பார்த்தீனியமும் டார்த்தீனியமும்

அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்

’டார்த்தீனியம்’ பல வருடங்களூக்கு முன்பு வாசித்தது. இப்போது மீண்டும் வாசிக்கையிலும் முதன்முறையைப்போலவே இனம்புரியா அச்சத்தை உருவாக்கியது. ’டார்த்தீனியம்’ என்னும் தலைப்பை பார்த்தீனியத்திலிருந்துதான் எடுத்தீர்களா?. அப்படி ஒரு வார்த்தை இருக்குமா என்று இம்முறையும் தேடிப்பார்த்து விட்டேன்.  எனக்கு தெரிந்து இல்லை. ’எப்ராய்’ டாகடரைக்குறித்தும் தேடினேன். லெஃப்ராய் என்று ஒரு ஐரிஷ் தாவரவியலாளர்தான்  இருக்கிறார்.

டார்த்தீனியத்தைப் போலவே பல குடும்பங்களுக்கு பல பொருட்கள். என் அம்மாவின் செல்வச்செழிப்பான குடும்பத்துக்கு ஒரு லாரி, பல குடும்பங்களுக்கு வைரங்கள், இன்னும் சில குடும்பங்களுக்கு  புதிதாய் கட்டிக் குடிபோன வீடு, தொழில் என்று எதோ ஒன்று இப்படி அழகாக ஆசையாக உள்ளே வந்து மொத்தக் குடும்பத்தையும் சுருட்டி நெரித்து அழித்துவிடுகின்றது.

பார்த்தினியமும் அப்படித்தான் 1910ல் இந்தியாவுக்குள் வந்து இந்த நிமிடம் வரை இந்தியா முழுக்க விவசாய நிலங்களுக்கும், விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும், சூழலுக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றது. அழிக்கவே முடியவில்லை. ரசாயன களைக்கொல்லிகளை உபயோகித்தும்  அழியவில்லை, சூழல்  இன்னும் மோசாமானதுதான் மிச்சம். அதை உண்ணும் வண்டுகளை மெக்ஸிகோவிலிருந்து வருவித்தும்  பலனில்லை. ஆடுமாடுகளுக்கு அளிக்கப்படும் தீவனத்தில் கொஞ்சம் கொஞ்சமாக கலந்துகொடுத்து உயிரியல் கட்டுப்பாட்டுக்கு  முயற்சி செய்தும் தோல்வி.

தீவைத்து எரிப்பது, உப்பு நீரை தெளிப்பது என்று எல்லா முயற்சிகளுக்கும் அசையவே இல்லாமல் உலகின் எல்லாக் கண்டஙகளிலும் பரவி  உலகின் மோசமான களைச்செடிகளின் பட்டியலில் முதல் பத்திலிருக்கின்றது. அந்தந்த நிலத்திற்கான சொந்தத் தாவரங்களை தன் Allelopathic இயல்பினால் வளரவிடாமல் செய்வது. ஒற்றைச்ச்செடி 30 ஆயிரத்துக்குமதிகமான விதைகளை காற்றிலும், நீரிலும், சாலைகளில் விரையும் வாகனங்களின் சக்கரங்கள் வழியாகவும், விலங்குகள், மனிதர்கள் மூலமாகவும் பரப்புவது, இயற்கை எதிரிகளே இல்லாமலிருப்பதுமாக  முளைத்து செழித்து வளர்ந்துகொண்டே இருக்கிறது.

கன்னிமை, கருவறை கொண்டிருக்கும்  எனப்பொருள்படும் இதன் அறிவியல் பெயரான Parthenium hysterophorus , எங்கெங்குமாய் அழிக்கமுடியாதபடிக்கு விரைவாக பெருகிக்கொண்டிருக்கும் இதன் இயல்பினால் வைக்கப்பட்டது. இந்தியாவின் அடர்வனங்களில் கூட காட்டுசெடிகளை அழித்துவிட்டு அவை வளரவேண்டிய இடங்களில் எல்லாம் பர்த்தீனியம் பெருகிக்கொண்டெ இருக்கிறது.

டார்த்தீனியத்தைப் போலவே இதுவும் ஃபாரின்தான். அமெரிக்காவிலிருந்து கோதுமை மணிகளுடன் கலந்து 1910ல் இந்தியா வந்தது. நம்மிடமிருந்து  IPKF  ராணுவத்தினருக்கு உணவுக்கென 1987’ல் அனுப்பி வைக்கப்பட்ட செம்மறியாடுகளின் உடலில் ஒட்டிக்கொண்ட விதைகளின் மூலம் இலங்கைக்கு போனது. என்ன காரணத்தாலோ இதை கேரளாவில் ’காங்கிரஸ் புல்’ என அழைக்கிறார்கள். பாலாடைநிறத்தில் சின்னச்சின்ன நட்சத்திரப்பூக்களுடன் அழகிய. ஆனால் ஆபத்தான ஆக்ரமிக்கும் களையான இதனை டார்த்தீனியத்துடன் பலவிதங்களில் நான் ஒப்பிட்டு பார்த்துக்கொண்டேன்.

ஓரேயிடத்தில் வேர்பிடித்து நிலையாக நிற்கும் தாவரங்களின் அறிவை குறைச்சலாக நான் எடைபோடுவதில்லை. Plant intelligence என்ற ஒரு கட்டுரையின் பொருட்டு புதிது புதிதாக  தாவரங்களின் தனித்தன்மையை, சிறப்பை, சாமார்த்தியங்களை, அறிந்துகொள்ளுகையில் அவற்றின் மீதான பிரியமும் மதிப்பும் கூடிக்கொண்டே இருக்கிறது. இமயத்தில் 5000 அடிக்குமேலான உயரத்திலிருக்கும் Rheum nobile என்னும் அம்ச்சி மருத்துவத்தில் பயன்படும் தாவரமொன்று அந்த உயரத்தின் அதிக புற ஊதாக்கதிர்களை வடிகட்டி ஒளியைக்கடத்தும் செதில்இலைகளை (Bracts) கொண்டிருக்கிறது. நுண்ணிய மலர்களையும் கனிகளையும் செதிலிலைகளுக்குள் பொதிந்து வைத்து உறைபனியிலிருந்து காக்கின்றது.

இப்படி தாவரங்களின் அறிவையும் பாதகமான சூழலுக்கான அவற்றின் தகவமைப்புக்களையும் அறிந்துகொள்கையில் சாதாரண நுண்ணோக்கியால்கூட பார்க்க முடியாத சின்னஞ்சிறு வைரஸை என்ன செய்வதென்று தெரியாமல் உலகமே கையைப்பிசைந்துகொண்டு லட்சக்கணக்கானோரை காவுகொடுத்துக் கொண்டு இருக்கும் இக்காலத்தில்   சென்ற வருட ‘’காஞ்சி முதல் ஊட்டி வரை’’ பதிவில்  காட்டெருதுகள்  சொல்லிச்சென்றதாக கட்டுரையொன்றில் நீங்கள் குறிப்பிட்டதைத்தான் நினைத்து கொள்கிறேன்,  ’’நாமெல்லாம் ஒன்றுமேயில்லை சாதாரணமனிதர்கள்தான்’

நன்றி

அன்புடன் லோகமாதேவி

முந்தைய கட்டுரைமகாபாரத அரசியல் பின்னணி
அடுத்த கட்டுரைமல்லர் கம்பம்- நிகழ்ச்சி