மணி ரத்னம் உரையாடல், கடிதங்கள்- 5

அன்புள்ள ஜெ

மணி ரத்னம் பேட்டி சிறப்பு. எல்லா கேள்விகளும் வெவ்வேறு திசையிலிருந்து வந்தன. மணி ரத்னத்தின் குரு படம் இங்கே ஒரு தோல்விப்படம், அது வட இந்தியாவில்தான் ஓடியது. அதற்கு நடிகர்கள் அந்த ஊர்க்காரர்கள் என்பது ஒரு காரணம் என்றால் அதைவிட முக்கியமான காரணம் இங்கே உள்ள முதலாளித்துவ எதிர்ப்பு அங்கே இல்லை என்பது. ஆனால் இன்றைக்கு பேட்டியில் மிக அதிகமாகப் பேசப்பட்ட படம் குருதான். நான் இருவர் பேசப்படும் என்று நினைத்தேன். இதுவே நம் இளைஞர்களின் மனநிலையில் வந்துகொண்டிருக்கும் மாற்றத்தைச் சொல்கிறது. மணி ரத்னமும் தன் பேட்டியில் அதையே குறிப்பிட்டுச் சொன்னார்

ராகவேந்தர் ஜி

அன்புள்ள ஜெ

மணி ரத்னத்தின் ஒரு பதில் எனக்கு மிக ஆச்சரியமாக இருந்தது. சினிமா மற்ற கலைகளை விட உயர்ந்தது, ஏனென்றால் அதில் எல்லா கலைகளும் உள்ளன என்று சொல்வார்கள். அதைப்பற்றிய கேள்விக்கு தான் அப்படி நினைக்கவில்லை என்று அவர் சொன்னார். முன்பு கமல்ஹாசன் அப்படி அவர் நினைப்பதாகச் சொன்னார்.

சினிமாவின் பலவீனங்களாக மணி ரத்னம் சொன்னது அது எக்ஸ்பென்சிவான ஆர்ட் என்பது ஒன்று. மற்றது அதன் கலவைத்தன்மை. இன்னொன்று அது புதிய கலை என்பது. டைம்டெஸ்டட் ஆர்ட்ஃபார்ம் களுக்கு உள்ள ஒருமையும் புதிய வாய்ப்புகளும் அதற்கு இல்லை என அவர் நினைக்கிறார் என்று தோன்றியது. ஆனால் இப்போது டெக்னாலஜியின் பாய்ச்சலால் மிக விரைவிலேயே சினிமா அது இதுவரை கொண்டிருந்த எல்லா எல்லைகளையும் கடந்து மேலே போய்விடுமென்றும் தோன்றுவதாகச் சொன்னார்

ஆர்.ராஜகோபால்

அன்புள்ள ஜெ,

மணி ரத்னம் பேட்டி உற்சாகமாக இருந்தது. வழக்கமான சினிமா வம்புகள் இல்லை. ரசிகநிலை கேள்விகளும் இல்லை. நாற்பதாண்டுகளாக தமிழ் சமூகத்துடன் தன் கலைவழியாக உரையாடிக்கொண்டிருக்கும் ஒருவருடன் ஓர் அறிவுஜீவிச் சமூகம் ஏராளமாக கேட்க முடியும். ஏராளமாக உரையாட முடியும்.

இதில் இரண்டுவகையான வாய்ப்புகள் உள்ளன. அடூர் கோபாலகிருஷ்ணனுடன் பேசினால் அவருடைய பெர்சனல் விஷன் முக்கியம். ஏனென்றால் அவர் தன் சமூகத்தை நோக்கி கலையை திருப்பி வைக்கவில்லை. அதில் reciprocal ஆன உறவு இல்லை. ஆனால் மணி ரத்னம் அல்லது அனுராக் காஷ்யப் போன்றவர்களின் கலை சமூகத்தின் எதிர்பார்ப்பையும் கணக்கில்கொண்டது. அவர்களைப்பற்றிப் பேசும்போது நாம் சமூகத்தைப்பற்றியும் பேசவேண்டும். சமூகத்தைப்பற்றிய பேச்சாகவே இந்தக் கேள்விபதில் இருந்ததைக் காணமுடிகிறது. ஒரு சிறந்த உரையாடல் என்று நினைக்கிறேன்

மாதவ்

அன்புள்ள ஜெ

மணி ரத்னத்தின் உரையாடல் சிறப்பாக இருந்தது. பலதரப்பட்ட வாசகர்கள் வந்து கலந்துகொண்டு உரையாடலை பலதிசைகளுக்குக் கொண்டுசென்றது சிறப்பானது

ஆனால் சில கேள்விகள் சரியாக வார்த்தை அமைக்கப்படவில்லை. ஆகவே அவை பொத்தாம்பொதுவாக இருந்தன. கதைக்கருக்களை எப்படி சூம் இன் செய்கிறீர்கள் என்று ஒரு கேள்வி. மிக பொதுவான கேள்வி இது. யாரிடமும் இதைக் கேட்கலாம். மணி ரத்னத்திடம் கேட்கவேண்டிய கேள்வி என்றால் இது இல்லை. இன்றைய சூழலில் ஒரு பெருமுதலாளியை எப்படி கதைநாயகனாக ஆக்கினீர்கள் என்று கேட்கலாம்.  பல கேள்விகளை கேட்பவர்கள் மென்று விழுங்கி சொன்னார்கள். கேள்விகளை ஒருமுறை எழுதியோ பேசியோ பார்த்துவிட்டுச் சொல்லலாம். கேள்வியில் குறிப்பாக ஒரு பிரச்சினை இருக்கவேண்டும். எப்படி கதாபாத்திரங்களை அமைக்கிறீர்கள் என்பதுபோன்ற கேள்விகள் அர்த்தமற்றவை

அதேபோல மைக்கை ஆக்டிவேட் செய்பவர் எப்போதுமே கொஞ்சம் பிந்தினார். ஆகவே எல்லா கேள்வியாளர்களும் கொஞ்சநேரம் தடுமாறினார்கள். இது உரையாடலில் ஒரு தளர்வை உருவாக்கிக்கொண்டே இருந்தது. இந்தக்குறைகள் களையப்படவேண்டும்

எம்.சிவக்குமார்

மணி ரத்னம் சந்திப்பு- கடிதங்கள்-2

மணி ரத்னம் சந்திப்பு- கடிதங்கள்

முந்தைய நிகழ்வுகள்

அ முத்துலிங்கம் உரையாடல்

நாஞ்சில் நாடன் உரையாடல்

தியடோர் பாஸ்கரன் உரையாடல்

முந்தைய கட்டுரைநோயும் மழையும்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைமானுடம்