பெருங்கற்கால ஈமச்சின்னங்கள்- ராஜமாணிக்கம்

நோய்க்காலமும் மழைக்காலமும்-3

பெருங்கற்கால நாகரீகத்தின் கல் வட்டங்கள், (stone circle, cairn circle) கல் பதுக்கைகள், ( cists, dolmens )பெருங்கல் எழுச்சிகள், (menhir) தொப்பிக்கற்கள், (cap stone )குடைக்கற்கள் ( umbrella stone, mushroom stones), கல் தூண் வட்டங்கள் ( stone henges )இவைகள் நமக்கு சொல்லும் செய்திகள் என்ன? இவற்றின் பின் தொடர்ச்சி, நம் யுகத்தில் என்னவாக இருக்கிறது. நம் அகத்தில் இவை எப்படி பொருள் கொள்ளப்படுகிறது. நவீன பண்பாட்டு வரையறையில் எப்படி பொருள் கொள்ளப்படுகிறது. பெருங்கற்கால மனிதர்களின் கலாச்சார, சமய சடங்குகளின் தொடர்ச்சியாக நம்மிடம் எஞ்சி இருப்பது, அல்லது உருமாறியுள்ள தோற்றம், சடங்குகளின் தொடர்ச்சி பற்றிய சில ஊகங்களை முன் வைக்கலாம் என நினைக்கிறேன்.

பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் காலாதீதத்தில் நீடித்து நிற்க வேண்டும் என்ற நம் முது மூதாதைகளின் விழைவை நான் posteriority பற்றிய மனித இனத்தின் ஆதார விழைவு என்றே கொள்கிறேன். குகை ஓவியங்கள், பாறை ஓவியங்கள், பாறை பொறிப்புகள், பெருங்கதைகள், பாடல்கள், இசை முழக்கங்கள், மந்திரங்கள் எல்லாமுமே கால, தூர, பண்பாட்டு எல்லை வரையறைகள் ஆகியவற்றை கீழே இருத்தி மேலெழும் அமரத்துவம் கொண்ட அலகுகள் என்பதை ஆதிமனம் உணர்ந்து இந்த செயல்களை கூட்டு நனவிலியில் இருந்து பெற்றுக்கொண்டு செய்திருக்கிறார்கள் என்றே உறுதி கொள்கிறேன்.

பிறக்கும் குழந்தை தாயின் முலைக்கண்களை தேடி அமுது கொள்ள விழைவது போல இயற்கையின் உந்துதலாலேயே, கலையின் வெளிப்பாட்டை அடக்கி வைக்க முடியாதது போலவே, அறிதலை, ஞானத்தை பகிர்ந்து கொள்வதையும் அடக்கி வைக்க முடியாது என்று எண்ணுகிறேன். பெருங்கற்காலத்தின் கூட்டுமனம் அடைந்த ஞானத்தை அன்போடு தன் அடுத்த சந்ததிகளுக்கு சொல்ல விழைபவைகள் தான் இந்த ஈமச்சின்னங்கள். மரணம், மரணத்திற்கு அப்பால் ஆகியவற்றை பற்றிய ancient wisdom மை நமக்கு சொல்வதற்காக விட்டுச்சென்றிருக்கும் புதிர் என இவைகளை கொள்கிறேன்.

இந்த புதிர்களுக்கான விடை தேடலுக்கு உதவியாக சடங்குகளையும், குகை ஓவியங்களையும் விட்டு சென்றிருக்கலாம் என நினைக்கிறேன். இந்த கலாச்சார புதிர்களை, அறிதல்களை முற்றிலும் புரிந்து கொள்ள அவைகளுக்கான வழிகாட்டி குறிப்புகளை பெருங்கதைகளுக்குள் புதைத்து தொன்மங்கள் வாயிலாக அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்தி இருக்கிறார்கள். ஆர்வமுள்ள மனங்களின் கூட்டமைப்பு இந்த தொன்மங்களில் விரவி இருக்கும் வழிக்காட்டிக்குறிப்புகளை ஆராய்ந்தறிந்து நம் மூத்தோர்களின் அறிதலை ஒரு வாயிலாக கொண்டோ, ஒரு தளமாகக்கொண்டோ மேலெழுந்து சென்று மேலதிக உண்மையை அறிந்து கொள்ள நம்மை வழி நடத்தி செல்கிறார்கள் .

இவைகளை நாம் கவனித்து பின் தொடரும் தோறும் நம் கலாச்சார சட்டகம் விரிந்து கொண்டே செல்வதை உணரலாம். என் cultural frame தமிழன், என்பதில் இருந்து பாரதியன் என்றும், பின்னர் பாரசீக, எகிப்திய, யமன்ய, ஹிட்டிட்டி, மய,செல்டிக்,என்று ஆப்ரிக்கா வரை பெளதீக எல்லைகளை தாண்டி பெரிதாவதை பார்க்கிறேன். மயன்களின் பிரமிடும், கொடுமணலின் பாண்டியன் வீடுகளும் , எகிப்திய மம்மிகளும், ஆதிச்ச நல்லூரின் ஈமத்தாளியில் உறைந்திருக்கும் முதுமூதாதையும் நம் கலாச்சார சட்டகத்தின் எல்லையை விரித்து கொண்டே செல்கிறார்கள்.  பெர்ஷிய ஜெண்டா அவஸ்தாவில் மரணத்தின் தெய்வமான ஈமா, பாரதத்தின் யமன், எகிப்தின் ஓசிரிஸ், அனுபீஸ்க்கும் காலத்தை குறிக்கும் கரியநாய் துவங்கி, பாசக்கயிறு,எருமை என்று பல்வேறு ஒற்றுமைகள் இருக்கிறது. கால பைரவனின் கரிய நாயின் மூத்தோனாக பாலைவன ஓநாயாக எகிப்தில் நிலை பெற்றிருக்கிறது அனுபீஸ்.

இந்த பெருங்கற்கால நாகரீகத்தின் ஈமச்சின்னங்கள் இறந்த காலத்தையும், நிகழ் காலத்தையும் நம்மோடு இணைத்து பிணைக்கும் ஒரு தொடர் சங்கிலியின் முக்கிய கண்ணியாக இருக்கிறது. இந்த ஈமச்சின்னங்கள், இங்கு செய்யப்பட்ட சடங்குகள் வழியாக பண்பாடுகளை, கடந்து மானுட மனஙகளை ஒருஙகிணைக்கிறது. இந்த ஒருங்கிணைப்பு பணிகளுக்காக , நம் மேம்படுத்தப்பட்ட திறன், ஆற்றல், இவைகளை குவிக்க தொன்மஙகளில் இணைப்பு சங்கிலிகள் பாதாள கரண்டி போல ஏராளமான கொக்கிகளோடு கவ்விக்கொள்ள காத்திருக்கிறது.

ஒரு கட்டுமான பொறியாளனாக காலம் கடந்த கட்டுமான வடிவத்தை அடைந்த அந்த முதுமூத்த கட்டிட பொறியாளனின் திறமைக்கு என் வணக்கத்தையும் நன்றியையும் தெரிவிக்கிறேன். ஒவ்வொரு கலைஞனின் கனவும் காலத்தை கடந்து நிற்கும் ஒரு படைப்பை படைத்து விட வேண்டும் என்பது தான். அந்த வகையில் கால, நேர, சூழல் வர்த்தமானங்களை கடக்க இயற்கையின் உன்னதமான துல்லிய வட்ட வடிவத்தை தேர்வு செய்தது. Simply supported structure முறையில் கட்டுமானத்தை தேர்ந்து கட்டியது. Load bearing basis அடிப்படையிலும் , balanced (uniformly varying load) uvl with simple supports, as well as two way supporting with key lock உள்ளிட்ட  கட்டுமான உத்திகள் எவ்வளவு தொன்மையானதும் அடிப்படையானதும் என்பது நவீன பொறியாளர்களுக்கு ஒரு நடைமுறை பாடமாக இருக்கிறது. Cantilevers , probed cantilevers, Developement length of cantilevers, pinned joints , load distribution ஆகியவைகளை துல்லியமாக தன் வருஙகால சந்ததிகளுக்கு , கட்டுமான மனஙகளுக்கு கற்பிப்பதற்கான நடை முறை பல்கலைக்கழகங்களாக ஒவ்வொரு தென் பகுதி மலைகளையும் நம் முது முன்னோர் நிர்மாணித்திருக்கிறார்கள்.

இது ஒரு அமரத்துவம் பெற்ற பல்கலைக்கழகம் என்றே கொள்கிறேன். மென்ஹிர்களை நிலை நிறுத்தி இருப்பது design of long columns பற்றி அறிய நினைக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு செய்முறை வகுப்பு போல நிலைநின்று விளக்குகிறது. நிலைத்தன்மையின் இயற்பியல் மற்றும் இயங்கியல் தத்துவங்களை, பருவ நிலை மாற்றங்கள் ஏற்படுத்தி இருக்கும் மாற்றங்கள் அதனால் ஏற்பட்டுள்ள அலைவுகள், பாறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், மெட்டிரியல் செலக்‌ஷனில் ஒவ்வொரு பொறியாளனும் எவ்வளவு விரிந்த அறிவை பெற வேண்டும் என்ற அவசியத்தை விளக்குகிறது.

ஒவ்வொரு கால கட்டத்தின் மிகச்சிறந்த பொறியியல் மனங்களின் அமரத்துவம் பொருந்திய கட்டுமானங்கள் நமக்கு சொல்லி தருவது வெறும் கட்டுமான நுணுக்கம் மட்டுமோ, அல்லது அழகுணர்வு, கலையின் வெளிப்பாடு என்பதை மட்டுமல்ல, அதன் அடிப்படையில் அந்த பண்பாட்டின் அறிதலை, மேலதிகமான தத்துவார்த்த உண்மையை, இறைவனை அணுகும் வழி முறையை, பிரபஞ்சத்தின் ஆதார இருப்பிற்கான அவசியம் ஆகியவற்றை பற்றி பண்பாட்டுத்தொகைகளின் கூட்டு விசாரத்தில் அறிந்தவைகளையும், உணர்ந்தவைகளையும் ஆசிரியனுக்குரிய தேர்ச்சியோடும், தகப்பனின் கனிவோடும் ஓங்கி சொல்கிறார்கள்.

ராஜராஜ பெருந்தச்சனும், ஆயன சிற்பியும், பிரமிடுகளின் பொறியியல் வல்லுனர் இம்மோடோப்பும், மயன், ஹரப்பா, சிந்து சரஸ்வதி நாகரீகத்தின் பாதாளச் சாக்கடைகளையும் வடித்தளித்த , அதனினும் பழைய துருக்கியின் கோபேக்ளி டெபெ ஆலயத்தை டிசைன் செய்த மகத்தான பொறியியல் மேதைகளை வணங்கி வழிபட்டு அவர்கள் குறிப்பிட்டு சொல்லவிருக்கும் பேருண்மைகளை உள்வாங்கி உணர நாம் தயாராக வேண்டும். உலகத்தின் பல நாகரீகங்களும் படியெடுத்து கட்டும் அளவிற்கு எளிய தொழில் நுட்பம், அதீத அறிவு வெளிப்பாடு, பொருள் தேர்வு,  அமைவிடம், வானியல், சூழியல் பற்றிய அனுபவமும் அவதானிப்புமே இப்படியான அமரத்துவமான கட்டுமானங்களை சாத்தியமாக்குகிறது.

பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் பற்றி கலாச்சார மானுடவியலாளர்கள், பண்பாட்டு ஆய்வாளர்கள் , தொல்லியலாளர்கள் மூன்று விதமான கோட்பாடுகளை முன் வைக்கிறார்கள். இவைகள்

1. நம் முன்னோர்கள் அறிந்த வானியல் உண்மைகளை , கோள்களின் நகர்வை , இருப்பை பதிவு செய்து வைத்திருக்கிறார்கள் , இவர்களை மூத்த வானியலாளர்கள் ( ancient astronomers) என்ற கருதுகோளை முன் வைக்கிறார்கள். இன்றும் இந்து பண்பாட்டில் இறப்பின் போது திதி நினைவில் வைத்திருந்து அடுத்தடுத்த தலைமுறைக்கு சொல்கிறார்கள். பிறப்பு முதல் இறப்பு வரை முக்கியமான வாழ்க்கை நிகழ்வுகளை நாளும், கோளும் கொண்டு நினைவு கொள்வதை பொறுத்தி பார்த்துக்கொள்ளலாம்.

1.a. இதன் பின் தொடர்ச்சியாக சமூகத்தின் முக்கியமான தலைவர்கள், பெருவாழ்வு வாழ்ந்தவர்கள் இவ்வுலகை விட்டு நீங்கும் போது இருக்கும் celestial patternகளை பதிவு செய்தும், அதே போன்ற வானியல் அமைப்பு தோன்றும் போது வேறு எதேனும் மரணம் நிகழ்ந்தால் அதையும் அதன் அருகிலேயே பதிவு செய்வதும் நடந்திருக்கலாம். உலகம் முழுக்க இருக்கும் பெருங்கற்கால ஈமச்சின்னங்களை வானியல் கோள்களின் நிலை கொண்டு மிகச்சரியாக கணித்து விடலாம் என்பதோடு , இதற்கிடையே எதேனும் தொடர்பிருக்கிறதா என்பதையும் ஆராயும் நோக்கிலும் செய்திருக்கலாம் என்கிற கருது கோளும் முன் வைக்கப்படுகிறது.

1.b. வானியல் நிகழ்வுகள், நேரடியாக விளைச்சலை, வேட்டையை, பெரு நோய்களை உண்டாக்குவதை முதலிலேயே எச்சரிக்கின்றனவா என்ற புதிருக்கு விடை தேடும் விதமாக தொடர்ச்சியாக வானியல் நிகழ்வுகளை ஒரு குழு முழுதும் தொடர்ந்து தலைமுறைகளாக வெவ்வேறு நிலவியல் பகுதிகளில் பதிவு செய்து அவைகளை தொகுத்து ஒருங்கிணைத்து வானவியல் நிகழ்வுகள் நமக்கு சொல்ல வருவது பற்றிய எச்சரிக்கையை , முன் கூறலை எடுத்து சொல்லவும் , அதை குழுத்தலைவரின் பிறப்பு, இறப்போடு தொடர்புபடுத்தியும் விளக்கி இருக்கலாம்

  1. ஆதி மனிதர்கள், இறந்த காலத்தையும், எதிர் காலத்தையும் தாண்டி பேச, பதில் பெற இந்த அமைப்புகளை நிறுவி இருக்கலாம் என்கிறார்கள்.

2a . இன்னும் ஒரு படி மேலே சென்று இந்த பிரபஞ்சத்தில் மானுட உயிர் குலங்கள் இங்கு மட்டும் தான் இருக்கிறார்களா? வேறு எங்கேனும் இருக்கும் பிற உயிரினங்களோடு தொடர்பு கொள்ள இந்த அமைப்பை பயன்படுத்தி இருக்கலாம் என்கிறார்கள். இதை searching of extra terrastial existence கோட்பாட்டாளர்கள் முன் வைக்கிறார்கள்.

  1. இறப்பு என்பது இக வாழ்வின் ஒரு அத்தியாயம் தான் அவர்கள் மீண்டும் உயிர்த்து அடுத்த அத்தியாயத்தில் செல்ல இந்த ஆற்றல் மூலங்கள் மூலம் செல்கிறார்கள் என்று நம்பினார்கள்.

3a பிரமிடுகள், சிஸ்ட்கள், ஸ்டோன் ஹெஞ்ச்கள்,  உயிர்கள் மேலுலகம் செல்ல வசதியான வழியை ஏற்படுத்தும் ஒரு திறப்பு என நம்புகிறார்கள்.

மானுடவியலாளர்கள் சொல்வது, design of dolmens, stone henge’s, and megaliths ல் இருப்பதை theory of epidemics  மூலம் விளக்கலாம் , இதன் sticky element design, influential few ஆல் செய்யப்படும் செயல், power of context என்ற கோட்பாடு மூலம் சொல்கிறார்கள். Dolmens கள் cist chamber களுக்கு சதுர அல்லது செவ்வக வடிவான, அல்லது இரண்டு பெருங்கற்களுக்கு மேல் வைக்கப்படும் தொப்பி கல்லுடன் இணைந்த வடிவத்தை அடைந்ததும், அதை கவனப்படுத்த வட்ட வடிவத்தை தேர்ந்ததும் ஒரு உச்சகட்டம்  என்கிறார்கள்.

இந்த பெருங்கற்கால சின்னங்களில் 80% நியோ லித்திக் கால கட்டத்தை சார்ந்தவை, அதன் தொடர்ச்சி வெண்கல,இரும்பு காலம் வரையில் இருக்கிறது என தொல்லியல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். இதன் காலம் சேகரிப்பு மற்றும் வேட்டைச் சமூகத்திலிருந்து வேளாண்மைக்கு மாறிய காலத்திலிருந்து, உலோக பயன்பாட்டோடு இணைந்தாலும் சமூக நினைவில் எஞ்சி இருப்பதை பதிலி செய்வதோடு வியாபார சமூகமாக மாறிய பிறகும் தொடர்ந்த இந்த பண்பாடு கால போக்கில் தொடர் இடம் பெயர்வு, நகர நாகரீகத்தின் தாக்கம் காரணமாக சுருங்கி , நடு கல் நாட்டல், வீரகல், துவங்கி இறந்தவர்கள் நினைவாக கல் நாட்டல், என்று நடைமுறையில் இருக்கிறது. செமிட்டிக் சமயங்களில் கல்லறை கட்டுதல், செவ்வக பெட்டியில் புதைத்தல் என்றும் தொடர்கிறது.ஒட்டு மொத்த சமூகத்தின் ஆற்றலையும் குவித்தல், ஸ்தூல வடிவம், தொன்மங்கள் மூலம் ஒருங்கிணைக்க ஈமச்சின்னங்கள் ஒரு முக்கியகாரணி என்று சமூகவியல் மானுடவியலாளர்கள் சொல்கிறார்கள்.

இன்றைய பண்பாட்டில் இருக்கும் அனைத்து ஈமச்சடங்குகளையும் பெருங்கற்கால சின்னஙகளோடு தொடர்பு படுத்தும் கோட்பாடுகளை மானுடவியலாளர்கள் சொல்கிறார்கள். உதாரணமாக டால்மான்களில் வட்ட வடிவில் கிழக்கு , மேற்கு, தெற்கு நோக்கி விடப்பட்டிருக்கும் வட்ட வடிவ துல்லிய துளையை கண் வட்டம் என்கிறார்கள். Eye circle of dolmens என்பதை கம்பட்டை என பொது வழக்கில் சொல்கிறார்கள். இது பிரமிடுகளில் momification மூலம் embolming செய்யப்பட்ட பூத உடல் மீது ஹோசிரிஸின் கண் பொறிக்கப்படுகிறது.

கீழை நாகரீகங்கள் பண்பாடுகள் பற்றிய ஆய்வு செய்யும் எகிப்தியவியலாளர்கள், இந்தியவியலாளர்கள், அக்கேடியன்கள், பாரசீகர்கள், மெசபடோமியர்கள், இவர்களின் ஈமச்சடங்குகள், அதற்காக சொல்லப்படும் தொன்மங்களில் இருக்கும் ஒற்றுமையை சுட்டி காட்டுகிறார்கள். அது ஹோசிரிஸ், ஐசிஸ் முதல் நம் ஊர் ஐயனார், வருணன், யமன், ருத்திரன்கள், ஆதித்யர்கள் போன்ற ஆரம்ப கால வேத கடவுள்கள் வரை ஒரே நிரையில் கோர்க்கப்பட்டது போல இருக்கிறது.

எகிப்திய நீர் தெய்வமான ஓசிரிஸ், ஒரு அசுரர், பாதாள உலகின் தெய்வம் , இறப்பு மற்றும் மறுபிறப்பின் தெய்வம் , பூமியில் மலைகளின் அரசன், விவசாயம், உயிர்கள், பருவம் ஆகியவற்றின் தலைவன்.சூரியனும் சந்திரனும் ஓசிரிஸின் இரு கண்கள், அது தான் ஹோரஸ் மற்றும் ஐசிஸ் வடிவங்கள். சூரியனின் நேரடி வடிவாக கழுகுகள் இருக்கிறது. இதனால் தான் எகிப்திய பிரமிடுகள், ஆலயங்களில் இறக்கை விரித்த கழுகின் இறகு கொண்ட பெண்மணி ஐசிஸ், மற்றும் ஓசிரிஸின் கண் வழியாக எடுத்து செல்லும் ஹோரஸ் ஆகியவைகள் சுட்டப்படுகிறது.

இந்த உயிரின் காவலனாக ஓநாய் தலையுடைய அனுபீஸ் இருக்கிறது. எகிப்தியர்களும், அசிரியர்களும் அக்கேடியன்கள், மெசபடோமியர்கள் முதலில் அக்னியை முதன்மையாக வணங்கும் ஜராதுரஷ்ட்ர சமயத்திற்கு முந்தைய அக்னி சமயத்தை சார்ந்தவர்கள் என்கிறார்கள். அமுன் அமுனெட், மற்றும் சூரியக்கடவுள் ரா ஆகியவற்றின் வழிபாட்டு எழுச்சியின் போதும் கூட அக்னி வழிபாட்டின் தொன்மங்களின் ஆதிக்கம் தொடர்ந்தபடியே தான் இருந்தது. நெருப்பு என்பது மிகவும் தூய்மையானது அதை இறந்த உடலை கொண்டு அசுத்தப்படுத்தக்கூடாது என்று ஒரு நம்பிக்கை. அதோடு இறந்தவர்கள் வேறு உலகிற்கு செல்லும் போது அவர்களுக்கு இந்த உடல் வேண்டும் என்று பதப்படுத்துதலும் செய்தார்கள்.

பிரமிடுகள், மைதாம்கள், ஸ்டோன் ஹெஞ்ச்கள் எல்லாம் ஒரே தத்துவத்தின் வேறு வேறு கட்டுமான வடிவங்கள் மட்டுமே.ஹோசிரிஸ்க்கு இணையாக இந்து தொன்மத்தின் வருணணை சொல்லலாம். வருணன் ஒரு அசுரன், நீர் நிலைகள், மலை, மழைகளின் இறைவன் , வேதத்திற்கு முந்தைய காலங்களில் உயிர் எடுக்கும் அதிகாரம் வருணணுக்கு இருந்தது. ஆதித்யர்கள், ருத்திரன், வருணன் ஆகியவர்களின் தொன்மத்தோடு இணைந்து இருக்கிறது

ஈமச்சடங்குகள். கல் திட்டைகளில் இருக்கும் வட்டம் கிழக்கில் இருப்பது சூரியனில் சென்று சேர்கின்றன உயிர் குலங்கள் , மேற்கு சூரியன் மறையும் திசை என்றும், பாதாள நீர் உலகின் தேவதையான வருணணின் உலகம் என்றும், தென் புலம் மூதாதையர்கள் சென்று சேரும் இடம் என்பதன் அடிப்படையிலும் இந்த கண் வட்டங்களின் திசையை வைத்து காலத்தை கணிக்கிறார்கள். பிரமிடுகள், நைலின் மேற்கில் இருப்பது, தென்புலத்தார் , தெக்கது ஆகியவை பற்றிய வழிபாட்டு முறைமைகள், ஈமச்சடங்குகளில் கல் உபயோகப்படுத்துவது உலகளாவிய பண்பாடுகளில் ஒரு அம்சம்

கல்லறைக்கு கிரானைட் பயன்படுத்துவது, இந்து பண்பாட்டில் எரியூட்டுதல் சடங்கு முடிந்து 3,7,13,16 நாட்களில் செய்யும் சடங்குகளில் கல் பயன்படுத்துவது எல்லாமே வருண பிரதிஷ்டை, வருணணிடம் உயிரை ஒப்புவிக்கும் சடங்குகளே. இதில் சூரியனுக்கு, யமனுக்கு , ஈசனுக்கு என்று செய்யும் சடங்குகள் மிகவும் தொன்மையான நடைமுறை என்று சொல்லலாம். இன்றைய சமூக பொது மனம் அவைகளை வேதக் கடவுள்களுக்கோ, செமிட்டிக் கடவுள்களுக்கோ செய்கிறது, ஆனால் அந்த தெய்வங்களில் ஆதி தெய்வங்கள் உள்ளடங்கி போய் இருக்கும் ரகசியத்தை அறியலாம். எரியூட்டுதல் , என்பது இந்து பண்பாட்டு முன்னேற்றமாக சமூக மனத்தால் ஒப்புக்கொள்ளப்பட்ட பிறகு எஞ்சிய எலும்பை தாளியில் வைத்து கல் திட்டையில் புதைக்கும் பழக்கத்தோடு தொடர்பு படுத்தி கொள்ளுங்கள். சில கல் வட்டங்கள், திட்டைகளில் இருக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட எலும்பு மாதிரிகளில் இருந்து ஆய்வாளர்கள் வேறு வேறு கருது கோள்களை முன் வைக்கிறார்கள்.

மல்லசமுத்திரம், நார்டாங், தொட்ட மலாத்தே மலைகளில் 50க்கும் மேற்பட்ட கல் திட்டைகள் இருப்பதை பார்க்கலாம். இவைகள் கல்லறை தோட்டங்கள். வானியல் கோள்களின் அமைப்பு இவைகளின் அடிபடையிலேயே இடங்கள் தேர்வுப்செய்யப்பட்டிருக்கலாம் என்கிறார்கள். நாம் புற வெளியில் கண்டு கொண்டிருக்கும் உலகங்கள், பண்பாட்டு அடுக்குகள், இவைகள் வெறும் புவியின் மேலடுக்குகள் போலத்தான் உள்ளே புவியின் பல்வேறுபட்ட  நீர்ம அடுக்குகள் போல பல பண்பாட்டு அடுக்குகள் கண்ணுக்கு தெரியாமல் இருக்கிறது. இவைகள் முயங்கி வேறு வேறு காட்சி படிமங்கள் , சடங்குகளில் வெளிப்படுகிறது.

இந்த கலாச்சார புதிர்களுக்கான விடையை மானுடவியலாளர்கள், கவிஞர்கள், பூசாரிகள், ஆகியோர் வெவ்வேறு வகையில் வெளிக்கொணர முயற்சிக்கிறார்கள். ஷாமனிஸம் தான் கலாச்சார மானுடவியலாளர்களின் பலம் வாய்ந்த கடத்தி காரணி என சொல்கிறார்கள். இந்த சின்னங்கள், கட்டுமானங்கள் ஒரு தீவிரமான பரவும் தன்மை கொண்ட பண்பாட்டு விதைகள் இவைகளின் வேர்களும், நீரும் , உரமும் பல்வேறு நாகரீகங்களின் தொன்மங்களில் உறைகிறது. இவைகளை இணைத்து உணரும் முதிர்ந்த மனங்கள் பண்டைய பண்பாட்டை மீளுருவாக்கும் வல்லமை கொண்டது, அதில் முளைத்து பெருக அந்த மனங்களுக்காக காலாதீத்தில் காத்திருக்கின்றன இந்த ஈமச்சின்னங்கள்.

 

 

வீர ராஜமாணிக்கம்
முந்தைய கட்டுரைசென்றவரும் நினைப்பவரும்-கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅருகாமை