வெண்முரசு வினாக்கள்-7

ஆயிரம் கதாபாத்திரங்கள் வரை ஓவ்வொருவரையும்  தனித்தனியாக நினைவில் வைத்திருந்து எழுதுவது எப்படி சாத்தியமாகிறது. கூறியது கூறாமல் வரும் புதிய நிலக்காட்சிகள் வர்ணனைகளை எழுதுவதும் எப்படி?

 வேணு தயாநிதி

அன்புள்ள வேணு,

பொதுவாக படைப்பூக்கம் என்பது இயல்புக்கு மீறிய ஆற்றலும் ஊக்கமும் வெளிப்படும் ஒருநிலை.  அப்போது இயல்வது வேறு தருணங்களில் எழுத்தாளர்களுக்கு இயலாமல் போவதைக் காணலாம். நான் வெண்முரசை எழுதும்போது இங்கு இப்போது இருந்து கொண்டு, அங்கு அப்போது திகழும் மகாபாரதக்கால வாழ்க்கையில் சென்று எட்டி பார்க்கவில்லை. மாறாக இங்கு இவ்வண்ணம் முற்றிலும் இல்லாமலாகி ,அங்கு அவ்வண்ணம் சென்று திகழ்கிறேன்.

நான் எழுதும் நிலக்காட்சிகளை கண்முன் அவை திகழ்வது போல என்னால் பார்க்க முடியும். கதைமாந்தர்களை நேரில் அறிந்த மனிதர்கள் போலவே நினைவில் வைத்திருக்கிறேன். ஒரு சாதாரண மனிதர் அவருடைய அன்றாட வாழ்க்கையில்  எத்தனை முகங்களை ,எத்தனை தனிமனித ஆளுமைகளை ,எவ்வளவு ஊர்களின் அமைப்புகளை நினைவில் வைத்திருக்கிறார் என்று பார்த்தால் பெரும்பாலும் வெண்முரசை விட கூடுதலாகவே இருக்கும் .அது அவருக்கு எவ்வாறு இயல்கிறது? ஏனெனில் அது அவருக்கு கற்பனை அல்ல, அவர் உருவாக்கிக்கொண்டது அல்ல, அவர் உண்மையில்  அறிந்தது, அவருக்கு நிகழ்ந்தது. அவற்றை  மூளை நினைவில் வைத்திருக்கிறது, தேவையான போது எடுக்கிறது. கற்பனையின் அழுத்தமும் படைப்பு விசையும் எதார்த்தத்தை விடவும் தீவிரமாக இருக்குமெனில் அதற்கும் மேலாகவே மனிதர்களையும் இடங்களையும் நினைவில் வைத்திருக்கவும் எழுதவும் முடியும்

மிக அரிதாகவே எனக்கு கதாபாத்திரங்களின் இயல்புகள் தெளிவில்லாமல் ஆகியிருக்கின்றன. இடங்கள் குழ்ம்பியிருக்கின்றன. சொல்லபோனால்  மொத்த நாவலிலும் ஒன்றிரண்டு தருணங்களே அப்படி நிகழ்ந்தவை. அதற்கான காரணங்கள் என்ன என்பதை நானே எண்ணி கண்டு கொண்டிருக்கிறேன். அவ்வாறு இடங்களை குழப்பிக்கொள்வதற்கான உளவியல் காரணங்கள் புனைவுக்குள்ளேயே இருக்கின்றன. ஏனெனில் அதுவும் நமது நிகர்வாழ்வில் நடைபெறுவது தான்.

படைப்பு நிலை என்பது ஒரு மீநினைவு நிலை என்று சொல்லலாம் .கனவு போல. ஒரே ஒரு நாள் சென்று வந்த ஊரை வாழ்நாள் முழுக்க கனவில் ஒவ்வொரு கூழாங்கல்லையும் ஒவ்வொரு இலைச்சருகையும் என நினைவு கூர்ந்து மீண்டும் மீண்டும் பார்த்துக்கொண்டிருப்ப்போம் அல்லவா?

முப்பதாண்டுகளுக்கு முன் இறந்து போன என் அம்மாவின் ஒவ்வொரு முடியிழையையும் நான்  சில சமயம் கனவில் தெளிவாக பார்ப்பதுண்டு. நனவிலி நம்மால் கையாளப்படுவதை விட பல மடங்கு மேலானது. அது ஒரு பிக் டேட்டா. அதைக்கையாள்வதற்கு அதற்கான சாஃப்ட்வேர் தேவை. கனவு அந்தத் திறன்கொண்ட சாஃப்வேர். படைப்பூக்கநிலை என்பது இன்னொரு சாஃப்ட்வேர்.

ஜெ

தமிழ்நாட்டில் ராமாயணமும் கூட சுந்தரகாண்டம் வரைக்கும்தான் எங்கள் காலத்தில் கதையாகவும் நாடகங்களாவும், சொற்பொழிவாகமும் உருப்பெற்று சொல்லப்பட்டது. மஹாபாரதம் தமிழ்நாட்டில் பெரிய துன்பியல் நாடகமாக பார்க்கப்பட்டதோ என்று ஒரு அனுமானம். அதனால் கர்ணன் கதையாகவும் கிருஷ்ணன் கதையாகவும், சகுனியின் சூழ்ச்சியாகவும், திரௌபதி சபதமாகவும் துண்டு கதைகளாக அறிந்திருந்தோம். இதுவே அது தமிழகத்தில் பெரிதும் அறியப்படாமலோ விரும்பப்படாமலோ போயிருக்கலாம். உங்களுக்கும் அப்படி ஒரு பார்வை இருக்கிறதா? என் பெயர் கனகசபாபதிஅதோடு, இந்த மாபெரும் சேவையை, இந்த வெண்முரசு  கல்கி செய்த  முயற்சி போல ஒரு முயற்சியாக பார்க்கிரேன். வாழ்த்துக்கள். என் மகள் மூலமாக இந்த பதிவை இடுகிறேன்

செண்பா

 அன்புள்ள செண்பா

தமிழ்நாட்டில் ராமாயணமும் மகாபாரதமும் முழுமையாக படிக்கப்படுவதோ சொல்லப்படுவதோ இல்லை என்று பரவலான ஒரு நம்பிக்கை உண்டு. அது உண்மை அல்ல. அவை இரண்டு இதிகாசங்கள் .ஆகவே அவற்றை முழுமையாக நடிப்பதோ படிப்பதோ ஒரு வாழ்நாள் பணியாகவே கருதப்பட்டன. அவை அனைவருக்கும் உரியவை அல்ல. அதை முழுமையாக எழுதியவர்கள், படித்தவர்கள், பார்த்தவர்கள் உண்டு. ஆனால் பெரும்பாலானவர்கள் அதில் தேவைக்கேற்ப, வாய்ப்புக்கு இணங்க சில பகுதிகளை மட்டுமே அறிந்திருக்கிறார்கள்.

உதாரணமாக மழை பெய்வதற்காக சுந்தர காண்டம் படிப்பார்கள். கர்ண மோட்சம் கூத்து போடுவார்கள். கேரளத்தில் கர்கடக மாதம் எனும் ஆடி மாதத்தில் எழுத்தச்சனின் அத்யாத்ம ராமாயணத்தில் பாலகாண்டமும் அயோத்தியா காண்டமும் படிப்பார்கள். முழுமையாக படிப்பது ராமாயண சப்தாகம் எனப்பட்டது. பாகவத சப்தாகமும் வழக்கமுண்டு. மகாபாரதம் கொஞ்சம் அரிது, ஆனால் உண்டு.

ராமாயணம் ஒரு காலத்தில் இந்தியாவின் மையப்பெருங்கதையாக மாறியது. மகாபாரதம் அதற்கு அடுத்தபடியாகவே முக்கியத்துவம் பெற்றது .அறிஞர் மத்தியில் மகாபாரதம் ஒரு படி மேலாகவும் மக்கள் மத்தியில் ராமாயணம் ஒரு படி மேலாகவும் இருக்கிறது என்று சொல்லலாம்.

ஏனென்றால் ராமன் ஒரு லட்சியக் கதாபாத்திரம். இந்தியாவில் கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்குப்பிறகு உருவான பேரரசுகள் அரசனை தெய்வமாக ஆக்கின. அரசனுக்கு இறைவன் என்ற பெயர். அரசனின் இல்லத்திற்கும் இறைவனின் ஆலயத்திற்கும் கோயில் என்ற பெயரே வழங்கலாயிற்று. ராமன் முன்னரே அரசனாக ஆகி விட்டிருந்த தெய்வம், அல்லது தெய்வமாக ஆகிவிட்டிருந்த அரசன். ஆகவே அரசதெய்வம் என்ற கருதுகோளின் கண்கூடான வடிவமாக ராமன் மாறினான். ராமனுடைய அரச குணங்கள் இந்தியா முழுக்க கொண்டாடப்பட்டிருப்பதை நாம் பார்க்கலாம்.

சீதை அரசனுக்குப் பத்தினியான ஓர் இலட்சிய அரசியாக மாறினாள். பின்னர் அதிலிருந்து உருமாற்றமடைந்து பெண்ணின் துயரங்கள் அனைத்தையும் தான் அடையும் பேரன்னையாக உருமாற்றம் கொண்டாள். மண்ணின் வடிவமானாள். முடிவிலாது தாங்கிக்கொள்பவளாகவும், முடிவில்லாது அருள்பவளாகவும் சித்தரிக்கப்பட்டாள். இந்தியா முழுக்க வெவ்வேறு வடிவங்களில் பூமித்தாய் வடிவம் உள்ளது. அவ்வடிவங்கள் அனைத்தும் சீதையுடன் இணைந்துகொண்டன.

ஆகவே ராமனும் சீதையும் இந்தியாவுடைய முதன்மை அடையாளமாக மாறினார்கள். இந்தியா முழுக்க ராமாயணம் பேரிலக்கியமாக எழுதப்பட்டது பேரரசுகளும் பெருமன்னர்களும் உருவான பிறகு என்பதை காணலாம். வால்மீகி ராமாயணத்துக்கும் கம்பராமாயணத்துக்கும் உள்ள வேறுபாடே அதுதான். வால்மீகி ராமாயணம் பேரரசு, பெருமன்னன் என்ற கருதுகோள் வலுவாகும் முன்னர் உருவானது. கம்பராமாயணம் தமிழகத்தில் பேரரசு அதன் உச்சத்தை அடைந்திருந்த பதிமூன்றாம் நூற்றாண்டில் உருவானது.

மகாபாரதம் ராமாயணத்தை விட சிக்கலான அறம் சார்ந்த வினாக்களை எழுப்பக்கூடியது. தத்துவார்த்தமான கண்டடைதல்கள் கொண்டது. ஆகவே ராமாயணத்தை விட ஒரு படி மேலாகவே அதற்கு அறிஞர் மத்தியில் இடம் இருந்தது. ஆயினும் அதை முழுமையாக புரிந்துகொள்வது சாமானியர்களுக்கு இயல்வது அல்ல. ராமாயணத்தை புரிந்துகொள்ள  தத்துவம் தேவையில்லை. மகாபாரதத்தை புரிந்துகொள்ள தத்துவம் தேவை. குறிப்பாக மகாபாரதத்தின் அடித்தளமாகிய வேதாந்தத்தில் சற்றேனும் பயிற்சி இல்லாதவர்கள் முழுமையாக மகாபாரதத்தை புரிந்துகொள்ள முடியாது.

இன்று கூட மகாபாரதத்தை வெண்முரசாக எழுந்தும்போது அதன்மேல் எளிய வாசகர்கள் முன்வைக்கும்  பல்வேறு குழப்பங்களும் புரிதலின்மைகளும் வேதாந்தப்பின்புலம் இல்லாமையால் எழுபவை. அவர்கள் அடையும் ஆசிரியர்கள் அதற்கு வேதாந்த மெய்ப்பொருள் சார்ந்த விளக்கத்தை அளிக்கும் திறனற்றவர்களாகவும் இருப்பதே சிக்கல்.

இந்தியாவில் மகாபாரதம் வேதாந்த விவாதத்தின் ஒரு பகுதியாக உருவாகி, வளர்ந்து வந்த பெருங்காவியம். உபநிஷதத்தின் காலத்தில் தான் அதனுடைய வடிவம் முழுமையாகி இருக்கிறது. அது ஒரு மாபெரும் உபநிஷத்தொகையாகவும் உள்ளது. அதற்குள்   யக்ஷப் பிரஸ்னம், விதுரநீதி, பீஷ்ம நீதி போன்று முப்பதுக்கும் மேற்பட்ட உபநிஷத்துக்கள் அடங்கி உள்ளன. ஆகவே அது ஐந்தாம் வேதம் என்று அழைக்கப்பட்டது. வேதாந்த ஆசிரியர்களில் முதன்மையானவரான யாதவ கிருஷ்ணன் அதன் மையக்கதாபாத்திரம். வேதாந்த நூல்களில் தலை நூலாகிய கீதை அதன் உறுப்பு .

பின்னர் பௌத்தம் மருவி பிற்கால வேதாந்தங்கள் மேலெழுந்த போது தான் கீதை முதன்மை நூலாகவும், அதை ஏந்திய  தாலமென மகாபாரதம் ஐந்தாம் வேதமாகவும் எழுந்து வந்தது .சங்கரர் ராமானுஜர்  மத்வர் வல்லபர் நிம்பார்க்கர் தொடங்கிய இந்தியாவின் தத்துவ ஞானிகள் அனைவருமே மகாபாரதத்தை முதன்மை நூலாகவோ மூலநூலாகவோ முன்வைத்திருக்கிறார்கள். அதன்பின்னர் மகாபாரதம் இந்தியா முழுக்க வெவ்வேறு வடிவில் எழுதப்பட்டது, மேற்கோளாக்கப்பட்டது, ஒவ்வொரு முறையும் அது வேதாந்த விளக்கமாகவே  அமைந்தது.

ஏன் முழுமையாக மகாபாரதம் வீடுகளில் படிக்கப்படவில்லை என்றால் வேதாந்தக்கல்வி அதற்கு தேவை என்பதனாலதான். வேதாந்தக் கல்வி இல்லாமல் மகாபாரதத்தை படித்தால் அது அடிப்படை உணர்வுகளான காம- குரோத –மோதல்களின் சித்தரிப்பு என்றும் வெறும் துன்பியல் பெருநிகழ்வு என்றும் மட்டுமே புரிந்துகொள்ள ஏதுவாகும் ஆகவே அதை வேதாந்தக்கல்வி உடையவர்கள் முழுமையாகக் கற்கவேண்டும், மற்றவர்கள் அதன் சில பகுதிகளை மட்டுமே படித்தால் போதும் என்ற நிலை இருந்தது. குருகுலங்களில் ஆசிரியரிடமிருந்தே முழுமையாக கற்கவேண்டும் என்ற நிபந்தனைகூட இருந்தது.

ஆகவேதான் மகாபாரதம் எங்கும் முழுமையாக படிக்கப்படவில்லையோ என்ற எண்ணம் நமக்கு ஏற்படுகிறது. வேதாந்த மாணவர்கள் எல்லாக்காலத்திலும் அதை முழுமையாக படித்துக்கொண்டுதான் இருந்தார்கள். தமிழில் அதன் முழுமையான வடிவங்கள் இருந்திருக்கின்றன. நல்லாப்பிள்ளை பாரதம் மகாபாரதத்தின் முழுமையான் வடிவம்தான் .கோவைப்பகுதியில் மகாபாரதம் முழுமையாகவே நிகழ்த்து கலையாக நடத்தப்பட்டதற்கான கனடா நாட்டு ஆய்வாளர்கள் பதிவுசெய்த சான்றுகள் உள்ளன.

மகாபாரத்ததை முழுமையாக கற்கவும், முழுமையாக நிகழ்த்தவுமான வாழ்க்கைச் சூழல் பதினேழாம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இங்கு வந்த பெரும்பஞ்சங்களின் வழியாக அழிந்தது .இங்குள்ள கிராம அமைப்பு சிதறியது, இங்குள்ள மொத்த சமூக வலைப்பின்னல்களும் உடைந்து சிதைந்து பிறிதொன்றாயின. மகாபாரதத்தை ஓராண்டோ ஈராண்டோ காலம் எடுத்து படிக்கும்படியான சூழல் அமையவில்லை.

பெரும்பாலான மக்கள் தங்கள் மூத்த தலைமுறைகள் வாழ்ந்த நிலங்களில் இருந்து வெளியே சென்றார்கள். புதிய நிலங்களில் வேறுவகையில் பிழைப்பை அமைத்துக்கொண்டனர். ஆகவே பழைய அமைப்புகள் மறைந்தன,பெயரளவாயின.அதன் பின்னர் ஒரு சடங்கென ஒரு நினைவுகூரலென மட்டுமே மகாபாரத்த்தின் சில பகுதிகள் படிக்கப்படுகின்றன. தெருக்கூத்து போல நிகழ்த்து கலைகளாக நிகழ்த்தப்படுகின்றன.

சொல்ல்ப்போனால் நல்லாப்பிள்ளை மகாபாரதம் எழுதப்பட்ட காலத்தில் முழு மகாபாரதத்தையும் உள்வாங்கும் ஆற்றலுடன் இருந்த தமிழ்ச் சமுதாயம் அதன் அடிப்படைகளை இழந்து சிதைந்து பிறிதொன்றாகி  நவீன காலகட்டத்தை இன்று அடைந்திருக்கிறது.இன்று நவீனக்கல்வியினூடாக, வேறொருவகையில் அதை முழுமையாக படிக்கும் உள்வாங்கும் திறன் இந்த சமுதாயத்துக்கு வந்திருக்கிறது என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே வெண்முரசு போன்ற பிரதிகள் எழுதப்படுகின்றன.

ஜெ

வெண்முரசு- வினாக்கள்-6

வெண்முரசு- வினாக்கள்-5

வெண்முரசு- வினாக்கள்-4

வெண்முரசு- வினாக்கள்-3

வெண்முரசு வினாக்கள்-2

வெண்முரசு- வினாக்கள்-1

முந்தைய கட்டுரைநோய்க்காலமும் மழைக்காலமும்-3
அடுத்த கட்டுரைமரபிலக்கியம் உரை- கடிதங்கள்