கி.அ.சச்சிதானந்தம் அவர்களை 1998- ல் நான் தமிழினி வசந்தகுமாரின் பதிப்பக அலுவலகத்தில்தான் முதலில் சந்தித்தேன்.அதற்கு முன்னரே அவரைப்பற்றி கேள்விப்பட்டிருந்தேன். அவர் பதிப்பித்த மௌனி கதைகளின் தொகுதியை நான் வாசித்திருந்தேன்.
அன்றெல்லாம் மௌனி கதைகளை வாங்கி வாசிக்க நூறுபேர்தான் தமிழ்நாட்டில். நெடுங்காலமாக அவருடைய கதைகள் அச்சில் வராமலேயே இருந்தன. மௌனியின் இளம்நண்பரான கி.ஆ.சச்சிதானந்தம் மௌனி கதைகளை வெளியிடுவதற்காகவே தொடங்கியது பீக்காக் பதிப்பகம். சொந்தச்செலவில் மௌனி கதைகளை அழகான தொகுதியாக கொண்டுவந்தார். எழுபதுகளுக்குப் பின் தமிழிலக்கியச்சூழலில் மௌனி மீண்டும் தோன்றியது அவ்வாறுதான்
மௌனி “உனக்கு இந்த வேலை தேவையில்லை, கதைகள் விற்காது”என்று சொன்னார். அதைமீறி கி.ஆ.சச்சிதானந்தம் அந்நூலை வெளியிட்டார். மௌனி வார்த்தை பலித்தது. ஆனால் பிடிவாதமாக கி.ஆ.சச்சிதானந்தம் இன்னொரு பதிப்பும் கொண்டுவந்தார். பி.ஆர்.ராஜம் அய்யரின் பிரபுத்தபாரத இதழ் கட்டுரைகளான Ramples in Vedanta என்னும் நூலையும் பொருள்செலவிட்டு ஆய்வுப்பதிப்பாக கொண்டுவந்து இழப்படைந்தார்.
கி.அ.சச்சிதானந்தம் அவர்களிடம் முதல்நாளிலேயே நீண்டநேரம் பேசிக்கொண்டிருந்தேன். உற்சாகமான உரையாடல்காரர். மெல்லிய திக்குவாய் உண்டு, ஆனால் பொருட்படுத்த மாட்டார்.இலக்கிய வம்புகள், இலக்கியச் செய்திகள், இலக்கியவேடிக்கைகள் என்று தொட்டுத்தொட்டு சென்றுகொண்டே இருப்பார். காழ்ப்புகள் அற்றவர், தன்முனைப்பும் இல்லாதவர். ஆகவே தீங்கற்ற அரட்டை அவருடையது
அதன் பின் தமிழினி அலுவலகத்தில் அவரை அடிக்கடிச் சந்திப்பதுண்டு. அன்று தமிழினி அலுவலகம் ராயப்பேட்டையில் இருந்தது. சென்னை சென்றால் நான் சென்று அமரும் இடமாக இருந்தது. கி.அ.சச்சிதானந்தம், தினமணி சிவக்குமார், ராஜமார்த்தாண்டன் போன்றவர்கள் அடிக்கடி வந்தமர்ந்து அரட்டையடிக்கும் மையம் அது. கி.அ.சச்சிதானந்தம் வந்தாலே அதன்பின் அவருடைய குரல்தான் ஒலிக்கும். “சொல்லுங்க சச்சி’ என்று வசந்தகுமார் அவருடைய அனுபவங்களைக் கேட்டுக்கொண்டே இருப்பார்.
எப்போதும் வாய்திறந்து சிரிக்கும் முகமாகவே கி.அ.சச்சிதானந்தம் நினைவிலெழுகிறார். வாழ்க்கையை உற்சாகமாக வைத்துக்கொண்டவர் என்று அவரைச் சொல்லலாம். அவருடைய விருப்பங்கள் நூல்கள் மற்றும் பயணம். அவை இரண்டுக்காகவும் முழுவாழ்க்கையையும் ஒதுக்கிக்கொண்டவர். நூல்கள் என்றுதான் சொல்லவேண்டும், இலக்கியம் என்றல்ல. அவருக்கு நூல்களை சேகரிப்பதில்தான் முதன்மை ஆர்வம். அரிய நூல்களை மட்டுமல்ல சாதாரணநூல்களையும் தேடித்தேடி வாங்கிச் சேர்ப்பார். தொடர்ச்சியாக படித்துக்கொண்டே இருந்தார்.
அவருடைய இலக்கிய ரசனை ஓர் எல்லைக்குட்பட்டது. அது ஒருவகை சுவைநாடல். இலக்கியத்தை ஆன்மிகமான, தத்துவார்த்தமான, உணர்வுசார்ந்த தேடல் இல்லாமல் வாசிப்பவர்கள் சுவைஞர்களாக ஆகிவிடுகின்றனர். ஒருவகையான விலகிநின்று ரசிக்கும் நிலை அது. நாச்சுவை போன்ற முற்றிலும் உலகியல்சார்ந்த ஒரு மகிழ்ச்சியை அவர்கள் இலக்கியத்தில்அடைகிறார்கள்.அந்நிலையில் அவர்களுக்கு நுண்மைகள் தட்டுப்படும், ஆழங்களும் முழுமையும் அவர்களைச் சென்றடையாது. மௌனி கதைகளையே கி.அ.சச்சிதானந்தம் அப்படித்தான் வாசித்தார் என நினைக்கிறேன்.
சச்சிதானந்தம் நானறிந்த வரை நிறையவே வாசித்தவர், ஆனால் எந்நூலைப்பற்றியும் ‘நல்லா இருக்கும் படிக்க’ என்ற அளவிலேதான் பேசுவார். ஒரு நூலுடன் மேலும் மேலுமென நூல்களை கோத்து ஒரு பெரிய தொடராக காட்டுவார்.அவருடனான உரையாடல்களில் நூல்களையும் ஆசிரியர்களையும் இடங்களையும் பற்றிய செய்திகள் வந்துகொண்டே இருக்கும். ஆனால் இலக்கியம்சார்ந்த அசலான சிந்தனைகளோ கூரிய மதிப்பீடுகளோ பெரும்பாலும் இருக்காது.
சச்சிதானந்தம் நவீன இலக்கியத்திலேயே திளைத்துவாழ்ந்தார். அது அவருக்கு மகிழ்ச்சி அளித்தது, அவருடைய இயல்புடன் இயைந்தது என்பதனால். அவருடைய பயணங்களும் அத்தகையவை. இலக்கற்ற அலைதல்கள் அவை. நான் லடாக்க்குக்கு பயணம் செய்த ஒருவரை நேரில்பார்ப்பது அவரைத்தான். எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரம் வரைச் சென்றதாகச் சொன்னார்.அவர் சென்ற காலத்தில் அங்கே செல்வது என்பது ஒருவகையான தற்கொலைப் பயணம். எவரெஸ்டைப் பார்த்த முதல் தமிழ் இலக்கியவாதி தானே என்று அவர் சொல்வதுண்டு.
குறைவான பணத்துடன், கிடைத்த வண்டிகளில் ஏறி, சென்றுகொண்டே இருப்பார். வகைவகையான மனிதர்களைச் சந்திப்பதும் வெவ்வேறு உணவுகளை உண்பதும் அவருடைய ஆர்வங்கள். குறிப்பிட்ட சிலவற்றைப் பார்க்கவேண்டும் என்று திட்டமேதும் வைத்துக்கொள்வதில்லை. வரலாறு , தொல்லியல் சார்ந்த குறிப்பான வரைவேதுமில்லாமல் செல்வது அவர் வழக்கம்.
உதாரணமாக அவர் அஜந்தா சென்றிருக்கிறார், பலமுறை. ஆனால் விதிஷா அருகில்தான் என்பதை தெரிந்துகொள்ள முயலவில்லை. பயணமும் அவருக்கு ஒருவகை திளைத்தல். இந்தியப்பெருநிலத்தில் பல ஆண்டுகள் சுற்றிவந்திருக்கிறார்.நாடோடி என்பதன் எல்லா இலக்கணங்களுடனும் வெவ்வேறு நகரங்களில் உலவியிருக்கிறார்.
கி.அசச்சிதானந்தம் நிறைய மொழியாக்கங்கள் செய்திருக்கிறார். ஆழ்ந்து வாசிப்பதற்கான ஒருவழிமுறையாகவே அவர் மொழியாக்கத்தைக் கண்டார்.சாமுவேல் பெக்கட்’டின் `கோடோவிற்காக காத்திருத்தல்’ (நாடகம்), தாகூரின் சித்ரா (நாடகம்), ரோசா லக்சம்பெர்கின் சிறைக்கடிதங்கள், பனிமலைப் பிரதேசத்துக் கதைகள், கல்மாளிகை (மராட்டி நாடகம்)ஆகியவற்றை மொழியாக்கம் செய்திருக்கிறார்.நடை’ – இதழ் தொகுப்பு, `இலக்கிய வட்டம்’- இதழ் தொகுப்பு இவற்றின் தொகுப்பாசிரியராக இருந்திருக்கிறார்.
கி.அ.சச்சிதானந்தம் பலவகையான இலக்கிய ஆளுமைகளுடன் தொடர்புடையவர். மௌனி அவருடைய தெய்வவடிவம். ந.பிச்சமூர்த்தி, க.நா.சு, சி.சு.செல்லப்பா,ல.ச.ரா, சிட்டி,எம்.வி.வெங்கட்ராம், முதலிய முதல்தலைமுறை தொடங்கி தி.ஜானகிராமன் ,சுந்தர ராமசாமி,அசோகமித்திரன்,வெங்கட் சாமிநாதன், ந.முத்துசாமி போன்ற அடுத்த தலைமுறை வரை பலதரப்பட்ட ஆளுமைகளுடன் அவருக்கு நேர்ப்பழக்கம் இருந்தது.
அவருக்கு சி.சு.செல்லப்பாவுடனும் அசோகமித்திரனுடனும் ஒருவகை நட்புப்பூசல் வகை உறவு இருந்தது என்று நினைக்கிறேன். ஜெயகாந்தனை அவருக்கு அவ்வளவாக பிடிக்காது. “முரடன்” என்று சொன்னார். பிரமிளுடன் முதலில் நட்பும் பின்னர் கடும் சண்டையும். இலக்கியச் சண்டைகளை சொல்லும்போது ஒருவகை வேடிக்கைகளாக ஆக்கிவிடும் ஆற்றல் சச்சிதானந்தத்திற்கு உண்டு. ஜி.நாகராஜனின் கடைசிக்கால அவலநிலையைச் சொல்லும்போதுகூட இலக்கியம் என்னும் மாபெரும் அபத்தநாடகத்தின் ஒரு காட்சியாக அதை ஆக்கிவிடுவார்.
அவர் பிரமிள் பற்றிச் சொன்ன ஓர் அனுபவம் இது. பிரமிள் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு அகதியாக வந்தார். பின்னர் தன் விஸாவை நீட்டிக்க விரும்பினார். சச்சிதானந்தம் அவரை ஒர் அதிகாரியிடம் அழைத்துச் சென்றார். பாஸ்போட்டை பார்த்த அதிகாரி அதிர்ச்சியானார். விசா காலாவதியாகி பல மாதங்களாகியிருந்தன. இது பெரிய குற்றம் என அவர் கூச்சலிட்டார். அவர்கள் வெளியே வந்தனர். “இதை நீ ஏன் என்னிடம் சொல்லவில்லை?”என்று சச்சிதானந்தம் பிரமிளை திட்டினார். பிரமிள் அக்கணமே தன் பாஸ்போர்ட்டை கிழித்து வீசிவிட்டார். இனி பிரச்சினை இல்லை” என்றார். பிரமிளின் அந்த ‘திரும்பிநோக்காத’ இயல்பை சச்சி சொல்லும்போது அதில் ஒரு புனைவுக்குரிய தீவிரம் அமையும்.
அவருக்கு எம்.கோவிந்தனுடன் அணுக்கம் இருந்தது. கோவிந்தனின் பீடிவெறி, அரசியலில் இருந்து இலக்கியத்திற்குத் தாவி பேசிக்கொண்டே இருக்கும் அவருடைய தீவிரம் ஆகியவற்றை அவர் நுணுக்கமான சித்திரங்களாக விவரிப்பார். ஹாரீஸ் சாலையில் எம்.கோவிந்தனின் அறைக்கு கீழே நின்றாலே மேலே ஒரு சிவந்த நட்சத்திரம்போல பீடி எரியும் சுடர்ப்புள்ளி தெரியும் என்பார். கடம்மனிட்ட ராமகிருஷ்ணன் அவருடன் போஸ்டல் ஆடிட்டிங்கில் வேலைபார்த்தவர்.
மலையாள எழுத்தாளர் ஆனந்த் அவர்களையும் தெரியும்.ஆனந்தின் முதல்நூலான மரணசர்ட்டிஃபிகெட்டை கோவிந்தன் வெளியிட்ட வரலாற்றை சச்சிதானந்தம் என்னிடம் சொன்னார். கோவிந்தனைப் பார்க்கவந்த ஆனந்த் அவர் இல்லாததனால் அந்த கைப்பிரதியை ஜன்னல் வழியாக உள்ளே போட்டுவிட்டுப் போனார். அதில் விலாசமே இல்லை. அது கோவிந்தனின் சமீக்ஷா இதழில் வெளிவந்தது. அது புகழ்பெற்ற பின்னரே கோவிந்தன் ஆனந்தை சந்தித்தார்.
கி.அ.சச்சிதானந்தம் அவர்களை அவருடைய ஐம்பது வயதுக்குமேல் கதை எழுதவைக்கமுடியுமா என்று தமிழினி வசந்தகுமார் முயன்றார். இரண்டு சிறுகதைத் தொகுதிகள் வெளிவந்தன. [அம்மாவின் அத்தை, உயிரியக்கம்] அவருடைய சிறுகதைகள் அசோகமித்திரன் காட்டிய உலகைச் சார்ந்தவை. அன்றாடவாழ்க்கையின் மிகையில்லாச் சித்திரங்கள். நேர்த்தியான மொழியில் சொல்லப்பட்டவை. ஆனால் அன்றாட உலகியல் பார்வைக்கு அப்பால் செல்லாதவை. அவருக்கு பறங்கிமலை வட்டாரத்தின் ஆங்கிலஇந்திய மக்களின் வாழ்க்கை பற்றிய அறிமுகம் உண்டு. இளமைக்காலத்தில் அவர்களை நெருங்கி அறிந்திருக்கிறார். அந்த சூழல் குறித்த சித்திரங்கள் அவருடைய கதைகளில் ஆர்வமூட்டும் வாசிப்பு கொண்டவையாக இருக்கும்
கி.அ.சச்சிதானந்தம் அவர்களுக்கு ஆன்மிகமாக ஒரு தேடல் உண்டு என்று அறிந்திருக்கிறேன். சென்னையின் பதினெட்டு – பத்தொன்பதாம் நூற்றாண்டு ஆன்மிக உலகம் பற்றிய செய்திகளை அறிந்தவர். தியோசஃபிகல் சொசைட்டியுடன் அவருக்கு அணுக்கமான உறவுண்டு. அதன் நூலகத்தை நிறைய பயன்படுத்தியிருக்கிறார். ஜே.கிருஷ்ணமூர்த்தி மேல் பெரும் ஈடுபாடுள்ளவர். ஆனந்தக் குமாரசாமி மீதும் ஆழ்ந்த ஈடுபாடுண்டு, அவருடைய ‘Dance of Siva’ நூலை மொழியாக்கம் செய்திருக்கிறார்.’சிவானந்த நடனம்’.
கி.அ.சச்சிதானந்தம் ராமகிருஷ்ண மடம், கலாக்ஷேத்ரா போன்ற அமைப்புகளுடனும் வெவ்வேறு காலங்களில் அணுக்கமாக இருந்திருக்கிறார். அந்த அமைப்புகள் சென்றநூற்றாண்டில் சென்னையில் உருவாக்கிய ஆன்மிக – தத்துவ விவாதங்கள் பற்றி என்னிடம் பேசியிருக்கிறார். அவர்களிடையே நிகழ்ந்த பலவகையான பூசல்களைப் பற்றியும். பாலசரஸ்வதிக்கும் ருக்மிணிதேவி அருண்டேலுக்கும் இடையேயான பூசல் – விவாதம் பற்றி அவர் பேசியவை ஒரு சிறு நாவலுக்குரிய கரு என தோன்றியிருக்கிறது.
கி.அ.சச்சிதானந்தத்தை குறிப்பிடத்தக்க எழுத்தாளர் என்று சொல்லிவிடமுடியாது- நல்ல கதைகள் எழுதியிருந்தாலும். குறிப்பிடத்தக்க மொழியாக்கங்கள் செய்திருக்கிறார்- ஆனால் அதில் தொடர்ச்சியான பெரும்பங்களிப்பு ஏதுமில்லை. முழுநேரப் பதிப்பாளரல்ல. இலக்கிய ஆய்வாளரோ வரலாற்றாசிரியரோ அல்ல. எனில் அவர் யார்? அவர் ஓர் இலக்கியச் சுவைஞர். இலக்கியமே வாழ்வெனக் கொண்டவர் என்றுகூடச் சொல்லலாம். அந்நிலையில் பல இளம் எழுத்தாளர்களுக்கு, கலைஞர்களுக்கு வழிகாட்டியாக நண்பனாகத் திகழ்ந்தவர். சென்ற காலகட்டத்தின் நினைவை நிலைநிறுத்தும் ஒருவகையான மரபுநீட்சியாக நிலைகொண்டவர்.
கி.அ.சச்சிதானந்தம் கொரோனா தொற்றால் மறைந்துவிட்டார் என்ற செய்தியை அறிந்ததும் துயரமென ஏதும் தோன்றவில்லை. முதுமைதான். வாழ்ந்த வாழ்க்கையை எவ்வகையிலும் வீணாக்கியவரல்ல. தன் இயல்புக்கேற்ற தளங்களைக் கண்டடைந்து, முற்றாக ஈடுபட்டு சுவைத்து மகிழ்ந்து வாழ்ந்து நிறைந்தவர். இலக்கியம் பயணம் இரண்டும் ஒருவரை முழுமையாக்கும் என்னும் என் நம்பிக்கைக்கு ஒரு கண்கூடான சான்றென திகழ்ந்தவர்.