வெண்முரசு நிலமும் மானுடரும்

அன்புள்ள ஜெ

ஒரே மூச்சில் வாசித்து மழைப்பாடலையும் வண்ணக்கடலையும் முடித்துவிட்டு இதை எழுதுகிறேன். முதற்கனலை வாசித்துவிட்டே உங்களுக்கு எழுதவேண்டுமென நினைத்தேன். ஆனால் நிறுத்தமுடியாமல் வண்ணக்கடலை கடந்து நீலத்தில் ஒரு இடைவேளை விட்டு மீண்டும் பிரயாகையை ஆரம்பிக்கவிருக்கிறேன். இத்தனை பக்கங்களை இத்தனை விசையுடன் நான் வாசிப்பேன் என நினைக்கவில்லை

ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் என் மொழி அப்படியே மாறிவிட்டது. சுருக்கமான அடர்த்தியான நேர்த்தியான சொற்றொடர்களை உருவாக்குபவனாக ஆகிவிட்டேன். என் தொழிலுக்கே அது மிகப்பெரிய கொடை. என்னால் இப்போது மிகக்கூர்மையாக யோசிக்கவும் பேசவும் முடிகிறது. என்ன நுட்பம் என்று பார்த்தேன். முதலில் தோன்றியது சொற்றொடர்களுக்குள்ளேயே செய்திகளை முறையாக அடுக்கிச் சொல்லும் ஒரு வழக்கம் எனக்கு வந்துவிட்டிருப்பதுதான்

வெண்முரசில் பாரதநிலம் விரிவான சித்திரமாக வந்துகொண்டே இருக்கிறது. இது அன்றிருந்த நிலத்தை இன்று கற்பனைசெய்து எடுப்பதுதான். உண்மையில் அந்த நிலம்தான் இன்றும் இருப்பது. அது மாறவே இல்லை. வண்ணக்கடலில் இன்றைய இந்தியாவுடன் இணைத்து பாரதம் முழுக்க பரவி கதைநடப்பதாக எண்ணிக்கொண்டபோதுதான் எனக்கு மகாபாரதத்தை வாழும் காவியமாகவே கற்பனைசெய்ய முடிந்தது

ஒவ்வொரு செடிக்கும் அதற்குரிய மண்ணின் இயல்பு உண்டு. பாலைவனச் செடி வேறு. மழைக்காட்டின் செடி வேறு. மகாபாரதக் கதாபாத்திரங்களை நாம் அந்தந்த மண்ணில் நட்டு வளர்த்து எடுக்கவேண்டியிருக்கிறது. காந்தாரியை விதைகளை பெருக்கி காற்றில் நிரப்பும் குடைப்பனையுடன் ஒப்பிடுகிறீர்கள். அந்த உவமையைப்போல அவர்களை அப்படியே தெளிவாக காட்ட இன்னொரு கற்பனையால் முடியாது.

அப்படி எல்லா கதாபாத்திரங்களும் நிலத்துடன் இணைந்துள்ளன. அந்த நிலம்தான் அவற்றுக்கு ஆழத்தையும் அர்த்தத்தையும் அளிக்கிறது.

கே.ஆர்.சந்தானகிருஷ்ணன்

ஒரே மூச்சில் வாசித்துட்டி

பாரதம் என்றால் பாரத மண்ணேதான். மகாபாரதத்தில் மொத்த பாரதம் பற்றியும் குறிப்புகள் உ:ள்ளன. ஆனால் அவற்றை ‘நேர்க்காட்சியாக’ காட்ட இடமே இல்லை. கதை சூடுபிடித்தபிறகு சொல்லமுடியாது. சகதேவனின் படையெடுப்பிலேதான் அதன்பின் தென்னகம் வருகிறது. அர்ஜுஜனின் அஸ்வமேதத்தில் வடகிழக்கு வருகிறது. பாரத்தப்போர் முடிந்ததும் மகாபாரதம் முடியும் மனநிலை வந்துவிடும். அதன்பின் இந்தியவர்ணனை சாத்தியமல்ல.

தென்னகச் சித்திரங்கள்

ஒரு நாவலைப் படிக்கும்போது ஒவ்வொரு கதாபாத்திரம் அறிமுகப்படுத்தப்படும் போதும் , ஒரு தெளிவிலாத முகத்தோற்றத்தைத் நம் மனம் கண்டு கொள்ளத் தொடங்குகிறது. அந்த முகமானது நமது முந்தைய- கதை கேட்கும், பழக்கத்தில் இருக்கும், சினிமாவில் வந்திருக்கும்- பிம்பங்களின் அடிப்படையில் இருக்கும். உதாரணத்திற்க்கு ராமாயணத்தைப் படிக்கும் போது நான் சிறுவயதில் பார்த்த பூசையறை ராமர் படத்தில் இருப்பவரின் முகமே தெளிவின்றி நினைவிற்க்கு வருகிறது.

உளச்சித்திரம்

முந்தைய கட்டுரைஅவதூறுகளும் நினைவுக்குறிப்புகளும்
அடுத்த கட்டுரைபுதியவாசகரின் கடிதம்