அழகிய நதி- கடலூர் சீனு

பரிசோதனைகள் இல்லை எனில் அறிவியல் இல்லை. வரலாற்று  சின்னங்கள் இல்லை எனில் வரலாற்றியல் இல்லை.

-ரூபன் பரோ-

அழகியமரம்

அழகிய மரம் என்ற காந்தி பயன்படுத்திய படிமத்தையே தலைப்பாகக் கொண்டு, 18 ஆம் நூற்றாண்டில் பாரம்பரிய  இந்தியக் கல்வி அமைப்பு முறை என்னவாக இருந்தது என்பதை தரம்பால் ஆவணப்படுத்திய அந்த நூல் கிளாட் ஆல்வாரெஸ் ன் அதர் இந்தியா பதிப்பகம் வழியே வெளியாகி, br மகாதேவன் மொழியாக்கத்தில் முதல் பதிப்பு தமிழினி வெளியீடாகவும், தற்போது கிழக்கு வெளியீடாகவும் வந்து வாசக கவனம் பெற்ற ஒன்று.

அந்த நூலின் அடுத்த பகுதி என்று சொல்லத்தக்க வகையில் அமைந்தது, தரம்பால் ஆவணப்படுத்திய, 18 ம் நூற்றாண்டு இந்தியாவின் அறிவியலும் தொழில்நுட்பமும் எனும் நூல். ஆல்வாரிஸ் அதர் இந்தியா பதிப்பகம் வழியே, கிழக்கு வெளியீடாக, br மகாதேவன் மொழியாக்கத்தில் அழகிய நதி எனும் தலைப்பில்  வாசிக்க்கிடைக்கிறது.

ராபர்ட் பார்க்கர், ரூபன் பரோ, ஹென்றி தாமஸ் கோல்ப்ரூக், பெஞ்சமின் ஹெய்ன், ஜான் ஜெபானியா ஹாவேல், தாமஸ் டீன் பியர்ஸ், ஜான் ஃபிளேஃபியர், ஹெலென்ஸ் ஸ்காட், அலெக்ஸாண்டர் வாக்கர் என்ற ஒன்பது ஆங்கிலேயர்கள் எழுதிய ஆவணங்களின் அடிப்படையிலான குறிப்புகள் வழியே, 18 ம் நூற்றாண்டு இந்தியாவின், வானியல் அறிவு, வானியல் ஆராய்ச்சி மையம், வானியல் கணக்குகள், கணிதவியலின் நிலை, மருத்துவ சிகிச்சை முறை, விவசாய தொழில்நுட்பம், ஐஸ்கட்டி, வார்ப்பிரும்பு செய்முறைகள், சிமிண்ட் , காகிதம், கயிரு, சாயம், என அறிவியல் தொழில்நுட்பம் அந்த ஆங்கிலேயர்கள் கைவசம் இருந்தை விடவும் இங்கே அவை தரத்தில் மேம்பட்ட நிலையில் இருந்ததை ஆவணப்படுத்தும் நூல்.

நூலின் அனுபந்தத்தில் மேற்கண்ட நவ நாயகர்களின் வாழ்க்கை குறிப்புகள் சுவாரஸ்யம் கொண்டது. ஒருவர் கணித மேதை, மற்றவர் சமஸ்க்ருத மேதை, ஒருவர் திப்பு சுல்தான் எதிரே  இறுதி போரில் நின்றவர், மற்றொருவர் டூயல் என்று அழைக்கப்படும் ஒற்றைக்கு ஒற்றை துப்பாக்கி சண்டைக்கு துணை நிற்பவர். இப்படி இந்த ஒன்பது பேரின் வாழ்வுமே வண்ண மயம். இவர்களின்  கட்டுரைகளின் குறிப்புகள் வழியே  சென்று மறைந்த அந்த அழகிய நதியை நினைவூட்டுகிறார் தரம்பால்.

நூலின் துவக்கக் கட்டுரையாக ஆல்வாரெஸ் தரம்பால் அவர்களின் ஆய்வுகளை கண்டடைந்த விதம், அதன் வழியே தரம்பால் அவர்களுடன் நிகழ்ந்த தொடர்பு, தரம்பால் அவர்களின் சிந்தனை அவரில் நிகழ்த்திய பாதிப்பு, தொடர்ந்து தரம்பால் அவர்களின் ஆய்வுகள் வழியே துலங்கும் இந்தியாவை பரவலாக கொண்டு சேர்க்க அவர் துவங்கிய அதர் இந்தியா பதிப்பகம் குறித்து விவரிக்கிறார்.

( சூழலியல் செயல்பாட்டாளரான கிளாட் ஆல்வாரெஸ் அவர்களின், அறிவியல்: வளர்ச்சி மற்றும் வன்முறை எனும் நூல் ஆயிஷா நடராஜன் மொழியாக்கத்தில் எதிர் வெளியீடாக வாசிக்க கிடைக்கிறது. கிளாட் அவர்களின் வாரிசு ராகுல் ஆல்வாரெஸ் பள்ளிக் கல்விக்கு வெளியே கற்றுக் கொண்டவை குறித்த நூலான, தெருக்களே பள்ளிக்கூடம் நூல், சுஷில்குமார் மொழியாக்கத்தில் தன்னறம் வெளியீடாக வாசிக்கக் கிடைக்கிறது.)

இந்த துவக்கக் கட்டுரையில் இந்தியாவில் வெள்ளையர் ஆட்சி குறித்த தரம்பால் அவர்களின் அடிப்படை நோக்கினை ஆல்வாரெஸ் குறிப்பிடுவது முக்கியமானது. இந்த அடிப்படை நோக்கு கொண்டு, இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சி குறித்த பல விஷயங்கள் மீது புதிய கோணத்தை திறக்க இயலும்.

உதாரணமாக சட்டத்தின்பால் அமைந்த பிரிட்டிஷ் ஆட்சியின் நீதி உணர்ச்சி என்னவாக இருந்தது என்றொரு வினா ஒருவருக்கு எழுமானால், தரம்பால் அளிக்கும் நோக்கு அந்த வினாவின் விடை மேம்போக்கானதாக அன்றி, ஆழம் கொண்டதாக கிடைக்க வகை செய்யும். இந்தியப் பொது மனதில் வெள்ளையர் குறித்து பொத்தாம் பொதுவாக பதிந்திருக்கும் சித்திரம், அவர்கள் வணிகம் செய்ய வந்தவர்கள்,   இங்கிருக்கும் சூழலை தந்திரமாகக் கையாண்டு, நாடு பிடிக்கும் நிலைக்கு உயர்ந்தார் என்பது.

தரம்பால் அதை மறுக்கிறார். வங்கத்தில் வெற்றி கண்ட பிறகு, ராபர்ட் கிளைவ் பிரிட்டன் பாராளுமன்றத்தின் கட்டுப்பாட்டின் கீழ் நேரடி ஆட்சி அமையவே விரும்புகிறார். பிரிட்டன் நாடு பிடிக்க வந்த தேசமே. ஆனால் பிரிட்டனின் நேரடி ஆட்சி என்பது இந்தியாவை ஓட்ட ஓட்ட சுரண்டி இங்கிலாந்தில் குவிக்கும் அதன் முதன்மை நோக்கை செயல்படுத்த விடாது. ஆகவே கிழக்கிந்திய கம்பெனிக்கு அரசின் கண்காணிப்பு குழுவின் ‘கட்டுப்பாட்டின்’ கீழ்  முழு சுதந்திர அதிகாரம் அளித்து,   பிராந்திய மன்னர்களை கைப்பாவை என மாற்றி, அதைக் கொண்டு பாரதத்தை ஒட்ட ஒட்ட சுரண்டுவதே பிரிட்டனின் திட்டம்.

இந்த திட்டத்துக்கு உயிரும் உடலும் அளித்தவர், பிரிட்டிஷ் சமூகவியலின் தந்தை என்று அழைக்கப்படும் ஆடம் ஃபெர்கூசன்.  பிரிட்டிஷ் ஆட்சி வழியே கிடைத்த நீதி எல்லாம் அதன் மனசாட்சியை பார்லிமென்ட் வழியே தொடர்ந்து பேசி பேசி தொட்ட ( இவர்களில் பலர் ஆங்கிலேயர்கள். பத்திரிக்கை ஆசிரியர்கள்) ஆளுமைகள் வழியே கிடைத்தவை. பிரிட்டிஷ் ஆட்சி இழைத்த அநீதி எல்லாம் அதன் எல்லை விரிவாக்கத்துக்கான போர் தளவாட குவிப்புக்குக்கு, இந்திய வளங்களை சுரண்ட, கிழக்கிந்திய கம்பெனியை அது பயன்படுத்தியதன் வழியே நிகழ்த்தியது.

பிரிட்டனின்  இந்த இரட்டை நிலை குறித்த தரம்பால் அவர்களின் அடிப்படை நோக்கு மிக முக்கியானது. தரம்பாலின் இந்த நோக்கை முகப்புக் கட்டுரையில் ஆல்வாரெஸ் குறிப்பிட்டு விடுவது, இந்த நூலின் கட்டுரைகள் பேசும் விஷயங்களை மேலும் துலங்க வைக்கிறது.  இன்னும் பின்னோக்கி சிந்தித்தால், 12 ம் நூற்றாண்டு துவங்கி 17 ம் நூற்றாண்டுவரை அந்நிய படையெடுப்பாளர்கள் படையெடுத்தும், இந்தியாவில் அரசு அதிகாரத்தை கைப்பற்றியும் செய்த எதிர்மறை அம்சங்களின் நீட்சியே, பாரதத்தின் ஆங்கிலேயர் ஆட்சி நிகழ்த்திய எதிர்மறை விளைவுகள்எ ன்பதை, தரம்பாலின் இந்த நோக்கின் வழியே ஒரு வாசகர் புரிந்து கொள்ள முடியும்.

அழகிய மரம் ஒன்றின் வேரை ஆராய்ந்து பார்க்க, அதை வேருடன் கெல்லி சரித்து விட்டார்கள் என்பது காந்தி நமது பாரம்பரிய முறைகளை எவ்வாறு ஆங்கிலேய அறிவு அணுகியது என்பதை சுட்டிக் காட்ட பயன்படுத்திய உதாரணம். அந்த உதாரணத்தின் பகைப்புலத்தை விரிவாக ஆவணம் செய்ததே அழகிய மரம் நூல். அதன் நீட்சியே இந்த அழகிய நதி நூல்.

பதினேழு அத்தியாயங்கள் அடங்கிய இந்த அழகிய நதி நூலின் முதல் பகுதியாக அமைந்த  முதல் ஆறு அத்தியாயங்கள்,18 ம் நூற்றாண்டின், பனாரஸ் வானியல் ஆய்வு மையம் குறித்தும், அதன் காலம், அதன் கருவிகளின் துல்லியம் குறித்தும், பிராமணர்களின் இந்து வானவியல் அறிவு குறித்தும், இவற்றுக்கு அடிப்படையான கணிதவியலில் இந்தியா அடைந்திருந்த தேர்ச்சி குறித்தும் ஆவணப்படுத்துகிறது.

பொதுவாக பனாரஸ் வானாராய்ச்சிக் கூடம் 18 ம் நூற்றாண்டின் துவக்க காலங்களில், இரண்டாம் ஜெய்சிங் மன்னரால், ஜெய்ப்பூர் உஜ்ஜைனி இங்கெல்லாம் என ஐந்து இடங்களில் அமைத்த  வானாராய்ச்சி மையங்களில் ஒன்றே எனும் கூற்றை மறுக்கிறது இந்த முதல் பகுதி. அதற்கும் இரண்டு நூற்றாண்டு முந்தையது இந்த வான் மையம்  என்கிறது ஆவணம்.

இந்த பெனாரஸ் வான் ஆய்வு மையத்தின் பிரும்மாண்ட கருவிகளின் துல்லியத்தை விவரிக்கிறது இந்த முதல் பகுதியின் மற்றொரு அத்யாயம். அட்ச ரேகை தீர்க்க ரேகை அடிப்படையிலான புவியியல் வரைபடம் உருவாக்கும் ஆய்வுகளின் காலம் அது. இந்த சூழலில் அதற்கும் இருநூறு ஆண்டுகள் முன்பு அமைந்த பெனாரஸ் வான் ஆய்வு மையம், அது தன்னை நிறுவி இருக்கும் மெரிடியன் கோடு மிகுந்த துல்லியத்துடன் இருக்கிறது.

இந்த துல்லியம் எவ்வாறு சாத்தியம்? ஆய்வுக் கருவிகளின் காலத்தை 18 ம் நூற்றாண்டின் துவக்கம் என்று கொண்டாலும் கூட, அன்றுவரை மேற்குலகம் அடைந்த பொறியியல் தொழில்நுட்பத்தை இந்தக் கருவிகள் அமைந்த விதத்தில் பின்னுள்ள பொறியியல் தொழில் நுட்பம் சவாலுக்கு அழைக்கிறது.  இந்த தொழில் நுட்பம் கொண்டு கண்டடைந்தவை எல்லாம், ஐரோப்பா நவீன தொழில்நுட்பம் கொண்டு கண்டடைந்த வானியல் முடிவுகளுடன் துல்லியமாக பொருந்திப் போவது எப்படி?

குறிப்பாக ஐரோப்பா வான் ஆய்வில் பாய்ச்சல்  நிகழ்த்த அதன் கையில் இருந்த ஈடு இணையற்ற கருவியான தொலைநோக்கி, அது இந்தியாவின் கையில் இல்லாமல், மேற்சொன்ன கருவிகளை கொண்டு மட்டுமே இந்த துல்லியமான வானியல் உண்மைகளை அடைந்தனர் எனில் அது எங்கனம் சாத்தியம்?

உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக அங்கீகாரம் கொண்ட, ஜெய்ப்பூரில் ஜந்தர் மந்தர் வான் ஆய்வு மையத்தை ஒருமுறை நேரில் கண்டால், வெள்ளையர் அடைந்த இந்த பிரமிப்பு சற்றேனும் விளங்கும். இத்தகு தொழில்நுட்பம் அளவே, பிரிட்டானியர்களை பிரமிக்க செய்தது பஞ்சாங்கம் போன்ற அவர்களுக்கு பிடி கிடைக்காத கணக்குகளின் மேல் அமைந்த இந்திய வானியல் அறிவு. கிமு 3102 இதுவே கலியுகத்தின் தொடக்கம் என சில கோள்  நிலவரங்களை கொண்டு கணித்து, அதிலிருந்தே தனது வானியல் கணக்குகளை பிராமண வானியல் அல்லது இந்து வானியல் தொடங்கி முன்னெடுக்கிறது.

அங்கே துவங்கி இந்த 18 நூற்றாண்டு வரை அவர்கள் கணித்த எந்த கிரகண நிலவரமும் துல்லியமாக, மேற்குலகு கணித்த கிரகண நிலவரங்களுடன் இணைந்து போகிறது. மீண்டும் அதே கேள்வி. தூர தரிசினி கொண்டு கண்ணால் காணாமல் இது எப்படி சாத்தியப் பட்டது? அடுத்த கேள்வி, இந்த கலியுக துவக்க கோள் நிலவரங்கள் இந்த 18 ம் நூற்றாண்டின் அறிவைக் கொண்டு பின் நோக்கி கணக்கிட்டு கணிக்கப்பட்டதா என்றால் அதுவும் இல்லை. ஆனால் மேற்குலகின் கணக்கீடுகளின் படி கிமு 3102 ன் கலியுகத்தின் துவக்கம் என இந்து வானியல் சொல்லும் கோள் நிலவரங்கள் அனைத்தும் துல்லியம். இது அனைத்தும் எவ்வாறு சாத்தயம் கண்டது?

டாலமி முதல் கலிலியோ வரை பயன்படுத்திய கணித தேற்றங்கள், அல்ஜீப்ரா கணக்குகள் இவற்றை விட மேம்பட்ட நிலையில் இந்திய வானியல் கணிதவியல் திகழ்ந்திருக்கிறது. உதாரணமாக வட்டத்தின் சுற்றளவை விட்டதால் வகுத்தால் வரும் முடிவிலியை மேற்குலகம் முன்வைக்கும் 22/7 எனும் ஈடை விட, இந்தியா முன்வைத்த ஈடு அதிகம் துல்லியம் கொண்டது என்பதை, இந்த முதல் பகுதி ஆவணங்கள் வழியே, நெடிய கணக்குகள் வழியே நிறுவிறுகிறது.

கணிதவியல் வடிவஇயல் இவற்றில் எல்லாம் அரபு பண்பாடோ, கிரேக்க பண்பாடோ பங்களிக்காத தனித்துவம் கொண்ட, முன்னோடி முறைகளை பாஸ்கரர் முதலாக இந்தியா வளர்த்து எடுத்ததை, ஆங்கிலேயர்களின் ஆவணப் பதிவு வழியே நிறுவுகிறது முதல் பகுதி.

பதினோரு அத்தியாயங்கள் கொண்ட இரண்டாம் பகுதி, மேற்குலகை காட்டிலும் மருத்துவம், விவசாயம், இரும்பு உருக்கும் ஆலைகள் போன்ற பல விஷயங்களில் இந்தியா கொண்டிருந்த தேர்ச்சியை ஆங்கிலேயர்களின் ஆவணக் குறிப்புகள் வழியே பரிசீலிக்கிறது. அம்மை குத்தும் முறை குறித்து விவரிக்கிறது ஒரு அத்யாயம், கண் சிகிச்சை, கிட்னி கல்லுக்கு செய்யும் சிகிச்சை, அறுபட்ட மூக்கை ஒட்டும் (பிளாஸ்டிக் சர்ஜரி) சிகிச்சை இவை குறித்து வியக்கிறது ஒரு அத்யாயம்.

இந்திய பாரம்பரிய சாந்து (சிமிண்ட்) உருவாக்கம் குறித்து பேசுகிறது மற்றொரு அத்யாயம். இடுபொருட்களின் பட்டியலை வாசிக்கையில் அக்கார அடிசில் செய்வதற்கான சமையல் குறிப்பு போல இருக்கிறது. வெல்லம், வெண்ணை, பதநீர் போல உண் பண்டங்கள் எல்லாம் இடுபொருளாக கொண்டு வலிமையான சாந்து தயாரிக்கப்பட்டு, இயல்பான புழக்கத்தில் இருந்திருக்கிறது.

எளிய முறையில் காகிதம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. மரப்பிசின் ஒன்றை தடவி உலரவைத்து செய்யப்பட்ட இரும்பு கயிருக்கு இணையான வலிமை கொண்ட, இலகுவான எடையற்ற கயிரு புழக்கத்தில் இருந்திருக்கிறது. நிலத்தின் தேவைக்கு ஏற்ப, எளிய ஆனால் செயலாற்றல் கொண்ட பலவகை விதைக் கலப்பைகள் பயன்பாட்டில் இருந்திருக்கிறது.

எளிய முறையில், சிறிய அளவு முதல் பெரிய அளவு வரை ஐஸ் கட்டி தயாரிக்கப்பட்டிருக்கிறது. (செயற்கை முறையில் ஐஸ் செய்ய முடியும் என்பதை முதன் முதலாக நேரில் காணும் ஆங்கிலேயன் நிச்சயம் இது எதோ இந்தியக் குறளி வித்தை என்றே எண்ணி இருக்க கூடும்.). அனைத்துக்கும் மேலாக இந்திய  எஃகு. பிரிட்டனின் ஆக சிறந்த வஸ்து, எதுவோ இந்தியாவின் ஆரம்ப நிலை இரும்பு எஃகு அதை நிகர் செய்யும் நிலையில் இருந்திருக்குகிறது.

எஃகு செய்யும் நுட்பமும் அவ்வாறே. மேற்குலகு செய்யும் முறையில் எஃகு உற்பத்தி செய்ய இரண்டு நாள் தேவைப்படும் நிலையில், குறைந்த முதலீட்டில், குறைந்த ஆட்கள் கொண்டு, எளிய முறையில் ஒரே நாளில் அதை காட்டிலும் வலிமையான எஃகு உற்பத்தி செய்யும் நிலையில் இந்தியா இருந்திருக்கிறது. கிடைத்த தரவுகள் அளிக்கும் தோராயமான கணக்கின் படி, ஆண்டு ஒன்றுக்கு இருபது டன் இரும்பு உருக்கும் ஆலைகள், பத்தாயிரம் வரை பாரதம் முழுக்க செயல்பாட்டில் இருந்ததாக தரம்பால் குறிப்பிடுகிறார்.

இறுதி அத்தியாயத்தில் வரும் கடிதப் போக்குவரத்தில் காணும் ஒரு சிறு குறிப்பு, பிரிட்டிஷ் சுரண்டல் அதன் பின்னான பிரிட்டிஷின் குற்ற உணர்வு இரண்டையும் சுட்டும் ஒன்றாக விளங்குகிறது. பிரிட்டன் செய்த வணிகத்திலேயே முற்றிலும் அறமற்ற வணிகம் ஓபியம் வணிகம் என்பதை அறிவோம். இந்த கடித போக்குவரத்தில் கஞ்சா குறித்த குறிப்பு ஒன்று இப்படி சொல்கிறது. “கஞ்சா ஒப்பு நோக்க ஓபியம் அளிக்கும் அதே போதையை அளிப்பது. ஓபியம் அளவு உடலுக்கு தீங்கு செய்யாதது. மருத்துவ பயன்களும் கொண்டது” இதில் உள்ள குற்ற உணர்வு, மனசாட்சியின் குத்தல், இப்படி வாசகன் மேலதிகமாக சிந்திக்க பல பாதைகளை திறக்கிறது இந்த நூல்.

இதுதான் அந்த அழகிய நதி இதை தூர்ந்து போகச் செய்தே பிரிட்டன் செழித்தது. பிரிட்டன் இந்தியாவுக்கு இழைத்த அநீதியை அறிய, சிறந்த நூல்கள் இரண்டு. சசி தரூர் எழுதிய இந்தியாவின் இருண்ட காலம். ( கே கே ராஜசேகரன் மொழியாக்கத்தில் கிழக்கு பதிப்பக வெளியீடு) ராய் மாக்ஸம் எழுதிய உப்பு வேலி. (சிறில் அலெக்ஸ் மொழியாக்கத்தில் தன்னறம்vவெளியீடு). தொடர் படையெடுப்புகள் வழியே கஜினி முகமது அள்ளிச்சென்ற செல்வம், பக்தியார் கில்ஜி வந்து அழித்த நாளந்தா, 12 முதல் 17 ம் நூற்றாண்டு வரை கொன்று ஒழிக்கப்பட்டும், அடிமைகளாகvவிற்கப்படயும் மண்மறைந்த இந்தியர்கள், இந்த அநீதியின் தொடர்ச்சியே ஆங்கிலேய ஆட்சி இங்கே நிகழ்த்தியதும் என்பதை சசி தரூர் நூல் வழியே ஒருவர் அறியலாம்.

கம்பெனி ஆட்சி வழியே விளை நிலத்தின் விளைச்சல் மொத்தமும் வரியாக உறிஞ்சப்பட்டிருக்கிறது. தாள இயலாமல் இந்தியாவின் மூன்றில் ஒரு பங்கு விவசாயம் கைவிடப்பட்டிருக்கிறது. பஞ்சங்கள் வழியே மக்கள் செத்துக் குவிந்த நிலங்கள் விட்டு, எஞ்சிய  லட்ச கணக்கான மக்களை கஞ்சிக் கூலிகளாக பிரிட்டன் நாடு கடத்தி இருக்கிறது. இந்தியாவையே இரண்டாக கிழித்து ( சுதந்திரத்தின் போதான இந்தியப் பிரிவினைக்கான நஞ்சு எப்போதோ  ஆங்கிலேயரின் மனதில் கறந்து வைத்த ஒன்று என்பதன் சாட்சியம்) உயிர் வேலி அமைத்து வரி வசூல் நிகழ்த்திய சித்திரத்தை உப்பு வேலி அளிக்கிறது.

இந்த இரண்டு நூலின் பகைப்புலம் கொண்டே தரம்பால் எழுதிய அழகிய மரம், அழகிய நதி நூல்கள் பேசும், இந்தியா இழந்த பாரம்பரியம் குறித்த சித்திரத்தை முழுமை செய்து கொள்ள முடியும். காசி என்ற நிலத்தின் மீது நிகழ்ந்த தொடர் தாக்குதல் என்பது வரலாறு. அங்கு இருந்த வான் ஆய்வு மையம் குறித்தே நூல் பேசுகிறது. 12 ம் நூற்றாண்டு துவங்கி 17 ம் நூற்றாண்டு வரை பாரத நிலத்தில் நிகழ்ந்த எதிர்மறை அம்சங்களுக்கு பிறகும் ‘தாக்குப்பிடித்து’ நின்றிருந்த, ஆங்கிலேயர்கள் ‘நவீனம்’ வழியே ‘அழித்த’ நமதேயான அறிவியல் கணிதம் தொழில்நுட்பம் இவற்றை ஆவணப்படுத்தும் இந்த நூலை உருவாக்க பின்நின்ற உழைப்பு மானுட சாத்தியம்தானா என்று மலைக்க வைக்கும் ஒன்றாக விளங்குகிறது.

உப்பு வேலி நூலில், பிரிட்டன் ஆட்சியின் கீழ் இந்தியா குறித்த ஆவணங்களின் கடலில், ராய் சலிக்காமல் நீந்தி கரை காணும் சித்திரம் உண்டு. அதற்க்கு சற்றும் குறையாதது தரம்பால் அவர்களின் உழைப்பு. சென்னை தில்லி பிரிட்டன் என்ற மூன்று நகரங்களில், 1650 முதல் 1950 வரை முன்னூறு நூற்றாண்டுகள் வழியே கிடைத்த ஆவணங்களின் கடல். அதில் பதினெட்டாம் நூற்றாண்டு

மட்டுமே ஆயுளுக்கும் நீந்தக் கூடிய கடல். அந்தக் கடலில் நீந்தி இந்த ஆவணங்களை சேகரித்திருக்கிறார் தரம்பால். ஆங்கிலேயரின் சொற்கள் வழியாகவே மறைந்து போன அந்த அழகிய நதியின் தடத்தை தீட்டிக் காட்டுகிறார்.

ஆயிரம் பக்கங்களை கடந்த எத்தனை நூறு தொகுதிகளைvவாசிக்க நேர்ந்திருக்கும். தொகுதி 34- பக்கம் 234 முதல் 238 வரை, தொகுதி 23- பக்கம் 186 முதல் இப்படியே சென்றுகொண்டே இருக்கிறது ஒவ்வொரு அடிக்குறிப்பும். ஒளிநகல் எடுக்க வகை இன்றி, கண்ட ஆவணங்களில் பெரும்பகுதியை  பல்லாயிரம் பக்கங்கள் கையால் எழுதி படியெடுத்திருக்கிறார்.

மலைக்க வைக்கும் உழைப்பில் உருவான இந்த நூலின் மிகச் சிறந்த குறிப்புகளில் ஒன்று, 1960 இல் தரம்பால் காணும் புனித யாத்ரீகர்களின் சித்திரம்.  புனித யாத்ரீகர்கள்kகுழு ஒன்று. அத்தனையும் பெண்கள். சாதி படிநிலைகளில் வேறு வேறானவர்கள். தரம்பால் பயணிக்கும் அதே தொடர்வண்டியின் மூன்றாவகுப்பில் அவருடன் பயணிக்கிறார்கள். மூன்றுமாத பயணம். ராமேஸ்வரம் துவங்கி ஹரித்துவார் வரை அவர்கள் இலக்கு. இடையே வரும் புகழ் பெற்ற இடங்கள், வரலாற்று சின்னங்கள் எதுவுமே அவர்கள் கணக்கில் இல்லை. ஆங்கிலேயர் கொண்டுவந்த இந்தியா, நேரு கொண்டுவந்த இந்தியா எதுவுமே அவர்களுக்கு பொருட்டு இல்லை. நேற்றும் இன்றும் நாளையும் இவ்வாறே இருக்கும் இவர்கள்தான் இந்தியாவின் சாரம்.

இந்த சாரத்துடன் பிணக்கின்றி பிணைந்து, அங்கிருந்து முளைத்து வளர்ந்ததே இந்தியப் பாரம்பரியக் கல்வியும் அறிவியலும் தொழில்நுட்பமும்.கொள்ளுவது கொண்டு தள்ளுவது தள்ளி நவீனத்துடன் இயல்பாக உரையாடி முயங்கி வளரவேண்டிய நாமதேயான இந்த கீழை பாரம்பரியத்தை கெல்லி எறிந்து விட்டு, ஒரு வன்முறை போல வந்து தாக்கியதே மேலை நவீனம்.

இதுவே அந்த அழகிய நதி வறண்ட பின்புலம். இதோ கண்முன்னால் நூற்றாண்டுகள் கண்ட பாரம்பரிய மடங்களை கெல்லி எறிந்துவிட்டு ஸ்மார்ட் சிட்டி கொண்டு வர போகிறோம். இது வேறொரு காலத்தில் எழுந்துவரும் வேறொரு வரலாறா? இல்லை அதே காலத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கும் அதே வரலாறா? சரியான நேரத்தில் வந்திருக்கும் சரியான நூல். இந்த நூல் பெருமளவு வாசிக்கப்பட்டால் அதுவே நாம் முற்றிலும்  வேரறுந்தவர்கள் அல்ல, குறைந்தபக்ஷம்  வேரை நோக்கிய தேடல் கொண்டவர்கள் என்பதன் அடையாளம். தரம்பால் போன்றோரின் உழைப்பு ஒருபோதும் வீண் போகாது என்பதன்  அடையாளம்.

கடலூர் சீனு

முந்தைய கட்டுரைமழைப்பாடல்- சுரேஷ் பிரதீப்
அடுத்த கட்டுரைவிளைநிலத்தில் வாழ்வது-கடிதம்