Web of Freedom: நூல் அறிமுகமும், சில எண்ணங்களும்—பாலா

நூலின் சில பகுதிகள்

ஜி.நாகராஜன் தமிழ் மொழியின் மிக முக்கியமான எழுத்தாளர். மிகச் சிறந்த கணித ஆசிரியர். கணிதத்தில் தோல்வியுற்ற ஒரு மாணவரைப் பயிற்றுவித்து, பொதுத்தேர்வில், கல்லூரியிலேயே முதலிடம் பெறவைத்த திறமையாளர். ஆனால், தனி வாழ்வில் ஒழுங்கீனர். தனது ஒழுக்கமற்ற செயல்களால், தன்னையும், தன் குடும்பத்தையும் சிதைத்து, இறுதியில் கிட்டத்தட்ட அனாதையாக இறந்தார். லௌகீக வாழ்க்கையை எப்படி வாழக்கூடாது என்பதற்கான ஒரு உதாரணம் அவர்.

உடம்பார் அழியில் உயிரார் அழிவர்;

திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்;

உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே,

உடம்பை வளர்த்தேன்; உயிர்வளர்த் தேனே.

என்பது திருமூலர் வாக்கு. உடல் இல்லாமல் உயிர் இல்லை. உயிர் இல்லாமல், அறிதலும், மேம்பாடும், வீடு பேறும் இல்லை.

ஒருவகையில் மனித சமுதாயமும் அப்படித்தான்.  பூமியில் வாழும் உயிரினங்களிலேயே சிந்திக்கத் தெரிந்த, பரிணாம வளர்ச்சியின் உச்சத்தில் இருக்கும் ஒரு விலங்கு. மனிதனும், விலங்குகளும், தாவரங்களும் நிலைத்து வாழ பூமியென்னும் உடலின்றி சாத்தியமில்லை. ஆனால், ஒரு சமூகமாக, தனக்கும் இயற்கைக்கும் உள்ள உறவை முழுமையாக உணராமல், இயற்கை வளங்களை நீடித்து நிலைக்கும் வகையில் பயன்படுத்தாமல், மனிதச்சமூகம் பூமியை அழித்துக்கொண்டிருக்கிறதா? அதைப் பொருளாதார வளர்ச்சி என்றும் முன்னேற்றம் என்றும் கொண்டாடுகிறதா என்னும் அடிப்படை வினாக்களை எழுப்பிய குமரப்பாவைப் பற்றியது இந்தப் புத்தகம்.

புத்தகத்தின் தலைப்பு:  Web Of Freedom. எழுதியவர்கள் வேணு மாதவ் கோவிந்து மற்றும் தீபக் மால்கன். வேணு, பெங்களூர் அறிவியல் கழகத்தில் மின் பொறியியல் துறையில் இணைப்பேராசிரியராகப் பணிபுரிகிறார்.  பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் முதுநிலை அறிவியலும், மேரிலேண்ட் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். நவீன இந்திய வரலாற்றிலும், பொருளாதாரத்திலும் ஆர்வம் கொண்டவர்

தீபக் பெங்களூர் மேலாண் கழகத்தில் இணைப் பேராசிரியர். மேரிலேண்ட் பல்கலைக்கழகத்தில், சூழலியல் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.  பெங்களூர் மேலாண் கழகத்தில்,  Centre for Public Policy என்னும் துறையில் பணிபுரிகிறார்.  சூழலியல் பிரச்சினைகளில் சிக்கிக் கொண்ட இந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தில் மாணவர்கள் பணிக்குச் சேரக் கூடாது எனக் குரல் கொடுத்து சர்ச்சையில் சிக்கிக் கொண்டவர்.

388 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தை வெளியிட்டவர்கள் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம்.

80 லட்சம் மக்களைக் கொண்ட சென்னை, வருடம் 1100 மில்லிமீட்டர் மழையைப் பெறுகிறது.  இங்கே வசிக்கும் மக்களுக்கான குடிநீர்த்தேவைகளுக்கு, 500-600 மில்லி மீட்டர் மழையே போதும். ஆனால், பெறும் மழையை கடலுக்கு அனுப்பி விட்டு, மக்களின் குடிநீர்தேவைக்காக, 230 கிலோமீட்டர் தொலைவிலுள்ள வீராணம் ஏரியில் இருந்து தினமும் 180 மில்லியன் லிட்டர் நீரையும், 400 கிலோமீட்டர் தொலைவு வெட்டப்பட்ட தெலுகு கங்காக் கால்வாய் வழியாக 500 மில்லியன் லிட்டர் நீரையும், சென்னைக்கு வடக்கிலும், தெற்கிலும் அமைக்கப்பட்டிருக்கும் கடல் நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள் மூலமாக 200 மில்லியன் லிட்டர் நீரையும் குடிநீர்த் தேவைகளுக்காகப் பெற்றுக் கொள்கிறது.

சென்னையையும், அதைச் சுற்றியுள்ள காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இருக்கும் 3600 நீர்நிலைகள் சரியாகப் பராமரிக்கப்பட்டு உபயோகப்படுத்தப்பட்டாலே, சென்னையின் குடிநீர்த் தேவையைப் போல பலமடங்கு பூர்த்தி செய்துவிட முடியும் என்னும் நிலையை விடுத்து, நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்களுக்கு கால்வாய் வெட்டி, குழாய்கள் பதித்து,  பெரும் ஆற்றலைச் செலவு செய்து மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் அரசுகளின், இது போன்ற பப்ளிக் பாலிசி – பொதுநலத் திட்ட அணுகுமுறையை  குமரப்பா இயற்கைக்கும், அறிவியலுக்கும் எதிரானது என்கிறார்.

கடல் நீரின் உப்பு அளவு 20 -30 ஆயிரம் டி.டி.எஸ் இருக்கும். அதைச் சவ்வூடு பரவும் முறையில் 200 டி.டி.எஸ் ஆக, மின்சார சக்தியைப் பயன்படுத்தி குறைக்கிறார்கள்.. 100 மில்லியன் லிட்டர் நீரை உருவாக்க கிட்டத்தட்ட தினமும் 300 மில்லியன் லிட்டர் கடல் நீர் உபயோகப்படுத்தப்படுகிறது. 100 மில்லியன் நன்னீர் உற்பத்தியில், பல மடங்கு அதிக உப்புச் சத்து நீர் மீண்டும் கடலுக்குச் செல்கிறது. இது உருவாக்கும் சூழல் சமநிலையின்மையால் பாதிக்கப்படும் கடல் உயிர்ச் சூழலும் அதை நம்பியிருக்கும் மீனவர்களின் வாழ்க்கையும் பாதிக்கப்படுவதை, பொதுநலத்திட்ட வடிவமைப்பாளர்கள் பெரிதாகக் கணக்கில் கொண்டதாகத் தெரியவில்லை.

சென்னையில் வசிக்கும் 80 லட்சம் மக்கள், தாங்கள் பெறும் மழையைச் சேமித்து, அரசுகளும், உள்ளாட்சிகளும் நீர்நிலைகளைப் பாரமரிக்கும் ஒரு பொதுநலத்திட்டத்தை முன்னெடுத்திருந்தால், இன்று இருக்கும் பிரமாண்டமான குடிநீர்த் திட்டங்கள் தேவைப்பட்டிருக்காது. இந்தப் பிரமாண்ட குடிநீர்த் திட்டங்களுக்காகத் தினமும் செலவழிக்கப்படும் நூற்றுக்கணக்கான மெகாவாட் மின்சாரமும், அதை உற்பத்தி செய்ய உபயோகிக்கப்படும் ஆயிரக்கணக்கான டன்கள் நிலக்கரியும், அதைப் பல்லாயிரம் கிலோமீட்டர் கடல்கடந்து கப்பல் வழியே கொண்டுவர ஆகும் டீஸலும், நிலக்கரி தோண்டுவதால் உருவாகும் சூழல்ச்சமநிலையின்மையும் தவிர்க்கப்பட்டிருக்கும். இதுபோன்ற ஒரு பொதுநலத்திட்ட அணுகுமுறையைத்தான், குமரப்பா, ‘முழுமையான அணுகுமுறை’, என முன்வைக்கிறார்.

இப்படிப்பட்ட பிரமாண்டமான, எளிதில் தவிர்த்திருக்கக் கூடிய பெருநகரங்களுக்கான குடிநீர்த்திட்டங்கள் உபயோகிக்கும் மின்சாரமும், உருவாக்கும் வேலைவாய்ப்புகளும் அவற்றின் பொருளியல் மதிப்பும் மட்டுமே அளந்து பொருளாதார முன்னேற்றமாகக் கணக்கிடப்படும் அணுகுமுறை குறைபாடுகள் கொண்டது என்கிறார் இந்தியாவின் மிக முக்கியமான சூழலியல் அறிஞரான மாதவ் காட்கில்.  இது போன்ற திட்டங்களினால் நிகழும் எதிர்மறை, சூழல் பாதிப்புகளின் பொருளியல் மதிப்பை யாரும் அளந்து, ஒரு திட்டத்தின் நிகர நன்மை தீமைகளை கணக்கில் கொள்வதில்லை என்பது அவர் தரப்பு.

மேற்கத்திய முதலாளித்துவக் கட்டமைப்பு என்பது, அதிக மூலதனத்தை அடிப்படையாகக் கொண்டது. இயற்கை வளங்களைச் செயல்திறனின்றிச் செலவு செய்யக் கூடியது. அதற்கான கச்சாப் பொருட்களும், மூலதனமும் காலனியாதிக்கச் சுரண்டல் மூலம் எடுத்துச் செல்லப்பட்டவை. ஆனால், இந்தியா அதீத மக்கள் தொகையையும், ஒவ்வொரு மனிதருக்குமான சராசரி இயற்கை வளத்தையும் குறைவாகக் கொண்டது. எனவே இதன் சமூகப் பொருளியல் செயல்பாடுகள், கட்டமைப்புகள் இதற்கேற்ற, சரியான அலகில், இயற்கை வளங்களைச் செயல்திறன் மிக்க வழியில் உபயோகிக்கும் வகையில் உருவாக்கப்பட வேண்டும் என்பது குமரப்பாவின் கருத்து.

இந்தக் கருத்தின் அடிப்படையை முன்வைத்து யோசித்தால், ஏன் சென்னையில் வசிக்கும் மக்கள் மழைநீர் சேகரிப்பை ஒரு மிக முக்கியமான செயல்பாடாக முன்னெடுக்க வேண்டும் என்பதையும், ஏன் மாநில, உள்ளாட்சி அமைப்புகள், சென்னை போன்ற பூகோளப் பகுதியில், இயற்கையாக அமைந்திருக்கும் நீர் நிலைகளைச் சரியாகப் பராமரிக்க வேண்டும் என்பதையும் உணர்ந்து கொள்ள முடியும்.

ஆனால், தமிழக அரசும், மக்களும், எளிதில் கிடைக்கும், இயற்கை அள்ளித்தரும் நீரை வீணாக்கிவிட்டு, அதீத சக்தியைச் செலவு செய்து, நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் இருந்து இன்னொரு சூழலில் இருந்து நீரைத் திருடி வருகிறார்கள். இது அறிவியலுக்கும் இயற்கை விதிகளுக்கும் எதிரானது.

2001ஆம் ஆண்டிற்கான பொருளாதார நோபல் பரிசைப் பெற்ற, ஜோஸஃப் ஸ்டிக்லிஸ், மனிதனால் உற்பத்தி செய்யப்படும் பொருள் மற்றும் சேவைகளின் பணமதிப்பு என்னும் அலகுடன் அதன் இயற்கை வளம், மனித வளம், சமூக வளம் என்னும் மூலதனங்களும் கணக்கில் கொள்ளப்பட்ட ஒத்திசைந்த வளர்ச்சியையே ஒரு நாடு முன்னெடுக்க வேண்டும் என்னும் கருதுகோளை முன்வைக்கிறார். அவரின் இந்தக் கருத்தை வழிமொழிகிறார் மாதவ் காட்கில்   (https://www.theindiaforum.in/article/ecology-people)

ஆங்கிலேயரிடம் இருந்து அரசியல் விடுதலையைப் பெறுவதற்காக மட்டுமே காந்தி உழைக்கவில்லை. அதைத் தாண்டி, ஒவ்வொரு மனிதனும் சமூக, பொருளாதார, கலாச்சார விடுதலையை அடையும் வழிகளைச் சிந்தித்தார்.  ஒவ்வொரு மனிதரும் ஆரோக்கியமாக, முழுமையாக, சுதந்திரமாக வாழும் நிலை வந்தால் ஒழிய, சமூக மேம்பாடு சாத்தியமில்லை என்பதை அவர் உணர்ந்திருந்தார்.

பல்லாயிரம் ஆண்டுகால மேலாதிக்க ஒடுக்குமுறைகளின் விளைவாக உருவாகியிருந்த சமூக, பொருளாதாரச் சமநிலையின்மையை நேர்மறையான, அறம் சார்ந்த செயல்பாடுகள் மூலமாகச் சரி செய்வதை அவர் சிந்தித்தார்

அரசு என்னும் அதிகார மையத்தைத் தாண்டி சமூகம், பரஸ்பர ஒற்றுமை மற்றும் கூட்டுறவினால் இயைந்து வாழும் ஒரு முழுமையான சமூக அமைப்பை உருவாக்குவதே தனது லட்சியமாக உருவாக்கிக் கொண்டார்.

இந்த நோக்கத்தின் ஆக்கபூர்வமான கட்டமைப்புச் செயல் திட்டங்களாக அவர் முன்வைத்தவை தான், கதர், ஊரகத் தொழில் முன்னேற்ற முனைப்புகள், நயி தலிம் என்னும் புதிய கல்விக் கொள்கை போன்றவை.

காந்தியின் பெரும்பாலான அரசியல் சீடர்கள் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களைப் பொறுத்தவரையில், காங்கிரஸின் செயல்பாடுகள், ஆங்கிலேயரிடம் இருந்து அரசியல் விடுதலை பெறுதலை மட்டுமே நோக்கியதாக இருக்கவேண்டும் என நம்பினார்கள். விடுதலை கிடைத்தவுடன், காலனிய நிர்வாகக் கட்டமைப்பை சிறிதும் மாற்றாமல், மேற்கத்திய நவீனத் தொழில் கட்டமைப்புகளை, வேளாண் திட்டங்களை நகலெடுத்து  முன்னெடுக்கத் துவங்கினார்கள்.

அதே காலகட்டத்தில், காந்தியின், சமூகம் மற்றும் பொருளியல் மேம்பாட்டு நோக்கங்களை நிறைவேற்றும் ஆக்கபூர்வமான செயல்திட்டங்களுக்கு, அவரின் சக ஊழியர்கள் சிலர் தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணித்தார்கள். அவர்களுள் முக்கியமானவர் ஜோஸஃப் கார்னேலியஸ் குமரப்பா என்னும் ஜே.சி.குமரப்பா.

காந்தியின் உப்பு சத்தியாக்கிரகப் போருக்குச் சில மாதங்கள் முன்பு காந்தியுடன் இணைந்து கொண்ட குமரப்பா, அடுத்த முப்பது ஆண்டுகள், ஊரக மேம்பாட்டுக்கான பணிகளில் ஈடுபட்டிருந்தார்.

ஜே சி குமரப்பா, அம்பேட்கர் இருவரும் கொலம்பியாப் பல்கலைக்கழகத்தில் பயின்றவர்கள். செலிக்மேன் என்னும் பேராசிரியரின் சீடர்கள்.  “இந்தியாவின் பொதுநிதியும், ஏழ்மையும்”, என்னும் தலைப்பில் தான் எழுதிய முதுநிலைப் பட்டப்படிப்பிற்கான ஆய்வறிக்கையைப் புத்தகமாக வெளியிடும் பொருட்டு, காந்தியைச் சந்திக்க வந்த குமரப்பா, அவரின் சக ஊழியராக மாறினார். குஜராத்தி வித்யா பீடத்தில் பேராசிரியராக இணைந்து கொண்டார்.  தண்டி யாத்திரையின் முடிவில் காந்தி கைது செய்யப்பட, ‘யங் இந்தியாவின்’, ஆசிரியரானார்.

காந்தியப் பொருளியலின் மெய்யியல் (Gandhian Economic Philosophy) அடிப்படைகளை, உண்மையான கள ஆய்வுகள் மூலமும், ஊரகத் தொழில்துறை செயல்பாடுகள் மூலமும் 30 ஆண்டு கால உழைப்பில் உருவாக்கினார். பொருளியல் சிக்கல்களுக்கான காந்திய அணுகுமுறையை, வெறும் மெய்யியல் என்னும் அளவில் நிறுத்திக் கொள்ளாமல், அவற்றை நடைமுறைப்படுத்தும் வழிகளை, ஊரகத் தொழில்துறை கூட்டமைப்பின் மூலமாக முன்னெடுத்தார்.

இந்திய சுதந்திரம் நெருங்கி வரும் காலத்தில், காங்கிரஸ் இயக்கம் காந்தியிடம் இருந்து வெகுவாக விலகி இருந்தது. அவரது ஆக்கபூர்வமான செயல்பாட்டுத்திட்டத்துக்கு யாரும் ஆதரவாக இல்லை. ஆனால், அது போன்ற பின்னடைவுகள் காந்தியை என்றுமே பாதித்ததில்லை.

சுதந்திரம் பெற்ற பின்னர், காங்கிரஸ் இயக்கத்தையும், அரசையும் விட்டு விலகி, தனது ஆக்கபூர்வமான கட்டமைப்புப் பணிகளை முன்னெடுக்க, காந்தி திட்டமிட்டிருந்தார். அத்திட்டத்தின் ஒரு பகுதியாக, 1934 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அகில இந்திய ஊரகத் தொழில் கூட்டமைப்பு (All India Village Industries Association – AIVIA) நிறுவனத்தை சீரமைத்து, முன்னெடுக்க முடிவெடுத்தார். 1948 ஆம் ஆண்டு ஃபிப்ரவரி மாதம் மூன்றாம் தேதி, அதற்காக, வார்தாவில் ஒரு கூட்டத்தைக் கூட்டுமாறு, கூட்டமைப்பின் செயலர் குமரப்பாவுக்குக் கட்டளையிட்டிருந்தார்.

ஆனால், ஜனவரி 30 ஆம் தேதி, ஊழ், கோட்சே என்னும் தீவிரவாதியின் உருவில் குறுக்கிட, காந்தியின் தலைமையில் நடைபெற வேண்டிய அந்தக் கூட்டம் நடைபெறாமல் போனது. அதிகார அரசியல் என்னும் தளத்தைத் தாண்டி, தனி மனித சமூகப் பொருளாதார விடுதலையை முன்னெடுக்கும் அந்தப் பெரும் முனைப்பு, முளையிலேயே சிதைக்கப்பட்டது.

காந்தியின் மரணத்தால் தள்ளிப்போன, இந்தக் கூட்டம், 1948 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜவஹர்லால் நேரு தலைமையில் நடந்தது. ‘இந்தக் கதர், கிராமத் தொழில் போன்றவற்றைத் தூக்கி எறிந்து விட்டு, அண்ணலின் அடிப்படைக் கொள்கைகளில் கவனம் செலுத்துங்கள்’, என அறிவுரை வழங்கினார் நேரு. காந்தியின் சமூகப் பொருளியல் திட்டங்களுக்குத் தன் ஆதரவைத் தருவார் என எதிர்பார்த்தவர்களின் நினைப்பில் மண்ணையள்ளிப் போட்டார். இது காந்தியப் பொருளியல் திட்டங்கள் மற்றும் கொள்கைகளுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.

இதைத் தவிர, மரபான பொருளியல் அறிஞர்கள் பலரும், காந்தியப் பொருளாதார அடிப்படைகளை, வாதங்களை ஒரு வகையான பழம்பேச்சு என்னும் வகையில் எதிர்கொண்டனர்.. ஐரோப்பாவின் நவீன உலகுக்கு எதிரான, பழமை வாதமாக அவை கேலி செய்யப்பட்டன. நேரு, அம்பேட்கர் இருவருமே கிராமம் என்னும் அலகை பிற்போக்கான, சாதியச் சீழ்பிடித்த அமைப்பாகக் பார்த்தார்கள். நவீனத் தொழில், கல்வி, நகர்மயமாக்கல் போன்றவை அன்றைய காலத்தில் பலருக்கும் சரியான தீர்வாகத் தோன்றியது.

விளைவாக, காந்தியப் பொருளியலின் அறிவியல் அடிப்படைகள், ஆக்கபூர்வமான முன்னெடுப்புகள் இவையனைத்தும் நவீனத்துவத்தின் மேலாதிக்க வெளிச்சத்தில் மங்கத் துவங்கின. காந்தி புகைப்படங்களில் சிரிக்கும் ஒரு அடையாளமாக சுருங்கத் துவங்கினார். ஆனால், காந்தியப் பொருளியல் என்பது பழங்காலக் கனவல்ல. அது ஒரு அறிவியல் அடிப்படையைக் கொண்ட ஒரு வலுவான கருதுகோள். அதை மீட்டெடுத்து முன்வைக்கும் ஒரு முயற்சிதான், இந்த நூல் என்கிறார்கள் நூலாசிரியர்கள்

குமரப்பாவின் மெய்யியல்

நவீன நாகரீகத்தின் பிரதிநிதியாக காந்தியைச் சந்தித்த குமரப்பா, சடுதியில், அரசியல் பொருளாதாரத்திலும், பொருளாதார மெய்யியலிலும், சத்தியம் மற்றும் அகிம்சையின் அடிப்படையை உள்வாங்கி வெளிப்படுத்துபராக மாறினார்.

குமரப்பாவின் ஆளுமையும், அறிவார்ந்த அணுகுமுறையும், காந்தியின் வழிகளை ஒத்த, ஆனால், அவரின் பாதிப்பில்லாமல் சுயம்புவாக உருவான ஒன்று என்கிறார்கள் வேணுவும், தீபக்கும். அந்த அறிவார்ந்த சிந்தனையின் வளர்ச்சிப்பாதையில், சமூகம் எதிர்கொண்ட பல அடிப்படை விஷயங்களையும், அறம் சார்ந்து ஆராய்ந்து தெளிந்தார். இன்று சூழலியல் சிந்தனைகளின் ஊற்றுக்கண்ணாக அறியப்பட்டு, அங்கீகரிக்கப்படும் அவரது வாதங்கள், ஆழ்ந்து ஒத்திசைந்த முழுமையான சிந்தனைத்திரளின் ஒரு கீற்று மட்டுமே என்பது நூலாசிரியர்களின் துணிபு.

பொருளாதாரம், சமூகம் ஏன் அவர் பிறந்த மதத்தைக் கூட, அறத்தின், சத்தியத்தின் அடிப்படையில் மறு உருவாக்கம் செய்து, காந்தியத்தின், இந்தியச் சிந்தனையின் பின்புலத்தைக் கொண்டு முன்வைத்தார். 1930 ஆம் ஆண்டிலிருந்து, காந்தியின் பொருளாதாரம் குறித்த காந்தியின் கொள்கைகளுக்கு, தன் சிந்தனையின், செயல்களின் பங்களிப்பால் செழுமை சேர்த்தார்.

வழக்கமான, தர்க்க ரீதியாகச் சரியாக இருப்பதை முக்கியமாகக் கருதும், ஏட்டுக்கறி மெய்யியல் சிந்தனையாளர்களின் வழிமுறை போல் அல்லாமல், குமரப்பாவின் வழிமுறை, மெய்யியலுடன், சமூகம் எதிர்கொள்ளும் லௌகீகப் பிரச்சினைகளைத் தீர்க்கும் நடைமுறை வழிகளையும் இணைத்துப் பேசியது.

ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டைக் கணமும் விட்டு விடாமல், மெய்யியலும், நடைமுறை வாழ்க்கையும் இணைந்த தளத்தில் இயங்கியவர்கள் உலகில் மிகச் சிலரே.  ‘என் வாழ்க்கையே என் செய்தி’, என, சிந்தனையும் செயலும் பிரியாத தளத்தில் இயங்கிய காந்தியும், குமரப்பாவும் அவர்களுள் மிக முக்கியமானவர்கள்.

இந்தியாவின் ஊரகத் தொழில் அமைப்புகளை சீரமைத்து, மேம்படுத்தும் நோக்கத்தோடு, 1934 ஆம் ஆண்டு, காந்தி, அகில இந்திய ஊரகத் தொழிற் கூட்டமைப்பு என்னும் நிறுவனத்தை உருவாக்கினார். அதன் செயலராக, குமரப்பா நியமிக்கப்பட்டார். இந்த நிறுவனம் இந்திய ஊரகத் தொழில் அமைப்புகளின் செயல் திறனை மேம்படுத்தும் அறிவியல் முயற்சிகளில் ஈடுபட்டது.  மெய்யியலும், நடைமுறைத்தளத்தில் ஊரகத் தொழில்களின் பிரச்சினைகளுக்குத் தேடுதலும் என முயங்கிய வாழ்க்கை, இரண்டு தளங்களிலும் குமரப்பாவின் ஆளுமைக்கு, திறனுக்கு மேலும்  வளம் சேர்த்தது.

நவீன காலகட்டத்தின் முக்கியமான அம்சம், பெருந்தொழில்க் கட்டமைப்பு என்னும் பொருளாதார சித்தாந்தமும் அதன் உடன்பிறவா (!) சமூக அரசியல் சகோதரர்களான வளர்ச்சியும் முன்னேற்றமும். இதன் பக்க விளைவாக, நவீனச் சமூக மனங்களிலிருந்து, கற்பனையிலிருந்து, கிராமம் என்னும் அலகு வேகமாக விலகி விட்டது. நவீன மனங்களுக்கு, கிராமம் என்பது திருத்தவே முடியாத பெரும்பாரம்.

அப்படிப்பட்ட மனநிலை கொண்ட மக்கள் தலைவர்களும், அரசியல் சட்ட வல்லுநர்களும், அதிகாரிகளும் விஞ்ஞானிகளும், அந்தக் காலகட்டத்தில், சுதந்திர இந்தியாவின் அஸ்திவாரத்தை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள்.

இந்த மனநிலையை எதிர்த்து, ஊரகப் பொருளாதாரத்தின், மக்களின் நலன்களை, அவர்கள் உரிமைகளைப் பாதுகாக்கும் தனித்துவமிக்க குரலாக எழுந்துவந்தார் குமரப்பா. கிராமப் பொருளாதாரம் என்னும் அலகை மீட்டுருவாக்கம் செய்து அதை வலுவாக்க, மிகக் கடுமையாக உழைத்தார். இந்த அசுர உழைப்பின் வழியாக, நவீனப் பொருளாதாரம் மற்றும் அரசியலைக் கட்டமைத்த அனுமானங்களைக் கேள்விக்குள்ளாக்கினார்.

காந்தி முன்வைத்த கிராமிய வேளாண் பொருளாதாரம் என்பது பண்டைய இருண்ட காலத்தைச் சென்றடையும் முயற்சியல்ல. மாறாக, நவீனச் சமூகங்களில் நிலவும் சமூக, அரசியல் சமத்துவமின்மையை நீக்கி, அனைவருக்கும், குறிப்பாக ஏழைமக்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும், தனிமனித விடுதலையைச் சாத்தியமாக்கும் வழி எனத் தன் உழைப்பின் வழியே, எழுத்துக்களின் வழியே விளக்கினார்.

பெரும் தொழில்க்கட்டமைப்பு, அவற்றின் உற்பத்தி, செயல்திறன், நவீனப் பொருளாதாரத்தில் பணம் என்னும் பண்டமாற்றுக் கருதுகோளின் பங்கு, அதன் பொருளாதார மதிப்பு, உழைப்பின் நோக்கம், மக்களாட்சிக் கொள்கைகள், வாழ்க்கைத்தரம், நல்வாழ்வு போன்ற அளவீடுகளுக்கான தனித்துவம் மிக்க அர்த்தப்பாடுகளை உருவாக்கினார். சமுகப் பரிணாமம், மனித இயல்பு, இயற்கை என்னும் பெரும்சூழலில் மனிதனின் இடம் போன்றவற்றிற்கான மெய்யியல் கோட்பாட்டுச் சட்டகங்களை வடிவமைத்தார்.

பெரும் தொழில் வளர்ச்சியின் மூலமாக ஐரோப்பா பெற்ற வளர்ச்சிக்கும், காலனிகளில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட செல்வங்களுக்கும், மக்கள் ஒடுக்குமுறைக்கும் இருந்த அபாயகரமான தொடர்பைத் தெளிவாக முன்வைத்தார்.

அதீத மூலதனம் தேவைப்படும் பெருந்த்தொழில்ப் பொருளியல் சக்திகளுக்கும், அரசின் கொள்கைகளுக்கும் உள்ள உறவின் சமூகத் தீங்குகளை மீண்டும் மீண்டும் பேசினார். அந்தக் கொள்கைச் சாய்வுகள் எப்படி கிராமத்தொழில்களை, அதைச் சார்ந்திருக்கும் பொருளாதாரத்தின் கடைநிலை மனிதர்களை, அவர்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை ஒடுக்குகிறது என்பதையும், அது எவ்வாறு பெரும் சூழல்ச் சமநிலையின்மையை உருவாக்குகிறது என்பதையும் கள ஆய்வுகள் மூலம், தரவுகள் மூலம் நிறுவியது குமரப்பாவின் தனித்துவமான பங்களிப்பாகும்.

Behavioral Economics எனப் பொருளாதாரத் துறை ஒன்றிருப்பதைப் போல, Normative Economics – அறம்சார் பொருளாதாரம் என்னும் விழுமியம் காந்தி மற்றும் குமரப்பாவின் முயற்சிகளின் அடிப்படை. குமரப்பாவைப்பற்றிய இந்த அறிவுசார் வாழ்க்கை வரலாறு, அவரது பங்களிப்பையும், இந்த விழுமியத்தையும் மீட்டுருவாக்கம் செய்யும் முயற்சி எனச் சொல்லலாம்

முந்தைய கட்டுரை‘இமைக்கணத்தில் எழுந்த முழுமையின் துளி’- இரா.அர்விந்த்
அடுத்த கட்டுரைஅ.கா.பெருமாள் பற்றி அறிய