ஆலன் டூரிங்- கடிதங்கள்

ஆலன் டூரிங்

இனிய ஜெயம் ,

சேபியன்ஸ் புகழ் சுரேஷ் பாபு எழுதிய ஆலன் டூரிங் வாழ்வு சார்ந்த அறிமுக கட்டுரை வாசித்தேன். இந்த 2020 இல் ஆலன் டூரிங் முக்கியத்துவம் கொண்ட ஆளுமையாக உருவெடுக்கிறார். அவர் பெயரில் உருவாகிய சட்டம் போலவே,  முகநூல் உள்ளிட்ட சமுக தளங்கள் வழியே, தனி மனிதனின் அகத்தையும், சமுக வெளியின் நடவடிக்கைகளையும், இறுதியாக மானுடத்தின் எதிர் காலத்தியே ‘கையாள’ தன்னை தகவமைத்துக் கொண்டிருக்கும் செயற்கை அறிவின் பிடியில் இப்போது சிக்கி, (மனிதன் எவ்வாறு இயற்கை வளங்களை உறுஞ்சுகிறானோ அவ்வாறே) அவனை அகம் புறம் என அனைத்து எல்லைகளிலும் உறிஞ்சி, எவருக்கோ அதை செல்வமாக மாற்றி அளிக்கும் அந்த செயற்கை அறிவுக்கு, அதை பயன்படுத்தும் முதலாளிகள், அமைப்புகள், அனைத்துக்கும் மட்டுறுத்தும் சட்டங்கள் ஆலன் டூரிங் பெயரிலேயே உருவாக வேண்டிய காலம் நெருங்கி விட்டது.

நீங்கள் எந்த சைபர் சமூக களத்திலும் இல்லாவிட்டாலும் சரி, உங்கள் கையில் ஒரு ஆண்டிராய்டு மட்டும் இருந்தால் போதும், அதை இயக்கிய மறுகணம், உங்களை எவரோ ஒருவர் ai வழியே உறுஞ்சி பணம் சம்பாதிக்க துவங்கிவிடுகிறார் என்பது உறுதி.  இதில் அத்தியாவசியம் எனும் நிலைகள் சுருங்கி, அதற்க்கு வெளியே  நின்று நம்மை அதில் ஈடுபட அழைக்கும் சமூக நிரலிகள் அதன் இடம் பெருகி நிற்கிறது.

சமீபத்தில் ஜெஃப் ஓர்லோவ்ஸ்கி  இயக்கி, தி சோசியல் டைலம்மா என்றொரு முக்கியமான ஆவணப் படம் வெளியாகி இருக்கிறது. இதில் இந்த 2020 ன் தனி மனிதனும், சமூகமும் எவ்வாறு செயற்கை அறிவால் ‘கையாள’ ப் படுகிறது,  அப்படிக் கையாளும் அந்த அறிவின் மீது, மானுட அறிவின் அதிகாரத்தின் சட்டத்தின் பிடிகள் எதுவும் எவ்வாறு செல்லுபடியாகாமல் போகிறது, நாம் எவ்வாறு அதனுள் மீள இயலா வண்ணம் தளைக்கப்பட்டு நிற்கிறோம் என்பதை விவரிக்கிறது.

இந்த ஆவணம் பேசும் அனைத்தும் நாம் உள்ளுணர்ந்ததுதான் என்றாலும் இந்த ஆவணம் பேசும் விஷயங்கள் நம்மை அலைக்கழிக்கிறது. காரணம் இந்த ஆவணம் கூகுள் முகநூல் போன்ற தளங்கள் எவ்வாறு ai வழியே சமூகத்தை கையாளுகிறதோ, அவ்வாறு கையாள அந்த ai கு அல்காரிதம் களை உருவாக்கி அளிக்கும், நிபுணர்களின் சாட்சியம், அந்த சாட்சியங்கள் படியிலான உதாரண காட்சிகள் வழியே சொல்லப்பட்டிருக்கிறது என்பதே.

அனைத்தையும் கடந்த, அறிவில் அமர்ந்த, சர்வ வல்லமை பொருந்திய ஒருவராக இருந்தாலும் சரிதான், அவர் முக நூல் போல ஏதேனும் சமூக நிரலியை திறந்து விட்டால், அவர் ஒரு வெத்து வேட்டுதான். பல்லாயிரம் மடங்கு வேகத்துடன், பல ஆயிரம் அல்காரிதம் உடன் இயங்கும் ai முன்னால் நீங்கள் ஒரு முட்டாள். நீங்கள் அதை பயன்படுத்துவதாக ஒரு மாயையை அது உங்களுக்கு அளித்து, அது உங்களை பயன்படுத்த துவங்கி விடுகிறது.

இதன் இறுதி விளைவு, வேற்றுமையில் ஒற்றுமை எனும் யதார்த்த நிலையை, ஒற்றுமைக்குள் வேற்றுமைகள் எனும் சபைர் நிலை இடம் பெயர்க்கிறது. முந்தய யதார்த்த நிலைதான் குடிமை சமூகம் என்பதை கட்டிவைத்த சாரம். இந்த சைபர் யதார்த்தம் இந்த குடிமை சமூக வாழ்வை அழிப்பதன் வழியே, யதார்த்தத்தில் எது ஜனநாயகமோ அதையும் சேர்த்து அழிக்கிறது.

முக்கியமான ஆவணம். ஆலன் டூரிங் குறித்த கட்டுரையை  வாசித்த பிறகு இந்த ஆவணத்தை காண நேர்ந்தது.மேலதிக தத்தளிப்பு நிலையை அளித்தது. இது ஆவணம் குறித்த அறிமுகம் மட்டுமே, மேலதிகமாக இந்த ஆவணம் குறித்து விரிவாக எழுத சுரேஷ் பாபு வே சரியானவர்.

கடலூர் சீனு

 

அன்புள்ள ஜெ..

 

ஆலன் டூரிங் பற்றி உங்கள் தளத்தில் வெளியான கட்டுரை வெகுவாக யோசிக்க வைத்தது

சட்டம் பெரிதா , தர்மம் பெரிதா என்றால் சட்டத்தைத்தான் பின்பற்றியாக வேண்டும். காரணம் தர்மம் என்பது அகவயமான ஒன்று. தர்மத்தின் பொருட்டு சட்டத்தை வளைக்க சாமான்யனால் முடியாது. அது விரும்பத்தக்கதும் அல்ல

ஆனாலும் மாமனிதர்கள் பெருந்தேசங்கள் தம்மை பணயம் வைத்தாவது தர்மத்தின் பொருட்டு சட்டத்தை மீறவே முயல்வார்கள். காரணம் தர்மத்தை இனம்காண தெரியாத சமூகம் அழிந்து விடும்.

வெண்முரசு நாவலில் எப்பேற்பட்ட கல்நெஞ்சுக்காரனையும் அழ வைக்கும் காட்சி ஒன்று வரும் ( அது உங்களது சிறுகதையாகவும் வந்துள்ளது)

அரசகுடியின் அர்ஜுனனுடன் குடிப்பெருமை எதுவுமற்ற கர்ணன் போட்டியிடக்கூடாது என்பது சட்டம். கர்ணனின் தகுதி அனைவருக்கும் தெரியுமென்றாலும் சட்டத்தை மீறி என்ன செய்வது,?

தகுதியான ஒருவன் அரசவிதிகளால் வீழ்த்தப்பட்டு அந்தகுடிக்கு தீரா களங்கம் ஏற்படப்படப்போகிறது என்ற சூழல்.

அப்போதுதான் துரியோனன் எழுந்து கர்ணனுக்கு பதவி அளித்து போட்டியில் கலந்துகொள்ளும் தகுதியை அளிக்க முன்வருகிறான்

அப்படி அளிப்பதற்கு தன்னைத்தாழ்த்திக் கொள்ளவும் முன்வருகிறான்.

விதிகள் முன் தர்மம் தோற்றுவிடக்கூடாது என்ற இந்த தவிப்பை உங்களது ஆகாயம் என்ற சிறுகதையிலும் பார்க்கிறோம்.

தனது உறவினர் அதிகாரத்துக்குட்பட்ட பகுதியில் சாத்தப்பன் ஆசாரி மற்றும் அவர் ஆதரவில் இருக்கும் குமாரன் ( வாய் பேச இயலாத , செவிப்புலன் பாதிக்கப்படவன் )  ஆகியோரின் மேதைமையை புரிந்து கொள்கிறார் நீலன் பிள்ளை

மறுமுறை அங்கே வரும்போது அந்த அப்பாவி கலைஞனை அரசுவிதிகள் அழிக்க முயல்கின்றன என குறிப்பால் உணர்ந்து அதைத்தடுக்க புயலாய் கிளம்புகிறார்

அவருக்கு ஏதோ தோன்றியது. “வண்டியை கட்டுநான் உடனே திருவிதாங்கோடு போகணும்ரெட்டைக்குதிரை வண்டி வேணும்காத்துவேகத்திலே போகணும்

அவர் மேலாடையை சுற்றிக்கொண்டு முற்றத்திற்கு வந்தபோது எடைகுறைவான குதிரைவண்டி வந்து நின்றது. அவர் ஏறி அமர்ந்ததும் அது விரைந்தோடியது

அவர் பின்னால் அமர்ந்து வண்டிக்காரனிடம்வேகம், வேகம்என்று சொல்லிக்கொண்டிருந்தார். மனம் போகும் வேகம் வண்டியை காற்றில் மெல்ல ஊசலாடிக்கொண்டிருப்பதாகவே தோன்றச்செய்தது

மனம் திசைகளில் சென்று முட்டி முட்டி அவரை களைப்படையச் செய்தது. திருவிதாங்கோடு எல்லைக்குள் நுழைந்தபோது அவரால் எதையுமே யோசிக்கமுடியவில்லை. அகமும் புறமும் செயலற்று புழு போல கிடந்தார்

இந்த பதட்டத்தைத்தான் துரியோதனிடம் பார்க்கிறோம்

ஆலன் டூரிங்கிடம் மன்னிப்புக் கேட்ட இங்கிலாந்தில் பார்க்கிறோம்

தியாகராஜ பாகவதரை அழித்த நீதித்துறை அதற்காக வருந்தாத நமது சூழலையும் பார்க்கிறோம்

விரிவான விவாதத்துக்கும் சிந்தனைக்கும் உரிய கட்டுரையை பகிர்ந்தமைக்கு நன்றி

என்றென்றும் அன்புடன்

பிச்சைக்காரன்

ஆகாயம் [சிறுகதை]

முந்தைய கட்டுரைவரலாறும் செவ்வியலும் – மழைப்பாடல்
அடுத்த கட்டுரைமாடன்மோட்சம்- கடிதங்களைப் பற்றி இரு கடிதங்கள்