அன்புள்ள ஜெ
மழைப்பாடலை இப்போதுதான் வாசித்து முடித்தேன். வெண்முரசை நீங்கள் முடித்த அன்று இதை படித்துவிடுவது என்று முடிவு செய்தேன். அப்போது நான் வெண்முரசைப்பற்றி கேள்விப்பட்டிருந்தேன். சொல்லப்போனால் குங்குமம் இதழில் வெளிவந்த பேட்டி வழியாகவே எனக்கு வெண்முரசு பற்றி தெரியவந்தது. குங்குமம் இதழில் வெளிவந்த கட்டுரையில் நீங்கள் இதை முடித்த செய்தியை அறிந்தேன்.
[ஆச்சரியம்தான். தமிழில் வெளிவந்த எந்த நாளிதழிலும், எந்த வார இதழிலும், எந்தச் சிற்றிதழிலும் இந்த மாபெரும் முயற்சி முடிவடைந்ததைப் பற்றி ஒரு வரிக்குறிப்பு கூட இல்லை. ஒரு சாதாரண சினிமா எடுத்து முடித்தால்கூட நாலுபக்கம் செய்தி வெளியிடுவார்கள்.]
நான் குங்குமம் இதழில் இந்நாவலைப் பற்றி கேள்விப்பட்டபோது எஞ்சீனியரிங் மாணவன். இப்போது வேலை பார்க்கிறேன், நிறைய நேரமும் உள்ளது. ஆனால் நேரமே இல்லாததுபோலவும் இருக்கும். நாட்கள் அப்படியே ஓடி மறையும். படிக்கவேண்டியதுதான் என்று முடிவுசெய்தேன். படிக்க ஆரம்பித்ததும் எப்படியோ நேரம் வந்துவிட்டது. மழைப்பாடலை முடித்ததும் உங்களுக்கு எழுத நினைத்து இக்கடிதத்தை இப்போதுதான் முடிக்கிறேன்
மழைப்பாடல் என்று ஏன் இதற்குப்பெயர்? இந்நாவலில்தான் எல்லா விதைகளும் முளைக்கின்றன. முதற்கனல் ஏற்கனவே எழுந்துவிட்டது. அதற்குப்பிறகுதான் காட்டில் மழை பெய்கிறது. ஆயிரக்கணக்கான விதைகள் முளைக்கின்றன. காட்டுத்தீ இனிமேல் கடைசியில்தான் வரவிருக்கிறது.
மழைப்பாடலில் அந்த வயல்நிலம் அற்புதமாக காட்டப்பட்டிருக்கிறது. இரண்டுவகையான விதைவயல்கள். காந்தாரம் பாலை. அங்கே மழை பெய்தால் கோடிக்கணக்காக முளைக்கும். நூறுபேர் முளைப்பது அப்படித்தான். புல்வெளியில் ஆற்றலுள்ளவர்கள் முளைக்கிறார்கள்.
மழைப்பாடல் ஒரு நாவலாக கச்சிதமான ஒருமையுடன் இருக்கிறது. நான் இப்போதுதான் நாவல்களை வாசித்துக்கொண்டிருக்கிறேன். நாவல்களில் கதையில் ஒருமை கைகூடுவது அபூர்வம். அதனை விட அபூர்வம் அதன் இமேஜ்களில் ஒருமை கைகூடுவது. அது மழைப்பாடலில் நடைபெற்றிருக்கிறது. மழை, வேறுவேறு நிலங்கள், வெவ்வேறு வம்சங்கள் அந்நிலத்தில் முளைத்து எழுந்து வருவாது ஆகியவை ஒற்றைக் கட்டுமானமாக அற்புதமாக உருத்திரண்டு வந்துள்ளன
துர்வசுவின் வம்சமும் யதுவின் வம்சமும் போரிடப்போகின்றன. அந்த வமசகதை விரிந்து விரிந்து வந்து குழந்தைகள் உருவாகும் இடத்தில் முடிவடைகிறது. குழந்தைகளின் குணாதிசயங்கள் திரண்டு வந்துவிட்டன. போர் காத்திருக்கிறது
ஒரு விரிவான ரியலிஸ நாவலுக்குள் அழகாக தர்க்கரீதியாகப் பொருந்திப்போகும் மேஜிக்கல் அம்சங்கள் அமைந்துள்ளன. மகாபாரதத்தை முழுமையாக எழுதாமல் இதை மட்டுமே நீங்கள் எழுதியிருந்தால்கூட தமிழிலேயே இதுதான் முதன்மையான நாவல் என்பதில் சந்தேகமில்லை
ஆர்.எஸ்.ராஜ்குமார்
எதன்பொருட்டு இந்த மன்றாடல்.. இந்த இரைச்சல்..
யாரை நோக்கி..? எவரென்றில்லாமல் மன்றாடும் உயிரைபோல இப்புவியில்கைவிடப்பட்டவை எவை?
எத்தனை ஆற்றல் கொண்ட வேள்வி! எது செலுத்துகிறது இந்ததவளைகளை.. உயிர்குலம் மீது கொண்ட அளவிலா கருணையா?
ஒற்றைபெருங்குரலில் ஒலிக்கும் இந்தத் தவளைகள் அறிந்திருக்குமா, அவை ஆற்றும்வேள்வி எதன் பொருட்டென்று?
பருவமழை
வெண்முரசு குறித்து இதுவரை நான் தங்களுக்கு விரிவாக எழுதவில்லை. மிக எளிமையாகத் தொடங்கி இப்போது ஒரு காட்டாறு போல அது ஓடிக்கொண்டிருக்கிறது. அம்பை – பீஷ்மர்- சிகண்டி இவர்களுக்கிடையெயான நிகழ்வுகள் எப்பொழுதும் இருக்கும் ஒரு உச்சத்திலேயே எவ்வளவு ஆழமாகச் செல்கிறது