wet mothers எனப்படும் பாலூட்டும் தாய்களை பற்றிய பதிவும் ஆச்சர்யமூட்டியது. பிரெஞ்சு குழந்தைகளின் நலனுக்கென தமிழ்ப்பெண்களை பாலூட்டவென அமர்த்தியிருக்கிறார்கள். இதை நான் முதன்முறையாக கேள்விப்படுகிறேன்.

சந்தா சாஹிப் செங்கல்லை  துணிபோட்டு மூடி குரான் என பொய் சத்தியம் செய்தது, ’’மூட்டை தூக்க வா கூலிதருகிறென் என்று சொல்லி உள்ளே வந்ததும் மொட்டையடித்து காலில் விலங்கு பூட்டி, ஏமாற்றியும் கடத்தியும் அடிமைகள் பிடிக்கப்பட்டது, காரைக்காலை கைப்பற்ற நடந்த போராட்டம், மன்னருக்கு பிரெஞ்சுகாரர்கள் வெகுமானங்கள் அனுப்பி வைத்தது, பீரங்கி குண்டுகள் போட்டது, எத்தனை குண்டுகள் என்ற எண்ணிக்கை, மிக நீளமான வால்நட்சத்திரம் தெரிந்தது, போரே செய்யாமல் எப்படி கிளைவ் வெற்றி பெற்று பெரிய புகழுக்குள்ளாகினாரென்பது, இப்படி அவர் பதிவு செய்திருக்கும் அனைத்திலிருந்தும் கிடைக்கும் சித்திரம் அப்படியே அந்த காலத்தை நம் கண்முன்னே கொண்டு வந்துவிடுகிறது. சாம்ராஜ் சொன்னதுபோல அன்றைக்கு இருந்த பிரஞ்சு அரசு இயந்திரத்தின் மிக முக்கியமான, பெரிய பல்சக்கரம் ஆனந்தரங்கம் பிள்ளையவர்கள்.

முக்கியம் முக்கியமல்ல என்று பாகுபாடில்லாமல் அவரைச்சுற்றிலும் நிகழ்ந்த நுட்பமான பல்லாயிரம் தகவல்களை உண்மையாகவும் நேர்மையாகவும் பதிவு செய்திருக்கிறார். இத்தனை வருடங்கள் தொடர்ந்து எழுத அவருக்கிருந்த தைரியமும் ஒழுங்கும் வியப்பளிக்கின்றது. நோட்டமிடுவது, போரிடுவது,  வரிவசூல், ஊழல், வெற்றி தோல்வி, அரசு நிர்வாகம் என விரிந்து விரிந்து அப்போதைய  அரசை, சமூகத்தை , பண்பாட்டை குறித்த பெரும் சித்திரத்தை கொடுக்கிறது இந்த நாட்குறிப்புக்கள்.

அவரது குடும்பவிவரங்களையும் அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக சொல்லி இருக்கிறார் ஜோதிடம் பார்த்தது, எண்ணெய் தேய்த்துகுளித்தது, காலாற நடக்க நினத்தது, மூல நோய் இருந்தது, போன்ற மேலோட்டமான தகவல்கள் இருக்கின்றன. தம்பி மகனை எப்போதும் சிரஞ்சீவி எனவும், மாமனாரை மிக மிக மரியாதையாகவும் குறிப்பிடும் பிள்ளை தனக்கு ஆகாதவர்களை இஷ்டம்போல் வைதும் எழுதுகிறார். தனக்கு 22 வயதில் முதல் குழந்தை பிறந்ததையும் பின்னர் 38ஆவது வயதில் பிறந்த கடைசி மகனையும் பற்றி விவரங்களையும், அவர்கள் பிறந்தபோது பிறருக்கு அவர் மகிழ்ந்தளித்த வெகுமானங்களையும் சின்ன பொன்னாச்சி, நன்னாச்சி. அய்யாவு என குழந்தைகளின் பெயர்களையும், அவர்களின் ஜாதகக்குறிப்புக்களையும் கூட பதிந்திருக்கிறார்.

தனக்கு நிகராக அதிகாரத்தில் தன் தம்பி மகனை கொண்டு வர அவர் செய்யும் முயற்சிகள், அவரது மகள் இறந்துபோவது, தம்பி மகனை கூடவே வைத்திருந்து ஆவணங்களை எழுதச்சொல்லிக்கொடுப்பது, ஆகியவை நாட்குறிப்பிலிருந்து நமக்கு தெரிய வருகின்றது. பிள்ளையவர்களின் கடைசி மூன்று மாத குறிப்புக்களைக்கூட அவரது தம்பி மகனே எழுதியிருக்கலாமென கருத இடமுள்ளது. பிற செய்திகளுடன் ஒப்பிடுகையில் தனது சொந்த வாழ்வை  மிக விரிவாக பிள்ளையவர்கள் பதியவில்லை. தான் வாழ்ந்த அந்த சூழலையே தன் சொந்த வாழ்வைக்காட்டிலும் அக்கறையுடன் கவனித்திருக்கிறார்.

ஈரானிய ஜாதி என்கிற ஒரு சொற்பிரயோகம் ஜாதிகளைக்குறித்த இன்றைய அடையாளங்களுடன்  ஒப்பிடுகையில் மிக வித்தியாசமாக இருக்கின்றது. 98 சாதிகளைப்பற்றிய குறிப்புக்களும் பிள்ளையவர்களின் நாட்குறிப்பில் தெளிவாகவும் விவரமாகவும் பதிவாகி இருக்கிறது. திருமணங்களில் ஆயுதம் தாங்கிய வீரர்களை ஊர்வலத்தில் அணிவகுத்துவர வாடகைக்கு அமர்த்துவது குறிப்பிட்ட ஒரு சாதியின் தனிப்பட்ட உரிமையாக இருந்திருக்கிறது.

ஒரு கவர்னர்   இவர்களை மோசம் பண்ணுவதை தவிர வேறு வழியில்லை, நம்பிக்கைகுகந்தமாதிரி நடந்துகொண்டு பின்னர் மோசம் பண்ணிவிடு’ எனச்சொல்லிய செய்திகளையும் அவர்  துணிச்சலாக எழுதியிருக்கிறார்

பிரெஞ்சு படையில் மராட்டியப்படைவீரர்கள் இருந்ததை பிள்ளையவர்களின் குறிப்பிலிருந்து தெரிந்துகொள்ள முடிகின்றது, வேதபுரீஸ்வரர் கோவிலை இடிக்கும் பதட்டமான காலகட்டத்தின் போது நிறுத்தினால் நல்லது, நிறுத்தாவிட்டால் இன்னும் நல்லது என்கிறார். சந்தாசாஹிப்பின் குடும்பங்களில் நடைபெற்ற திருமணங்களை பற்றிய  தகவல்களும் வாசிக்க மிக அருமையானவையாக இருந்தன.

மிக செல்வாக்கான, ஏறக்குறைய ஒரு மன்னரைப்போல சொந்தமாக கப்பலும், துணி மற்றும் சாராய வியாபாரங்களும், செய்துகொண்டிருந்த, பல்லக்கில் பவனி வந்த, கவர்னர் மாளிகைக்குள்ளேயே செருப்பணிந்துபோகும் உரிமை இருந்த, தங்கப்பூண்போட்ட கைத்தடி வைத்திருந்த, கவர்னர்களே பிள்ளையை எதிர்கொண்டு கட்டித்தழுவி வரவேற்று, விடைகொடுக்க வாசல்வரை வரும் கெளரவத்தையும் கொண்டிருந்த,  மிக முக்கியமான் பொறுப்புக்களிலிருந்த பிள்ளையவர்கள் மின்சாரமில்லாத அந்த காலத்திலும் நள்ளிரவு வரை அரசாங்ககாரியங்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் அளவுக்கு பணிச்சுமையிலிருந்தும், இப்படித் தொடர்ந்து 25 வருடங்கள் நாட்குறிப்பை,  மிக மிக விவரமாக தெளிவாக அவரது செல்வாக்கான காலத்தை மட்டுமல்லாது  வாழ்வின் இறுதியில் அவரது பதவி பறிக்கப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டு, கடனாளியாக நின்ற கடைசி நிமிஷம் வரையிலுமே  கைப்பட எழுதி பதிவுசெய்திருப்பதன் காரணத்தை யூகிக்கவே முடியவில்லை. இந்தப்பணிக்கென அவர் செலவிட்டிருக்கும் நேரத்தை குறித்து எண்ணுகையிலும் பிரமிப்பாக இருக்கிறது.

பிள்ளையவர்கள் சொல்லி இருக்கும் இரவில் நடந்த திருமணங்கள் குறித்து சொல்லுகையில் திரு கு,ஞானசம்பந்தம் சங்க இலக்கியங்களில் சொல்லப்பட்டிருக்கும் நள்ளிரவில் பால் வடியும் மரங்களின் அடியில் நடைபெறும் திருமணங்களைக் குறித்தும் சொன்னார்.

வீட்டுபெண்களை, கலவரங்களின் போது பாலியல் பலாத்காரம் செய்யப்படும் சாத்தியங்களிலிருந்து தப்புவிக்க வெடிமருந்துகொண்டு குடும்பத்தினரே கொல்லுவது, பேசிக்கொண்டிருக்கையிலேயே அருகிலிருப்பவனின் கழுத்தை வெட்டியவன், பின்னர் ஆயுதத்துடன் சரண்டைவது என்பதுபோன்ற  அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகள் ஏராளம் சொல்லப்பட்டிருக்கின்றன.

ஒரு விருந்தில் கைதிகளும் அழைக்கப்பட்டு ஒரே மேசையில் அமர்ந்து சமமாக சாப்பிட்டது, சந்தா சாஹிப் துரையிடம் பணம் கேட்பது, அக்கினி மாந்தியம் என்னும் நோய்க்கான மருந்தை ட்யூப்லெக்ஸ் பலருக்கு கொடுத்துவந்தது, ஒட்டு மாம்பழங்களின் சுவையும் அவற்றை உருவாக்கும்  முறையும், ரகசிய பயணங்கள், .ரகசிய கொள்ளைத்திட்டம் என பலதரப்பட்ட பதிவுகளை பார்க்கமுடிகின்றது நாட்குறிப்பில்.

ஏறக்குறைய ஆயிரம் கப்பல்களின் பெயர்களை, அந்தந்த கப்பல்களின் மாலுமிகளின் பெயர்களுடனும், கப்பல் வேலையாட்களின் பெயர்களுடனும் அவர் சொல்லி இருப்பது அதிசயமாயிருக்கிறது. அதிகம் வெளியே சென்றிருக்காத பிள்ளை, இருந்த இடத்திலிருந்தபடிக்கே   சுமத்ரா தீவுகளில் நடந்தவற்றை, பிரான்ஸில் நடந்தவற்றையெல்லாம் நுட்பமாக, விஸ்தாரமாக எழுதி ஆச்சர்யபடுத்துகிறார். பிரெஞ்சு அதிகாரிகளின் பதவிகளை  வரிசையாக சொல்லும் பிள்ளையின் நினைவாற்றலும் அறிவும் வியப்பளிக்கின்றது

மதாமின் அம்மா  இறந்த போது கறுப்பு உடையுடன் நடந்த ஊர்வலம், இரவு முழுதும் வெடிகள் வெடித்தது என்பது போன்ற விவரணைகளை பிள்ளையின் மொழியில் வாசிக்கையில் எப்படி எல்லாம் அனுபவித்திருக்கிறார்கள் வாழ்வை என்ற எண்ணம் தவிர்க்கவே முடியாமல் ஏற்படுகிறது அதில் இன்னொரு முக்கியமான குறிப்பையும் பிள்ளை பதிவு செய்திருக்கிறார்.  இறந்துபோன அந்த அம்மாள் பிள்ளையிடம் தான் வாங்கிய கடனை வட்டியுடன் ஒரு பையில் போட்டு அவருக்கு திருப்பி கொடுக்கும்படியும், கடனை எதிலும் எழுதி வைத்துக்கொள்ளும் வழக்கமில்லாத பிள்ளையை சற்று கவனமாக இருக்கும்படியும் சொல்லச்சொல்லி தன் இளைய மகனிடம்  இறப்புக்கு முன்னர் சொல்லி இருக்கிறார்.  துபாஷியாக இருந்தவரின் மீது துரைகளுக்கு அன்பிருந்தது போக, துரையின்  மாமியாரான அந்த பிரெஞ்சு பெண்மணிக்கும் பிள்ளையின் மீது இருந்த கரிசனத்தை அறிந்துகொள்ளுகையில் பிள்ளையவர்களை குறித்த ஒரு பிரியம் நமக்கும் ஏற்பட்டுவிடுகிறது. கூடவே கடனை வட்டியுடன் திருப்பி கொடுத்திருக்கும் அந்த அம்மாளின் நேர்மையும் கவனிக்க வைக்கிறது.

நடந்த விஷயங்ளை அப்படியே எழுதியிருக்கும் பிள்ளை பல நிகழ்வுகளை குறித்த தனது யூகங்களையும், கருத்துக்களையும் வருத்தங்களையும் கூட  பதிந்திருக்கிறார்.

பிராமணர்களுக்கு உணவளிக்க ஒரு கிராமமே தானமாக கேட்கப்படுகையில் எப்படி நாசுக்காக பதிலளிக்க வேணும் என பிள்ளையே துரைக்கு ஆலோசனை சொல்லுகிறார்

எந்தெந்த சாதிகளிலிருந்தெல்லாம் ஆட்களை படையில் சேர்க்கலாமென்னும் விவாதத்திலும் பிள்ளையே தேவையானவற்றை பரிந்துரைக்கிறார். பிள்ளையவர்களின் செல்வாக்கை இப்படி பல செய்திகளின் மூலம் நாம் புரிந்துகொள்ள முடிகின்றது.

ஆற்காடில் சின்னமை நோய் பரவி, ஆயிரக்கணக்கில் இறப்பு நிகழ்ந்ததை, அச்சமயத்தில் பல பெண்களுக்கு  அருள் வந்ததை, முதலில் இகழ்ச்சியாக பேசிய இஸ்லாமியர்களும் பின்னர் வீட்டு வாசலில் வேப்பிலைக்கொத்தை செருகி வைத்துக்கொண்டதை,  ஒரு ’அம்மன்’ தனக்கு நகைவேண்டுமெனக்கேட்டு அதை கொடுக்கவும் தயாரானதையெல்லாம் சொல்லும் பிள்ளை  ஒரு  அம்மனைக்குறித்து கிண்டலாக எழுதியிருக்கும் கடிதமொன்றை  புன்னகையுடனே தான் வாசிக்க முடியும்

அரசர் கொடுத்தனுப்பிய உணவை மறுத்த விருந்தினருக்கு  தண்டனையாக அரசர் முன்னிலையில் மீண்டும் முழுக்க சாப்பிட வைத்த நெருக்கடியான நிகழ்வை, பிச்சைக்காரர்களுக்கும், பைத்தியக்கார்களுக்கும் விடுதிகள் இருந்ததை, திருமணமாகாத பெண்களுக்கு நிதி உதவி செய்யும் திட்டமிருந்ததை  இப்படி ஒன்றுவிடாமல் பதிவுசெய்திருக்கிறார் பிள்ளை..

இறுதிப்பகுதிகளில் கலவரம், சண்டை, கொள்ளை மக்களின் துன்பம் பிண்டாரிகள் என்கிற வடஇந்தியகொள்ளையர்கள் என்று பல முக்கியமானவற்றை குறித்தும்  எழுதியிருப்பவர், தான் முன்புபோல மதிக்கப்படாமல் போனதைக் குறித்த  புலம்பல்களை சொன்னாலும் வேலியே பயிரை மேயுதென்றும்  துணிந்து சொல்லுகிறார் சீதாராம ஜோசியரிடம் ஜோசியம் பார்த்துக்கொண்டது, பிரெஞ்சு கவர்னர்கள் கூட ஜோசியத்தை நம்பியது, 20 நாட்கள் இடைவெளியில் எல்லாம் ஜோசியம் பார்த்த செய்திகள், படைவீரர்களும் ஜனங்களும் சோற்றுக்கும் கஞ்சிக்கும் வழியில்லாமலிருந்த காலத்தில் கொள்ளையில் கிடைத்த நெல்மூட்டைகளை குறித்தும் பிள்ளை எழுதுகிறார்

அவரது குடும்ப உறுப்பினரின் இறப்பு, தொடரும் கருமாந்திர காரியங்கள்,  ஊரில் கடைகளே இல்லாமல் போனது, அவரது உடல் நலிவுற்றது எனஅவரது வாழ்வையும், அதைப்போலவே  ஏறி இறங்கிய பிரெஞ்சு அரசையும் ஒருசேரச்சொல்லும் இந்த நாட்குறிப்பு பெரும்  வரலாற்றுப்பொக்கிஷம்.

பிரெஞ்சுகாரர்களே குடும்பம் குடும்பமாக வேறிடம் தேடிப் போகையில்  பிள்ளை அங்கேயெ இருப்பதும். அத்தனை செல்வாக்குடன் இருந்த பிள்ளை பதவி இழந்து குற்றம், சாட்டப்பட்டு, கடன்பட்டு வீழ்ந்ததும் அவராலேயே எழுதப்பட்டிருப்பதும்  நெகிழ்ச்சியடைய செய்கிறது.

12 நாட்களுமே பல அரசு அதிகாரிகளும், பேராசிரியர்களும், வரலாற்று ஆய்வாளர்களும் சென்னை,பாண்டிச்சேரி உள்ளிட்ட பல இடங்களிருந்தும், கென்யா, கலிஃபோர்னியா, இஸ்ரேல்,சிங்கபூரிலிருந்தும் எழுத்தாளர்களும் வாசகர்களும் கலந்து கொண்டார்கள். இறுதி நிகழ்வில் அய்யா கி ரா வந்து பேசி நிகழ்வை மறக்க முடியாத ஒன்றாக செய்தார். பிரெஞ்சுப்பெண்னை மணம் செய்திருக்கும் நீதியரசர் திரு தாவீது அன்னுசாமி, உடையார்பாளையம் ஜமீன் குடும்பம், ஆனந்தரங்கம் பிள்ளையின் குடும்பத்தினர்  என ஒவ்வொரு நாளும் முக்கியஸ்தர்களும் வந்து சிறப்பித்ததால் தினம் நிகழ்வு களைகட்டியபடியே இருந்தது.

ஆர்வத்தில் எல்லா தொகுதிகளையும் மேலோட்டமாகவே வாசித்திருக்கிறேன். அத்தனை தொகுதிகளையும் முழுக்க வாசிக்க பலகாலம் ஆகுமென்றாலும் இந்த தொகுப்புக்கள் அவசியம் வீட்டில் இருக்கவேண்டும் என்று முடிவெடுத்தே உடனே வாங்கினேன்..

வாசிப்பென்பதே அரிதாக போயிருக்கும் இந்தக்காலத்தில் அகநி வெளியீடாக இந்த பெரும்படைப்பு வந்திருப்பதும் வியப்பளிக்கின்றது.  ஒவ்வொரு தொகுதியின் சாரமும் கூடவே  கொடுக்கப்பட்டிருப்பது மிக சிறப்பு. ஆங்காங்கே அடைப்புக்குறிக்குள் சில சொற்களுக்கான விளக்கங்களையும் கொடுத்திருப்பதால் வாசிப்பு மேலும் எளிதாகயிருக்கிறது. தொகுப்புக்களின் இறுதியில் பிள்ளையவர்கள் பயன்படுத்தியிருக்கும் பிறமொழிச்சொற்கள், அவற்றின் மூலச்சொல், பொருள் என பட்டியலிட்டிருப்பதும், சொல்லகராதியையும், பெயர்ச்சொல்லடைவையும் இணைத்திருப்பதும்  மிக பயனுள்ளதாக இருக்கிறது. செம்பதிப்புக்கான அனைத்து இலக்கணங்களையும் இத்தொகுப்பு நூல்கள் கொண்டிருக்கின்றன

பல அரசாங்க கடிதங்கள், கோட்டைகளைக்குறித்த விவரங்கள், ஆனந்தரங்கப்பிள்ளையின் வீடு, நாட்குறிப்பின் முகப்பு, பிள்ளை பயன்படுத்திய பொருட்கள், புகைப்படங்கள், அப்போது பாண்டிச்சேரியின் நுழைவுவாயிலாக  இருந்த  செயின்ட் லூயி கோட்டையின் முகப்பு  உள்ளிட்ட  மிக முக்கிய அரிய புகைப்படங்கள் 90 பக்கங்களிலான பின்ணிணைப்பில் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

மொழிநடையை சிறிது எளிமைப்படுத்தியிருக்கிறார்கள் என்றாலும்  பிள்ளையவர்களின் செய்திகளில்  எந்த மாற்றமும் பிழைகளும்  வந்துவிடாமல் கவனமாகவும் இருந்திருக்கிறார்கள். வரலாற்றை பாடப்புத்தகங்களில், நாவலில், திரைப்படங்களில் இதுவரை அறிந்துகொண்டதற்கும் இப்படி 300 ஆண்டுகளுக்கு முன்பாக மிக முக்கிய ஆளுமை ஒருவர்  கைப்பட தமிழில் எழுதியதை வாசித்து அறிந்துகொள்வதற்குமான வேறுபாட்டை வாசித்தால் மட்டுமே அறிந்துகொள்ள முடியும்

கவிஞரும் எழுத்தாளருமான முனைவர் வெண்ணிலா, முனைவர் திரு ராஜேந்திரன் இ.ஆ.ப ஆகியோர் முதன்மை பதிப்பாசிரியர்களாக இருந்து இப்பணியை செய்திருக்கிறார்கள், இவர்களுக்கும்,  பதிப்பாளர் திரு முருகேஷ், ந.மு. தமிழ்மணி மற்றும் துணைப்பதிப்பாசிரியர்கள் அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

அன்புடன்

லோகமாதேவி

ஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பு – உரை

ஆனந்தரங்கம் பிள்ளை 

தினப்படி சேதிக்குறிப்பு

முந்தைய கட்டுரைமூன்று எழுத்தாளர்கள்- வெண்முரசு
அடுத்த கட்டுரைஆன்மிகமும் படைப்பும்- கடிதங்கள்