நோய்க்காலமும் மழைக்காலமும்-4

குடகிலிருந்து கிளம்பும்போது திட்டமிட்டவை பாதி நடக்கவில்லை என்றாலும் மழையும் குளிருமான மூன்று நாட்கள் நிறைவூட்டுவனவாகவே இருந்தன. பசுமையின் ஒளி நிறைந்த நிலத்தினூடாக திரும்பி வந்தோம்.

வழியில் இரண்டு இடங்களைப் பார்க்க திட்டமிட்டிருந்தோம். சோமவார்ப்பேட் அருகே ஓர் அருவி. அங்கே போகமுடியாது, மூடிவிட்டிருந்தனர். பைலோக்குப்பே என்னுமிடத்தில் ஒரு திபெத்திய முகாம் உள்ளது. 1955 ல் திபெத்திலிருந்து வந்தவர்களுக்காக நேரு அரசு அமைத்த பல முகாம்களில் ஒன்று. அவையெல்லாமே இந்தியாவுக்குள் தனித்தன்மை கொண்ட ஊர்களாக மாறியிருக்கின்றன.

அப்படி திபெத்தியர் வந்தமைந்த பல ஊர்களுக்குச் சென்றிருக்கிறோம். பெரும்பாலானவை மலைமேல், சற்றுக்குளிரான இடங்களாக இருக்கும். பெரும்பாலானவை மிக நவீனமாக ஆக்கப்பட்டு, அழகிய மடாலயங்களும் மதப்பாடசாலைகளுமாக திகழும்.திபெத்திய பண்பாடு திகழுமிடங்களாதலால் அவை சுற்றுலாமையங்களாகவும் இருக்கும்.

பொதுவாக எங்கே ஒரு தனிப்பண்பாடு, தனி அடையாளம் பேணப்படுகிறதோ அது அழகான சுற்றுலாமையமாக ஆகிவிடும். வருத்தம்தருவது என்னவென்றால், தென்னிந்தியப் பண்பாட்டை அல்லது தமிழ்ப்பண்பாட்டை அப்படி வெளிப்படுத்தும் தனித்தன்மைகொண்ட ஒர் ஊர் கூட இல்லை என்பதுதான். எல்லா ஊருமே ஒரே போல கசகசவென்று கடைகள், குப்பைக்குவியல்கள், தெருவியாபாரிகள், கூச்சல்கள், ஓசைகள், மஞ்சள் டிஸ்டெம்பர் அடித்த கட்டிடங்கள், தட்டிகள், ஓலைக்கூரைகள், சுவரெழுத்துக்கள், சுவரொட்டிகள் என காட்சிக்கு கண்சலிப்பவையாக உள்ளன. இன்று பழைய மதுரை அல்லது தஞ்சை எங்கேனும் கொஞ்சம் பேணப்பட்டிருந்தால் அது கோடிகள் கொட்டும் சுற்றுலாமையமாக இருந்திருக்கும்

திபெத்திய குடியிருப்புக்கள் எல்லாமே சுற்றுலாமையங்களாக ஆகி அவர்களையும் செல்வந்தக்குடிகளாக ஆக்கிவிட்டிருக்கின்றன. மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டும் ஒரு திபெத்தியக்குடியிருப்பு பெரும்பாலும் காலத்தில் கைவிடப்பட்டு பழைய கட்டுமானங்களாலானதாக இருப்பதைக் கண்டோம்.

திபெத்திய டீக்கடை,பைலோக்குப்பே

பைலோக்குப்பே பலவகையிலும் தர்மசாலாவை நினைவூட்டும் இடம். ஏராளமான சுற்றுலாப்பயணிகள் அங்கே வருவதுண்டு. ஆகவே திபெத்திய உணவகங்கள், திபெத்திய அருங்கலை விற்பனையகங்கள் என ஒரு முழுமையான அயல்நாட்டுச் சூழல். பைலோக்குப்பே மடாலயமும் பெரியது, அழகியது.

ஆனால் நாங்கள் சென்றபோது கொரோனா காரணமாக பைலோக்குப்பே மடாலயம்  மூடப்பட்டிருந்தது. எங்களை கேட்டுக்கு அப்பால் அனுமதிக்க மறுத்துவிட்டனர். சுற்றுலாப்பயணிகளே இல்லை. ஆனாலும் கடைகளை திறந்து வைத்திருந்தனர். ஒரு கடையில் காபி குடித்துவிட்டு கிளம்பினோம். பார்க்க ஒன்றுமில்லை, நேராக மைசூர் வழியாக ஈரோடுதான்.

முழுப்பகலும் நீளும் பயணம். ஆனால் சலிப்பில்லை. இருபக்கமும் ஓடிச்சென்றுகொண்டிருந்த நிலக்காட்சிகளை பார்த்துக்கொண்டிருக்கையில் சினிமாவில் ஒரு நீண்ட டிராலிஷாட்டை பார்ப்பதுபோலிருந்தது. ஏதோ நடக்கப்போகிறது, அல்லது நடந்துமுடிந்துவிட்டது.

மைசூர் சாலையின் இருபக்கமும் தக்காணப் பீடபூமிக்குரிய ஒருவகையான மொட்டைநிலம். மண்பாறைகள், குத்துச்செடிகள்,குட்டை மரங்கள். ஆனால் நிலத்தின் மதிப்பு வெகுவாக ஏறியிருக்கிறது என நினைக்கிறேன். எல்லா இடங்களிலும் முட்கம்பிவேலி போட்டிருக்கிறார்கள். நிலம் முழுமையாகவே அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது

மைசூர் அருகே பெங்களூர் கிருஷ்ணனும் நினேஷும் இறங்கி விடைபெற்றனர். அங்கிருந்து நாங்கள் சத்யமங்கலம் நோக்கி செல்லத் தொடங்கினோம்.

பைலோகுப்பே மடாலயம்

நண்பர்களுடன் இத்தகைய பயணங்களை செய்யத்தொடங்கி பத்தாண்டுகளாகின்றன. எத்தனை ஊர்கள், எத்தனை சாலையோர உணவகங்கள்,டீக்கடைகள், மரத்தடிகள். காரை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு ஒரு டீக்கடையில் டீயுடன் அமர்வதென்பது எப்போதுமே கிளர்ச்சியூட்டும் ஓர் அனுபவம்.

முன்பு ஓர் அறிவியல்புனைவில் முதல்சொற்றொடரான “Look! We reached somewhere!” என்பதை “பார், நாம் எங்கோ ஓரிடத்திற்கு வந்துவிட்டோம்!”என்று தப்பாக மொழியாக்கம் செய்திருந்தார்கள். ஆனால் அந்தச் சொற்றொடர் என்னை இளமைமுதலே கவர்ந்துவந்தது.எங்கோ ஓரிடத்தைச் சென்றடைவது, ஏதோ ஒரு நிலத்தில் நம்மை உணர்வது. அது வாழ்க்கையை மீண்டும் வாழச்செய்கிறது, கணிப்பொறியை ‘restart’ செய்வதுபோல புதியதாக உள்ளம் எழவைக்கிறது

டீக்கடையில் அமர்ந்து டீ சாப்பிட்டோம். எங்கள் டீ குடிக்கும் நிகழ்ச்சி ஒரு பின்நவீனத்துவ நாடகம்போல. முதலில் 14 டீ என்போம். ஒருவர் தனக்கு டீ வேண்டாம் என்பார், சரி,13 என்று குறைப்போம். இருவர் காபி போதும் என்பார்கள். ஒருவர் பாலில்லாத டீ என்பார். ஒருவழியாக உத்தரவு அளித்து பரிமாறுபவர் நகர்ந்தபின் ராஜமாணிக்கம் புகுந்து “லெமன்டீ இருக்காண்ணா?”என்று முற்றிலும் புதியதாக ஆரம்பிப்பார்.நமது டீக்கடை பரிமாறுநர்கள் தர்க்கமேதைகள். நம் பேருந்து நடத்துநர்கள் கணிதமேதைகள்.

டீக்கடையில் முந்தைய விவாதம் நீள்வதில்லை. கார்களிலிருந்து இறங்கும்போது ஒரு விவாதம் முடிவடைகிறது. டீக்கடையில் புதியதாக ஒன்று முளைக்கிறது. டீக்கடைக்காரகள் இதைப்போல பலவகையான ‘கேஸ்’களை பார்த்தவர்களாதலால் பொருட்படுத்துவதில்லை. விஷ்ணுபுரம் விழாக்களின்போது மட்டும் கடைக்காரர்கள் அரண்டுபோய் “நீங்கள்லாம் யாருங்க சாமி?”என்பதுண்டு

சத்தியமங்கலம் காட்டுக்குள் நுழைந்தபோது இருட்டாகத் தொடங்கியது. சாலைக்கு குறுக்கே விலங்குகள் வர நிறைய வாய்ப்புள்ள இடம். ஒரு சிறு மான்கூட்டத்தைப் பார்த்தோம். அதன்பின் சாலையிலேயே ஒரு யானை நின்றிருந்தது. பெண்யானை, ஓராண்டு நிறைந்த குட்டி. நன்றாக உருண்டு இருந்தது.அதாவது சினிமாவில் வருவதுபோல அவர்களின் குலத்தின்  ‘சுட்டிப்ப்ப்ப்பெண்’ கதாநாயகி.

வழக்கமாக யானைகள் சாலையை அஞ்சும். வாலைமுறுக்கிக்கொண்டு ஓடி கடந்துசெல்லும். சத்யமங்கலம் யானைகள் சாலைகளிலேயே வளர்கின்றன. குரங்குகளைப்போல உணவையும் சாலைகளிலேயே தேடிக்கொள்கின்றன. சக்தி சர்க்கரை ஆலைக்கு கர்ப்பிணிகளைப்போல முனகிக்கொண்டு செல்லும் கரும்புலாரிகள் இலக்கு. வண்டிகளை நிறுத்தி வழிப்பறிக்கொள்ளை செய்வதுமுண்டு. குட்டியானை கரும்புலாரிகளையும் பொருட்படுத்தாமல் தும்பிக்கையை ஆட்டியபடி நின்றது. இது காட்டில் தழைமலிந்து கிடக்கும் காலம். பரந்தாமனே வந்தாலும் போடா என்று சொல்லிவிடும்

இன்னொரு மான்கூட்டத்தைக் கண்டோம். முதலில் ஆட்டுமந்தை என்றே நினைத்தேன். ஐம்பது மான்களுக்குமேல் இருந்தன. சாலையை விரைவாகக் கடந்துசென்றன.ஒரே ஒரு மான் மட்டும் நின்று திரும்பிப்பார்த்துவிட்டு சென்றது. குலத்தலைவியாக இருக்கலாம்.

செல்பேசியில் பின்னால் வந்த காரிலிருந்தவர்களிடம் வழியில் யானை நிற்பதைச் சொன்னோம். ஒரு பெட்ரோல் பங்கில் வந்து சேர்ந்துகொண்டார்கள். அவர்கள் இரண்டு யானைகளைப் பார்த்தார்கள். இன்னொன்றும் நாங்கள் வந்தபின் மேலேறி வந்திருக்கிறது. ஆனால் நாங்கள் பார்த்த மான்கூட்டத்தை அவர்கள் பார்க்கவில்லை, அந்தவகையில் ஓர் ஆறுதல்

இரவு ஒன்பதரை மணிக்கு காஞ்சிகோயில் வந்துவிட்டோம். சென்னை கோஷ்டி தவிர பிறர் சென்றுவிட்டனர். இரவில் கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்தோம். புனைவு, உறவுச்சிக்கல்கள், ஆன்மிக அமைப்புகளின் நிர்வாகச் சிக்கல்கள் பற்றி. இரவு படுத்தபோது உடலுள் உயிர்த்திரவங்களில் காரின் அசைவு எஞ்சியிருந்தது

நான் மறுநாள் ஈரோட்டில் சிவரஞ்சனி விடுதியில் தங்கினேன். நண்பர்கள் வந்தனர் பேசிக்கொண்டிருந்தோம். அருகே ஓட்டலில் நல்ல உணவு சாப்பிட்டோம். மறுநாள் என் காரை நாகர்கோயிலில் இருந்து வரச்சொல்லியிருந்தேன். காலையில் கிளம்பி மதியம் கார் வந்தது. மதிய உணவுக்குப்பின் இரண்டு மணிக்கு கிளம்பினேன், இரவு பத்தரை மணிக்கு நாகர்கோயில்

ஏறத்தாழ ஒருமாதம் ஊரில் இல்லாமலிருந்திருக்கிறேன். வந்ததுமே வெந்நீரில் குளித்தேன். என் கணிப்பொறியை, புத்தகங்களை பார்த்தேன். அவற்றில் காலப்புழுதி படிந்திருக்கிறதா? சொற்கள் புதிதாக இருந்தால் போதுமோ?

மாடியறைக்கு அப்பால் கீழே பின்பக்கத்து இல்லத்தில் ஏதோ விசேஷம். மின்விளக்குகள் போட்டிருந்தனர். அங்கிருந்து வெளிச்சம் வந்து என் அறையை நிறைத்திருந்தது

என்ன என்று விசாரித்தேன். அங்கே எவரோ இறந்துவிட்டனர், கொரோனாதான். உடல் வீட்டுக்கு வராது என்றார்கள். ஆனாலும் உறவினர் வந்திருந்தனர். நள்ளிரவில் அழுகையோசை கேட்டது.

கதவை மூடினால் வெளிச்சம் மறையும். ஆனால் காற்று எனக்கு வேண்டும். அது கொரோனாச் சாவின் ஓசையுள்ள காற்றாக இருந்தாலும் சரி. சாவின் ஒளியை மறைக்க கண்களை துணியால் மூடிக்கொண்டு சாவு ஒலித்த காற்றில் தூங்கத்தொடங்கினேன்

[நிறைவு]

புகைப்படங்கள் Link: https://drive.google.com/drive/folders/19XFxGFKTimb3DcDVFtRS-3LwlE5Hz_Gv?usp=sharing

நோய்க்காலமும் மழைக்காலமும்-3

நோய்க்காலமும் மழைக்காலமும்-2

நோய்க்காலமும் மழைக்காலமும்-1

முந்தைய கட்டுரைமணி ரத்னம் உரையாடல், கடிதங்கள்-3
அடுத்த கட்டுரைவெண்முரசு வினாக்கள்-8