மாடன்மோட்சம்- கடிதங்களைப் பற்றி இரு கடிதங்கள்

காந்தி, இந்துத்துவம் – ஒரு கதை

மாடன்மோட்சம்- கடிதம்

அன்பின் ஜெ.

சமீபத்தில், நான் பணிபுரியும் தொழிற்சாலையைப் பற்றிய ஒரு படம் எடுக்க ட்ரோனை உபயோகப்படுத்தினோம்.. கடற்கரையின் அருகில் அமைந்திருக்கும் தொழிற்சாலையை, கடலின் பின்ணணியில் படமாக்கிய போது, சூழலின் பிரமாண்டத்தில், தொழிற்சாலை எங்கே அமைந்திருக்கிறது என்றொரு பார்வை.. பிரமிக்க வைத்த ஒன்று.

மாடன் மோட்சம் குறுநாவல் பற்றிய இந்த வாசகர் கடிதம், அப்படி ஒரு விரிவான தளத்தில், அந்தக் கதையை அலசுகிறது.. மாடன் மோட்சத்துக்கும், கடவுளும் கந்தசாமிப்பிள்ளைக்குமான தொடரிழையை அறிந்திருந்தாலும், எனக்கு ஏன் கடவுளும் சிறுகதை கொஞ்சம் அதிக அணுக்கமாக இருந்தது என்பதற்கான என் மனச்சாய்வையும் உணர்ந்து கொள்ள முடிந்தது..

சிறு வயதில், தினமும் மாலையில் ஒரு வேலை உண்டு.முந்தைய நாள் எரிந்து கரி படிந்த அரிக்கேன் விளக்கின் கண்ணாடியை எடுத்து,  சாம்பல் கொண்டு துலக்கி, விளக்கேற்றுவது. மீண்டும் விளக்கேற்றுகையில், ஒளிரும் அந்த வெளிச்சம் போன்ற ஒரு எழுத்து.

வணக்கமும், நன்றியும்

அன்புடன்

பாலா

அன்புள்ள பாலா

நல்ல விஷயம்தான். வாசகர்கடிதத்துக்கு வாசகர்கடிதம் வந்திருக்கிறது!

ஜெ

அன்புள்ள ஜெ,

மாடன்மோட்சம் பற்றி உங்கள் தளத்தில் வெளிவந்த கடிதமும் அதன் இணைப்பாக நீரும் நெருப்பும் கதை பற்றி வந்த கடிதமும் ஆழமானவை. உண்மையில் இத்தனை ஆழமான ஒரு வாசிப்பை நான் நிகழ்த்தியிருக்கவில்லை. இத்தனை ஆண்டுகளில் இப்படி பல காலம் கழித்துத்தான் உங்களுக்கு உரிய வாசிப்புகள் வருகின்றன என்பதே ஆச்சரியமானது, ஆனால் தமிழில் அப்படித்தான் அது நிகழ்கிறது. இங்கே ஓர் அசட்டுத்தனமான வாசிப்புதான் எப்போதும் உள்ளது. பெரும்பாலும் அரசியல்சார்ந்த பத்துபைசா கருத்துக்களை பெரிய விஷயம்போல சுற்றிச்சுற்றிச் சொல்கிறார்கள். பத்துலட்சம் காலடிகளுக்கு அறிவுஜீவிகள் சிலர் எழுதிய மொண்ணை கருத்துக்களைக் கண்டு நானே நொந்துபோனேன்.

இந்தக்கருத்துக்களைக் கவனிக்கக்கூடாது என்று நினைப்போம். ஆனால் அசட்டுக்குரல்கள் அசடுகளுக்கு எளிதாகப்புரிகின்றன, அவர்கள் அதைச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அதற்கு ஓசை அதிகமாக ஆகும்போது அது ஒரு முக்கியத்துவத்தை அடைகிறது. அதோடு இம்மாதிரியான விமர்சனங்களை நீங்கள் கண்டுகொள்வதில்லை. ஆகவே சில மடத்தனமான விமர்சனங்கள்கூட சூழலில் அப்படியே புழங்குகின்றன. அவற்றுக்கு ஒரு செல்வாக்கு எப்படியோ உருவாகிவிடுகிறது

உதாரணமாக, இலக்கியவாதியாக தன்னைச் சொல்லிக்கொள்ளும் ஒருவர் மாடன்மோட்சத்துக்கு எழுதிய விமர்சனம் இப்படி இருந்தது. மாடனிடம் அப்பி சொல்கிறான், எல்லாரு வசதியாக ஆகிவிட்டார்கள் என்று. ஆனால் தெருவில் சாக்கடை அரித்து ஓடுகிறது என்று வருகிறது. இது முரண்பாடு, ஜெயமோகனுக்கு எழுதத்தெரியவில்லை என்று. அந்தமாதிரியான தகவல்பொறுக்கிச் சொல்பவர்களுக்கு இலக்கியவாசிப்பில் இடமில்லை என்றுதான் நான் நினைக்கிறேன். ஆனாலும் அந்த தகவல் ஒரு சின்ன பிழையாக இருக்கலாம் என்றே நானும் நினைத்தேன். அது எவ்வளவுபெரிய சமூகக்குறிப்பு என்று இந்தக் கடிதம் படித்தே புரிந்தது.

நல்ல கதைகளுக்கு இன்றைக்கு நல்ல வாசிப்புகள் தேவை. நாம் நன்றாக வாசிப்பதற்கு மட்டுமல்ல, இங்கே புழங்கும் அசட்டுவாசிப்புகளிலிருந்து கதைகளைக் காப்பாற்றவும்கூட

ஆர்.சங்கரநாராயணன்

அன்புள்ள சங்கரநாராயணன்,

எந்தக்கதையையும் மிகச்சிறந்த வாசகனின் நுண்ணுணர்வை நம்பித்தான் எழுதமுடியும். மொக்கைகள் எப்போதும் இருப்பார்கள்.

ஜெ

முந்தைய கட்டுரைஆலன் டூரிங்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைமணி ரத்னம்- காணொளி சந்திப்பு பதிவுகள்