அருகாமை

எஸ்.வையாபுரிப்பிள்ளை

அன்புள்ள ஜெ

ஒரு கட்டுரையில்  ‘அருகாமையில்’ என்று எழுதியிருந்தேன். நாலைந்து இலக்கணவாதிகள் வந்து பிடித்துக்கொண்டார்கள். அருகாமை என்றால் தவறு என்றார்கள். அருகு என்றால் சுருங்குதல். அருகாமை என்றால் சுருங்காமலிருத்தல் என்று பொருள் சொன்னார்கள். ஒரே கேலி கிண்டல். ஆனால் பல முன்னோடிகள் அருகாமை என எழுதியிருப்பதையும் காண்கிறேன். அருகாமை என்பது சரியா, எழுதலாமா?

ஸ்ரீதர்

அன்புள்ள ஸ்ரீதர்,

இன்றைய இணையச்சூழலில் இதைப்போன்ற குரல்கள் எழுவது இயல்பு. எவருடைய தகுதிக்கும் சான்றில்லை. எங்கே என்ன படித்தார் என்று நமக்கு தெரிவதில்லை. எவரும் எவ்வகையிலும் தன்னை காட்டிக்கொள்ள முடியும். முச்சந்தி அரட்டைகள் அப்படியே பதிவாகும் ஒரு வெளி இது

இவர்களில் பலர் நாளிதழ்களுக்கு அப்பால் எதுவும் படிக்காதவர்கள். அ.கி.பரந்தாமனாரின் ‘நல்லதமிழ் எழுதுவது எப்படி?’ போன்ற சில நூல்களை மேலோட்டமாகப் படித்திருப்பார்கள். அதையே ஒரு பைபிளெனக் கொண்டு மதப்பிரச்சாரம் போல நம் மீது தங்கள் வாய்நாற்றத்தை விடத்தொடங்கி விடுகிறார்கள்.

அ.கி.பரந்தாமனாரே நல்லதமிழ் எழுதியவர் அல்ல. அவருக்கு தமிழ் உரைநடையில் எந்த இடமும் இல்லை. அவர் எழுதியது பள்ளிமாணவர்கள் பிழையில்லாமல் எளிய தமிழ் எழுதுவதற்கான பயிற்சிநூல். அதைக்கொண்டுவந்து அத்தனை உரைநடைமேலும் போடுகிறார்கள். அதன் குளறுபடிகளையே நாம் அன்றாடம் காண்கிறோம்.

பிழையில்லாத் தமிழ் என்பது பள்ளிகளுக்குரியது. புதியனதேடும், முன்பிலாதன நிகழ்த்தும், எந்நுண்மையையும் சென்றடையும் தமிழே அறிவியக்கதிற்குரியது, புனைவுக்குரியது. அதையே சிறந்தநடை என்று சொல்லவேண்டும்.

உரைநடைமேல், இலக்கணம் மீது ஒரு கண்காணிப்பு இருக்கவேண்டியதுதான். ஆனால் அது மேட்டிமைவாதமாக ஆகிவிடக்கூடாது. மட்டம்தட்டுவதாக மாறக்கூடாது. அத்துடன் அதைச் சொல்பவர் தன் இடம், தன் தகுதி ஆகியவற்றைப் பற்றிய புரிதல் கொண்டவராகவும், அதற்கான அடக்கமும் தொடர்கல்வியும் உடையவராகவும் இருக்கவேண்டும்.

இத்தகைய ஐயங்கள் எழும்போது நாம் செய்யவேண்டியவை இரண்டு. ஒன்று தமிழறிந்த சான்றோர் அப்படி எழுதியிருக்கிறார்களா என்று பார்ப்பது. இரண்டு உரிய அகராதிகளில் அவ்வண்ணம் உள்ளதா என்று பார்ப்பது.

பெரும்பாலும் எல்லா தமிழறிஞர்களும் அருகாமையில் என்ற சொல்லை பயன்படுத்தியிருக்கிறார்கள்- அவர்களை விடவும் நாமொன்றும் அறிஞர்கள் அல்ல.

எஸ்.வையாபுரிப்பிள்ளையின் தமிழ்ப்பேரகராதி அருகாமை என்ற சொல்லுக்கு அருகு, சமீபம் என்று பொருள் அளிக்கிறது. ஆங்கிலத்தில் close proximity என்று பொருள் வழங்குகிறது. இதற்கு அப்பால் என்ன வேண்டும்?

அருகாமை என்பதற்கான வேர்ச்சொல், சொல்லிணைவு என்ன? அருகுதல் என்பதுதான் வேர்ச்சொல்லா? எந்த அடிப்படையில் அப்படி எடுத்துக்கொள்கிறார்கள்?

நாம் முதலில் புரிந்துகொள்ளவேண்டியது ஒன்றுண்டு. வேர்ச்சொற்கள் முழுச்சொற்களாக ஆவதற்கு இருவழிப்பாதை உண்டு. ஒன்று வளர்தல், இன்னொன்று மருவுதல். வேர்ச்சொல் மேலும் மேலும் பொருளேற்றம் கொண்டு புதிய சொற்களாக ஆவதுண்டு. இது அறிஞர்மட்டத்தில் நிகழ்வது. ஒரு வேர்ச்சொல் அன்றாட நாப்புழக்கத்தில் மருவி புதியசொல்லாக ஆவதும் உண்டு. அது பேச்சுமொழியில் நிகழ்வது.

தமிழின் ஈராயிரமாண்டு வரலாற்றில் இரண்டுக்குமே இடமுண்டு.ஒரு சொல் பேச்சுவழக்கில் இருந்தாலே போதும், பெருங்காவியத்தில் இடம்பெறலாம் என்பதைச் சுட்டும் ஒரு கதை உண்டு. துமி என்ற சொல்லை காவியத்தில் பயன்படுத்தலாமா என்று கம்பனுக்கும் ஒட்டக்கூத்தனுக்கும் நிகழும் உரையாடலில் கலைமகள் வந்து கம்பனுக்குச் சான்றளிக்கிறாள்.

வாழும் மொழி எப்போதுமே பேச்சுவழக்கை பின்தொடரும். அதிலிருந்து சொற்களை, சொல்லாட்சிகளை எடுத்துக்கொள்ளும். அதை இலக்கணத்திற்குள் அமைத்துக்கொள்ளும். தமிழ் இதையும் ஓர் இலக்கணமுறையாக வகுத்துள்ளது. மரூஉ [மருவு] என்பது தமிழ்ச்செவ்வியலால் ஏற்கப்பட்டதுதான். அவ்வண்ணம் ஏற்கப்பட்ட பல்லாயிரம் சொற்கள் நம்மிடமுண்டு.

மருவுசொற்களை மிகக்கூடுதலாக பயன்படுத்திய பெருங்கவிஞன் கம்பன். மருவுசொற்களை கம்பனிடமிருந்து நீக்கினால் கம்பராமாயணமே அளவு குறைந்துவிடும் என்று பகடியாக பேரா.ஜேசுதாசன் சொல்வதுண்டு. கம்பன் பேச்சுவழக்குச் சொற்களை மருவுசொல்லாக கையாள்வதுண்டு. பூச்சை [பூனை] என்பது பூசை என மருவி அவனுடைய காப்பியத்தின் தொடக்கத்தில் அவையடக்கச் செய்யுளிலேயே வந்துவிடுகிறது. பலநூறு சம்ஸ்கிருதச் சொற்கள் மருவி தமிழ்ச் சொற்களாக புழங்குகின்றன. ரக்தம் அரத்தமாக ஆவது ஓர் உதாரணம்.

எஸ்.வையாபுரிப்பிள்ளை அருகாமை என்ற சொல்லுக்கு colloq என அடைமொழி அளிக்கிறார். அது மக்கள்மொழியின் நாவழக்கம், மருவுசொல் என அவர் கருதுகிறார்.

அப்படியென்றால் முதற்சொல் என்ன? அதை முன்னரே அளிக்கிறார். அருகாண்மை. அதை மருவுசொல் என அவர் குறிக்கவில்லை என்பதைக் காண்க. அருகே அமைதல், அண்மை கொண்டிருத்தல் என்னும் பொருள் வரும் சொல் அது

எஸ்.வையாபுரிப்பிள்ளையின் பேரகராதிப்படி ஆண்மை என்ற சொல்லுக்கு உடைமை என்று பொருள் உண்டு. அப்பொருளிலேயே பண்டைய இலக்கியத்தில் ஆண்மை என்னும் சொல் பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டு, சான்றாண்மை. அருகு உடைமையே அருகாண்மை ஆகியது. அச்சொல் மருவி அருகாமை ஆகியிருக்கிறது.

எப்படியாயினும் ஒரு மருவுசொல் என அதற்கு இலக்கண ஏற்பு உள்ளது. அதை சான்றோர் செவ்வியல் உரைநடையில் பயன்படுத்தி முன்வழக்கு உருவாக்கியுமிருக்கிறார்கள். அச்சொல்லை எத்தடையுமின்றிப் பயன்படுத்தலாம்.

இன்னொன்று குறிப்பிடவேண்டும், இச்சொல் ஏன் இன்றியமையாதது என்றால், proximity என்பதற்கு இணையான இன்னொரு சொல் தமிழில் இல்லை. அருகமைதல் என்று சொல்லலாம், ஆனால் அது வினைச்சொல். அதை ஒரு பெயர்ச்சொல்லாக கூறவேண்டிய இடத்தில் அருகாமை என்றே சொல்லமுடியும். ‘அவனுடைய அருகாமை அவளுக்கு துணையென உடனிருந்தது’ என்று சொல்வதற்கும் ‘அவன் அருகிருந்தது அவளுக்கு துணையென உடனிருந்தது’ என்பதற்கும் பெரிய வேறுபாடுண்டு.

முதற்சொற்றொடரில் அருகாமை என்பது ஒரு பெயர்ச்சொல்லாக இருக்கிறது. அருகாமையை ஒரு நிகழ்வாக அன்றி  ஓர் இருப்பாக, ஆளுமையாக உருவகம் செய்கிறது அச்சொற்றொடர்.  ‘எத்தனை அருகாமைகளால் ஆனது இத்தனிமை!’ என ஒரு கவிச்சொல் எழுகிறது என்று கொள்வோம். அந்த வரியில் அருகாமையென்னும் சொல்லை வேறெதைக்கொண்டு நிகர்வைக்க முடியும்?

ஒரு மொழி அன்றாடப்புழக்கத்திலும், அறிவியக்கத்திலும் கோரும் தேவைகள் எண்ணற்றவை.புனைவில் கொள்ளும் தேவைகள் முன்பில்லாதவை. அம்மொழி அளிக்கும் அத்தனை வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொண்டே நாம் முன்னகர முடியும். மொழியின் அத்தனைச் சொற்களும், சொற்களின் மரூஉக்களும், சொல்வளர்ச்சிகளும் தேவைப்படும்.

அவ்வண்ணம்தான் வாழும் மொழிகள் இயங்குகின்றன. நாம் செத்தமொழிக்கு இலக்கணம் பேசவில்லை,என்றுமுள தென்றமிழுக்கு இலக்கணம்பேசுகிறோம். இது தேங்கிய குட்டையல்ல, திசைமுடிவிலி தேரும் பேராறு என்று நாம் உணரவேண்டும்.

மொழியின் முன் வாழ்க்கையும் புனைவும் முன்வைக்கும் அறைகூவல்களைப் பற்றிய எந்த புரிதலுமில்லாத மொண்ணைகளிடம் மொழியிலக்கணத்தை அளித்துவிடலாகாது. சென்றகாலத்தைய இலக்கணக்காரர்களுக்கு முரட்டு அணுகுமுறை இருந்தாலும் கூடவே மொழியறிவாவது இருந்தது, இன்றைய இணைய இலக்கணக்காரர்களில் பலர் அதுவும் தெரியாதவர்கள்.

ஜெ

இமையம் என்னும் சொல்

க்ரியாவின் மொழிக்கொள்கை,இலக்கண ஆதிக்கம்

சராசரி நடையும் புனைவுநடையும்

இலக்கணம்- வெள்ளையானை- மொழி

வெள்ளையானை- இலக்கணம்

மொழி, 10 இலக்கணம்

இலக்கணம், கடிதங்கள்

கனி

முந்தைய கட்டுரைபெருங்கற்கால ஈமச்சின்னங்கள்- ராஜமாணிக்கம்
அடுத்த கட்டுரைஅ. கா. பெருமாள் – கலந்துரையாடல் நிகழ்வு