வெண்முரசு வினாக்கள்-8

நிலக்காட்சிகள் குறித்து எழுதும்போது நீளும் இந்த 25000 பக்கங்களில் அதிகமும் ஒன்றுக்கொன்று overlapping  இல்லாமல் சொல்வது எப்படி சாத்தியமாயிற்று? மேலும், ஒவ்வொரு இடத்திலிருந்தும் மற்றொரு இடத்தை  திசைகளோடு குறிப்பிடும்போது ஒரு கூகுள்மேப் போல அத்தனை தெளிவு  வேண்டுமே? எப்படி சாத்தியமாயிற்று?

கலைச்செல்வி

அன்புள்ள கலைச்செல்வி,

நிலக்காட்சிகளை நினைவில்கொண்டு எழுதுவதில்லை, நினைவில் அவை எழுவதே கதையை மேலே எழுத தூண்டுதலாகிறது.விஷ்ணுபுரமே அப்படித்தான் எழுதப்பட்டது. முதலில் அந்த இடத்தைச் சொல்ல ஆரம்பிப்பேன். அப்படியே உணர்வுகள் மேலெழ கதை அங்கே நிகழத்தொடங்கும். அது என் கட்டுப்பாட்டில் இருந்து வளர்ந்து மேலே செல்லும்

நான் தொடர்ச்சியாக பயணம் செய்துகொண்டே இருப்பவன். என் எழுத்துவாழ்வுக்குச் சமானமானது என் பயண வாழ்வு. மொழியிலும் நிலத்திலும் அலைபவன் என்றுதான் என்னைப்பற்றி நான் சொல்லிக்கொள்வேன். மொழியை நிலத்தைக்கொண்டும் நிலத்தை மொழியைக்கொண்டும் அடையாளம் காணமுயல்பவன் நான். ஆகவே என் நிலக்காட்சிகள் என் அகக்காட்சிகளாகவே ஆகிவிட்டிருக்கின்றன

ஜெ

ஜெ,

வெண்முரசு மூலமாக பெற்றதில் மிகப்பெரிய மாற்றம் அதன் மொழி.

வேறு படைப்புகளைப் படிக்கும் பொது மிகப்பெரும் சுவராகவே இம்மொழி வந்து நின்று விலக்கி மீண்டும் மீண்டும் வெண்முரசிற்கு உள்ளேயே தள்ளிக்கொண்டிருந்தது. ஒரே விலக்கு நாஞ்சில் அவர்களின் மொழி. . இத்தடையிலிருந்து  மீள்வது எப்படி?

மூர்த்தி கௌரிசங்கர்

அன்புள்ள மூர்த்தி,

எந்த ஒரு புனைவு எழுத்தும் தனக்கான ஒரு மொழி நடையை உருவாக்கிக்கொள்ளும். நிறைய நாவல்களில் அந்த மொழிநடை பல அத்தியாயங்களுக்குப் பிறகு உறுதியாக நிலைபெற்றிருப்பதை பார்க்கலாம். வெண்முரசு அதற்கான ஒரு நடையை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

வெண்முரசின் நடைக்கு இரண்டு நோக்கங்கள் உண்டு. அது உங்களை நீங்கள் புழங்கும் சமகால மொழியிலிருந்து விலக்கியாகவேண்டும் .இல்லையென்றால் கனவு நிகர்த்த தொன்மையில் நிகழ்கிற மகாபாரத நிகழ்வுகளுக்குள் நீங்கள் செல்ல முடியாது. அதை நிகழ்காலமாக, அன்றாடமாக கற்பனை செய்வதிலிருந்து உங்களை தடுக்க வேண்டிய பொறுப்பு மொழிக்கு உண்டு. ஆகவேதான் தொடக்கத்திலேயே மகாபாரதம் ஒரு செவ்வியல் நடையை, தூய தமிழ் நடையை ,ஒருவகையான உள்ளார்ந்த தாளம் கொண்டநடையை உருவாக்கிக்கொண்டது.

வெண்முரசு நீண்ட படைப்பாகையால் மெல்ல மெல்ல அந்த நடையை முழுமை செய்துகொண்டே செல்கிறது. முதற்கனலிலிருந்து மழைப்பாடலுக்கு செல்லும்போது அந்நடை மேலும் கூரியதாக மாறியிருப்பதை காணலாம். வண்ணக்கடலில் அந்த நடை தெளிவாகவே நிறுவப்பட்டுவிட்டது.

அதன் பிறகு அதன் நுண்ணிய வேறுபாடுகள் ஒவ்வொரு நாவலிலும் உள்ளன. நீலத்தின் மொழிநடை வேறு, இந்திரநீலத்தின் மொழிநடை வேறு, வெய்யோனின் மொழிநடை வேறு. ஆனால் பொதுவாக அவை வெண்முரசின் மொழிநடை எனப்படுகின்றன. இந்நடைக்கு பழகிய ஒருவர் இந்நடையினூடாக மகாபாரதம் நிகழும் ஒரு காலத்தை கற்பனையில் சென்றடைகிறார். அதை ஒரு கனவாக தன்னுள் நிகழ்த்திக்கொள்கிறார்

அந்நடை தமிழ் வாசகர் உள்ளத்தில் மட்டுமல்ல  வாசகர்களினூடாக தமிழின் பொதுவான நடையிலேயே தன்னுடைய செல்வாக்கை செலுத்தியிருப்பதை காண்கிறேன். வெண்முரசுக்காக நான் உருவாக்கிக்கொண்ட புதிய தமிழ்ச் சொற்களை செய்தித் துறையில், பொது ஊடகத்தில் எவரேனும் பயன்படுத்தாமல் ஒருநாளும் கழிந்து சென்றதில்லை. தினத்தந்தியிலேயே வெண்முரசின் சொற்கள்  ஒவ்வொரு நாளும்நின்று புழங்கத்தொடங்கியிருக்கின்றன. அது நவீன தொடர்புறுத்தலின் ஆற்றல்.

வெண்முரசின் நடை வழியாக வெண்முரசு உருவாக்கும் கனவுலகத்திற்கு மட்டுமே செல்லமுடியும் .அதனூடாக என்னுடைய பிற புனைவுலகத்திற்குச் செல்லகூட வழி கிடையாது. அந்த மொழியை ஓர் அரசப்பாதையாக எடுத்துக்கொண்டு வெண்முரசின் ஆழங்களுக்கு செல்வது முறையானது, இயல்பானது. அதனூடாக மீண்டும் வெண்முரசின் கதைமாந்தரின் உள்ளத்தின் ஆழத்தை, இந்திய மெய்ஞானத்தின் அடுக்குக்ளை, நமது மூதாதையர் வாழ்க்கையின் முகங்களை நாம் அடையலாம்.

நானே வெண்முரசு எழுதிய பின்னர் வெளிவரும் பொருட்டுதான் நூறு கதைகளை எழுதினேன். அவற்றில் எவற்றிலும் வெண்முரசின் நடை இல்லை. அவற்றில் வரலாற்றுக் கதைகளைக்கூட பிறிதொரு யதார்த்த நடையில்தான் எழுதியிருக்கிறேன். வேண்டுமென்றே அதில்  புராணக்கதை எதையும் நான் முயலவில்லை. ஒருவேளை நான் புராணக் கதை முயன்றால் மீண்டும் வெண்முரசின் நடைக்கே சென்றுவிடக்கூடும் என்று அஞ்சினேன்

வெண்முரசு போன்ற படைப்பை முழுக்க படிக்கும் ஒருவர் அத்தனை எளிதாக அதிலிருந்து வெளிவந்து இன்னொன்றுக்குள் செல்ல முடியும் என்று நான் நினைக்கவில்லை. அப்படிச் செல்வது நல்லதும் அல்ல. அவர் வெண்முரசை முழுக்க படிக்கவில்லை என்றுதான் அதற்கு பொருள். வெண்முரசை மீண்டும் மீண்டும் படித்து அதை ஓரளவுக்கு அழகியல் ரீதியாகவும் அறிவார்ந்த கோணத்திலும் அதைக் கடந்த பின்னரே ஒருவரால் பிற படைப்புகளை முழுமையாக படிக்க முடியும் வெண்முரசு வாசிப்புக்கு அளிக்கும் அறைகூவல் அது .

வெண்முரசு அளிக்கும் விரிந்த சித்திரம் மற்றும் அன்றாடத்தையும் நுண்ணிய அழகியல் கூறுகளையும் தத்துவார்த்தமான உசாவல்களையும் ஒன்றெனப்பிணைக்கும் தன்மைகொண்ட அதனுடைய ஆழம் ஆகியவற்றுக்குப்பழகிய ஒருவர் எளிய அன்றாட உண்மைகளை எளிய அன்றாட மொழியில் சொல்லிச்செல்லும் எளிமையான நவீனப் படைப்புகளில் சலிப்பு கொள்ளகூடும். அந்த சலிப்பு எனக்கே இருக்கிறது. தமிழில் கொண்டாடப்பட்ட படைப்புகளை படிக்கையில்கூட ஓர் எளிய முச்சந்தி உரையாடலைக்கேட்ட எண்ணம் தான் ஏற்படுகிறது. அவற்றை ஏன் எழுத வேண்டும் என்ற எண்ணத்தை கூட அவ்வப்போது அடைகிறேன்.

ஒரு பெரும் படைப்பை படிப்பதென்பது நாம் நம்முடைய அளவுகோல்களை மாற்றிக்கொள்வதுதான். ஒரு பெரும் படைப்பு  சமூகத்தில் நிகழும் இலக்கியத்தின் மீதான பொதுவான அளவுகோலை மாற்றி வைக்கிறது. அதுவரை பெரிதாக இருந்த பலவற்றை சிறிதாக்கிவிடுகிறது.  நுண்மையாக இருந்த பலவற்றை கண்ணுக்குத்தெரிய வைக்கிறது.

வெண்முரசுக்கு பிறகு தமிழில் எழுதப்படும் ஒரு  ‘அன்றாட’ இலக்கியத்தை படிப்பது கடினம். ஒரு வாசகன் அதை படித்தாக வேண்டும் என்று நான் சொல்லமாட்டேன். அதற்கு நிகரான படைப்புகளை உலக இலக்கியத்தில் படிக்கலாம்.  வெண்முரசுக்கு பிறகு பலர் தஸ்தாவெஸ்கி, தல்ஸ்தோய் ,தாமஸ் மன் போன்றவர்களுடைய செவ்வியல் படைப்புகளையும் நவீனத்துவத்திலேயே தத்துவஆழம் கொண்ட படைப்புகள் மீண்டும் தீவிரமாக ஒன்றிப்படிக்க முடிகிறது என்கிறார்கள். அந்த மாற்றத்த்தை நான் வாசகர்களிடம் எதிர்பார்க்கிறேன். வெண்முரசை உதறி திரும்பி வருவது அல்ல, வெண்முரசு வழியாக மேலே செல்வதே வாசகனுக்காக நான் பரிந்துரைப்பதாக இருக்கும். வெண்முரசு அளிக்கும் நடை ஒரு தடையல்ல, ஒரு வளர்ச்சி படிநிலை

ஜெ

வெண்முரசு வினாக்கள்-7

வெண்முரசு- வினாக்கள்-6

வெண்முரசு- வினாக்கள்-5

வெண்முரசு- வினாக்கள்-4

வெண்முரசு- வினாக்கள்-3

வெண்முரசு வினாக்கள்-2

வெண்முரசு- வினாக்கள்-1

முந்தைய கட்டுரைநோய்க்காலமும் மழைக்காலமும்-4
அடுத்த கட்டுரைகரவு- விமர்சனம்