அ.கா.பெருமாள்,ஒரு மாபெரும் அநீதி- கடிதங்கள்

அ.கா.பெருமாளின் ‘தமிழறிஞர்கள்’

ஓய்… என்ன கதவிட்டுட்டு இருக்கீரு…

அன்புள்ள ஜெ

அ.கா.பெருமாள் அவர்களின் தமிழறிஞர்கள் நூலில் வரும் ஒருவரி திகைப்பை உருவாக்கியது. நாகர்கோயில் பீமநேரிக்காரரான ஆண்டி சுப்ரபணியம் உருவாக்கிய A Theatre Encyclopedia என்ற நூலின் கைப்பிரதியை பிரசுரத்திற்கு ஏற்று பலகாலம் வைத்திருந்து அழியவிட்டது சென்னைப் பல்கலைக்கழகம். 6000 துணைத்தலைப்புக்கள் கொண்டது அந்நூல். அப்படியென்றால் அது எப்படியும் மூவாயிரம் பக்கங்கள் கொண்டது. அதை உருவாக்க முப்பதாண்டுகளாவது ஆகியிருக்கும். எப்படி அது அழியவிடப்பட்டது? ஒரு படுகொலை அது இல்லையா? ஒரு வாழ்க்கையையே அழிப்பது. அதுவும் பேரறிஞர் ஒருவரை அழிப்பது. இதைச் செய்தவர்கள் யார்? சென்னைப் பல்கலையின் அப்போதைய துணைவேந்தர் யார்? ஒன்று ஏ.லக்ஷ்மணசாமி அல்லது நெ.து.சுந்தரவடிவேலு. அவர்களின் மீதான கறைதான் இது. இதெல்லாம் எத்தனை விரிவாக பதிவாகவேண்டும். இப்படிச் செய்தால் நீங்காத வரலாற்றுப்பழி வரும் என்பதை நிறுவினால்தான் இன்றைக்கு இருப்பவர்களுக்கும் கொஞ்சமாவது சுரணை வரும் இல்லையா?

அ,திருமாறன்

அன்புள்ள ஜெ

அ.கா.பெருமாள் எழுதிய கட்டுரையில் வரும் ‘என்ன ஓய் கதைவிட்டுட்டு இருக்கிறீரு’ ஆழமான மனவேதனையை உருவாக்கியது. ஏனென்றால் இதை நானே பார்த்திருக்கிறேன். இருபது ஆண்டுகளுக்கு முன்பு கணியான்கூத்துக்கு எங்களூரில் வரும் கலைஞர்களை ஊரே வாடா போடா என்றுதான் கூப்பிடுவார்கள். சின்னப்பிள்ளைகள்கூட அப்படித்தான் அழைப்பார்கள். இன்றைக்கு கணியான்கூத்துக்கு ஆளே இல்லை. அத்தனைபேரும் படித்து கௌரவமனா வேலைக்கு போய்விட்டார்கள். இன்றைக்கு கணியான்கூத்து ஆட ஆளில்லை என்று பிலாக்காணம் வைக்கிறார்கள் பெரிசுகள். அவர்களிடம் நானே கேட்டிருக்கிறேன், அவ்வளவு முக்கியம் என்றால் அவர்களை மதித்து நடத்தி நல்ல சம்பளம் கொடுத்திருக்கலாமே என்று. அது மட்டும் இந்த அற்பர்களின் கண்ணுக்குப் படாது.

நம்முடைய நாட்டார்கலைகளும் அனுஷ்டானகலைகளும் சாதிமுறையால்தான் அழியாமல் நின்றன. அந்தச்சாதி அதைச்செய்தே வாழவேண்டும். இந்த ஜனநாயகயுகத்தில் சாதி அழிந்துகொண்டிருக்கிறது. அல்லது சாதிமுறையின் கெடுபிடி அழிகிறது. கூடவே நாட்டுப்புறக்கலைகளும் அழிகின்றன. வேறுவழியே இல்லை

சக்தி சுப்ரமணியம்

அன்புள்ள ஜெ

தமிழறிஞர்கள் பற்றிய கட்டுரையில் நான்கு பத்திகளில் தமிழகத்தில் சென்ற நூற்றாண்டில் நடந்த ஒட்டுமொத்த அறிவியக்கத்தைப் பற்றிய ஒரு வரைவை அளிக்கிறீர்கள். அற்புதமான ஒரு சுருக்கம் அது. உண்மையில் தகவல்களை தெரிந்துகொள்வது கல்வி அல்ல. இப்படி ஒரு வரலாற்றுப்புரிதலை உருவாக்கிக்கொள்வதுதான் கல்வி. அதை இப்படி தேவையானபோது சுருக்கமாக தெளிவாகச் சொல்வதுதான் ஓர் ஆசிரியனின் தகுதி என நினைக்கிறேன். நன்றி

எஸ்.லக்ஷ்மிநாராயணன்

அ.கா.பெருமாள் பற்றி அறிய

அ.கா.பெருமாள் நூல்களை வாசிக்க

முந்தைய கட்டுரைவெண்முரசு வாசிப்பு- சுசித்ரா
அடுத்த கட்டுரைசர்வப்பிரியானந்தர்- கடிதம்