தன்குறிப்புகள்- கடிதங்கள்

OLYMPUS DIGITAL CAMERA

ஓரே பாதை

அன்புநிறை ஜெ,

நலமாக இருக்கிறீர்களா.

இன்று இன்னொரு செம்படம்பர் ஐந்து (https://www.jeyamohan.in/102302/), தங்களை சிங்கையில் சந்தித்து நான்கு வருடங்கள்(தான்) ஆகின்றன. இந்த நாளை ஆசிரியர் தினமாகக் கொள்வது என் வரையில் சரியாகவே அமைந்திருக்கிறது.

“ஒரே பாதை” கட்டுரை வாசித்தேன்.

நான் வாழ்வில் முதல் முறையாக ஒரே ஊர் காற்றை தொடர்ச்சியாக சுவாசித்து  எட்டாவது ஆண்டை சிங்கையில்தான் கடந்திருக்கிறேன். பிறந்ததுமுதல் வேறு எந்த ஊரிலும் இவ்வண்ணம் இருந்ததில்லை. பிறந்த ஊரிலும் அதிகபட்சம் ஆறு வருடங்கள் இருந்திருக்கிறேன்.

எனது இளமைப்பருவ பள்ளிக்கால நினைவுகள் மட்டுமே  பத்து ஊர்களில் (கடலூர், திருச்சி, மதுரை, ஈரோடு, புதுக்கோட்டை, தாராபுரம், காரைக்குடி, தூத்துக்குடி, ஆறுமுகனேரி, ராமநாதபுரம்) விரவியிருக்கின்றன. அநேகமாக ஒவ்வொரு ஊரும் ஓரிரு வருடங்கள் அல்லது அதற்கும் குறைவே. இவற்றில் எந்த ஊரைச் சேர்ந்தவர்களைக் கண்டாலும் ஆகா எனது ஊர் என்று நெருங்கியவர்களை கண்ட மகிழ்ச்சியும் ஏற்படுகிறது. நினைவறிந்த வயதுக்குப் பின் வாழ்ந்த அனைத்து ஊர்களையும் தாத்தாவுடன் நீள்நடைப்பொழுதுகளில் நடந்தே பல பகுதிகளையும் அறிந்ததால் இவ்வூர்களை எல்லாம் மிக அணுக்கமாக உணர்கிறேன். மனதுள் ஒவ்வொரு ஊருக்கான ஒரு உத்தேச வரைபடமும் அது சார்ந்த வாசனைகளும் ஒலிகளுமாக ஊர்கள் உள்ளே பதிந்திருக்கின்றன.

எனில் ‘பதியெழுவறியாப் பழங்குடி’ என்ற சொல் ஒரு ஆழ்கனவு போல மனதுள் இருக்கிறது. முற்பிறவிகளில் அப்படி எங்கோ ஒரு நீள்வாழ்வு வாழ்ந்துவிட்டு இப்படி ஊர்ஊராய் அலையும் பாடினி போல விறலியர் போன்ற வாழ்வுக்கு ஆசைப்பட்டிருப்பேன் போலும். அதனால்தானோ என்னவோ கனவுகளில்கூட அறியா நிலங்களே வருகின்றன. பெரும்பாலும் மலைகள். இதுவரை சென்றேயிராத பிரதேசங்கள். அரிதாக மதுரை வீடு.

புதிய இடங்களுக்கு செல்வது, முற்றிலும் இடம் பெயர்வது அதன் அத்தனை அறியா சாத்தியங்களோடும் மிக உற்சாகமூட்டும் விஷயமாகவே இருக்கிறது. இது இவ்வண்ணம் அமைந்திருப்பதாலேயே இவ்வாழ்வின் இனிமைகள் அனைத்தும் நேர்ந்திருக்கின்றன. தங்களை சந்தித்தது உட்பட.

சொல்வளர்காட்டில் “ஆலமரத்தடியிலிருந்து ஆலமரத்துக்குச் செல்லலாம், மரங்கள் வேறு, நிலம் ஒன்று

இந்த ஆலமரம் இங்கு மட்டும்தானே நின்றுள்ளது சிற்றுயிர்ப்பூச்சிகள் பறந்தலைகின்றன. பறவைகள் ஊர்தேடிச் செல்கின்றன. யானைகளுக்கு ஒற்றைக்காடு மட்டுமே. யானைக்கூட்டங்கள் வந்து நின்று இளைப்பாறும் நிழல்கொண்ட இந்த மரம் எங்கும் செல்வதில்லை. ஆனால் இதன்வேர்கள் அங்கே அடிமலைச்சரிவுவரை செல்கின்றன. இதன் மகரந்தம் இக்காடு முழுக்க செல்கிறது. இதன் கொடிவழி ஒருவேளை தென்குமரிவரைக்கும்கூட சென்றிருக்கக் கூடும்

என லௌபாயனரிடம் சுஃபலர் கூறுவதை அவ்வப்போது எண்ணிக்கொள்வேன். அந்த வரிகளை இந்த ‘ஒரே பாதை’ கட்டுரையும் உங்கள் சொந்த மலையாகிவிட்ட வேளிமலை நோக்கிய பாதையின் புகைப்படமும் கிளர்த்தியிருக்கிறது.

அப்படி என்றோ ஒருநாள் சென்று படிந்து அமைய வேண்டிய நிலம் ஒன்று எங்கோ இருக்கிறது; அதை நோக்கியே இந்த நீள் பாதை சுற்றிச் சுற்றி சென்று சேர்கிறது.

மிக்க அன்புடன்,

சுபா.

அன்புள்ள ஜெ

இந்த ஊரடங்குக் காலத்தில் நீங்கள் எழுதிய சிறிய சிறிய கட்டுரைகளை வாசித்துக்கொண்டிருந்தேன். நடக்கச்செல்லும் பாதை, அன்றாடக்காட்சிகள், சின்னச்சின்ன உளப்பதிவுகள். ஒவ்வொரு கட்டுரையும் ஒரு பெரிய ஊக்கத்தை அளிப்பவையாக இருந்தன

ஏனென்றால் அவை நானும் உங்களுடன் சேர்ந்து வாழ்ந்த அனுபவத்தை அளித்தன. உங்களுடனே வாக்கிங் வருவதுபோல. பேசிக்கொண்டிருப்பதுபோல. இதெல்லாமே ஒரு மெய்வெளியிலே நிகழ்வதுபோல தோன்றியது

அத்துடன் எல்லா கட்டுரைகளுமே ஓர் அன்றாடக்காட்சியிலே தொடங்கினாலும் வேறெங்கோ சென்று தொட்டு நின்றுவிடுகின்றன. நாய்களைப்பற்றிய கட்டுரை. மகிழ்ச்சியாக இருப்பதென்பது அவற்றுக்கு எப்படி இயல்பாக வருகிறது என்ற வரி ஒரு கவித்துவமான உச்சம்

இந்தக்கட்டுரைகளை இன்னும் கொஞ்சநாள் கழித்து ஒட்டுமொத்தமாக வாசித்தால் அழகான ஒருமைகொண்ட ஒரு நல்ல நூலாக இருக்குமென நினைக்கிறேன். நோய்க்காலத்தை ஆக்கபூர்வமான எண்ணங்களால் நிறைத்துக்கொள்வதைப்பற்றிய ஒரு நூல். ஒரு கிரியேட்டிவான டைரி

எஸ்.நிர்மலா

அன்புள்ள ஜெ

உங்கள் அன்றாடக் குறிப்புகளை நான் தொடர்ச்சியாக வாசித்துக்கொண்டிருந்தேன். அதில் மனிதர்களே குறைவு. இடங்கள், தாவரங்கள். விலங்குகள் கூடுதலாக பதிவாகியிருந்தன. அது இந்த நோய்த்தொற்று காலத்தின் விளைவாக இருக்கலாம். ஆனால் நாம் வாழும் இந்தச்சூழலில் உண்மையில் நாம் என்னென்ன அற்புதமான விஷயங்களால் சூழப்பட்டிருக்கிறோம் என்பதையே காட்டின. நாம் சாதாரணமாக மறந்துவிட்ட பலவற்றை சுட்டிக்காட்டின

பஸ்ஸிலே பார்த்துக்கொண்டே போகிறோம். சட்டென்று பஸ் கொஞ்சநேரம் நின்றுவிடுகிறது. அதுவரை பார்த்தவை மாறிவிடுகின்றன.நுட்பமான காட்சிகளைப் பார்க்க ஆரம்பிக்கிறோம். அதேபோலத்தான் இந்த நோய்க்காலம். அந்த நுட்பமான நிதானமான பார்வை கொண்ட கட்டுரைகள் இவை

ஆர். அனிதா

வண்ணங்களை மீட்டெடுத்தல்

நாயுலகு

நஞ்சின் சிரிப்பு

இருண்ட ஞாயிற்றுக்கிழமை

உடல்நான்

தன்னிறைவு

அந்த அறை

வந்த தொலைவு

பச்சை

வேறொரு காலம்

இரு தொடக்கங்கள்

மலைகள் அங்கேயே…

எஞ்சும் கூடு

மூன்று பறவைகள்

மூன்று டைனோசர்கள்

பித்திசைவு

மூன்று வருகைகள்.

செங்கோலின் கீழ்

சின்னஞ்சிறு வெளி

நாளிரவு

பொற்கொன்றை!

இன்றைய மலர்

வான் அலை

நாற்புறமும் திறத்தல்

வீடுறைவு

தனிமைநாட்கள், தன்னெறிகள்.

கொரோனோவும் இலக்கியமும்

முந்தைய கட்டுரைமுதற்கனல் – சுரேஷ் பிரதீப்
அடுத்த கட்டுரைஅன்னை மாயம்மா, அ.கா.பெருமாள்- கடிதங்கள்