ஆஸ்டின் இல்லம்

சுஜாதாவின் புனைவுகளில் நாடகங்களே முக்கியமானவை என்பது என் எண்ணம். அவை டென்னஸி வில்லியம்ஸ் போன்ற அமெரிக்க யதார்த்தவாத நாடக ஆசிரியர்களின் ஆக்கபூர்வமான செல்வாக்கு கொண்டவை. கதைமாந்தரை நன்றாக உரையாடச்செய்ய சுஜாதாவால் முடியும்- யதார்த்தவாத நாடகங்கள் உரையாடல்களை நம்பி செயல்படுபவை

அடுத்தபடியாக அவருடைய தன்வரலாற்றுத்தன்மை கொண்ட ஸ்ரீரங்கம் கதைகள் முக்கியமானவை.அரிதாகச் சில நடுத்தரவர்க்கச் சித்திரங்கள் கொண்ட சிறுகதைகளைச் சொல்லலாம். அவருடைய அறிவியல்கதைகள் அறிவியலின் மெய்யான இயல்கைகளை எடுத்துக்கொள்ளாமல் தொழில்நுட்ப வேடிக்கையை அறிவியலாக எண்ணி மயங்குபவை. அவருடைய நாவல்கள் பெரும்பாலும் சென்றுதேய்ந்திறும் தன்மைகொண்டவை. துப்பறியும் கதைகள் நடைக்காக மட்டுமே முக்கியமானவை

ஆனால் அவருடைய சில குறுநாவல்களை நாடகங்களுக்கும், தன்வரலாற்றுச் சிறுகதைகளுக்கும் அடுத்தபடியாகச் சொல்லவேண்டும். குருப்பிரசாத்தின் கடைசிதினம் போன்ற குறுநாவல்கள் இலக்கியவாசகனின் கவனத்திற்குரியவை. அவற்றில் சுஜாதாவின் இரண்டு புனைவுத்திறன்கள் வெளிப்படுகின்றன. ஒன்று, விசைகொண்டு தாவிச்செல்லும் சொற்றொடர்கள் வழியாக விரைவான கோட்டோவியமாக உருவாக்கப்படும் சூழல்சித்தரிப்பு. இரண்டு, கதைமாந்தரை உரையாடல்கள் வழியாகவே ஏறத்தாழ முழுமையாக உருவாக்கிவிடும் இயல்பு.

ஆகவே அவை ஒரு வாழ்க்கைச் சூழலை, வாழும் மனிதர்களை அழகாகக் காட்டுகின்றன. அவர் உண்மையான ஒரு வாழ்க்கைச்சிக்கலைத் தொட்டுவிட்டால் அவற்றுக்கு இலக்கியத்தகுதி வந்துவிடுகிறது. சுஜாதாவின் அத்தகைய புனைவுகளால்தான் அவருக்கு வேறெந்த வணிக எழுத்தாளருக்கும் அமையாத இலக்கிய இடம் உருவாகிறது.

நாவல்களை எழுதும்போது சுஜாதாவின் பொறுமை, கவனம் போய்விடுகிறது. அவர் அவற்றை வாராவாரம் எழுதினார். ஓராண்டெல்லாம் ஒன்றில் நிலைத்திருக்க அவரால் முடிவதில்லை. பெரும்பாலும் நாவல்களை  ‘எப்படியாவது’ முடித்துவைக்கிறார். குறுநாவல்களில் அச்சிக்கல் இல்லை

நீண்டகாலம் முன்பு சுஜாதாவின் ஆஸ்டின் இல்லம் என்னும் குறுநாவலை வாசித்தபோது அவருடைய இலக்கிய ஆக்கங்களில் ஒன்று என்னும் எண்ணம் ஏற்பட்டது, அதைப்பற்றி ஒரு கடிதம் அவருக்கு எழுதினேன். அவருடன் அதைப்பற்றி தொலைபேசியிலும் உரையாடியிருக்கிறேன். இந்த பயணச்சூழலில் ஈரோட்டில் ஓர் உணவகத்தில் அந்த நூலை வாங்கினேன். அன்றுமாலை படித்து முடித்தேன்.

இன்றும் ஆர்வமான வாசிப்பை அளிக்கிறது ஆஸ்டின் இல்லம். சுஜாதாவின் கடைசிக்கால ஆக்கம். அந்த பாய்ச்சல்நடையை அவர் மிகப்பயின்று அலட்சியமாக பயன்படுத்துகிறார். ஒரு கலைவடிவை அலட்சியமாகப் பயன்படுத்துவதே அதன் உச்சம், ஆனால் அதன் பலவீனங்களும் உண்டு. சுஜாதாவின் ஒரு சொற்றொடரில் நாலைந்து அரிய நுண்சித்திரங்கள் உள்ளன.கூடவே எழுவாய்பயனிலைக் குழப்பங்களும், சொற்றொடர் முறிதல்களும், ஏராளமான சொற்பிழைகளும் உள்ளன. ஆனால் அந்த மொழிப்பிழைகள் ஒருவகை மீறல்கள், ஆகவே படைப்பூக்கம் கொண்டவை. அந்த மொழிச்சிக்கல் அவரை வரிவரியாக வாசிக்கவும் செய்கிறது, அந்தச் சித்தரிப்பின் நுட்பம் நம் ஆர்வத்தையும் தக்கவைத்துக்கொள்கிறதுச்

சென்னையில் தன்னைத்தானே உருவாக்கிக்கொண்டு எழுந்துவந்த பெரும்பணக்காரர் ஒருவரின் கூட்டுக்குடும்பம் வாழும் வீடு ஆஸ்டின் இல்லம். அந்த தெருவே அவருடையதுதான். அவருடைய பேரன் ஒருவன் அமெரிக்கா செல்லும் தருணத்தில் தொடங்கும் நாவல் இன்னொரு பேரன் தசைச்சிதைவுநோயால் தவிர்க்கமுடியாத சாவை நோக்கிச் செல்வதை சொல்லுமிடத்தில் மையம் கொள்கிறது.

ஆனால் எந்த மெல்லுணர்ச்சிகளும் இல்லை. ஒவ்வொருவரும் அதை ஒவ்வொருவகையில் எதிர்கொள்கிறார்கள். பையனின் அம்மாவுக்கு அது நேரடியான பெருந்துயர், பையனின் அப்பாவுக்கு ஒரு குழப்பமான அலைக்கழிவு. பையனுக்கு புரிந்துகொள்ளமுடியாத ஒரு பயணம். மிகத்தேர்ந்த சொற்திரள், உரையாடல்கள் வழியாக அந்த ஒட்டுமொத்த சூழலையும் நூறு பக்கங்களுக்குள் சுஜாதா காட்டிவிடுகிறார்

மையமான கேள்வி அச்சாவிற்கான காரணம் என்ன என்பது. தொழிலதிபரின் பாவம்தான் அப்படி வந்து விளைந்தது என்பது அவரது பையன்களின் தரப்பு. இனக்குழுவுக்குள்ளேயே திருமணம் செய்ததுதான் காரணம் என்பது டாக்டர்களின் தரப்பு. பலதரப்புகளைச் சொல்லி அவற்றுக்கெல்லாம் அப்பால் விளக்கமுடியாமல் நின்றுகொண்டிருக்கும் மரணத்தைச் சுட்டி நாவல் முடிகிறது.

ஒரே சொல்லில் சுஜாதாவை வணிக எழுத்தாளர் என நிராகரிக்கும் சிற்றிதழாளர் உண்டு. ஆனால் அப்படிச்சொல்பவர்கள் பலர் எழுதிய அல்லது அவர்கள் சிலாகிக்கும் பெரும்பாலான படைப்புக்கள் திறனோ நோக்கோ இல்லாத சூம்பிப்போன அன்றாடச் சித்தரிப்புக்கள், அல்லது மென்பாலியல் கொஞ்சல்கள். சுஜாதாவின் இந்தக் குறுநாவல் அவற்றைவிட பலமடங்கு மேலான ஒரு கலைப்படைப்பு. இந்நாவல் எழுப்பும் அழுத்தமான கேள்விகளும் குழப்பங்களும் தமிழின் சிறந்த இலக்கியப் புனைவுகளிலேயே நிகழ்ந்துள்ளன.

திரும்பத்திரும்ப  ‘ஏன்?’ என்ற வினாவை எழுப்பிக்கொண்டே செல்கிறது இக்குறுநாவல். அந்தக் கேள்வி நாவலுக்குள் வரும் சிலரை திகைக்கவைக்கிறது, சிலர் ஆயத்தப்பதில்களால் அமைதிகொள்கிறார்கள். சிலருக்கு கேள்வியே இல்லை, அவர்களுக்கு வாழ்க்கை என்பதும் பொருட்டல்ல. வாழ்க்கையில் தனக்கு என்ன கிடைக்கும் என்பதைப்போலவே சாவிலும் என்ன கிடைக்கும் என்று பார்க்கிறார்கள். வெறும் உரையாடல் வழியாகவே இந்த மானுடவண்ணங்களைச் சுஜாதா காட்டுகிறார்

இக்குறுநாவலின் மிகநுண்ணிய பகுதி, சிறந்த புனைவெழுத்தாளன் மட்டுமே உருவாக்கக்கூடிய ஒன்று, சாவு அணுகும்போது பத்துவயதான பையனுக்குள் உருவாகும் காமம். தன் அண்ணன் மணம்செய்யவிருக்கும் பெண்ணிடம் அவன் அடையும் ஈர்ப்பு. சாவு உளத்தடைகளை தகர்க்கிறதா? அல்லது சட்டென்று முதிர்ச்சியை கொண்டுவருகிறதா? அவனுக்கு அண்ணன்மேல் எங்கோ பொறாமை இருந்திருக்கிறதா? விளக்கமுடியாத அந்த இடத்தை தொட்டுச் செல்கிறார் சுஜாதா

இந்நாவலின் எல்லை என்ன? சுஜாதா சென்று தொடுவது தத்துவ –மெய்யியல் கேள்வி. அதன் எல்லா தீவிரத்தையும் அவர் எதிர்கொள்ளவில்லை. அதற்கு அவருடைய துள்ளுநடையும், சுருக்கமான ஆனால் கொஞ்சம் செயற்கையான உரைநடையும் அதற்கு உதவவில்லை. பெரிய படைப்பாளிகளுக்கு மாறாத ஒற்றைநடை இருப்பதில்லை, அவர்களின் நடை தேவைக்கேற்ப நெகிழ்ந்து உருமாறுவது. சுஜாதாவின் நடை அவருடைய அடையாளமும் சிறையும் ஆக உள்ளது. ஆகவே அடிப்படை வினாக்களை நோக்கி மேலும் திறக்கவேண்டிய இடத்தில் ஒரு சுருக்கமான முடிவை முன்வைத்து நின்றுவிடுகிறது ஆஸ்டின் இல்லம்

இந்தச் சிறிய நாவலிலேயே அந்த அவசரமுடிவு உள்ளது. கடைசிக்காட்சியை ஒரு கூட்டுச்சந்திப்பாக அமைத்திருக்கும் விதமும் அந்த உரையாடல்களும், சட்டென்ற முடிவும் இந்நாவலின் முதிர்வை நிகழாமலாக்கிவிடுகின்றன. கதையை முன்னரேகூட நிறுத்த முடியும், பலசமயம் அசோகமித்திரன் அதைச் செய்வார். ஆனால் அனைத்தும் எப்படியோ குறிப்புணர்த்தப்பட்டிருக்கவேண்டும். இங்கே எல்லாமே சொல்லப்படுகிறது, சுருக்கமாக.

சுஜாதாவின் நடை பலவீனமாக ஆகும் இடம் இப்படி அவர் முதன்மையான கருக்களை எடுத்தாளும்போது வருகிறது. இரண்டு எல்லைகளில் அது முட்டிக்கொண்டு நிற்கிறது. ஒன்று, அதனால் உளச்சிக்கல்களை, உளக்கொந்தளிப்புகளைச் சொல்ல முடியவில்லை. இரண்டு, அதனால் சிந்தனைகளை முன்வைக்கமுடியவில்லை.

சுஜாதாவின் சித்தரிப்புமேதமை இந்நாவலின் அத்தனை கதைமாந்தர்களையும் அருகே காணவைக்கிறது. அவருடைய நடை அவர்களுக்குள் நாம் நுழையமுடியாமலும் ஆக்குகிறது.

அனைத்துக்கும் அப்பால் சுஜாதா என்ற நவீனத்துவருக்கு தத்துவம், மெய்யியலில் இருந்த பயிற்சியின்மையும் ஆர்வமின்மையும் இக்கருவை தொட்டு அப்படியே விட்டுவிடச் செய்கின்றன. இதில் உள்ள ஒவ்வொரு தரப்பும் விரியச்சாத்தியமானது. உதாரணமாக, பையனின் நோயை ஆராயும் டாக்டர்கள் பையனை ஓர் ஆய்வுப்பொருளாகவே காண்கிறார்கள். அவர்கள் சாவை எப்படிப் பார்க்கிறார்கள்? தன் வாரிசாக பையனைப் பார்க்கும் பெரியவர் அவனுடைய வரவிருக்கும் சாவை தன் ஆழத்தில் என்னவாக எடுத்துக்கொள்கிறார்?

இந்தியாவின் தொன்ம- தத்துவ மரபு அந்த மானுடர் உள்ளங்களில் என்னென்ன பதில்களை அளிக்கிறது, அல்லது அளிக்கவில்லை? எல்லாமே ஓரிருவரிகளாகக்கூட சொல்லப்படவில்லை, அங்கே செல்லவைக்கும் வழிகளும் திறக்கப்படவில்லை.

சுஜாதாவின் சிறந்த படைப்பு இந்தக் குறுநாவல். தமிழின் சிறந்த ஆக்கங்களில் ஒன்றும்கூட.அந்த புள்ளியில் நின்றபடியே சுஜாதா ஏன் தமிழின் முதன்மை இலக்கியவாதிகளில் ஒருவராக ஆகமுடியவில்லை என்று ஆராய்வதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது

ஆஸ்டின் இல்லம். சுஜாதா. கிழக்கு பதிப்பகம்

விளிம்புகளில் ரத்தம் கசிய…[சுஜாதாவின் நாடகங்கள்]

சுஜாதா நாடகங்கள்

வாசகர் கடிதம், சுஜாதா, இலக்கியவிமர்சனம்

சுஜாதாவின் அறிவியல் சிறுகதைகள்

சுஜாதாவின் குரல்

சுஜாதாவின் நடையின் பாதிப்பு

சுஜாதாவை காப்பாற்ற வேண்டுமா?

சுஜாதாவின் அந்தரங்கம்

சுஜாதாவை அடையாளம் காண்பது…

கூடங்குளமும் சுஜாதாவும்

சுஜாதாவும் இளைஞர்களும் ஒரு கடிதம்

சுஜாதா, இலக்கிய விமர்சனம்-ஒருகடிதமும் விளக்கமும்

தி.ஜா, வெ.சா,சுஜாதா

சுஜாதா-கடிதம்

சுஜாதா

சுஜாதா பற்றி…

சுஜாதாவின் அறிவியல்

சுஜாதாவை கைவிட்டது எது?

சுஜாதா, இருவம்புகள்

சுஜாதாவுக்காக ஓர் இரவு

சுஜாதா: மறைந்த முன்னோடி

முந்தைய கட்டுரைஅ.கா.பெருமாள் பற்றி அறிய
அடுத்த கட்டுரைமழைப்பாடல்- மாறுதலின் கதை