இளைஞர்களுக்கு இன்றைய காந்திகள் இலவசம்

காந்தியை வார்த்தைகள் வழியே பிடித்துவிட முற்படுபவர்கள் காந்தியைக் காலாவதியானவராக்கவே எப்போதும் முற்படுகிறார்கள். “காந்தியம் என்று எதுவுமில்லை” என்று காந்தியேகூட சொல்லியிருக்கிறார். அப்படியென்றால், காந்தியம் என்பதுதான் என்ன? காலவோட்டத்தில் காந்தியின், காந்தியத்தின் பொருத்தப்பாடுதான் என்ன? காந்தியை சாராம்சப்படுத்திக்கொள்வதன் வாயிலாகத்தான் இதற்கான பதிலை அடைய முடியும். ‘அனைவரிடத்திலும் அன்பு – சமத்துவம் – கடைசி மனிதனுக்குமான அதிகாரம் – ஒட்டுமொத்த ஆன்ம விடுதலை’ இதுதான் காந்தியின் சாராம்சம் என்ற முடிவுக்கு ஒருவர் வருவாரேயானால், அப்போதே அவர் இன்னொரு முடிவுக்கும் வந்துவிடுவார். காந்தியம் என்பது அறுதியிடப்பட்டதல்ல.

காந்தியின் சாரம்சத்தில் எங்கோ தன்னுடைய லட்சியமும் உறைந்திருப்பதாக அவர் அடையாளம் கண்டு, அதற்காக உழைப்பதைத் தன்னுடைய கடமையாகவும் அவர் உணர்ந்துவிட்டேரேயானால், அந்த இடத்தில் அவர் காந்தியராக மட்டும் மாறுவதில்லை; அவரே ஒரு காந்தியாகிவிடுகிறார்; அறிமுகமாகும் ஒவ்வொரு புதிய தளத்திலும் புதுப்புது காந்திகள் முளைவிடலாகிவிடுகிறார்கள். அவர்கள் காந்தியை எதன் வழியாகவும் பிரதிபலிக்க வேண்டியதில்லை; சாராம்சப்படுத்திக்கொண்டால் போதுமானதாகிவிடுகிறது. அப்படியென்றால், காந்தியம் எங்கே வாழ்கிறது? அது படைப்பூக்கத்தில் வாழ்கிறது. புதிய உலகின் சவால்களைத் தன்னுடையதாக்கிக்கொண்டு உயிர்ப்பான தீர்வுகளை உருவாக்குவோர் வழி அது தன்னை விஸ்தரித்துக்கொள்கிறது. இந்த நூலில் வரும் ஒவ்வொரு ஆளுமையினிடத்திலும் இந்தப் பண்பைக் காண முடியும்; பாலா துல்லியமாக இதை நாடி பிடித்திருக்கிறார்.

– சமஸ், பத்திரிக்கையாளர் (இன்றைய காந்திகள் நூலின் முன்னுரையில்…)

அதிகாரத்திற்கும் அடித்தட்டிற்கும் இடையே எப்போதும் நிகழ்கிற விலகலை எப்பாடுபட்டாவது தடுத்துநிறுத்த வேண்டிய ஒரு சுயப்பொறுப்புணர்வுக்கு ஆயத்தமாகவேண்டிய காலப்புள்ளியில் நம்மெல்லோரும் வந்துநிற்கிறோம். பழமையின் அறத்தை சுமந்துகொண்டு நவீனத்தை எதிர்கொண்டு முன்னேறுவதுதான் ஒரு அறிவார்ந்த சமூகம் தனது அனுபவத்தால் அடைந்து நிகழ்த்தும் நிஜப்புரட்சி. அவ்வகையில், காந்தியத்தை தனது தத்துவக்கோட்பாடுகளில் முதன்மைக்கருவாக வைத்துகொண்டு இந்தியாவின் ஏதோவொரு கிராமத்திலிருந்து செயல்துவங்கி, இன்று உலகத்திற்கான மீட்சியாளர்களாக அறியப்படுகிற பதினோரு காந்தியர்கள் அவர்கள் உருவாக்கிய பேரமைப்புகளின் அர்த்தப்பொதிவுள்ள அறிமுகமே, பாலசுப்ரமணியம் முத்துச்சாமி எழுதிய ‘இன்றைய காந்திகள்’ புத்தகம்.

தன்மீட்சி, சுதந்திரத்தின் நிறம் (கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் வாழ்க்கை வரலாறு) ஆகிய புத்தகங்களைத் தொடர்ந்து, தற்போது ‘300 விலையில்லா பிரதிகளாக’ இளைஞர்களுக்கு ‘இன்றைய காந்திகள்’ புத்தகத்தை அனுப்பிவைக்க முடிவுசெய்திருக்கிறோம். நேர்மறை அகவெழுச்சியைத் தருகிற ஏதோவொரு செயலை மீளமீளச் செய்து நாம் இந்த தனித்திருப்பு நோயச்சகாலத்தை கடக்க வேண்டியுள்ளது. சத்தியத்தை தனது அகத்தில் சுமப்பவர்கள், இச்சமூகத்திற்கான எத்தகைய ஒளிமனிதர்களாகத் திகழமுடியும் என்பதற்கான சமகால சாட்சி ஆவணமே இப்புத்தகம். இக்காலத்துத் தலைமுறை இளையவர்களுக்கு இப்புத்தகம் செயல்படுதல் சார்ந்த உத்வேகத்தை அளிக்கும். நாம் கடக்கத் தயங்கி நிற்கும் நீராற்றை ஏற்கெனவே கடந்து மறுகரை அடைந்து மலையுச்சி ஏறிக்கொண்டிருக்கும் சாமானிய மனிதர்களின் பேராளுமையைத் தன்மையை இப்புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும் சொல்கிறது.

ஆகவே, ‘இன்றைய காந்திகள்’ புத்தகம் பெறுவதற்கு விருப்பமுள்ள தோழமைகள், தங்களுடைய முழுமுகவரியை கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு (அஞ்சல் எண் மற்றும் தொலைபேசி எண் உட்பட) அனுப்பி வையுங்கள். எங்கள் சக்திக்கு உட்பட்ட எண்ணிக்கையாக ‘300 பிரதிகளை’ விலையின்றி அனுப்பவுள்ளோம். ஆகவே, முதலில் முகவரி அனுப்பும் முந்நூறு இருதயங்களுக்கு இப்புத்தகத்தை அனுப்பிவைக்கும் எல்லை நிர்ணயம் அவசியமாகிறது. நோயச்சம், செயல்முடக்கம், வாய்ப்பின்மை என ஏதேதோ காரணங்கள் சொல்லி நம்மை நாமே சமாதானப்படுத்திக்கொண்டாலும், செயல்படுவதற்கான காலத்தேவையும் அகபலமும் முன்பைக்காட்டிலும் பன்மடங்கு பெருகிநிற்கிறது. நெடுநாளாகச் செய்ய நினைத்து ‘காலம் கனியட்டும்’ என நாம் காத்திருந்த ஒரு கனவுச்செயலைத் துவங்குவதற்கான உளவூக்கத்தை இப்புத்தகம் நிச்சயம் நல்கும். ஆகவே, செயல் புரிக!

முகவரி அனுப்பவேண்டிய மின்னஞ்சல்: [email protected]

http://thannaram.in/

முந்தைய கட்டுரைமணி ரத்னம் சந்திப்பு- கடிதங்கள்
அடுத்த கட்டுரைநோய்க்காலமும் மழைக்காலமும்-2