நோய்க்காலமும் மழைக்காலமும்-2

மலைமுகடு நோக்கி- பனிமூடிய மலையின் பின்னணி. புகைப்படம்-பிரசன்னா

புகைப்படங்கள் பிரசன்னா இணைப்பு

குடகில் மறுநாள் நாங்கள் உத்தேசித்திருந்த பயணங்கள் ஏதும் நடக்காதென்று தெரிந்தது. புஷ்பகிரி என்னும் குன்றின்மேல் ஒரு மலையேற்றம் திட்டமிட்டிருந்தோம். நீர்ப்பெருக்கால் காட்டாறுகள் நிறைந்துவழிந்தமையால் அந்த காட்டையே மூடிவிட்டார்கள்.

இன்னொரு திட்டம் வைத்திருந்தோம்.கொட்டெபெட்டா என்னும் மலையுச்சி வரை ஒரு ஜீப் பயணம். அதற்கு வாய்ப்பிருக்கிறது என்று சொன்னார்கள். ஆனால் பெருமழை வராமலிருக்கவேண்டும்.பெருமழை பெய்து ஓய்ந்துவிட்டிருந்தமையால் கொஞ்சம் நம்பிக்கை. எனினும் இரவெல்லாம் வானம் உறுமிக்கொண்டேதான் இருந்தது

மலைநடை- புகைப்படம் பிரசன்னா

காலையுணவை முன்னரே முடித்துக்கொண்டு கிளம்பினோம். உண்மையில் இங்கே விடிவதேயில்லை, மாலைவரை காலையே நீண்டுசெல்வதாகத் தோன்றியது. காரில் அமர்ந்தபோது நல்ல குளிர்.

கொட்டெபெட்டா மலைப்பயணம் இருண்ட கார்முகில்குவியல்களுக்கு கீழே குளிர்காற்றில் ஆழ்ந்த அமைதியை அளிப்பதாக இருந்தது. இருபுறமும் காபித்தோட்டங்கள். அதன்பின் மழைவழிந்துகொண்டிருந்த அடிமரங்களும் இலைகள் வழிந்துசொட்டும் கொடிச்செறிவுகளும் கொண்ட காடு.

மலைச்சரிவுகள் பசுமை மூடியிருந்தன. ஒரே நிறம் எதுவானாலும் கண்ணுக்குச் சலிக்கும். மலர்களேகூட சலிப்பூட்டுவதை பல மலர்வெளிகளில் கண்டிருக்கிறேன். பசுமை மட்டும் சலிப்பதே இல்லை. அதுவே வண்ணங்களில் அன்னை. சக்தியின் வடிவம். மூச்சும் உணவும் ஆகி இப்புவியை வாழச்செய்யும் கருணை

கொட்டெபெட்டா என்பது ஒரு செங்குத்தான பாறைசூடிய மலையுச்சி. அதன் அடிவாரம் வரைச் செல்வதே திட்டம். வண்டி செல்லும் எல்லைவரை சென்றபின் மலைச்சாலையில் நடந்து மேலேறினோம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வந்த பெருவெள்ளத்திற்குப்பின்பு இங்கே மலைச்சாலைகளை அழுத்தமாக கான்கிரீட் போட்டிருக்கிறார்கள். ஆகவே சாலைகள் நன்றாகவே இருந்தன

மறைந்திருக்கும் மலை பிரசன்னா

மலையுச்சியில் கண்படும் இடமெல்லாம் ஒளிரும் பச்சை. புல் அல்ல, ஒருவகைச் செடி. அது முளைத்து ஒருமாதம் ஆகியிருக்கவேண்டும்.மழை நீடித்தால் இன்னொரு மாதம் வளரக்கூடும். இலைகளே ஒன்றோடொன்று கோத்துக்கொண்டதுபோன்ற செறிவு. அப்படியென்றால் அது கோடையில் விதைகளை புகைபோல உமிழ்ந்து அங்கெல்லாம் பரப்பியிருக்கவேண்டும்.

பலவகையான சிறுபறவைகள். சேண்ட்புளோவர் வகை குருவிகள் எங்களைச் சூழ்ந்து பறந்து பறந்து வழிதவறச்செய்ய முயன்றன. கீழே மலை மடிந்திறங்கி ஆழ்ந்த பள்ளத்தில் நிறைந்து அலைததும்பிக்கொண்டிருந்த காட்டை அடைந்தது. காட்டின் மரங்களின்மேல் பிசிறாக வெண்முகில்கள் படர்ந்திருந்தன.

பாறைமேல் தனிமை புகைப்படம் பிரசன்னா

தெற்கிலிருந்து மழைமேகம் புகைப்படலமாக வந்து காட்டை மூடிக்கொண்டிருந்தது. முகில்கள் ஆறுபோல விசையுடன் சுழித்து ஓடுவதை இத்தகைய மலைக்கணவாய்களில்தான் காணமுடியும். குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலைகளில். வடக்கே இமையமலையிலும் சில இடங்களில் காணமுடியும்.

மலையின் மறு எழுச்சி தாழ்வானது. அங்கே ஓர் அருவி கொட்டிக்கொண்டிருந்தது. அத்தனை தொலைவிலேயே அது தெரிந்தது என்றால் மிகப்பெரிய அருவியாக இருக்கவேண்டும். ஆனால் எந்த அருவி என்று தெரியவில்லை. அதைச்சூழ்ந்து வீடுகளோ, கட்டுமானங்களோ ஏதுமில்லை. காட்டுக்குள் கொட்டிக்கொண்டிருந்தது. மழைக்காலத்தில் மட்டுமே பெருகும் அருவி என்று தோன்றியது.

எங்கள் காலடிக்கு கீழே காட்டுக்குள் இன்னொரு அருவி மரங்களுக்கிடையே வெண்ணுரைக் கொப்பளிப்பாகவும் நீர்முழக்கமாகவும் கேட்டுக்கொண்டிருந்தது. காட்டுக்குள் இருந்து எழுந்த அந்த முழக்கம் காட்டை உயிருள்ள ஒன்றாக, எங்களை அறிந்து எச்சரிக்கை அடைந்த ஒன்றாக எண்ணச் செய்தது.

காட்டை பார்த்துக்கொண்டு அமர்ந்திருப்பது ஓர் ஆலயத்தின் முன் தெய்வத்தை உணர்ந்து நிற்பதுபோல. இது நாம் சமைத்த உருவம் அல்ல. நம் உலகியல் அடையாளங்கள் ஏதும் கொண்டதும் அல்ல. நாம் எதையும் வேண்டிக்கொள்வதில்லை. நாம் நம்மை வெறுமே ஒப்படைத்து அமர்ந்திருக்கிறோம்

ஒருமுறை சக்தி கிருஷ்ணன் வேடிக்கையாகச் சொன்னார். “காட்டைப்பாத்துட்டு ஒக்காந்திட்டிருக்கிறப்ப மட்டும் எல்லா பயல்களும் நல்லவிங்களா தெரியறானுங்க. இந்த வக்கீல்கள்கூட” அவரே வக்கீல்தான். அவரையே கொஞ்சம் நல்லவராக்க காட்டால் முடிகிறது.

மலைப்பாறையின் விளிம்பில் அமர்ந்து காட்டைப் பார்த்துக்கொண்டிருந்தேன். என்னை முழுமையாக ஒப்படைக்க முயல்வது, அதுதான் என் ஊழ்கம். என்னை திரட்டி ,பின் பிரித்து, துளித்துளியாக அளித்து ,எஞ்சும் ஒரு துளியின் நடுக்கத்துடன் தன்னுணர்ந்து ,ஏதோ ஒரு புள்ளியில் அதுவும் உதிர்ந்துவிட்டால் காலமின்மையின் ஒரு தாவல். அதன்பின் மீண்டெழல், இங்கே இவ்வண்ணம் என உணர்ந்து அமைதல்.

கொட்டெபெட்டா மலை முழுக்க முகிலால் மூடப்பட்டிருந்தது. அதை பார்க்கவே முடியாது என்றே நினைத்தோம். ஆனால் காற்று திசைமாற முகில்திரை விலகத்தொடங்கியது. கிருஷ்ணன் ஆனந்தக்கூச்சல் போட்டார். அனைவரும் எழுந்து நின்றோம்.

கொட்டபெட்டா முகத்திரைவிலக்கி மீண்டும் மூடி மாயம் காட்டியது. சின்னப்பிள்ளைகள் விளையாடுவதுபோல. கதகளியின் திரைநோட்டச் சடங்கு போல. அந்த எதிர்பார்ப்பு அத்தருணத்தை அழகுறச்செய்தது. அங்கு நின்று திருநடை திறந்து இறையுரு தெரிவதற்காகக் காத்திருந்தோம்

கிருஷ்ணன் அவர் கைலாசமலை தெரியும் காட்சியைப்பற்றி வாசித்திருந்ததைச் சொன்னார். கைலாசமலையை சில மாதங்கள்தான் தரிசனம் செய்யமுடியும். காத்துக்கிடக்கவேண்டும். சிலசமயம் பார்க்காமலேயே திரும்ப வேண்டியிருக்கும். அழைத்துச்செல்லும் வழிகாட்டியே ‘இந்த கூட்டத்தில் புண்ணியம் செய்த ஒருவர் இருந்தால்போதும் கைலாஸ் மகராஜ் தெரிவார்” என்று சொல்வான்.

மலைக்குச் செல்பவர்கள்  தன் ஒருவர் பொருட்டு மலை தெரியும் என்று நம்பவேண்டும். ஆனால் தன் ஒருவர்பொருட்டே மலை தெரியாமலாகிவிடும் என நினைப்பவர்களாகவே அவர்கள் பெரும்பாலும் இருப்பார்கள் என நினைக்கிறேன்

மல்லாலி அருவி- கம்பிக்கு அப்பால்

கைலாசம் நல்ல டிசம்பரில் துல்லியமாகத் தெரியும், முகில் முழுக்க பனியாக மாறி பொழிந்து வானம் துல்லியமான ஒளியுடன் கண்கூச விரிந்திருக்கும். கைலாசம் ஒளியுடன் மின்னும். நாம் காணும் பல புகழ்பெற்ற புகைப்படங்கள் அப்போது எடுக்கப்பட்டவைதான் ஆனால்  அப்போது அங்கே செல்லமுடியாது. வழியெல்லாம் பனிமூடியிருக்கும்.

பனி உருகும் கோடையில் நீராவி எழுந்து பனிமுகிலாக மாறி மலைகளை மூடியிருக்கும். விடியற்காலையில் நன்றாகத்தெரியும். நேரம் செல்லச்செல்ல அதன்மேலுள்ள பனியே நீராவியாக ஆகி அதன்மேல் பனிமேகமாக படர்ந்துவிடும்.அங்கே தங்கி காலையில் பார்க்கவேண்டும், ஆனால் பலர் கீழ்முகாம்களிலிருந்து நடந்து ஏறிவருவார்கள்.

மெல்ல மலைமுடி தெளியலாயிற்று. முதற்கண வியப்புக்கூச்சலுக்குப்பின் அமைதியாகி கண்கள் விரிய பார்த்துக்கொண்டிருந்தோம். ஈரமான மாபெரும் பாறை. சிவலிங்கத்தைப் பார்க்கையில் எல்லாம் எனக்கு ஒரு மலைமுடி அது என்றே தோன்றும். நாம் அதற்கு எத்தனைப் பொருளேற்றம் செய்தாலும் சரி, அது தன்னளவில் பொருளின்மையின் மகத்துவம் கொண்டது.

ஒற்றைப்பாறை. செங்குத்தானது அதன் விளிம்பு. மழையின் ஈரத்தில் கருமையாக மின்னியது. பத்துநிமிடங்களில் மீண்டும் மூடிவிட்டது. மலையை அருகே சென்று நோக்கினோம். மேலேறிச்சென்று ஒரு சிறு சோலை அருகே நின்று காட்டைப்பார்த்துவிட்டு திரும்பி நடந்தோம்.

தூரத்து மழையருவி

அடுத்த இலக்கு மல்லாலி நீர்வீழ்ச்சி. அறையை காலிசெய்துவிட்டு கிளம்பி நீர்வீழ்ச்சியை அடைந்தோம். நாங்கள் நின்றிருந்தது தக்காணபீடபூமியில். தென்னகத்தின் பெரும்பாலான நீர்வீழ்ச்சிகள் பீடபூமியின் விளிம்பிலிருந்து பள்ளம்நோக்கிச் சரிபவை. மேலிருந்து கீழே இறங்கிச் சென்று நீர்வீழ்ச்சியைப் பார்க்கவேண்டும். ஆனால் நீர்வீழ்ச்சி பூட்டப்பட்டிருந்தது. கொரோனாக்கால அடைப்பு.

கம்பிவேலியின் இடைவெளிவழியாக கீழே பெருகிக்கொட்டிக்கொண்டிருந்த அருவியை பார்த்தோம். பார்க்கப்பார்க்க அதன் பேருருவை ஊகிக்க முடிந்தது. ஆனால் பல படிகளாக கொட்டும் அருவியை கீழே சென்றால்தான் நன்றாகப் பார்க்கமுடியும். அதற்கு வாய்ப்பே இல்லை. அதை ஓரளவு எதிர்பார்த்திருந்தேன்.

மாலை ஆகிக்கொண்டிருந்தது. மாலைப்பொழுதை ஹொன்னமனா ஏரிக்கரையில் செலவிடலாம் என்று முடிவெடுத்தோம்.குடகு பகுதியின் முக்கியமான சுற்றுலா மையம் அது. ஆனால் பொதுவாகவே மடிகேரியில் தமிழகம்போல சுற்றுலாப்பகுதிகளில் சுற்றுலாவே செல்லமுடியாத அளவுக்கு நடைபாதை வணிகர்கள் இல்லை. தமிழகத்தில் தொட்டபெட்டா மலைமுடிதான் மிகமிக மோசமான சந்தைமுனை. குப்பைமேடும்கூட

காரில் அங்கே சென்றுசேரும்போது மாலை நன்றாக இறங்கிவிட்டிருந்தது. ஏரிக்கரையில் வேறு சுற்றுலாப்பயணிகள் இல்லை.நீர்ப்பரப்புக்குமேல் பெரிய மேகத்திரள் அசைவிலாது ஒளிகொண்டு நின்றிருந்தது. மிக மெல்ல அது அணைந்துகொண்டிருந்தது. அதன் பாவை நீருக்குள் கரைந்து மறைந்துகொண்டிருக்க சிற்றலைகளில் ஏரி உயிர்த்தது.

ஹொன்னமனே ஏரி புகைப்படம் பிரசன்னா

ஹொன்னமனா ஏரி கடல்போல கரைதெரியா பெருக்கு அல்ல, நடுத்தரமானது. அதைச்சூழ்ந்து நடக்கும்படி பாதை உள்ளது. கரையில் ஒரு சிற்றாலயம். அருகே ஒரு வீடு. ஆலயத்தில் விளக்குகள் எரிந்தன. ஆழ்ந்த அமைதி நிறைந்து கிடந்தது. அதன் தலைக்குமேல் எழுந்தவை போல இரு சிறிய குன்றுகளின் உச்சிகள்.கவிபேட்டா, மோரே பேட்டா என்று அவற்றுக்குப் பெயர். இந்த ஊரின் பெயர் தொட்டமலதே. பெரியமலையடிவாரம் என்று பொருள்.

அப்பகுதியைச் சூழ்ந்து காப்பித்தோட்டங்களும் வயல்களும்தான். ஒரு முளைச்செடித் தோட்டம் இருந்தது. அங்கே செடிகளைப் பயிரிட்டு லாரியில் ஏற்றிக்கொண்டிருந்தனர். ஒருபக்கம் செங்குத்தாக ஒரு சிறு குன்று. அதன்மேல் அமர்ந்த கரிய பெரும்பாறைமுகடு. அதன் நிழல் இன்னொரு கோணத்தில் நீர்மேல் விழுந்து அலைகொண்டது

மலைகளின் அசைவின்மையும் ஏரியின் அசைவும் ஒரே நாளில் என்பது ஓர் அரிய அனுபவம்தான். உண்மையில் இவை நம்முள் சென்று என்ன ஆகின்றன என்று உணரவேண்டும் என்றால் நாம் அகத்தே தனித்திருக்கவேண்டும். சிரிப்பும் கொண்டாட்டமும் பயணத்தில் தேவைதான். ஆனால் நாம் அவற்றில் ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கவேண்டும்

பயணத்தை உற்சாகமாக ஆக்கலாம், ஆனால் வெற்று கொண்டாட்டமாக ஆக்கிவிடலாகாது. பயணத்தில் சம்பவங்கள் மிகக்குறைவாக, நிலக்காட்சிகள் மட்டுமே நிறைந்ததாக இருக்கும்போதுதான் இத்தகைய ஆழ்ந்த நிலை நெஞ்சில் உருவாகிறது என்பதை கண்டிருக்கிறேன். நம் அகம் புறத்தே சென்று படிய, நம்மை நாமே அறிய, காட்சிகளை நாம் படிமங்களாக ஆக்கி கனவுக்குள் செலுத்திக்கொள்ள ஓர் அமைதி தேவையாகிறது.

ஏரிக்கரை படம் பிரசன்னா

ஏரிக்கரையைச் சுற்றி நடந்தோம். ஏரியலைகளில் அந்தி அமிழ்வதைப் பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கேயே தங்கிவிட்டாலென்ன என்று கிருஷ்ணன் கேட்டார். மறுநாள் செல்லவேண்டிய இடம் அருகில்தான். அருகே ‘ஹோம்ஸ்டே’ ஏதாவது உள்ளதா என்று விசாரித்தோம். அருகிலேயே இருந்தது.

குடகுநாடு முழுக்க வீட்டுத்தங்குமிடங்கள் ஏராளமாக உள்ளன. பெரும்பாலான இல்லங்கள் இங்கே காப்பித் தோட்டங்களுக்குள் தனியாக உள்ளன. அவற்றில் தங்குவது அழகான அனுபவம். ஆகவே அது ஒரு தொழிலாகவே வளர்ச்சிபெற்றிருக்கிறது.கேரளத்தில், குறிப்பாக எர்ணாகுளம் மாவட்டத்தில். ஹோம்ஸ்டே உண்டு. ஆனால் அவை பெண்களுக்கு பாதுகாப்பானவை அல்ல.

நாங்கள் தங்கிய வீட்டுவிடுதி ஓர் ஓய்வுபெற்ற ராணுவவீரருக்கு உரியது. அவர் கீழே தங்க மாடியை தங்குமிடமாக வாடகைக்கு அளிக்கிறார். நான்கு படுக்கையறைகளும் ஒரு முன்வராந்தாவும் கொண்டது. 14 பேர் வசதியாக தங்கலாம். நல்ல படுக்கை, நல்ல கழிவறை, தூய போர்வைகள் விரிப்புகள்.

மொத்தம் ஏழாயிரம் ரூபாய். அடித்துப்பேசி ஆறாயிரத்துக்கு ஒப்புக்கொள்ளச் செய்தனர். வந்திருப்பவர் ஒரு தமிழ் எழுத்தாளர் என்று சொன்னதனால் ஆயிரம்ரூபாய் குறைத்தார் உரிமையாளர். ஆனால் மிகவும் குறைந்துவிட்டது என மனைவி திட்டுவதாக வந்து புகார் சொல்லி புலம்பினார். ஆகவே நாங்களே அந்த ஆயிரத்தை விட்டுக்கொடுத்து ஏழாயிரமாக ஆக்கினோம்

உற்சாகமான நாள் ஒன்று முடிந்துகொண்டிருந்தது. வராந்தாவில் அமர்ந்து இரவு பதினொரு மணிவரை பேசிக்கொண்டிருந்தோம். பேய்க்கதை சொல்லும்படி நண்பர்கள் கேட்டனர். ஆனால் அந்த மலையுச்சி மனநிலையே நீடித்தமையால் பேய்க்கதை ஏதும் தோன்றவில்லை. இரவிலும் முகில்மூடிய பெருமலையும் நீரில் தோன்றிய முகிலுமே நினைவில் நெடுநேரம் திகழ்ந்தன.

இத்தகைய சந்திப்புகளில் அரிதாகவே இரவு நெடுநேரம் பேசுவது நிகழ்கிறது. நீண்ட பயணத்தில் நாம் களைத்திருப்போம். பேசத்தோன்றாது.  காலையில்வேறு உடனே எழுந்தாகவேண்டும். ஆகவே விரைவில் தூங்கிவிடுவோம். இன்று அதிகப் பயணம் இல்லை. குடகுக்குள்ளேயே சுற்றிவந்துகொண்டிருந்தோம். ஏழுமணிக்கே அறைக்குள் வந்துவிட்டிருந்தோம்

இத்தகைய உரையாடல்களில் பொதுவாக நையாண்டியும் சிரிப்பும்தான். அப்படியே பேச்சு மேலெழுந்து ஏதேனும் மையக்கருவை தொட்டு தீவிரமடைவதும் உண்டு. மீண்டும் வேடிக்கைக்குத் திரும்பி வந்துவிடும். திட்டமிட்டு தீவிரமாகப் பேச முடியாது.

ஆனால் ஒருபோதும் கடுமையான விவாதம், கசப்புகளைச் சென்றடையும் பூசல் நிகழலாகாது என்பதில் நான் கவனமாக இருப்பேன். இத்தனை தூரம் வந்துவிட்டு பூசலிட்டு அந்த உணர்வை இழப்பது வைரங்களை அள்ளி தெருவில் வீசுவதுபோல.

வெளியே காப்பித்தோட்டத்தின் ரீங்காரம் கேட்டுக்கொண்டிருந்தது. ராணுவவீரர் ஒரு நாயன்பர். அவருடைய டாபர்மானும் ஜெர்மன் ஷெப்பர்டும் குரைத்துக்கொண்டிருந்தன. அப்பகுதியெங்கும் நிறைந்திருந்த இயற்கையின் அமைதியில் அவ்வோசைகள் இயல்பாக ஊடுருவிக் கலந்திருந்தன.

ஊட்டிபோன்ற நடுக்கும் குளிர் அல்ல. ,மென்மையான குளிர். ஒரு மெல்லிய சால்வை தேவைப்படும் அளவுக்கு. நிறைய மலையேறியிருந்தமையால் கால்களில் ஒருவகையான சலிப்பு. அதுவும் இன்பமானதே. பேசப்பேசவே தூக்கம் வந்து சொக்கியது. பதினொரு மணிக்கு படுத்துக்கொள்ளலாம் என எழுந்தேன்.

ஒரு கனவு வந்து பின்னிரவில் விழித்துக்கொண்டேன். அதில் ஏரியின் அலைகளை நெடுநேரம் பார்த்துக்கொண்டு தன்னந்தனியே அமர்ந்திருந்தேன். இப்போதெல்லாம் அகத்தே மிகமிகத் தனியாக உணர்கிறேன்.மிகநெடுந்தொலைவுக்குச் சென்றுவிட்டிருக்கிறேன். அப்படிச் செல்லத்தான் என்றும் விழைந்து முயன்றேன், செல்லச்செல்ல அத்தனிமையின் எடையும் மிகுந்து வருகிறது

அலைகள் நிறைந்த தொலைவு. மிகுந்த தொலைவு. அதை பார்த்துக்கொண்டே இருந்ததை விழித்தபின் நினைவுகூர்ந்தேன்.

[மேலும்]

முந்தைய கட்டுரைஇளைஞர்களுக்கு இன்றைய காந்திகள் இலவசம்
அடுத்த கட்டுரைவண்ணக்கடல் – பாலாஜி பிருத்விராஜ்