நோய்,மழை-கடிதங்கள்-2

அன்புள்ள ஜெ

மழைப்பயணம் அற்புதமான கட்டுரைத் தொடர். இந்தப்பயணங்களில் எல்லாம் உங்களுடனே இருக்கிறேன். நீங்கள் செல்லுமிடங்களுக்கு முன்னரே நானும் சென்றதுபோல உணர்கிறேன். மழையில் பயணம்செய்வது ஒரு சிறப்பான அனுபவம். நான் குறைவாகவே மழைப்பயணங்களை மேற்கொண்டிருக்கிறேன். பெரும்பாலும் பஸ்ஸில். ஆனால் மழைபெய்து பூரித்த நிலம் என்னுடைய மனதில் மிகப்பெரிய சித்திரமாக உள்ளது.

நான்கு கட்டுரைகளிலுமே அழகான வரிகள் நிறைந்திருந்தன. தனிமையையும் கொண்டாட்டத்தையும் ஒரே சமயம் வெளிப்படுத்தும் எழுத்து.

ரமேஷ்குமார்

அன்புள்ள ஜெ

நோய்க்காலப் பயணம் பற்றிய குறிப்புகளும் புகைப்படங்களும் அருமையானவை. குறிப்பாக பிரசன்னா எடுத்த படங்களெல்லாமே அழகாக இருந்தன. அவற்றை விரிவாக்கிப் பார்க்கவேண்டியிருந்தது. உங்கள் தளத்தின் அகலம் கம்மியானதனால் அகன்ற படங்கள் சிறியவையாக வெளியாகின்றன.

நீங்கள் வெவ்வேறு தெருக்களில் நின்றும் அமர்ந்தும் எடுத்த படங்கள்தான் இப்போது மிகவும் நெகிழ்ச்சியடையவைத்தன. முன்பெல்லாம் இடங்கள் வரலாற்றுச்சின்னங்களெல்லாம் முக்கியமாகப்படும். இப்போது தெருக்களே வரலாற்றுச்சின்னம்போல ஆகிவிட்டன

ஜெய்கணேஷ்

அன்புள்ள ஜெ

நான் இது வரை எந்த வரலாற்றுக்குமுந்தைய காலகட்டச் சின்னங்களையும் கண்டதில்லை. நீங்கள் மேகாலயா காஷ்மீர் கர்நாடகம் மகாராஷ்டிரம் என்று தேடித்தேடி அவற்றைப் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். எனக்கு அந்த இடங்கள் என்னவகையான உணர்வை அளிக்குமென உணரமுடியவில்லை. ஆனால் இரவு 1 மணிக்கு அந்த கல்பதுக்கைகளைப் பார்த்துக்கொண்டிருந்தபோது சட்டென்று ஒரு பெரிய நெகிழ்ச்சி வந்தது. உண்மையில் முதலில் ஒரு பதற்றமும் சஞ்சலமும் வந்தது. பயமாக இருந்தது. தனியாக இருக்கமுடியவில்லை. படங்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். அதன்பிறகு அதற்குள் இருந்தவர்கள் எல்லாம் பாட்டிகள்தானே என்று தோன்றியதும் நெகிழ்ச்சியாக உணர்ந்தேன்

ஆர்.சித்ரா

அன்புள்ள ஜெ

கொரோனாக்காலப் பயணம் ஆபத்தானதுதான். ஆனால் நீங்கள் செய்த எல்லா பயணங்களும் ஆபத்தானவை. காஷ்மீர், வடகிழக்கு, சத்தீஸ்கர் எல்லாமே ஆபத்தான பயணங்கள். ஸ்பிடிவேலி வழியாகச் சென்ற சாலையின் படமெல்லாமே என்னை குலைநடுங்கவைத்தது. இந்தப்பயணமும் ஆபத்தானதுதான். ஆபத்து பயணத்தை அழுத்தமாக ஆக்குகிறது என்று தோன்றுகிறது

இந்தக்கட்டுரையிலுள்ள பல வரிகள் ஆழமானவை.  “மானுடக்குலம் கனவுகளின் சரடால்தான் இணைக்கப்பட்டிருக்கிறது. கனவுகளால்தான் உருவாக்கப்பட்டிருக்கிறது. கனவுகளால்தான் மேலெடுத்துச் செல்லப்படுகிறது. கனவைச் சமைப்பவனே மானுடச்சிற்பி. எத்தனை எளியவனாயினும் நானும் அவர்களில் ஒருவன்’ என்ற வரிகள் மந்திரம் போலிருந்தன

எம்.சந்திரகுமார்

நோய்க்காலமும் மழைக்காலமும்-4

நோய்க்காலமும் மழைக்காலமும்-3

நோய்க்காலமும் மழைக்காலமும்-2

நோய்க்காலமும் மழைக்காலமும்-1

முந்தைய கட்டுரைவெண்முரசு வினாக்கள்-10
அடுத்த கட்டுரைகாந்தி,திருமா