மணி ரத்னம் சந்திப்பு- கடிதங்கள்-2

மணி ரத்னம் சந்திப்பு- கடிதங்கள்

அன்புள்ள ஜெ

மணி ரத்னம் உரையாடல் அழகான ஒரு நிகழ்வு. உற்சாகமாக இருந்தது. மணி ரத்னம் ஆரம்பத்தில் கொஞ்சம் ஃபார்மலாக இருப்பதுபோலத் தோன்றியது. கேள்விகேட்பவர்களை அவரால் ஜட்ஜ் செய்ய முடியவில்லை என நினைக்கிறேன். போகப்போக அவர்கள் எந்தவகையானவர்கள் என்று உணர்ந்து இயல்பாக ஆகிவிட்டார். பேச்சு சரளமாக ஓடியது.

அவருடைய பல கருத்துக்களுடன் எனக்கு உடன்பாடு இல்லை. கலைப்படம்- வணிகப்படம் என்ற வேறுபாடு உள்ளது. அதை மழுப்பவே முடியாது. கலைப்படத்துக்கு மகிழ்விக்கும் நோக்கம் இல்லை. அது மிகப்பெரிய வேறுபாடு. ஆனால் மணி ரத்னத்தின் நிலைபாட்டை என்னால் புரிந்துக்கொள்ள முடிகிறது. இன்றைய உலக சினிமாவில் அந்த மனநிலைதான் ஓங்கி வருகிறது. வேறு எவரையும்விட கிறிஸ்டோபர் நோலன் அதிகமாகப் பேசப்படுகிறார். ஆனாலும் என் பார்வை வேறு.

பல விஷயங்கள் விவாதத்திற்கு உரியவையாக இருந்தன. மணி ரத்னத்தின் சினிமாப்பார்வையையும் மணி ரத்னம் எதிர்கொண்ட சூழலையும் ஆழமாக உணரமுடிந்தது

சிறப்பான உரையாடல்

ஆர்.பாஸ்கர்

அன்புள்ள ஜெ

தமிழ் மக்களுக்கு சினிமாமேல் உள்ள மாஸ் ஹிஸ்டீரியா மனநிலை,சினிமாக்காரர்களைப்பற்றிய hagiography பற்றி சாரு எழுதியிருந்தார். பழைய இலக்கியவாதிகள் அதைக்கண்டு எதிர்நிலை எடுத்து சினிமாவை ஒதுக்கினார்கள்.ஆனால் இன்றைக்கு தமிழ் இலக்கியவாதிகள் சாமானியர்களைவிட கூடுதலாக கோஷம்போடுவதைச் சுட்டிக்காட்டியிருந்தார். அது எனக்கு உண்மை என்று பட்டது.

விஷ்ணுபுரம் சந்திப்பில் வாசகர்கள் மணி ரத்னத்தை அணுகுவதைக் கண்டபோது இலக்கியவாசகர்கள் தெளிவாகவே இருக்கிறார்கள் என்ற எண்ணம் ஏற்பட்டது.மிகையான புகழ்தல்கள் இல்லை. எவரும் பரவசம் அடையவில்லை. ஆனால் மணி ரத்னம் என்ற படைப்பாளிமேல் மரியாதையும் கொண்டிருந்தார்கள். அவருடைய படைப்புக்களை தங்கள் வாழ்க்கை, தங்கள் உலகப்பார்வையைக்கொண்டு மதிப்பிட்டு கேள்விகளை கேட்டார்கள்.

எந்தக்கேள்வியும் ரசிகமனநிலையில் இல்லை. இலக்கியவாசகர்களின் மனநிலையிலேயே கேள்விகள் இருந்தன. ஆகவே வெவ்வேறு கோணங்களில் இருந்து கேள்விகள் வந்தன. எவருமே தங்களை சினிமா எக்ஸ்பர்ட் என்று நினைத்துக்கொள்ளவில்லை. இங்கே செயல்படும் பிற முக்கியமான கலைஞர்களை எப்படி அணுகுவார்களோ அதே அணுகுமுறைதான் தென்பட்டது. இதுதான் அவசியமானதேவை என நினைக்கிறேன். மிகச்சிறப்பான உரையாடலாக இருந்தது.

அர்விந்த் குமார்

அன்புள்ள ஜெ

மணி ரத்னம் உரையாடல் பார்த்தேன். ஆச்சரியமான ஓரு விஷயம் எனக்கு தெரிந்தது. பேச்சு சினிமா பற்றியதாக இல்லை. சினிமா வழியாக சமூகம்- இலக்கியம் சார்ந்ததாகவே இருந்தது. சினிமாவை ரசித்து சினிமாவிலேயே திளைப்பவர்களைத்தான் நாம் சாதாரணமாகப் பார்த்திருக்கிறோம். சினிமாவை சமூகத்தைப் புரிந்துகொள்வதற்கான ஊடகமாகப்பார்ப்பதென்பது ஒரு பெரிய விஷயம்தான். இலக்கியவாசகர்கள் அதைத்தான் செய்யவேண்டும் என நினைக்கிறேன்.

பேசியவர்கள் எவரும் எக்ஸ்பர்ட்டுகள் இல்லை, வாசகர்கள். ஆகவே தொழில்நுட்பப்பிரச்சினைகள் இருந்தன. மொழிப்பிரச்சினையும் இருந்தது. இங்கே தொழில்முனைவோர் பற்றி இருக்கும் காழ்ப்பு, அதை மீறி மணி ரத்னம் குரு படத்தை எடுத்தது பற்றிய கேள்வி மிக முக்கியமானது. அதற்கு மணி ரத்னத்தின் பதிலும் சிறப்பு. ஆனால் குரு வட இந்தியாவிலேயே ஓடியது. இங்கே கவனிக்கப்படவில்லை. காரணம் இங்கிருக்கும் எதிர்ப்பு மனநிலைதான். நாம் தொழிலதிபர்களை வழிபடுவோம். பொதுவெளியிலே திட்டுவோம்.

ஆழமான உரையாடல்கள் கொண்ட நல்ல சந்திப்பு

எஸ்.சிவக்குமார்

அன்புள்ள ஜெ

கேள்விகளை கொஞ்சம் முன்னரே மானிட்டர் செய்திருக்கலாம். நிறைய நல்ல கேள்விகள் இருந்தன. ஆனால் சில கேள்விகள் சாதாரணமானவை. உதாரணமாக ஒருவர் மணி ரத்னம் ஏன் இருட்டில் படமெடுக்கிறார் என்று கேட்டார். அது அபத்தமான கேள்வி. மணி ரத்னம் படங்களில் அஞ்சலி மட்டுமே அந்தவகையான ஒளிப்பதிவு கொண்டது. அந்தக் கேள்வி திரும்பத்திரும்ப பாமரர்களால் கேட்கப்பட்டு மணி ரத்னம் பலமுறை பதிலும் சொல்லிவிட்டார். விவாதத்தில் அந்தக் கேள்விக்கு மட்டும் அவர் கொஞ்சம் எரிச்சலடைந்தது தெரிந்தது

எச்.ஆராவமுதன்

முந்தைய நிகழ்வுகள்

அ முத்துலிங்கம் உரையாடல்

நாஞ்சில் நாடன் உரையாடல்

தியடோர் பாஸ்கரன் உரையாடல்

முந்தைய கட்டுரைவண்ணக்கடல் – பாலாஜி பிருத்விராஜ்
அடுத்த கட்டுரைடார்த்தீனியம்- கடிதங்கள்