பொருள்முதல் எதிர் கருத்துமுதல்

வாழ்க்கையின் கேள்விகள், பதில்கள், பதில்களுக்கு அப்பால்…

அன்பு ஜெயமோகன்,

தங்களுக்கு எழுதி நீண்ட நாட்களாகி விட்டன. சமீபமாய் மாடன் மோட்சம் குறித்து அருண்குமார் ஒரு கடிதம் எழுதி இருந்தார். அப்போதே உங்களுக்கு எழுதுவதாய் இருந்தேன்; தவறிவிட்டது. திரும்பவும், சமணர் கழுவேற்றம் பற்றிய தங்கள் பார்வை குறித்தும் எழுத முடியாமலாகி விட்டது. சோதிப்பிரகாசம் நூலுக்கு நீங்கள் எழுதிய முன்னுரையின் மீள்பிரசுரம் கண்டதும் உள்ளுக்குள் திடீர் பரவசம். இப்போது தவறவிட்டு விடவே கூடாது எனும் பரிதவிப்பில் எழுதத் துவங்கி விட்டேன்.

மாடன் மோட்சம், சமணர் கழுவேற்றம், சோதிப்பிரகாச நூல் முன்னுரை என மூன்றைப் பற்றியும் நான் எவ்விமர்சனங்களையும் தனித்தனியாகச் சொல்லிச் செல்லப்போவதில்லை. அவற்றை வாசிக்கும்போது துலங்கிய சிந்தனைப்புலப்பாடுகளைத் தெளிவுடன் இங்கு தொகுக்க முயன்றிருக்கிறேன்.

ஒரு தனிமனிதன் மற்றும் சமூகத்துக்கிடையேயான ஊடாட்டத்தின் மர்மப்புள்ளியிலேயே வாழ்வு துலங்கியபடி இருக்கிறது. ஆனால், வாழ்வை அவ்வாறு ஏற்றுக்கொள்வதற்கு நம் மனங்கள் ஒப்புக்கொள்வதே இல்லை. வாழ்வை வரையறுத்து விட முடியும் அல்லது அதை வரையறுக்கவே முடியாது எனும் இருதரப்புகளாக அதைப் பாகுபடுத்திக்கொள்கிறோம். அப்பாகுபடுத்தல்களை அவரவர்க்குத் தகுந்தாற்போன்று குறுக்கல்வாதங்களாகவும் ஆக்கிக் கொள்கிறோம். பிறகு, அதைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு இருப்பதையே வாழ்வின் நோக்கம் என்பதாக அடையாளப்படுத்தவும் செய்கிறோம். ஒரு கட்டத்தில், அடையாளங்களின் கொக்கிகளுக்குள் இருக்கவும் இயலாமல், மீளவும் தெரியாமல் தடுமாறத் துவங்கி விடுகிறோம். எனினும், அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் தான் நேர்ந்து கொண்ட குறுக்கல்வாதத்திற்குச் சப்பைக்கட்டு கட்டுவதைப் பிடிவாத இலட்சியமாக வரித்தும் கொள்கிறோம். இன்றைக்கு நவீனத்தலைமுறைக்கு இருக்கும் ஆகப்பெருஞ்சிக்கல் இதுவே என்பது என் பார்வை.

வாழ்வை வரையறுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதில் தவறே இல்லை. ஆனால், அவை எப்படியான அடிப்படையில் அமைகின்றன என்பதே முக்கியம். வாழ்வை நம் அறிவு கொண்டு வரையறுத்து விடலாம் எனும் தரப்பாக பொருள்முதல் நம்பிக்கையாளர்களையும், வாழ்வை நம்மால் அப்படி தீர்மானமாய் வரையறுத்துவிட முடியாது எனும் தரப்பாக கருத்துமுதல் நம்பிக்கையாளர்களையும் சுட்டலாம். இருவகையினருமே தங்கள் தரப்பை உறுதிப்படுத்துவதற்கு உலக நிகழ்வுகளைச் சான்றுகளாக எடுத்துக் கொள்கின்றனர்.

பொருள்முதல் நம்பிக்கையாளர்கள் கடந்தகாலத்தை  வரலாற்றியலின்  வழியும், கருத்துமுதல் நம்பிக்கையாளர்கள் தொன்மவியலின் வழியும் தங்களுக்கான கருதுகோள்களை அல்லது தீர்க்கமான முடிவுகளை அறிவிக்கின்றனர். தனிமனிதனின் வாழ்வு அவன் கையில் இருக்கிறது என்பதில் பொருள்முதல் நம்பிக்கையாளர்கள் உறுதியாய்ச் சொல்லும்போது.. கருத்துமுதல் நம்பிக்கையாளர்கள் தனிமனிதனின் வாழ்வை ஆத்மா, கடவுள், விதி(வினைக்கொள்கை) போன்றவையே தீர்மானிப்பதாக அறுதியிட்டுச் சொல்கின்றனர்.

பொருள்முதல் நம்பிக்கையாளர்கள் மனிதர்களின் பகுத்தறிவு கொண்டு உலகைச் சீர்படுத்தி விடலாம் என உறுதியாக நம்புகிறார்கள்; அதன்பொருட்டு செயல்திட்டங்களை வகுத்துக் கொள்கின்றனர். கருத்துமுதல் நம்பிக்கையாளர்கள் பகுத்தறிவுக்கும் அப்பாற்பட்ட சக்தி ஒன்று இருக்கிறது, அதுவே அனைத்தையும் தீர்மானிக்கிறது எனக் கறாராய் நம்புகின்றனர்; அதை ஒட்டிய செயல்பாடுகளை ஒருங்கமைத்துக் கொள்கின்றனர். ஒருவரை ஒருவர் ’எதிரிகளாக’ உருவகிக்கவும் துவங்கி விடுகின்றனர். ஒருகட்டத்தில், இருதரப்புகளுக்கிடையேயான மோதல்கள் சிந்தனை ஊடாட்டங்களாக அல்லாமல் வெறிச்செயல்களாக மாறி வன்மப்பகையாக உருப்பெற்றும் விடுகின்றன. காலந்தோறும், அவ்வன்மப்பகையை வளர்ப்பதையே தங்கள் செயல்பாடுகளாகத் தொடரவும் தலைப்படுகின்றனர்.

இங்குதான், இருதரப்புகளுக்குமான அடிப்படை நோக்கத்தை உற்றுக்கவனிக்க வேண்டிய அவசியம் வருகிறது. பொருள்முதல் நம்பிக்கையாளர்கள் தாழ்வுபேதமற்ற சமதர்மச் சமூகத்தைத் தங்கள் இலக்காகக் கொண்டிருக்கின்றனர்; கருத்துமுதல் நம்பிக்கையாளர்களும் அப்படியான சமூகத்தையே வேறுவகையில் தங்கள் இலக்காகச் சொல்கின்றனர். பிறகெப்படி அவர்களுக்குள் வன்ம மோதல்கள்?

பொருள்முதல் நம்பிக்கையாளர்களின் பார்வையில்.. தாழ்வுகளற்ற சமஉரிமைச் சமூகம் ஒன்று முன்பு இருந்தது; அதை கருத்துமுதல் நம்பிக்கையாளர்கள் திட்டமிட்டு குலைத்துவிட்டனர். கருத்துமுதல் நம்பிக்கையாளர்களின் பார்வையில்.. பேதங்களற்ற சமதர்மச் சமூகமானது பொருள்முதல் நம்பிக்கையாளர்களால் வேண்டுமென்றே குலைக்கப்பட்டது. இப்படியான கருதுகோள்களைத் தங்கள் நம்பிக்கைகளாகக் கொண்டு செயல்படுவதில் இருதரப்புகளும் ஒன்றை ஒன்று விஞ்சி நிற்கின்றன.

இருதரப்புகளில் எது சரி, எது தவறு? அப்படி தட்டையாக நாம் எதையுல் சொல்லிவிட முடியாது; சொல்லிவிடவும் கூடாது. சமூகங்களின் வரலாற்றைத் தருக்க அடிப்படையிலான ஒரு கருதுகோளாக வைக்கலாம். அதை பொருள்முதல் தரப்பில் மார்க்ஸ் வெகுஅற்புதமாகச் செய்தார். வேட்டைச் சமூகம், மேய்ச்சல் சமூகம், வேளாண் சமூகம், உற்பத்தி சமூகம் மற்றும் நவீனச் சமூகம் என்பதாக அவரின் சமூகப்பரிணாமத்தை நாம் உள்வாங்கலாம். ஆனால், அதற்கு மேற்கொண்டு அவரின் முதலாளி எதிர் தொழிலாளி சமூகஉறவைக் கறாரான அறிவியலாக ஒப்புக்கொள்வதில்தான் சிக்கல் இருக்கிறது. தருக்கரீதியில் முன்வைக்கப்படும் கருதுகோள் எப்போது ஒரு தீர்க்கதரிசனம் போன்று நிறுவன அமைப்பாக நிறுவிக்கொள்கிறதோ.. அப்போது அது கொஞ்சம் கொஞசமாய் நீர்த்துபோய் தன் வலுவை இழந்துவிடும். இன்றைய மார்க்சிய அமைப்புகளுக்கு நேர்ந்திருக்கும் அவலம் இதுதான். மார்க்சிய அமைப்புகள் என்றில்லை; எப்படியான பொருள்முதல் அமைப்புகளுக்கும் அது பொருந்தும்.

கருத்துமுதல் நம்பிக்கையாளர்களும் தங்கள் தர்க்கம் கடந்திருக்கும் நினைவுகளைக் கொண்டு சமூக வரலாற்றைத் தொன்மங்கள் வடிவில் ஒரு கருதுகோளாக வைக்கலாம். அதையே இயற்கை வழிபாடு, குலக்குறி வழிபாடு, குலமுன்னோர் வழிபாடு, ஆலய வழிபாடு மற்றும் தியானம் என்பதான பரிணாமத்தில் நாம் விளங்கிக் கொள்ளவும் செய்யலாம். அதைக்கடந்து கடவுள் எதிர் மனிதன் உறவு எனும் கருதுகோளை என்றைக்குமான தீர்க்கதரிசனமாக நிறுவன அமைப்புகள் வழியே நிறுவிக்கொள்கிறபோது கருத்துமுதல் அமைப்புகளும் அம்பலப்படவே செய்யும். இன்றைய நிறுவனச் சமயங்களின் கோளாறுகளும் அத்தகையதே.

இங்கு, ஒன்றை அழுத்தமாய் விளங்கிக் கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. நமக்குக் கையளிக்கப்பட்ட சிந்தனை முறைமைகள் எல்லாம் மனிதக்குழுவை முதன்மைப்படுத்தியதாகவே இருக்கின்றன. பொருள்முதல் நம்பிக்கையாளர்கள் இவ்வுலகு வழி மனிதக்குழுவைத் தொகுக்க முனைய.. கருத்துமுதல் நம்பிக்கையாளர்கள் அவ்வுலகு வழி மனிதக்குழுவைத் திரட்ட எத்தனித்திருக்கின்றனர். இருதரப்புகளுமே தனிமனிதனைத் தவிக்கவிட்டு விட்டன; அவற்றுக்குச் சமூகமனிதக்குழுக்களே முக்கியம். மேலும், அவற்றுக்கு நம்பிக்கையாளர்களே தேவை; சிந்தனையாளர்கள் வேண்டவே வேண்டாம்.

சமூக முரணியக்கத்தின் துவக்க காலகட்டங்களில் குழுவும், குழு அடையாளங்களுமே முக்கியமானவை; மறுப்பதற்கில்லை. வெகுநவீன இருபத்தோராம் நூற்றாண்டிலும் அப்படியான நிலையே தொடரலாமா? மனிதக்குழுவையும், அவற்றின் அடையாளங்களையும் கேள்வி கேட்பதன் வழியாக அவற்றைச் சீர்படுத்த முனையும் தனிமனிதர்களின் குரல்களை(கலை இலக்கியவாதிகள்) ஒடுக்கலாமா?

தனிமனிதனுக்கும், சமூகஅமைப்புக்கும் இடையேயான ஊடாட்டங்களைக் குறித்து பேசுவதற்கான கலை, இலக்கிய முன்னோடிகள் நமக்கு நற்பேறாய் வாய்த்திருக்கின்றனர். அவர்களைக் கோட்பாடுகளின் வால்பிடித்து ஏளனம் செய்தல் தகுமா?

ஒரு குறிப்பிட்ட கருத்தியலையோ அல்லது கோட்பாட்டையோ ஆதரிக்கும்படியாகவே கலை, இலக்கியங்கள் செயல்பட முடியும் என்பதான யோசனையே இன்றைக்குத் தட்டையானது. கலை இலக்கிய ஆக்கங்களை முற்போக்கு, பிற்போக்கு எனத்தரப்படுத்தி பண்டங்களாக அணுகும் போக்குகளைக் கேள்விக்குள்ளாக்க வேண்டிய காலத்தில் இருக்கிறோம். எனினும், கலை இலக்கிய ஆக்கங்களோடு நாம் தொடர்ந்து உரையாடிக் கொண்டிருக்க வேண்டும். அதற்கு அனுமதிக்காத கலை இலக்கிய ஆளுமைகளைப் புறந்தள்ளத் தயங்கவே கூடாது; ஒரு வாசகனுக்கு அப்படியான துணிச்சல் மிக முக்கியம்.

 சத்திவேல்,

கோபிசெட்டிபாளையம்.

முந்தைய கட்டுரைஅருகாமை- கடிதங்கள்
அடுத்த கட்டுரைஇயல்,கனடா- ஒரு வம்பு