வெண்முரசு வினாக்கள்-10

பலராமன்  அஸ்வத்தாமன் போன்ற கேரக்டர்கள்  வட இந்தியாவில் கர்நாடகத்தில் செல்வாக்குடன் உள்ளன. இங்கு அந்த செல்வாக்கு இல்லாமைக்கு பண்பாட்டு ரீதியான காரணம் இருக்கிறதா

சேகர்

அன்புள்ள சேகர்

பலராமன் அஸ்வத்தாமன் போன்ற கதாபாத்திரங்கள்: தென்னகத்திலும் வழிபாட்டில் உள்ளன. கேரளத்தில் பல இடங்களில் பலராமனுக்கு முக்கியத்துவம் உள்ளது. பலராம ஷேத்திரம் என்று சொல்லப்படும் ஊர்களும் உள்ளன. திரிச்சூட் வாடானப்பள்ளி அருகே நந்திபுரத்திலுள்ள திருக்கையில் பலராம கோயில் தொன்மையானது. மழூர் பலராமர் ஆலயம், நென்மேனி பலராமர் ஆலயம் ஆகியவை முக்கியமானவை.

பரசுராமர் ஏறத்தாழ இந்தியா முழுக்கவே ஒரே வகையான முக்கியத்துவம் பெற்றிருந்தாலும் கேரளத்தின் தொன்மத்துடன் இணைந்து கேரளத்தின் பிதாவாகவே முன் வைக்கப்படுகிறார். மகாபாரதக் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இடத்தில் ஏன் செல்வாக்குடன் திகழ்கின்றன என்பதற்கு நாம் தொன்மத்திலும் வரலாற்றிலும் சான்றுகள் தேடவேண்டும்.  உதாரணமாக கடோத்கஜன் இமாச்சல பிரதேசத்திலும் ராஜஸ்தானத்திலும் பிதாமகர் வடிவமாக வழிபடப்படுகிறார். கடோத்கஜனின் குருதியிலிருந்துதான் ராஜஸ்தானத்து ராஜபுதன அரசகுடிகள் சிலர் தோன்றியதாக அவர்கள் நம்புகிறார்கள்

அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று மெய்யாகவே அப்படி ஒரு தொட்ர்பு இருந்து அது மெல்ல மெல்ல தொன்மமாக மாறியிருக்கலாம். அல்லது அவர்கள் தங்களை ஏதேனும் மூதாதையை வழிபட்டு வந்திருக்கலாம் .அவ்வழிபாடும் கடோத்கஜன்  வடிவமும் ஒன்றாக இணைந்திருக்கலாம் . அதை ஆய்வாளர்கள்தான் கூற முடியும்..

இவ்வாறு ஒவ்வொரு பகுதியிலும்  மகாபாரத கதாபாத்திரஙளுக்கு சில மேலதிக அழுத்தங்கள் விழுகின்றன . சிகண்டி தாய்லாந்திலும் கம்போடியாவிலும் மிக முக்கியமான கதாபாத்திரமாக இருக்கிறார். சகுனி கேரளத்தில் மிக முக்கியமான தெய்வஉருவமாக  கருதப்படுகிறார். மகாபாரதத்தில் வரும் கதாபாத்திரமான ரேணுகாதேவி ஆந்திராவில் முதன்மை தெய்வமாக இருக்கிறார். அங்கே முன்னரே இருந்த மண்துகள் வடிவமான ஒரு பேரன்னை ரேணுகாவாக உருமாற்றம் அடைந்ததார் என்பது ஆராய்ச்சியாளர் கருத்து.

மகாபாரதம் இந்தியா முழுக்க இருக்கும் தொன்மங்களை தன்னுள் இழுத்துக்கொண்டு தன்னுள் இருக்கும் தொன்மங்களை இந்தியாவுக்கு அளிக்கிறது. மகாபாரதத்திற்கும் பாரதத்திற்குமிடையே மூவாயிரம் ஆண்டு தொடர் உரையாடல்கள் நிகழ்ந்துள்ளன. பல பகுதிகளிலிருந்து தெய்வங்கள் உருமாற்றம் அடைந்து மகாபாரதத்துக்குள் வந்தன. பல மகாபாரதத் தெய்வங்கள் உருமாற்றம் அடைந்து இந்தியப்பெருநிலத்தில் பரவின.

தமிழகத்திலேயே கர்ணனுக்கு இருக்கும் இந்த முக்கியத்துவம் வட இந்தியாவில் எங்கும் இல்லை. தமிழகத்தில் நாயக்கர்காலத்தின் பெரும்பாலான ஆலயங்களில் நாகபாசனாக கர்ணன் கரிய அழகிய சிலையாக நின்று கொண்டிருக்கிறான். ஒருவேளை நமது மரபில் நாகர்களின் தொடர்ச்சி ஆழமாக இருப்பது காரணமாக இருக்கலாம். நாக வழிபாடு இங்கு அவ்வளவு ஆழமாக வேரூன்றியிருந்தது கர்ணனுக்கான இடத்தை உருவாக்கியிருக்கலாம்.

ஆனால் நாகர்கள் வாழும் நாகலாந்து போன்ற  போன்ற வடகிழக்கு இடங்களில் கர்ணனுக்கான வழிபாடே காணப்படவில்லை. மகாபாரதத்திலிருந்து இந்திய தொன்ம வழிபாட்டு முறைகளை ஆராய்வதற்கு ஆயிரம் வாசல்களை நாம் திறக்க முடியும் இந்தியாவின் ஒட்டு மொத்த தொன்ம வரலாற்றைகொண்டே மகாபாரதத்தின் கதாபாத்திரங்கள் நம்மால் புரிந்துகொள்ள முடியும்

ஜெ

அன்புள்ள ஜெ

வெண்முரசில் நீங்கள் உருவாக்கும் கதாபாத்திரங்களை முழுமையாக அவற்றின் பரிணாமத்தை மனதில் உருவாக்கிவிட்டு எழுதினீர்களா? அல்லது எழுத எழுத அவை வளர்ந்தனவா?

சந்திரகுமார் எம்

அன்புள்ள சந்திரகுமார்,

எப்போதுமே எழுதும்போது இருவகையான உளச்சித்திரங்கள் இருக்கும். பீமனையோ அர்ஜுனனையோ நாம் ஒரு முழுமனிதனாக, மிக அருகே பார்த்துவிட்டிருப்போம். அவர்களின் இயல்புகள் தெளிவாக வரையறைச் செய்யப்பட்டிருக்கும். ஆனால் அவர்கள் சந்திக்கும் வாழ்க்கைத்தருணங்களில் அவர்கள் வெளிப்படும் முறை நம் ஊகத்துக்கு அப்பாற்பட்டதாக, அந்தத்தருணத்தில் நிகழ்வதாகவும் இருக்கும். அப்போது அந்தக் கதாபாத்திரம் அதன் வரையறை எல்லைக்குள் உருமாறிக்கொண்டே இருக்கும்.

ஒரு குறிப்பிட்ட விஷயத்தைச் சொல்லியாகவேண்டும். நவீனத்துவ நாவல்களில்தான் கதாபாத்திர இயல்பு தெள்ளத்தெளிவாக வரையறை செய்யப்பட்டிருக்கும். கதாபாத்திரம் மாற்றமில்லாமல் நீடிக்கும். உதாரணம் காம்யுவின் அந்நியன் நாவலில் வரும் மெர்ஸோ. அது ஒரு கற்சிலைபோன்ற படிமம். ஆனால் செவ்வியல் ஆக்கங்களில் கதாபாத்திரங்கள் உருகி உருமாறிக்கொண்டே இருக்கின்றன.அர்ஜுனன் அல்லது ஹெர்குலிசுக்கு எத்தனை முகங்கள் என்று பாருங்கள்.

அது ஒரு வாழ்க்கைக்கொள்கை. ஆளுமை என மாறாத ஒன்றில்லை. இயல்புதான் உள்ளது. ஆளுமை என்பது ஒருவன் வாழ்க்கை முழுக்க பலநூறு தருணங்கள் வழியாக எப்படி வெளிப்படுகிறான் என்பதை சார்ந்து உருவாகி வருவது என்பது செவ்வியல் புரிதல். ஆச்சரியமென்னவென்றால் இன்றைய பின்நவீத்துவப் புரிதலும் அதுவேதான். கதாபாத்திரங்களின் மாற்றமில்லா உறுதி அல்ல மாறும்தன்மையையே இன்றைய புனைவு அறைகூவலாகக்கொண்டு எழுதுகிறது.

அதோடு இந்தியாவின் தொன்மையான செவ்வியலில் ஓர் அம்சம் உண்டு. ஒருவன் எய்துவது உயர்வானது என்றால் அவன் சென்று சென்று மீண்டு அறுதியாகவே அடையமுடியும். மாமுனிவர்களும் கடைசிக்கணத்தில் வீழ்கிறார்கள். ஞானத்தை அடைந்தபின்னரும் கீழ்மையில் சரிகிறார்கள். வழுக்குமரம்போலத்தான் அகப்பயணம் இருக்கிறது. மகாபாரதத்தில் உள்ள அந்த இயல்பு வெண்முரசிலும் உண்டு. தருமனும் அர்ஜுனனும் மெய்மையை அருகே கண்டபின்னரும் அலைக்கழிகிறார்கள். அறுதியாகவே அவர்களுக்குரிய மெய்நிலையை அடைகிறார்கள்

அந்தப்பயணம் அவர்களுக்குள் நிகழ்கிறது. அவர்களின் ஆளுமை என்ற வரையறைக்குள் அவர்கள் மாறிக்கொண்டே சென்றுகொண்டே இருக்கிறார்கள். அலைகள் என்பவை ஓர் ஏரி தனக்குள் நிகழ்த்திக்கொள்ளும் பயணங்கள்.

ஜெ

வெண்முரசு- வினாக்கள்-6

வெண்முரசு- வினாக்கள்-5

வெண்முரசு- வினாக்கள்-4

வெண்முரசு- வினாக்கள்-3

வெண்முரசு வினாக்கள்-2

வெண்முரசு- வினாக்கள்-1

முந்தைய கட்டுரைமானுடம்
அடுத்த கட்டுரைநோய்,மழை-கடிதங்கள்-2