அ.கா.பெருமாள் பற்றி அறிய
அ.கா.பெருமாள் நூல்களை வாசிக்க
அன்புள்ள ஜெ
அ.கா.பெருமாள் அவர்களின் ஆய்வின் முக்கியத்துவம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். நம்மிடையே வரலாறு உண்டு. மன்னர்களின் கல்வெட்டுகள், இலக்கியநூல்கள், கோயில்கள் போன்றவற்றை பற்றிய தகவல்களிலிருந்து உருவாக்கப்படும் வரலாறு அது. ஆனால் மக்கள்தொகையில் 10 சதவீதம்பேருக்குக் கூட அதனுடன் சம்பந்தமில்லை. எஞ்சியவர்களின் வரலாறு வாய்மொழி மரபாகவே உள்ளது. அதைத்தான் நாட்டார்கதைகள், தொன்மங்கள், வாழ்வியல்கூறுகள் என்கிறார்கள். அந்த மக்களைப்பற்றி எழுதவெனெடும் என்றால் அந்த மக்களின் வாய்மொழி மரபைத்தான் ஆராயவேண்டும். அதைச்செய்வதுதான் நாட்டாரியல் ஆய்வு என்று நான் சொன்னேன்.
அந்த ஆய்வு இங்கே முன்னரே தொடங்கியிருந்தது. கி.வ.ஜெகன்னாதன் நாட்டார்ப்பாடல்களை தொகுத்தது ஒரு முக்கியமான அடிவைப்பு. அவரைத்தான் தொடக்ககால அறிஞர் என்று சொல்லவேண்டும். நா.வானமாமலை அவருடைய ஆராய்ச்சிவட்டம் வழியாக ஒரு பெரிய செல்வாக்கை உருவாக்கினார். இரு மரபுகளையும் இரண்டு முன்னுதாரணங்கள் என்று சொல்லலாம். கி.வ.ஜவுடையது கிளாஸிக்கல் பார்வை. நா.வானமாமலையுடையது மார்க்சிய பார்வை. இரண்டுபேருமே நாட்டாரியலை மேலே நின்று பார்த்தவர்கள்.
நாட்டாரியல் கல்வித்துறை வழியாக வந்தபோதுதான் அதை ஆய்வுமாணவர்களாக பார்ப்பதும்,அதை திருத்தவோ சொந்தமாக அர்த்தம் கற்பிக்கவோ செய்யாமல் அதன் இயல்பை ஆராய்வதும் தொடங்கியது. அந்த மரபில் வந்தவர் அ.கா.பெருமாள். ஆலன் டன்டிஸின் மரபைச் சேர்ந்தவர். நாட்டாரியலுக்கான உலகளாவிய நெறிமுறைகளைப் பேணி ஆராய்ச்சி செய்பவர். மானுடவியல் ஆய்வாளரான பிலோ இருதயநாத், சமூகவியல் ஆய்வாளரான பி.எல்.சாமி ஆகியோருடன் ஒப்பிடத்தக்கவர். அவருடைய பங்களிப்பு மிக முக்கியமானது. அவருடனான உரையாலுக்கு வாழ்த்துக்கள்
எஸ்.சண்முகசுந்தரம்
அன்புள்ள ஜெ
அ.கா.பெருமாள் அவர்கள் தமிழாசிரியர். வழக்கமாக தமிழாசிரியர்கள் இலக்கணவெறியர்களாக இருப்பார்கள். இலக்கணத்தை இரும்புச்சட்டையாக அணிவித்து இலக்கியத்தையே அழிக்க முயல்வார்கள். அவர்களுக்கு நாட்டாரியல் எல்லாம் கொச்சையாகவும் நாகரீகப்பிழையாகவுமே தெரியும். ஆனால் அ.கா.பெருமாள் அவர்கள் நாட்டாரியல் ஆய்வாளராக ஆனது, கள ஆய்வு செய்தது எல்லாம் ஆச்சரியமானவை. அவருடைய சுண்னாம்பு கேட்ட இசக்கி நூலில் நாட்டாரியலாய்வுக்காக அவர் செய்த நீண்ட பயணங்கள் பதிவாகியிருக்கின்றன. ஆச்சரியமளிப்பவை அந்த உழைப்பும் ஆர்வமும்
அந்த சுதந்திர மனப்பான்மைக்கு அவருக்கு இரண்டு குருநாதர்கள். பேராசிரியர் ஜேசுதாசன். அவர் வையாபுரிப்பிள்ளை மரபைச் சேர்ந்தவர். குமரிமாவட்ட ஆய்வாளர்களிடம் வையாபுரிப்பிள்ளையின் செல்வாக்கு மிகுதி. ஆகவேதான் அவர்கள் மொழிவெறி இல்லாதவர்களாகவும் அறிவியல்பார்வையுடன் ஆய்வுசெய்பவர்களாகவும் இருக்கிறார்கள். புதிய நகர்வுகளுக்கு வாய்ப்பளிக்கிறார்கள். அதேபோல அ.கா.பெருமாள் அவர்களின் செயல்பாட்டில் வெங்கட் சாமிநாதனின் செல்வாக்கும் இருக்கிறது. நாட்டாரியலின் இடத்தை சாமிநாதன் அவருக்கு கற்பித்திருக்கிறார்
அதெசமயம் ஒரு மரபான தமிழறிஞராகவும் அ.கா.பெருமாள் செயல்பட்டிருக்கிறார். தமிழிலக்கிய வரலாறு, தமிழறிஞர்களின் வரலாறு எல்லாம் எழுதியிருக்கிறார்.கவிமணி தேசிகவினாயகம்பிள்ளை வரலாற்றை எழுதியிருக்கிறார். இந்த கலவை தமிழில் மிக அரிதானது என தோன்றுகிறது
எஸ்.மகாதேவன்