சென்றவரும் நினைப்பவரும்

சில பண்புகள் அருகிவிட்டன என நாம் நினைப்போம், அவை கண்ணுக்குப் படும்போது நிறைவடைவோம். ஆனால் என்றுமே அவை நம் அன்றாட வாழ்க்கையில் அவ்வளவு அரிதானவையாக, அரிதானவையாதலால் மகிழ்வூட்டுவனவாக, இருந்துகொண்டிருந்தன என்பதே உண்மை. சில மூலிகைகள் மிக அரிதானவை, ஆனால் தேட ஆரம்பித்தால் நம்மைச்சூழ்ந்து அவை கண்ணுக்குப்படாமல் இருந்துகொண்டிருப்பதைக் காணமுடியும்.

அத்தகைய ஓர் உணர்வு இன்னொருவர் மேல் மானுடர் கொள்ளும் பயன்கருதாத ஈடுபாடு. வெற்றிபெற்ற கேளிக்கைக் கலைஞர்கள் மேல் ரசிகர்களுக்கு அப்படி ஓர் ஈடுபாடு இருப்பதை நாம் அடிக்கடிக் காண்கிறோம். அதற்கு காரணங்கள் பல.எளியரசிகர் தன்னை அக்கலைஞருடன் அடையாளப்படுத்திக் கொள்கிறார், தன் பொழுதுகளை அவருடைய கலைசார்ந்து கழித்த நினைவால் அகம் நிறைந்திருக்கிறார்.

அத்துடன் அவருக்கு அவ்வண்ணம் ஒரு பேருருவின் ஆளுமையால் ஆட்கொள்ளப்பட்டிருப்பது ஒரு ஆளுமைநிறைவை அளிக்கிறது. பொதுவெளியில் அடையாளமாகிறது. “நான்லாம் எம்ஜியார் ரசிகனுங்க” என்று சொல்பவர் அந்த அடையாளத்தை சூடிக்கொள்கிறார், அதனூடாக வளர்கிறார்.

ஆசிரியர்கள் என அமைந்த ஆளுமைகளால் நிறைக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள். ஜெயகாந்தன் அப்படி பலரில் நீங்காது வாழ்பவர். சுந்தர ராமசாமியை அவ்வண்ணம் கொண்டாடும் பலரை எனக்குத்தெரியும். யோசித்தால் என்னுள்ளும் அவர் அவ்வண்ணம் நீடிக்கிறார்- நான் அவரைப் பற்றிப் பேசாத நாள் இல்லை. அலங்காரச் சொல் அல்ல, உண்மையாகவே.

ஆனால் அவர்கள் முக்கியமானவர்கள். அவர்களைப் பற்றிச் சொன்னால் பிறர் அறிவார்கள்.அவர்களின் ஆளுமையை நாம் சொல்லி விளக்கவேண்டியதில்லை. அவர்களை நாம் சொல்வதன் வழியாக ஒரு தொடர்ச்சி உருவாக்கப்படுகிறது. அறிவுலகில் அதற்கு ஓர் இடம் உண்டு

அரிதாக, மறைந்தேபோன சிலரை அவர்களின் அடுத்த தலைமுறையினர் நினைவுகூர்கிறார்கள். சிலோன் விஜயேந்திரன் கம்பதாசனை நினைவுகூர்வதுபோல. செ.து.சஞ்சீவி அவர்கள் விந்தனை நினைவுகூர்வதுபோல. கம்பதாசனோ விந்தனோ இன்று நினைக்கப்படுபவர்கள் அல்ல. இவர்கள்தான் அவர்களைச் சொல்லிச் சொல்லி நிலைநிறுத்துகிறார்கள். அவர்கள் தாங்கள் பூமியில் நீடிக்க இவர்களைப் பிடித்துக் கொண்டதுபோல. ஒரு ஆட்கொள்ளல் போல.

அத்தகைய ஒருவரைச் சந்தித்தேன். திரு அருட்செல்வன். எம்.ஜி.வல்லபன் என்னும் இதழாளரின் உதவியாளராக இளமையில் சில ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். அப்போது இதழியல்- சினிமா ஆசைகள் இருந்தன. பின்னர் ஆரம்பப்பள்ளி ஆசிரியராக ஆகிவிட்டார். எம்.ஜி.வல்லபனை தன் ஆசிரியராகவும் வழிகாட்டியாகவும் கொண்டுதான் இன்றும் வாழ்கிறார். வல்லபன் மறைந்து 13 ஆண்டுகளுக்குப்பின் அவருக்கு ஒரு நினைவுமலரை நூல்வடிவில் கொண்டுவந்திருக்கிறார்

எம்.ஜி.வல்லபன் உண்மையில் என் நினைவில் எவ்வகையிலும் நிலைகொள்ளாத பெயர். நான் திரையிதழ்களை வாசிப்பவன் அல்ல.எண்பதுகளில் இருந்தே என் கவனம் தமிழ் சினிமாவிலிருந்து விலகிவிட்டது. 1981ல் ஊரைவிட்டு ஓடியபின் நான் தமிழ் சினிமாக்களைப் பார்ப்பது 1990ல் திரும்ப தமிழ்நாட்டுக்கு, தர்மபுரி மாவட்டத்திற்கு வந்தபின்புதான். அதுவும் 1992 வரை இரண்டே இரண்டு படங்கள். 1992ல் திருமணம் முடிந்தபின்னரே ஓரளவாவது படங்கள் பார்க்கலானேன். மாதம் ஒரு படம் என்னும் கணக்கில். எம்.ஜி.வல்லபன் என்றபெயரை என் நண்பர்கள் சூரியராஜன், செந்தூரம் ஜெகதீஷ் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். உற்சாகமான மனிதர் என்று அவர்கள் கருதுவது தெரிந்தது.

இந்நூல் காட்டும் எம்.ஜி.வல்லபன் ஒரு பன்முக ஆளுமை. மங்காட்டு கிரிஜாவல்லபன் என்ற இயற்பெயர் கொண்ட வல்லபனின் தாய்மொழி மலையாளம். 1943ல் பிறந்தவர். ஆனால் குழந்தைப்பருவம் முதல் அவர் சென்னையிலேயே வளர்ந்தவர்.பள்ளிக்கல்வியில் மாநில அளவில் முதலிடம் பெற்றபின் மருத்துவக்கல்வியை உதறிவிட்டு சினிமா- இதழியல் ஆசையால் அத்துறைக்கு வந்தவர்.

பேசும்படம் இதழின் துணைஆசிரியராக பணியாற்றினார்.ஃபிலிமாலயா என்ற திரையிதழின் ஆசிரியராக இருந்து பல இதழாளர்களை உருவாக்கியிருக்கிறார். இளையராஜாவின் ஆரம்பகால நண்பர்களில் ஒருவராக இருந்திருக்கிறார். எண்பதுகளின் தொடக்கத்தில் ராஜா இசையமைத்த பல பாடல்களை எழுதியிருக்கிறார். தீர்த்தக்கரைதனிலே, மீன்கொடித்தேரில் மன்மதராஜன், சோலைக்குயிலே காலைக்கதிரே, ஆகாயகங்கை பூந்தேன்மலர் சூடி, காலைநேரக்காற்றே போன்றவை அவருடைய புகழ்மிக்க பாடல்கள்.

வல்லபனின் பாடல்களில் மலையாளத் தாக்கம் உண்டு. சுபராகம், மனோரதம் என்றெல்லாம் பயன்படுத்துகிறார். எம்.ஏ தமிழ் படித்தவராதலால் தனித்தமிழ் குறியீடுகளும் கலந்துவருகின்றன. ஆனால் மலையாளப்பாடல் எழுதும்போது அவர் மலையாளமறியாதவர் என்பதும் தெரிகிறது.. ஞான் ஞான் பாடணும் என்ற பாடல் மலையாளம் அல்ல, தமிழாளம். எனிக்கு பாடணம் என்றுதான் மலையாளத்தில் சொல்லமுடியும்.

எம்.ஜி.வல்லபன் 1980ல் தைப்பொங்கல் என்ற சினிமாவை இயக்கியிருக்கிறார்.சுஜாதா முதலிய எழுத்தாளர்களின் நண்பராக திகழ்ந்திருக்கிறார். பல இதழாளர்களுக்கு வழிகாட்டியாக இருந்திருக்கிறார். 2004ல் மறைந்தார்.

[நடுவே ஒரு செய்தி. தமிழ் விக்கிப்பீடியாவில் எம்.ஜி.வல்லவன் என்று அவர் பெயர் இருக்கிறது. வல்லபன் என்பது திருவல்லா நகரில் கோயில்கொண்ட விஷ்ணுவின் பெயர். கிரிஜாவல்லபன் என்ற பெயர் தாமரைமணாளன் என்றபேருக்கு சமானமானது. விக்கியில் ஓர் அசட்டு தனித்தமிழ் கோஷ்டி தமிழோ வரலாறோ பண்பாடோ தெரியாமல் அமர்ந்து அனைத்து பதிவுகளையும் திருத்திக்கொண்டிருக்கிறது. அவர்கள் எந்தப் பதிவையும் போடுவதில்லை- அதற்கான அறிவுத்திறன் அற்றவர்கள். திருத்தங்கள் மட்டும் செய்கிறார்கள். பிழைச்செய்திகளை சேர்க்கிறார்கள். செய்திகளை மறைக்கிறார்கள். பெயர்களைக்கூட திருத்துகிறார்கள்]

ஒட்டுமொத்தமாக எம்.ஜி.வல்லபன் ஒரு தோல்வி அடைந்த ஆளுமை என்றே சொல்லவேண்டும்.அவருடைய இலக்கு ஒரு சினிமா இதழாசிரியர் என்பதாக இருந்திருக்காது. ஏனென்றால் இதழாளர்களிலேயே இலட்சியவாத அம்சமே இல்லாதவர் சினிமா இதழாளர்தான். என்னதான் பாவனை செய்துகொண்டாலும் அவர் ஒரு கேளிக்கையை நம்பி வாழும் இன்னொரு கேளிக்கையாளர்தான். சமூகப்பார்வை, சமூக இலக்கு எல்லாம் அவருக்கு இருக்கமுடியாது

எம்.ஜி.வல்லபன் பாடலாசிரியராகவும் நிலைகொள்ள விரும்பவில்லை என்றே நினைக்கிறேன். அவருடைய இலக்கு ஓரு திரைக்கதையாளர்- இயக்குநராக சிறந்த சினிமாக்களை எழுதி உருவாக்கவேண்டும் என்பதாகவே இருந்திருக்கிறது. வழியில் அவர் தங்கிய இடங்கள்தான் பாடலாசிரியர், திரைக்கதை உதவியாளர், திரையிதழாளர் என்னும் நிலைகள்.

ஆனால் இயக்குநராக ஆக அவை தவறான பாதைகள். குறிப்பாக இதழியல்பணி. இதழாளர், பாடலாசிரியர் போன்றவை சினிமாவுடன் தொடர்புள்ள துணை அலுவல்கள். இயக்குநர் என்பவர் சினிமாவில், துணைஇயக்குநர் நிலைகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டிருக்கவேண்டும். அதில் அவர் அடைவது ’கல்வி’ அல்ல. ‘ஆளுமைப்பயிற்சி’. இயக்குநரின் தொழிலை எளிதில் கற்றுக்கொள்ளமுடியும். இயக்குநருக்கான ஆளுமையை அடையவே நீண்டகாலமாகும்.

எம்.ஜி.வல்லபனின் தைப்பொங்கல் படம் பற்றிய ஒரு குறிப்பில் அது மிகச்சிறப்பாக எழுதப்பட்ட திரைக்கதை, வரிக்குவரி முன்னரே எழுதிவிட்டு அவர் படப்பிடிப்புக்குச் சென்றார் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால் மென்மையான இயல்புகொண்ட அவரால் அனைவரையும் விரட்டியும் மிரட்டியும் வேலைவாங்க முடியவில்லை என்றும், அதனால் திரைக்கதையில் இருந்த அழுத்தம் படத்தில் உருவாகவில்லை என்றும், விளைவாகப் படம் தோல்வியடைந்தது என்றும் கூறுகிறார் கட்டுரையாளர்.

என் சினிமா அனுபவங்களில் இருந்து அதை ஊகிக்க முடிகிறது. காகிதத்தில் எல்லாமே சரியாக இருக்கும் பல படங்களை எனக்குத்தெரியும். சினிமா என்பது ‘செயல்படுத்தும் திறனால்’ ஆன கலை. திரைக்கதை என்பது எழவிருக்கும் சினிமா பற்றிய ஓர் உளஉருவகம்தான். நல்ல திரைக்கதை நல்ல படத்திற்கான எந்த உறுதிப்பாட்டையும் அளிப்பதில்லை. சொல்லப்போனால் நன்றாக எடுக்கப்படவில்லை என்றால் அது மோசமான திரைக்கதை என்ற உளப்பதிவையும் உருவாக்கும்.

சினிமாவை நிகழ்த்திக்காட்ட முதன்மையாகத் தேவையாக இருப்பது பொறுமை,விடாப்பிடியான உழைப்பு, பலதுறைகளை ஒருங்கிணைக்கும் நிர்வாகத்திறன், பலரை இணைத்து வேலைவாங்கும் அரவணைப்புத்தன்மை. அதை அனைவருடனும் இணைந்து கொண்டாடி நிகழ்த்துபவர்கள் உண்டு, சங்கர் போல. மிக ஒதுங்கி நம்பகமான உதவியாளர்கள் வழி நிகழ்த்துபவர்கள் உண்டு, மணி ரத்னம் போல. ஆனால் அந்த திறன்கள் செயல்பட்டாகவேண்டும்

இந்நூல் காட்டும் எம்.ஜி.வல்லபன் திரைப்படம் சார்ந்த நிர்வாகத்திறன் அற்றவர். பொறுமையும் குறைவு. தனிப்பட்ட முறையில் எளிதில் புண்படும் உளநிலை கொண்டிருக்கிறார். அவருடைய உதவியாளர்தான் பின்னாளில் சித்தி முதலிய தொலைத்தொடர்களை எடுத்த சி.ஜெ.பாஸ்கர். சித்தி படத்துக்கு முதல் கதைவடிவை எம்.ஜி.வல்லபன்தான் எழுதினார். ஆனால் சிறு மனவேறுபாட்டால் விலகிக்கொண்டார். அது அனேகமாக ஆணவச்சிக்கல், தன்னிடம் உதவியாளராக இருந்தவர் தன்னிடம் வேலைவாங்குவதற்கு எதிரான உளநிலை.

பழகுவதற்கு உற்சாகமானவராக, பிறருக்கு உதவுபவராக, தன்பெயரை முன்னிலைப்படுத்திக் கொள்ளாதவராக எம்.ஜி.வல்லபன் இருந்திருக்கிறார். தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ளாதவர் சினிமாவில் வெல்ல முடியாது- வென்றபின்னரே அது ஒரு நற்பண்பு. பிறருக்கு உதவ எப்போதும் சித்தமாக இருப்பவர் சினிமாவில் பிறரால் பயன்படுத்திக்கொள்ளப்படுவார்.

தைப்பொங்கல் படத்தின் நல்ல பிரதி யூடியூபில் உள்ளது. முதல் காட்சியிலேயே இயக்குநராக அவருடைய திரைமொழியின் அனுபவமின்மையை காணலாம். ராதிகா நீர் மொள்ள வருகிறார். அவர் குடத்தில் நீர்மொண்டு வைத்துவிட்டு துணிகளைத் துவைத்துவிட்டு சென்று பானையை எடுக்கும்போது உள்ளே சில மலர்கள் விழுந்து கிடக்கின்றன. முகம் மலர்ந்து பானையுடன் கிளம்புகிறார்.

எழுத்தில் நல்ல காட்சி. அந்தக்கதாபாத்திரத்தின் இயல்பான உற்சாகமான மனநிலையை குறிப்பாகக் காட்டுவது. குறியீடாக அந்த இளம்பெண்ணின் உள்ளத்தில் தோன்றவிருக்கும் முதற்காதலின் சின்னம்.ஆனால் மலர்கள் மரங்களில் இருந்து உதிர்வது  காட்டப்படவில்லை. அதற்கு ஒரு ஷாட் வைக்கப்பட்டிருக்கவேண்டும். ராதிகா மலர்கள் உதிர்வதைப் பார்க்கவில்லை என்பது சரி, ஆனால் ரசிகர்கள் பார்க்கவேண்டும். இல்லாவிட்டால் அதை யாரோ போட்டிருக்கிறார்கள், ராதிகா அவரை எண்ணி மகிழ்கிறார் என்ற உளப்பதிவு உருவாகிவிடும். முதல் காட்சியிலேயே இந்த தெளிவின்மை உள்ளது.

இயக்குநராக திரைமொழியின் சாத்தியங்களை உணர்வது மிக முக்கியமானது. திரைமொழி கற்பனையை தூண்டுவது, குறிப்பால் உணர்த்துவது. ஆனால் மிக எளிதாக தவறாகப் பொருள் அளிப்பதும்கூட. எம்.ஜி.வல்லபன் ஓர் இயக்குநராக திரைமொழியை பயிலவில்லை, திரைக்கதைகளாகவே அவர் சினிமாவை பார்த்திருக்கிறார் என்று தெரிகிறது.

தைப்பொங்கல் படத்தின் தோல்வி எம்.ஜி.வல்லபனின் திரைவாழ்வுக்கு முடிவுகட்டியது. இருபதாண்டுகளுக்கும் மேலாக பாடலாசிரியராக, மதர்லேன்ட் பிக்சர்ஸ் போன்ற நிறுவனங்களின் திரைக்கதை விவாதங்களில் பங்குகொள்பவராக, வசனம்-திரைக்கதை எழுதுபவராக திகழ்ந்த வல்லபன் உளம்சோர்ந்து விலகிக்கொண்டார். மீண்டும் இதழாளராக ஆனார். ஃபிலிமாலயாவின் ஆசிரியரானார்.

ஆனால் அப்போது தொலைக்காட்சி சினிமாச்செய்திகளை அள்ளி இறைக்க ஆரம்பித்துவிட்டது. எல்லா வார இதழ்களும் சினிமா இதழ்களைப்போலவே உருமாறின. சினிமா இதழ்கள் நின்றன. ஃபிலிமாலயாவை நியூஃபிலிமாலயா என்றபேரில் தானே நடத்தி நஷ்டமடைந்து நிறுத்திவிட்டு எம்.ஜி.வல்லபன் மறைந்தார்.

பல ஆண்டுகளுக்குப்பின் அருள்செல்வன் எம்.ஜி.வல்லபன் பற்றி அவருடன் தொடர்பிலிருந்த பல்வேறு ஆளுமைகளின் குறிப்புகள், கட்டுரைகளை வாங்கி இந்நூலை வெளியிட்டிருக்கிறார். சிறப்பான தயாரிப்புடன், பல அரிய புகைப்படங்களுடன் அமைந்த நூல். எம்.ஜி.வல்லபனுடன் நெருக்கமான நட்பில் இருந்த திரைக்கதையாசிரியர் ஆர்.செல்வராஜ், பாரதிராஜா போன்ற திரைஆளுமைகள் எழுதியிருக்கிறார்கள். அவரால் இதழியலில் பயிற்றுவிக்கப்பட்டவர்கள் எழுதியிருக்கிறார்கள். ஒரு சீரிய முயற்சி இந்நூல். இன்றும் இத்தகைய அர்ப்பணிப்பு இருப்பது வியப்பூட்டுவது இந்த நேர்த்தியால்தான்

ஆனால் இதிலுள்ள கட்டுரைகளில் எழுத்தாளர் அமுதவன் எழுதிய கட்டுரை மட்டுமே உண்மையில் முக்கியமானது. எம்.ஜி.வல்லபன் பற்றிய நுண்ணிய சித்தரிப்புடன் அக்கால சினிமாச்சூழலையும் அளிக்கிறார். உதாரணமாக, அமுதவன் ஃபிலிமாலயா அலுவலகம் சென்றபோது அந்த கட்டிடத்தின் முகப்பில் ஒரு பகுதியில் குடியிருந்த ஓர் இளம்பெண் ஆவலுடன் சினிமா இதழுக்குச் செல்பவர்களின் அனைத்துச் செய்திகளையும் கேட்டு அறிந்துகொள்கிறார். சினிமா பற்றிய தாளாத மோகத்துடன் இருக்கிறார். பின்னாளில் அவர்தான் நடிகை ஜெயசுதா. இத்தகைய சித்திரங்களே என்னைப்போன்ற எழுத்தாளனுக்கு முக்கியமானவை.

கே.என்.சிவராமன் இதழியலில் நுழைய எம்.ஜி.வல்லபன் வழியமைத்தார் என்று தெரிந்துகொண்டேன். அவர் எழுதிய கட்டுரையும் குறிப்பிடத்தக்கது. மற்ற அத்தனை கட்டுரைகளும் வழக்கமான உபச்சாரப் புகழ்மொழிகள், வாழ்த்துரைகள் மட்டுமே. எம்.ஜி.வல்லபனுடன் பழகிய அனுபவங்களைக்கூட எவராலும் மீட்டெடுக்க முடியவில்லை- அவரைப்பற்றி குறிப்பாக எந்த அவதானிப்பையும் சொல்லமுடியவில்லை. ஆர்வமூட்டும் நிகழ்ச்சிகளைக்கூட எவரும் சொல்லவில்லை. அவருடனேயே சுற்றிய ஆர்.செல்வராஜால்கூட. இத்தனை அர்ப்பணிப்புடன் இருந்தாலும் இந்நூலின் தொகுப்பாசிரியர் கூட மிகச் சாதாரணமான ஒரு நினைவுகூரலையே எழுதியிருக்கிறார்

மண்விட்டு மறைபவர் எப்படியாவது ஒரு நல்ல எழுத்தாளனுக்கு நட்பாக இருக்கவேண்டியது எவ்வளவு அவசியமானது என்று தெரிகிறது. கபிலரை அறிமுகமில்லை என்றால் பாரியை எவர் நினைவில் வைத்திருப்பார்கள்?

கசப்பெழுத்தின் நூற்றாண்டு- விந்தன்

சிலோன் விஜயேந்திரன்

முந்தைய கட்டுரைமணி ரத்னம் உரையாடல், கடிதங்கள்-4
அடுத்த கட்டுரைவெண்முரசு வினாக்கள்-9