சர்வப்பிரியானந்தர்- கடிதம்

சர்வப்பிரியானந்தர்

அன்புள்ள ஜெ வணக்கம்…

நன் நெடுநாட்களாக உங்களுக்கு எழுத நினைத்து தள்ளிப்போட்ட கடிதத்தை நிர்மல் எழுதிவிட்டார்.

திரு ஜடாயு அவர்களின் பரிந்துரையின் மூலம் நான் சர்வபிரியானந்தரை கேட்கத் தொடங்கினேன், தொடர்ந்து கேட்டும் வருகிறேன்.

சுவாமியின் உரைகளின் சிறப்புகளாக நான் கருதும் சில…

அ. ராமகிருஷ்ண பரமஹம்சர் விவேகானந்தர், ரிஷிகள், மற்றும் அவருடைய தற்கால ஆசிரியர்களின் செய்தியை, ஞானத்தை, தனது உரைகளின் மூலம் மரபின் தொடர்ச்சி அறுபடாமல் காக்கிறார்.

ஆ. நவீன விஞ்ஞானத்தை, அதன் வெற்றிகளை புதிய கண்டடைதல்களை , மேலைத் தத்துவ ஆசிரியர்களை அவர்களின் நூல்களை தொடர்ந்து தனது ஒவ்வொரு உரையிலும் அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறார்.

இ. மேற்கண்ட இரண்டையும் தனது தனிப்பட்ட தேடல்களோடு, அனுபவத்தோடு சரியான விகிதத்தில் கலந்து தன்னை தன் ஆளுமையை முன்னிறுத்தாமல் கருத்துக்களை தத்துவங்களை மட்டும் முன்னிறுத்துகிறார்.

தான் ஒரு ஞானி அல்ல என்று பகிரங்கமாக அறிவிக்கிறார்.

(ஒரு சில ஆண்டுகள் சில தியானங்களை செய்துவிட்டு மேலோட்டமாக சில புத்தகங்களை வாசித்து விட்டு வானத்திற்கு கீழ் உள்ள அனைத்தைப் பற்றியும் அருளுரைகள் ஆற்றுபவர்களே பெரும்பாலானோர்)

ஈ. எவ்வளவு உயர் தத்துவத்தை பேசினாலும் சில நிமிடங்களுக்கு ஒரு முறையேனும் வெடிச்சிரிப்பு இன்றி கடக்காது சுவாமியின் உரைகள்.

உ. எவ்வகையிலும் எதன் மேலும் துளி வெறுப்பும் அற்றவர். அத்வைதியாக இருந்த போதும், யோகத்தை பக்தியை வேறு எந்த தத்துவத்தையும் உரிய மரியாதையோடு அவற்றின் உயர் தனிச் சிறப்புகளை தன் உரைகளில் வெளிப்படுத்துவார்.

விவேகானந்தர் இன்று இருந்திருந்தால் அவரின் உரைகளும் இது போன்று தான் இருந்திருக்கும் என்று எனக்கு தோன்றிக் கொண்டே இருக்கும்.

மு.கதிர் முருகன்

கோவை

***

அன்புள்ள கதிர்

இன்று தமிழகத்தில் வேதாந்தம்- அத்வைதம்- விசிஷ்டாத்வைதம் பேசுபவர்களில் பெரும்பாலானவர்கள் கடைசியில் தன் சாதிமேட்டிமைக்குள், வெற்று ஆசாரங்களுக்குள் சென்று சேர்வார்கள். வேதாந்தம் பேசுபவர்கள் சாதிவெறியை நுட்பமாக வெளிப்படுத்துவதற்குரிய சில பாடல்வரிகள் பிரம்மசூத்திரம், கீதை போன்றவற்றில் உண்டு. அந்த நரம்பைத் தொட்டு நாடி பார்த்தபின்னரே ஒருவரை ஏற்கவேண்டும்.

இங்கே வேதாந்தப்பேச்சுக்களில் மயிரிழைபிளந்து சொல்நுட்பங்கள் தேர்பவர்கள் உண்டு. நூல்மேற்கோள்களுக்காக நாளெல்லாம் தவமிருப்போர் உண்டு. எந்த விவாதத்திலும் வந்து எதிர்வாதம் வைப்பவர்கள் உண்டு. எல்லாம் எதற்காக என்றால் தன் சாதியே உயர்ந்தது என்ற நம்பிக்கைக்காக. அதன் நலன் காக்கும் அரசியலை நிலைநாட்டுவதற்காக.

இங்கே ஒருவர் ஞானி என ,ஆசிரியர் என ஒருவரை ஏற்பதுகூட சாதி பார்த்துத்தான். ஜக்கி வாசுதேவ் குருநிலையிலோ வேதாத்ரி மகரிஷி குருநிலையிலோ திரளாத பெருங்கூட்டம் ஒன்று ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரிடம் கூடுவதை பாருங்கள். ரமணரும் காஞ்சி சந்திரசேகரரும் ஞானியர், நாராயணகுருவும் விவேகானந்தரும் ஞானியர் அல்ல என்று வாதிடுபவர்களைப் பாருங்கள்.

இங்குள்ள மெய்யான பிரச்சினை இது, இதை உணர்ந்தபின் நான் வேதாந்தத்தை பொதுவில் விவாதிக்கலாகாது என்ற எண்ணத்தை வந்தடைந்துவிட்டேன். ஒருவர் தன் சாதிமேட்டிமையிலிருந்து வெளிவரவில்லை என்றால் அவர் இருப்பது இருட்டறைக்குள். அவருடைய அறிவுத்திறன் அவரை அங்கே நிரந்தரமாகப் அடைத்துவைக்கும் பூட்டுகளையே உருவாக்கி அளிக்கும்.

சர்வப்பிரியானந்தரை நான் முழுமையாக கேட்கவில்லை. நான் ஒருவரை ஏற்பதென்றால் அதற்குரிய இடங்களை கேட்டபின்னரே முடிவுசெய்வேன்

ஜெ

முந்தைய கட்டுரைஅ.கா.பெருமாள்,ஒரு மாபெரும் அநீதி- கடிதங்கள்
அடுத்த கட்டுரைகுறங்குதமிழ்!