கோயிற்களஞ்சியம்

கோயிற்களஞ்சியம் இணையப்பக்கம்

 குடவாயில் பாலசுப்ரமணியம் 

இனிய ஜெயம்

முத்துசாமிப் பிள்ளை அவர்கள் எழுதிய மேற்கண்ட கோயிற் களஞ்சியம் நூல், கோவில் என்ற முழுமைத் தொகுப்பு சார்ந்த, அனைத்து அலகுகளையும் அறிமுகக்கம் செய்யும் நூல். கோபுரம் முதல் கருவறை வரை, தீர்த்தக் கட்டம் முதல் தல விருட்சம் வரை, புராணங்கள் முதல் கல்வெட்டுக்கள் வரை, தொன்மம் முதல் சிற்பக் கலை வரை, ஆகமங்கள் முதல் தல புராணம் வரை, விழாக்கள் முதல் பண்பாட்டில் கோவிலின் இடம் வரை, கோவில் சார்ந்த முழுமைக்கு ஒரு அடிப்படை அறிமுகத்தை அளிக்கிறது.

ஒரு இளம் மனம், இந்துத்துவ அரசியலும் அதன் அறிவு ஜீவிகளும் பேசும் அரசியலுக்கு வெளியே நின்று,இணையாகவே அதன் அதன் எதிரான பெரியாரிய இடதுசாரி தரப்பிலிருந்தும் வெளியேறி, இந்து மதத்தின் மையமான கோவில் பண்பாட்டை அறிய வேண்டிய சூழல் இன்று. அரசியல் கறை படியாத அந்த பாதையில் சுய தேடுதலின்  பொருட்டு முதல் அடி எடுத்து வைக்கும் இளம் மனங்கள், துவங்க வேண்டிய சரியான நூல் இது. அவர்களின் வசதியின் பொருட்டு தென்னிந்திய அளவில் ஒரு சிறு நூல் பட்டியல் கீழே.

  1. கோயிற் களஞ்சியம். அறிமுகம்.( முத்துசாமி பிள்ளை)

2.சிவ வடிவங்கள். (திருவாவடுதுறை ஆதீனம்)

3.கணபதி.(திருவாவடுதுறை ஆதீனம்)

4.தட்சிணாமூர்த்தி.(திருவாவடுதுறை ஆதீனம்)

5.சண்டேசர்.(திருவாவடுதுறை ஆதீனம்)

6.வரலாற்றில் பிறந்த வைணவம். (அக்நிஹோத்ரம் ராமானுஜ தாதாச்சார்யா)

7.சிற்பச் செந்நூல்.(கணபதி ஸ்தபதி)

8.தென்னிந்திய சிற்ப வடிவங்கள்.(கொழும்பு நவரத்தினம்)

9.தமிழக கோயிற்கலை மரபு.(குடவாயில் பாலசுப்ரமணியம்)

10.தென்னிந்தியக் கோயில்கள்.(சீனிவாசன்)

11.கோபுரக் கலை மரபு.(குடவாயில் பாலசுப்ரமணியன்)

12.ஆலய வழிபாட்டில் இசை.(தஞ்சாவூர் சுந்தரம்)

13.வேங்கடம் முதல் குமரி வரை.(தொ . மு.பாஸ்கரத் தொண்டைமான்)

மேற்கண்ட இந்த நூல்கள் கோயில் பண்பாடு சார்ந்த முழுமையான சித்திரத்தை பெற வழிவகை செய்யும். மேற்கண்ட அனைத்து நூல்களும்,

Tamil digital library, மற்றும் archive தளங்களில் நூலின் தலைப்பை உள்ளிட்டு தேடினால், தரவிறக்கிக்கொள்ள கிடைக்கும். பல நூல்களின் அறிமுகம் இந்த தளத்திலேயே உண்டு. குடவாயில் பாலசுப்ரமணியத்தின் நூல்களில் (இவரது பெரும்பாலான நூல்கள் அச்சில் கிடைக்கிறது) தனித்துவம் வாய்ந்த நூல். கோபுரக் கலை மரபு. இந்த நூலை கையில் கையேடாக கொண்டபடி, நூலில் குறிப்பிட்ட கோபுரங்களை நேரில் சென்று ஒருவர் பார்ப்பார் எனில் அது நிச்சயம் அவரது வாழ்நாள் அனுபவமாகவே அவருள் நிலைத்து விடும்.

கடலூர் சீனு

முந்தைய கட்டுரைதியடோர் பாஸ்கரன் சந்திப்பு- கடிதம்
அடுத்த கட்டுரைபூவாப் பூ