டார்த்தீனியம்- கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் சார்,

ஒரு பெருநோய் காலத்தில் டார்த்தீனியத்தை வாசிப்பது, சாதாரண நாட்களைவிட எளிதாகவே இருந்தது. ஏற்கனவே சூழ்ந்திருக்கும் இருள், கதையில் சூழும் இருளை சுலபமாக அடையாளப்படுத்த உதவுகிறது. அற்புதமான குடும்பம் என்று ஊரே மெச்சிய குடும்பங்கள், நோயில் விழுந்து சிதைந்திருப்பதை பார்த்தபடி தினமும் டார்த்தீனியத்தை வாசித்தேன். கதையில் இருக்கும் அமானுஷ்யமும் திகிலும் இன்று நோய் தாக்கிய எந்த குடும்பத்திலும் சாதாரணமாக தென்படுகிறது. டார்த்தீனியத்தின் படிமங்களை பெருநோய் முதல் சூதாட்டம் வரை, புறவயமான அனைத்திலும் எந்த ஒரு எளிய வாசகனும் உணர முடியம்.

ஆனால், டார்த்தீனியம் இழப்பின் இருள் தான். இழந்தவற்றின் விதைகளில் இருந்து முளைக்கும் நினைவுகளின் போதையில் படரும் இருள். நம் காயங்களை நாமே மீண்டும் சீண்டி, அந்த வலியில் காணும் சுகம். எண்ணற்ற முறை நம் கடந்த காலத்தை மனதில் வித விதமாக ஓட்டிப் பார்க்கும் போதை. டார்த்தீனியத்தை அப்பா விதைக்கிறார், அது அவரின் பழைய காதலியாக மாறுகிறது, அது தரும் கிளர்ச்சியில் அவர் வாழ்கிறார், அது அவரை ஆட்கொள்கிறது. கனகுவும், கருப்பனும், அம்மாவும், ராஜுவும் அவர் நினைவை விட்டு அகன்று விடுகின்றனர். கனகுவின் மரணத்தின் வெறியில் டார்த்தீனியத்தை வெட்டியும், அது திரும்ப வளர்வதை கண்டு பெரும் கிளர்ச்சி அடைகிறார். தன் கடந்த காலத்தை முழுவதுமாக துண்டிக்க முயன்று தோற்றுப்போன எந்த மனிதனுக்கும் அந்த கசப்பான போதை தெரியும்.

அந்த டார்த்தீனியத்தின் ஒரு விதையை ராஜு நிச்சயமாக கடைசியில் எடுத்து சென்றிருப்பான் என்று நினைக்கிறேன். அதுதான் அந்த போதையின் சுவபாவம். அந்த துயரத்தின் ஒரு விதை இல்லாமல், இந்த கதையை யாராலும் எழுதி இருக்க முடியாது. வாழ்த்துக்கள் சார்.

அன்புடன்

விக்னேஷ் ஹரிஹரன்

***

அன்புள்ள ஜெ

இதை “உங்கள்” கதையாகப் படிக்கும் போது மேலும் பல அர்த்தங்கள் கிடைக்கின்றன.

“சோகம் மாதிரி தித்திப்பான ஒண்ணு வேற இல்லடா” – இருக்கலாம். சோகத்தில் கூடும் தியான அமைதி சந்தோஷமான தருணங்களில் வாய்ப்பத்தில்லை.

இந்தக் கதையில் கூட, அந்தக் குடும்பம் குதூகலமாக இருக்கும்போது மனம் பரபரத்துக் கொண்டே இருந்தது. கருநாகங்கள் கவிழ ஆரம்பித்த போது பரபரப்பு அடங்கி சாட்சியாக நின்று வேடிக்கை பார்க்கும் மனநிலை கூடி விட்ட்து. முற்றும் அழிந்தபோது மோனநிலையே தான்.

நன்றி
ரத்தன்

***

அன்புள்ள ஜெ,

டார்த்தீனியம் இலக்கியவாதிக்கு ஓர் அறைகூவல். ஒரு ஃபார்மலான திரில்லருக்குள் ஆழமான வாழ்க்கை வினா இருக்கிறது. ‘விஷவிருட்சம்’ என்ற கருத்து மரபானது. ஆனால் அந்த விஷச்செடிமேல் நாம் கொள்ளும் ஈர்ப்புதான் புதிரானது. அதுதான் கதையே.அது அளிக்கும் அந்த அச்சத்தாலேயே அந்த ஈர்ப்பு அதிகமாகிறது. அந்த விஷவிருட்சத்தை வெல்லவே முடிவதில்லை. ஏனென்றால் அது வேரும் காய்களுமாக அந்த வீட்டை அப்படியே விழுங்கிவிட்டது.

அந்த அப்செஷன் எங்கிருந்து வருகிறது? யோசிக்க யோசிக்க பிரமிப்பாகவே இருக்கிறது. 1990 முதல் பதிமூன்று ஆண்டுகள் நான் ஒரு அப்செஷனில் சிக்கியிருந்தேன். ஒரு தொழில் ஐடியா. அது தப்பு என்று எனக்கு தெரிந்தது ஒரு வருடத்துக்குள்ளேயே. வீடு சொத்து எல்லாமே போயிற்று. ஆனாலும் விடமுடியவில்லை. என்ன நடக்குது என்று பார்த்துவிட்டலாம் என்று ஒரு தவிப்பு. அல்லது என்னை என்ன செய்யும் என்ற ஈகோவா. தெரியவில்லை. அதையே பிடித்துக்கொண்டிருந்தேன். நான் அழிந்தபிறகுதான் அது என்னை விட்டது

அந்த அப்செஷனை கடவுள்கூட விளக்கமுடியாது. நல்லவேளை நீங்கள் கதையில் எந்த விளக்கமும் தரவில்லை. இதனால்தான், இன்னதனால்தான் என்று சொல்லியிருந்தால் கதை விழுந்திருக்கும்

ஜே.ஆர்.ராஜேஷ்

***

அன்புள்ள ஜெ

டார்த்தீனியம் வாசித்தேன். கண்டிப்பாக நேரம் என்று ஒன்று உண்டு. அதை உணர்ந்தால் அதன்பிறகு அந்த கண்ணுக்குத்தெரியாத சக்தியுடன் மோதமாட்டோம். எங்கே நிறுத்தவேண்டுமோ அங்கே நிறுத்திவிட்டு அமைதியாக இருக்கமுடியும். என் அனுபவம். ஆனால் கண்கெட்டபிறகுதான் அது தெரியவந்தது

ராமசுப்ரமணியன் எஸ்

***

முந்தைய கட்டுரைமணி ரத்னம் சந்திப்பு- கடிதங்கள்-2
அடுத்த கட்டுரைநோய்க்காலமும் மழைக்காலமும்-3