குறங்குதமிழ்!

ஈரோட்டில் தங்கியிருந்தபோது ஓட்டலுக்குச் சாப்பிடச்செல்லும் வழியில் ஒரு பெயர்ப்பலகையைப் பார்த்தேன். குரங்கு சேக்கப்சர். சேக்கப்சர் ஏதாவது சிறப்புப் பெயரா? அல்லது ஏதாவது அயல்நாட்டுப் பெயரா? இல்லை ஈரோட்டு வகையறாதானா? அதென்ன குரங்கு?

மூளை மின்னியது. ஷாக் அப்சார்பர்! அது பழுதுபார்க்கும் கடை. அதன் பிராண்ட் குரங்கு. சரிதான், ஷாக் அப்சார்பரே தேவையில்லாத தாவும் உயிரினம். ஆனால் ஏன் ஒருவருக்கு குரங்கை தன் கடைமுத்திரையாக வைக்கத் தோன்றியது? எங்கள் ஷாக் அப்சார்பரின்மேல் அமர்பவர்கள் குதித்துக்கொண்டே இருப்பார்கள் என்கிறார்களா?

நண்பர்களிடம் காட்டினேன். எவருக்கும் அந்த பெயரை நான் சொல்வதுவரை புரிந்துகொள்ள முடியவில்லை. முதலில், நண்பர்கள் பலர் அந்த வழியாகவே நடமாடுபவர்கள். ஆனால் அவர்கள் எவருக்குமே கண்ணில் அந்த பெயர்ப்பலகை படவில்லை. எனக்கு பெயர்ப்பலகைகள், சுவரொட்டிகளை பார்க்கும் வழக்கம் உண்டு. நின்று கவனிப்பதுமுண்டு. உலகம் முழுக்க  ஏராளமான வேடிக்கையான பெயர்ப்பலகைகளை கண்டிருக்கிறேன்

குறங்குசெறி என்று ஒரு நகை உண்டு. அடுக்கடுக்காக செறிந்து ஓசையிடும் ஒருவகை கொத்துநகை. தொடையில் படியும்படி அணிவது. சிலப்பதிகாரத்தில் மாதவி அணிந்தது. எங்களுக்குப் பத்தாம்வகுப்பில் அது பாடம். நான் வேண்டுமென்றே அதை குரங்குசொறி என்று சொல்லிப் பரப்பி எவருக்கும் வேறெவ்வகையிலும் அது கண்ணிலும் நினைவிலும் நிற்காமல் செய்தேன். அதைச் சொல்லி பலமுறை அடிவாங்கியவர்கள் உண்டு. ஞாபகமாக சரியாகச் சொல்லமுயன்று, நாக்குழறி அதையே சொல்லி நானும் அடிவாங்கினேன்.

ஒருவேளை இது குறங்கு ஆக இருக்குமோ? குறங்கு என்றால் குலுங்கும் ஓசை. ஷாக் அப்சார்பர் அப்படித்தானே ஓசையிடும்? இப்படி திருத்தித்தானே நாம் எல்லா பண்டைய இலக்கியங்களையும் வாசித்தோம்? எதிர்காலத்தில் ஓர் உவேசா அப்படி பாடபேதம் கண்டடையாமலா போய்விடுவார்?

இணையத்தில் அரசியல் சார்ந்து வரும் இதேபோன்ற படங்களை நம்பமுடியாது. வேண்டுமென்றே ஃபோட்டோஷாப் வேலை செய்திருப்பார்கள். அதில் சுவாரசியமேதுமில்லை. இந்தவகையான பெயர்ப்பலகைகளுக்குப் பின்னால் ஒரு வாழ்க்கை உள்ளது, ஒரு மனிதர் இருக்கிறார். அவரை கற்பனைசெய்வதுதான் உண்மையில் மகிழ்ச்சியானது.

குரங்கு சேக்கப்சர்! தன் கடையின் பெயரை அப்படிப் பெருமிதமாகச் சொல்லும் அந்த மெக்கானிக்கை நேரில் பார்க்க விழைந்தேன். கடைபூட்டியிருந்தது. ஈரோட்டின் அதிர்வுகளை தாங்கும் கடை கோவிட் அதிர்வை தாங்காமலாகியிருக்கலாம்.

என்ன முக்கியம் என்றால் கடையும் பலகையும் மிகப்பழையவை. அதாவது, இந்தப் பலகையை மாட்டி பல ஆண்டுகளாகத் தொழில்செய்துவருகிறார். ஷாக் அப்சார்பர் என்று எழுதினால் ஈரோட்டுக்காரர்கள் “ஏனுங்க, என்னமோ சேக்குன்னு எளுதியிருக்குங்க. பாய் கடைங்களா?”என்று குழப்பமடைவார்கள். எதைப் பேசுகிறோமே அதைத்தானே எழுதவேண்டும்?

இதே ஈரோட்டில் ‘ரயில் டேசன் அருகெ’ என்ற பலகையை பார்த்திருக்கிறேன். திரும்பி வருகையிலேயே மூலிகைப்பல்பொடி விற்பவர் ‘பல் எவுறு பிரச்சினைகள்’ சரியாகும் என்று போட்டிருந்தை நண்பர்களுக்குச் சுட்டிக்காட்டினேன். ஈறு இங்கே எவுறு. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தை எப்படி சொல்வார்கள்? ஆனால் ஈரோட்டைவிட நெல்லையில்தான் எகிறும் பற்கள் மிகுதி

‘சன்னத்துல் அக்’ என்று ஒரு பெயர்ப்பலகையை சென்னையில் கண்டிருக்கிறேன். ஜன்னத்துல் ஹக் என நினைத்தேன், வேறாகவும் இருக்கலாம். ஆனால் கிறிஸ்தவர்கள் ஜரூரானவர்கள். பிழையாக எழுதிவிடக்கூடாது என்பதனாலேயே பத்தடி முன்னால் சென்றுவிடுவார்கள். “கழிகூறுங்கள், இயேசு வருகிறார்’ என்ற அறிவிப்பை பார்த்திருக்கிறேன். சம்பந்தப்பட்டவர் அதென்ன களி, சீப்பா இருக்கே என நினைத்திருக்கலாம்.

பிராமணர்கள் இந்த வகையான திருத்திச் சரிசெய்யும் பிழையைச் செய்வதுண்டு. பிழைதிருத்தி பிழைசமைத்து உயிரைவாங்கும் பிராமணர்கூட்டம் ஒன்று இணையத்தில் உண்டு. அதை ஒருவகை வரலாற்றுக்கடமையாக நினைக்கிறார்கள். தமிழுக்கு வேறு நாதி யார்?

இவர்கள் சம்ஸ்கிருதச் சொற்கள் ஷ்களால் ஆனவை என நினைக்கிறார்கள். உஷ் என்பதுகூட ஒரு சம்ஸ்கிருதச் சொல்தான். ஷோபை, ஷோபானம், ஷிவா, ஷாரதா என்று திருத்திச் சொல்ல ரொம்பவே மெனக்கெடுவார்கள். சென்னையில் ‘ஷிவஷக்தி கோயில் செல்லும் வழி’ என்ற போர்டை கண்டிருக்கிறேன். வஷி என இருந்திருக்கலாம்.வெற்றிலைக்குதப்பர்கள் சொல்ல எளிது.

எங்களூரில் பல இடங்களில் ‘கம்பரசர்’ என்று எழுதியிருக்கும். இரு அர்த்தங்கள் நம்மால் அடையப்படும். கம்பரசத்தில் ஊறியவர். அண்ணாத்துரைபோல. அல்லது கம்புஅரசர், சிலம்ப வித்வான். ஆனால் இரண்டுமே தப்பு, கம்ப்ரஷர் பழுதுபார்ப்பதுதான்

பீப்பொரியல் என்றால் தெரிந்திருக்கும், தமிழ்நாடு முழுக்க அதுதான். புள்சை என்றால் வடதமிழர்களுக்கு தெரிந்திருக்காது, ஒருபக்க அரைவேக்காட்டு முட்டை. மட்டன் பிறை என்றால் இஸ்லாமியர் விரும்புவார்கள். நாகர்கோயிலில் ஒரு பாய்க்கடை உரிமையாளர் தூயதமிழார்வலர். குசுகா என்று எழுதினால் குஷ்கா வியாபாரம் படுத்துவிடும் என்றுகூட தெரியாதவர். ஆனால் அவரே கூட சும்மா பள்ளி என்று ஜும்மா மசூதியை திருத்த முற்படமாட்டார்.

மார்த்தாண்டம் பக்கம் பல கடைகளில் றொட்டி என எழுதியிருப்பது சப்பாத்தியை என புரிந்துகொள்ளவேண்டும். அதை சுட்டுத்தருபவர் தன்னை றெஜினால்டு றாபின்ஸன் என்றுதான் அறிமுகம் செய்துகொள்வார். குலசேகரம் பக்கம் ற்றீ, காப்பி கிடைக்கும் என்ற போர்டுகளைக் காணலாம்.  ‘றோடுறோளர் றிப்பேர்’ செய்யும் கடைகள்கூட உண்டு.

தமிழகம் முழுக்க விசித்திரமான பெயர்ப்பலகைகள் வந்து நம்மை தாக்குகின்றன. சென்ற பத்தாண்டுகளில் தமிழ்நாட்டில் நடைபெற்றிருக்கும் மாபெரும் பண்பாட்டுப்புரட்சி என்பது துணுக்குறச்செய்யும் எழுத்துப்பிழைகள்தான். மங்கையர்க்கரிசி என்பது அரசின் இலவச அரிசித்திட்டமல்ல, ஓர் அம்மாளின் பெயர் என நான் நின்று படித்து புரிந்துகொண்டிருக்கிறேன். கலைச்செவி அடுமனையகம் என்ற போர்டை படமெடுத்து வைத்திருந்தேன். கலைச்செவி சங்கீதத்திற்கு உகந்தது என கலைச்செல்விக்கு தெரிந்திருக்கிறது.

பொதுவாகவே தமிழ்க்கல்வி தமிழகத்தில் இல்லாமலாகிவிட்டது. புதிய தலைமுறையினரில் சரளமாகத் தமிழ்படிப்பவர்கள், பெரிய எழுத்துப்பிழைகள் இல்லாமல் ஓரிரு பத்திகள் எழுதுபவர்கள் மிகமிக அரிதாகிவிட்டார்கள். ஆகவே நாளிதழ்கள்கூட அவர்களால் வாசிக்கப்படுவதில்லை. எந்தமொழியிலும் எதையும் வாசிக்கத்தெரியாதவர்களே தமிழ் இளைஞர்களில் பெரும்பான்மையினர் என்று சொன்னால் தமிழகம் உலகின் வளர்ந்த மாநிலம் என்று சொல்லிக்கொண்டிருக்கும் திராவிடப்பொருளியலர் அடிக்க வரக்கூடாது.

‘பரிமலம்’ டெய்லர் ஷாப் என்றால் Bull shit போல உள்ளூர் பண்பாடு சார்ந்த ஒன்று என்று நினைக்கக்கூடாது. பரிகள் பொதுவாக இங்கே இல்லை. நான் நெல்லையில் அதைப் பார்த்த இடத்தில் குதிரைவண்டிகளே இல்லை. ‘சிவனாடி கண்கண்ணாடிகள்’ என்றால் கேள்வி அல்ல, குழியாடி குவியாடி போல் ஓர் ஆடிவகையும் அல்ல.சிவனாண்டியில் ஓரெழுத்து விடுபட்டுவிட்டது.அருண்மொழியின் பெற்றோர் பட்டுக்கோட்டையில் இருக்கையில் நான் அடிக்கடிச் செல்வதுண்டு, பலகைகளில் பாதிக்குமேல் பட்டுக்கொட்டைதான்.

உச்சரிப்பிலும் இந்த சிக்கல் உண்டு. பத்மநாபபுரம் அரண்மனையில் ஒரு வழிகாட்டி எப்போதுமே “இது மார்த்தாண்டவர்மா மகாராஜாவுக்க phallus’ என்றுதான் சொல்வார். அவர் நாயர் என்பதை சொல்லவேண்டியதில்லை. நிறைய வெள்ளைக்காரர்கள் ஆர்வம் கொண்டு ஏமாந்திருக்க வாய்ப்புண்டு.

ஒருவகையில் நல்லதுதான், நாம் எப்படி வளைத்தாலும் தமிழ் வளையும் என நிரூபிக்கப்படுகிறது.மனிதன் உருவானதே ஒர் உயிரணுசார்ந்த எழுத்துப்பிழையால்தான் என்பார்கள். நாம் ஒரு புதுமொழியை உருவாக்கிக்கொண்டிருக்கிறோமோ என்னவோ, என்னத்தை கண்டோம்!

சாவி [சிறுகதை]

முந்தைய கட்டுரைசர்வப்பிரியானந்தர்- கடிதம்
அடுத்த கட்டுரைமகாபாரத அரசியல் பின்னணி