[முந்தைய பதிவின் தொடர்ச்சி…]
மகிடபதியை நாஞ்சில் நாடன் வெறுப்பது இயல்பே. அவரை ஒருவகை கோமாளியாகவே அவர் கருதிவந்திருக்கிறார். அவருக்கு எப்படி எங்கே வருவதென ஒரு வரைமுறை கிடையாது. சிவஞான போதமும் கைவல்யநவநீதமும் கற்ற முதுபெரும் சைவர் மனகாவலப்பெருமாள் பிள்ளை விஜிடபிள் பிரியாணியை விழுங்கும்போதுதான் மகிடத்தின் கனத்த குளம்படியோசை கேட்கிறது. என்ன சாஸ்திரம் படித்து என்ன புண்ணியம்? “…இல்லாட்டியும் வயசானா வீடடங்கி கெடக்கணும். கிட்டுதேண்ணுட்டு அள்ளி இப்டியா விழுங்குகது?” என்று இளைய தலைமுறைக்கு ஏகடியப்பொருளாகி புளியமரத்தில் தாழ்ந்தசாதிப் பேய் வந்து அருகே தொங்க தொங்கும் இழிநிலைக்கு ஆளாகிறது பிள்ளைவாளின் ஜீவாத்மா. [மனகாவலப்பெருமாள் பிள்ளை பேத்தி மறுவீடும் விஜிடபிள் பிரியாணியும்]
நாஞ்சில் நாடனுக்கு இப்போது வீரநாராயண மங்கலத்து ‘வெள்ளாம்புள்ளையோ’ கொள்ளும் நவீனமயமாதலில் ஆதாரமான கோபம் இருக்கிறது. பந்திப்பாயை விரித்து, நுனியிலை பரப்பி ,உப்புதொட்டு கூட்டுகறி வரை விதிப்படி பரிமாறி, பருப்பும் நெய்யும் பெய்து ‘மூட நெய்விட்டு மூக்கு வழிவார’ உண்ணும் பண்பாடு அழிகிறது. புதிய பண்பாட்டை நாஞ்சில் நாடனின் படைப்புகளை வைத்து நாம் சுருக்கமாக ‘வெஜிடபிள்பிரியாணி·பிகேஷன்’ என்று சொல்லலாம். காலனைஸேஷன், போஸ்ட் காலைனைசேஷன், மாடர்னைசேஷன், சான்ஸ்கிரிட்டைஸேஷன் போன்ற பொருந்தாப் பதங்களுக்கு பதிலாக வீரநாராயண மங்கலத்து மண்ணின் மைந்தரால் உருவாக்கபப்ட்ட இந்தப்பதம் மேலும் பொருந்துவதாகும்.
மகிடம் உண்மையில் நாஞ்சில் நாடனைத் தேடிவரவில்லை. கொங்குநாட்டில் தெருவுக்கு நாற்பது சுப்ரமணிய[க்கவுண்டர்]கள், பழனிச்சாமி[க்கவுண்டர்]கள். பையன்களானால் செந்தில் இல்லாவிட்டால் கார்த்திக். வேறு பேரிட்டால் கவுண்டர் அடையாளம் இல்லாமலாகிவிடும் போல. [நடுவே ஒரு நினைவு மின்னல். வீரப்பனை என்கவுண்டர் வைத்து போட்டுத்தள்ளிய சேதி வந்தபோது தர்மபுரியில் தொலைபேசி லைன்மேன் பழனிச்சாமிக் கவுண்டர் சொன்னது. “செரி போகுது… என்ன ஆனாலும் கொன்னவனும் நம்ம ஆளு] யாரோ ஒரு கிழக்கவுண்டருக்காகப் போன எருமையின் பாதஒலியை அரைத்தூக்கத்தில் கிடந்த நாஞ்சில் நாடன் கேட்டார். உடனே மகள் மேற்பார்வையில் ஆஸ்பத்திரி, ஆஞ்சியோ பிலாஸ்ட். எஸ்.வி.சுப்பையா போல நாஞ்சில் நாடன் மெய்ப்பாடுகளைக் காட்டியதாகவும் டாக்டர் கடுப்பாகி “இந்த அளவுக்கு நீங்க சீரியஸா எடுத்துக்கிட வேண்டியதில்லை… இது சும்மா ஒரு செஸ்ட் கஞ்செக்ஷன்தான். அட்டாக்கெல்லாம் இல்லை….” என்றதாகவும் செய்தி.
அதில் நாஞ்சில் நாடனுக்கு ஏமாற்றம் தான்; ஆனால் ஆஞ்சியோபிளாஸ்ட் அவருக்கு பிடித்திருந்தது. நல்ல ‘குடும்பத்தில்பிறந்த’ வார்த்தை. கேட்டாலே கம்பீரமாக இருக்கிறது. நாஞ்சில் நாடனுக்கு பிரஷர் பிடிக்காது. அது அவரை ஒரு சைக்கிள் டியூபாக உணரவைக்கிறது. நீரிழிவு என்று சொல்பவன் வீட்டில் ஜலபானம் இல்லை. அதென்ன, பேரிலேயே இழிவு.’ ஆஞ்சியோ பிளாஸ்ட்!’ ஏதோ நல்ல வெள்ளைக்காரி போல ஒலிக்கும், சொல்லச்சொல்ல நாவிலினிக்கும் பெயர். வெள்ளைக்காரிகளை நாஞ்சில் நாடனுக்கு பிடிக்கும். “குதிரை மாதிரில்லா இருக்காளுக. அவளுக நம்மளப் பாத்தா நாமள்லா வெக்கப்பட்டு தலைகுனிஞ்சுகிடணும்…”
செய்திகேட்ட நான் உடனே அரசு பஸ் பிடித்து முப்பத்துமூன்று இடங்களில் முக்கி முனகி நின்று நகர்ந்து விடிகாலையில் நாஞ்சில் நாடனின் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தேன். ஈஸி சேரிலமர்ந்து தினமணி படித்துக் கொண்டிருந்தார். நோய் விசாரிக்க வந்ததாகச் சொல்லவில்லை. உடனே போய் படுத்துக்கொண்டு நோய் விபரங்களைச் சொல்ல ஆரம்பித்துவிடுவார் என்று பயம். நான் நோயாளிகளைப் பார்க்கபோனால் பொதுவாக ஜோக் அடிப்பதே வழக்கம். எனக்கு நோய் வந்தால் அருண்மொழி கொஞ்சி மம்மு ஊட்டிவிடவேண்டுமென ஆசைப்படுவேன். கல்யாணத்துக்கு முன்னால் பாலக்கோட்டில் வைரல் காய்ச்சல் வந்து இருபதுநாள் கிடந்தபோது அறை நண்பன் குப்புசாமி மம்மு ஊட்டிவிட்டு முத்தமெல்லாம் கூட கொடுத்து ஆறுதல் சொல்லியிருக்கிறான்.
ஜோக் போய்க்கொண்டே இருந்தது. வாய்விட்டுச் சிரித்தாலும் ஓரக்கண்ணால் என்னைப்பார்த்தார். ஒன்றும் நடக்கவில்லை. சந்து தேடி பாம்பு பரிதவிக்கிறது.
பின்னர் மெதுவாக, வெற்றிலைக் காம்பைக் கிள்ளுவது போல, ஒரு தொடக்கம் “…ரொம்பக் கஷ்டப்படுத்திப்போட்டு ஜெயமோகன்”
“கஷ்டமெல்லாம் எங்க இல்ல நாஞ்சில்… நீங்க அந்தக் கதையிலே எழுதினீங்களே… அதுபேரென்ன முள்ளெளித்தைலம். அற்புதமான கதை. இப்டித்தான் எங்க ஊருலே..”
சிரிப்பு நடுவே ஆச்சி வந்து டீ கொடுத்தார்கள்.. “கெடந்து பயப்படுகா!”
நாஞ்சில் துணிந்துவிட்டார். போனால் போகிறது. இங்கிதம் எல்லாம் பார்த்தால் மயிருக்காகாது. “பயப்படாம பின்ன என்ன? ஆஞ்சியோ பிளாஸ்ட்னாக்க சும்மாவா? இந்த ஆஞ்சியோ பிளாஸ்ட்னா ஒரு மாடர்ன் டெக்னிக் கேட்டேளா? என்னல்லாம் கண்டுபிடிக்கானுகோ” சகல தடைகளையும் உடைத்து வெள்ளம் பிரவாகமாகியது. ரத்தக்குழாய்க்குள் பலூனைச் செலுத்துதல். அதை தள்ளிக்கொண்டே சென்று கொழுப்பு இருக்குமிடத்தில் [வெள்ளாளர்களுக்கு வாயைச்சுற்றி அதிகம்] முட்டி உடைத்தல்.
“.. சும்மா அப்டியே தூர்வாரி குப்பக்கூளமெல்லாம் அள்ளி ஓட்டிவிட்டா தெளிஞ்சுட்டு போகும்லா? இப்ப ஒரு ·ப்ரெஷ்னெஸ் இருக்கு ஜெயமோகன். என்னைக்கேட்டா இந்த ஆஞ்சியோ பிளாஸ்ட் செய்றது உடம்புக்கு ரொம்ப நல்லது. அறுத்து எடுத்து இம்சை பண்ணாம பதமா செய்யுகான்லா?”
எனக்கே ஒரு ஆஞ்சியோ பிளாஸ்ட் செய்தாலென்ன என்று சபலம் தட்டிவிட்டது. பிறந்ததில் இருந்து தூர் வாரியதேயில்லை. எனக்குள் ஓடும் பலூனை கற்பனைசெய்தேன். கிச்சுகிச்சு மூண்டது. “ஜாலியா இருக்குமா சார்?”
“என்ன ஜாலி? நம்ம நெஞ்சுலயும் முதுகிலயும் தொண்டையிலயும் கண்ட கண்ட வயரையெல்லாம் செருகி எல்லாத்தையும் ஆங்கங்கே ஸ்டீல் மிஷின்களுக்கு கனெக்ஷன் குடுத்து… ஒண்ணைப்பாத்தா சும்மா கன்யாகுமாரில பவுர்ணமிக்கு அலையடிக்க மாதிரி ஓடுது. இன்னொண்ணில அனக்கமே இல்ல. எளவு, நாம செத்தாச்சா மிச்சமிருக்காண்ணும் அதைப்பாத்து சொல்லிகிட முடியாது. மூவாயிரம் நாலாயிரம்ணு ஒண்ணுல டிஜிட் ஏறிக்கிடே போகுது. இது என்னது நம்ம சிந்தனைக்க மதிப்பை காட்டுத மிசினாண்ணு ஒரு சந்தோஷம்… பின்ன ஒண்ணும் தெரியாது. அனங்காம கெடக்க வேண்டியதுதான். நாம நம்மள ஒரு எலக்டிரானிக் சர்க்யூட் மாதிரி ·பீல் பண்றப்ப என்னத்தை அனங்குகது போங்க. நான் எச்சிலைக்கூட்டி முழுங்கல்ல. ஒண்ணுமே நெனைக்கவும் இல்ல. என்னமாம் செய்யப்போய் உள்ளுக்குள்ள ஷார்ட் சர்க்யூட் ஆகிபோனா என்ன செய்ய? பிள்ள குட்டி இருக்கே?”
தமிழ்நாடு முழுக்க ஆஞ்சியோ பிளாஸ்ட் என்னும் கலையை பரப்பியதில் நாஞ்சில் நாடனுக்கு முக்கியமான பங்கு உண்டு. உற்சாகம் ,ஆவேசம். ஆஸ்பத்திரியில் உள்ள டாக்டர்கள், பெற்ற பிள்ளைகளைப்போல கவனித்துக் கொண்டார்கள். கடுமையான டயட் சொல்லபப்ட்டது. நாஞ்சில் நாடன் அதை சிரமேற்கொண்டார். உண்ணும் உணவு, தின்னும் வெற்றிலை, உடுக்கும் உடை, கிடக்கும் பாய், அருந்தும் பிராந்தி அனைத்துமே டயட் நினைவில். ஆனால் பேசக்கேட்டால் அது டயட் தானா என எளிய ஆத்மாக்களுக்கு ஐயம் கிளம்பலாம்.
“அரைக்கீரை ரொம்ப நல்லதுண்ணு சொல்லுகா ஜெயமோகன். அரைக்கீரையை நல்லா ஆய்ஞ்சு ,மண்ணுகிண்ணு போக சுத்தம் பண்ணி, வாணலிய அடுப்பில ஏத்தி, ஒரு கரண்டி தேங்காயெண்ணைய விட்டு ,அதில போட்டு கொஞ்சம் உப்பு தெளிச்சு நல்லா சுண்டவச்சு அப்டியே ஒரு பாத்திரத்தில கொட்டிட்டு இன்னொரு வாணலிய அடுப்பில வச்சு கொஞ்சம் எண்ணைய விட்டு கடுகு கறிவேப்பில உள்ளி போட்டு தாளிச்சு எடுத்தா சோத்துக்கு தொட்டுகிட நல்லா இருக்கும். மோருக்கு முன்னால ரசத்துக்கு பொருத்தம்…. சோத்திலக்கூட போட்டுப் பிசைஞ்சி திங்கலாம்…”
இதைப்போல பயத்தம் சுண்டல் [நல்லா தேங்காப்பூ துருவிபோட்டு தாளிச்சு எடுத்தா மணமாட்டு இருக்கும்] முருங்கைக்கீரை [ஊரிலே நெய் காய்ச்சினாக்க அதில முருங்கயிலையைப்போட்டு பொரிச்சு எடுப்பாங்க. அப்டி ஒரு ருசி அதுக்கு] வாழைத்தண்டுக்கும் மோட்சம் இல்லை. அதை நல்லெண்ணை போட்டு வதக்க வேண்டும். வெள்ளரிப்பிஞ்சை நெய்யில் வதக்கி சாப்பிடுவாரா என கேட்க நினைத்து அடக்கிக் கொண்டேன். அதைக் கேட்கப்போய் புதிய ‘ரெசிப்பி’ ஆகிவிடும் அபாயம் உண்டு.
“இதிலே நல்ல விஷயம் என்னான்னா அவர் வீட்டிலேயே இப்ப டாக்டர் இருக்கா. அப்டி யாராவது கூடவே இருந்து கவனிச்சுகிட்டாத்தான் அவரு ஒரு கண்டிரோலிலே இருப்பார் ஜெயன்” என்றார் வசந்தகுமார். நாலுவாரம் கழித்து ·போனில் நாஞ்சில் நாடனிடம் பேசினேன். “டயட்டெல்லாம் இப்ப ஒண்ணும் இல்ல…. நேரமே இல்ல ஜெயமோகன். அலைச்சலிலே போகுது வண்டி. பின்ன ஒரு ஆறுதல் என்னான்னா வீட்டிலேயே டாக்டர் இருக்கா. ஒண்ணு கெடக்க ஒண்ணுண்னாலும் அவ இருக்கப்பட்ட ஒரு தைரியம் இருக்கு பாருங்க”
‘சுப்ரமணிய பிள்ளை, கைமருத்துவம் — அலோப்பதி ‘ என்று போர்டு மாட்டி கோவையில் பிராக்டீஸ் செய்யுமளவுக்கு இப்போது நாஞ்சில் நாடனுக்கு மருத்துவ அறிவு விருத்தியாகியிருக்கிறது. எந்த நோயைப் பற்றி சொன்னாலும் விரிவாக அதன் ஊற்றுமுகம், ஊற்றடைக்கும் கல் எல்லாவற்றையும் விளக்கி அந்த நோய் நமக்கு வந்தால் நன்றாக இருக்குமே என்ற ஆசையை உருவாக்கிவிடுவார். விரிவான மருந்து பெயர்கள், டாக்டர்கள் சொல்வது போலல்லாமல் சைவ மணம் கமழச் சொல்லப்படும். தீராத ஐயங்களைக் கேட்கப்போய் “உங்களுக்கு ஒண்ணும் நோய் கெடையாது. சும்மா நச்சுபண்ணாம கெடங்க” என்று சங்கீதா சொல்லிவிட்டதில் வருத்தம். “ஆஸ்பத்திரியிலே டாக்டர்கள் பெத்த பிள்ளை மாதிரி இருக்காளுக. பெத்தபிள்ளை டாக்டர் மாதிரி பேசுகா”.
இப்போது ஏறத்தாழ இரண்டுவருடங்களாக தலைமறைவாக திரிகிறார் என்று அவரே சொன்னார். இதயம், கல்லீரல், மண்ணீரல் எதையுமே பரிசோதிக்கவில்லை. “நல்ல்லாத்தான் இருக்கேன். இப்ப என்ன? ஒரு ஆறுமாசம் நல்லா டயட் இருந்து எல்லாம் சரி பண்ணின பிறவு போகலாம்னு இருக்கேன். இப்ப போனா டாக்டர் வருத்தப்படுவார். பாவம் நல்ல மனுஷன்…” டயட்டெல்லாம் சும்மா. ஆடவல்லானின் ஆட்டத்தை டயட்டை வைத்தா மானுடப் பதர்கள் நிறுத்திவிடப்போகின்றன? “ஆச்சு ஜெயமோகன்… வயசும் அறுபதாயாச்சு. எல்லாம் கூடி எண்ணிப் பாத்தா கொஞ்சம் புக்கு இருக்கு. பிள்ளையள கரையேத்தியாச்சு… இனிமேப்பின்ன என்ன?”
“அறுபது ஒரு வயசா? “
“அது நியாயம். அதைச்சொன்னா செறுக்கிவிள்ளை கேக்க மாட்டேங்கியாளே…”
நாஞ்சில் நாடன் தலைக்கும் மீசைக்கும் சாயமடித்துக் கொள்வதில்லை. சீனிக்கடுகு கலவை. அருகே நின்றால் நான் அவருக்கு சமவயதாகத்தெரிவேன், நான் பதினைந்துவருடம் சின்னவன். என்னை இளம்பெண்கள் அங்கிள் என்றும் குழந்தைகள் தாத்தா என்றும் அழைக்க ஆரம்பித்திருக்கின்றன. நாஞ்சில் நாடனின் சமவயதாளரான கல்யாணி [வண்ணதாசன்] இன்னும் முதுமையாகத் தெரிவார். வண்ணநிலவன் நாஞ்சில் நாடனுக்கு மாமாபோல. நாஞ்சில் நாடன் பூரண ஆரோக்கியத்துடன்தான் இருக்கிறார் என்று படுகிறது. கும்பமுனி இப்போதுதான் திண்ணைக்கு வந்து உட்கார்ந்திருக்கிறார்.
நாஞ்சில் நாடனின் இளமையின் ரகசியம் என்ன? அத்தனை சிக்கல்கள் நடுவிலும் அவருக்கு வாழ்க்கை ஒரு பெரும் ரசனை வெளியாகவே இருந்திருக்கிறது. ஒவ்வொருநாளும் சிரித்து ரசித்து மகிழ்ந்தபடித்தான் வாழ்ந்திருக்கிறார். சாப்பாடு, கவிதை, நண்பர்கள். நாஞ்சில் நாடன் என்று நினைக்கும்போதே இந்தப் பதினைந்து வருடங்களில் பல்வேறு நகரங்களில் விடுதியறைகளில் தங்கி விடிய விடிய பேசி சிரித்து வயிறு வலிக்க குப்புறப்படுத்து உருண்டு எழுந்து சொக்கிப்போய் விடிகாலையில் டீ குடிக்க நடந்துபோன நினைவுகள்தான் எழுகின்றன.
பேசிச் சலித்ததேயில்லை. என் நோக்கில் நல்ல கலைஞர்கள் எல்லாருலமே பெரும் நகைச்சுவை விற்பன்னர்கள். சிலர் எழுத்தில் அது இருக்கும் சிலரில் அது வெளிபப்டாது. ஜெயகாந்தன் எழுத்தில் நகைச்சுவை பொதுவாக அரிது. ஆனால் அவரது அவையில் எப்போதும் சிரிப்பு முழங்கும். நாஞ்சில் நாடனின் சிரிப்பில் ஒருபோதும் பகைமையும் நக்கலும் கூடியதில்லை. ஒரு பதினைந்துவருடம் அருகேயிருந்து அறிந்தபோதிலும் மனம் குன்றும் ஒரு சொல் ,ஒரு முகமாற்றம் கூட அறிந்ததில்லை.
நானும் ,அவரும் , ’மரபின்மைந்தன்’ முத்தையாவும் , ரவீந்திரனும் குற்றாலத்தில் குளிர் ஏறும் இரவுவரை பேசிவிட்டு நள்ளிரவில் துண்டை தலைக்குக் கட்டிக் கொண்டு சிரித்துக் குலுங்கியபடி அருவியைக் காணச் சென்றோம் ஒருமுறை. தன்னந்தனிமையில் தனக்குள் ஆழ்ந்து பெய்துகொண்டிருக்கும் பேரருவியில் அவருடன் சென்று நின்றேன். அவர் அருவியில் குளிப்பது அம்மையப்பன் சன்னிதியில் கைகூப்பி நிற்பதுபோலிருக்கும். தோள்குறுக்கிக் கோர்த்த கைகளை மார்பில் அமுக்கி பரவசத்தில் சுளித்த முகத்துடன். வெடவெடவென ஆனந்த நடுங்கல் வேறு.
மீண்டு வந்து நின்றபோது இருளுக்குள் தலைகீழ் வெண்தழல்போல விழுந்த நீரையே பார்த்துவிட்டு நாஞ்சில் நாடன் சொன்னார். “போரும் ஜெயமோகன். என்னத்த தேடுகோம். எங்க பாத்தாலும் இப்டி நெரப்பி வச்சிருக்கே… பாத்து அனுபவிச்சு மாளல்லியே… ஒண்ணுலயே நின்னாக்கூட ஒரு ஆயுசு பத்தாதே… என்னத்துக்குன்னு இருக்கு… இதெல்லாம் இப்டி இருக்கிறப்ப…” கண்களில் கண்ணீரின் திரை. மேலே ஏந்திய முகம் “…எப்டி ஒரு ஆவேசம் பாத்தேளா? இந்தா நிக்கேண்டா நான்னு சொல்றாப்ல.. இது போரும், வேற ஒண்ணுமே வேண்டாம்!”
ஆனால் தன் நூலை கூர்ந்து ரசிக்கும் வாசகன் மீது எழுத்தாளன் கொள்ளும் பிரியத்துக்கு அளவேயில்லை. அவ்வாசகன் கண்கள் வழியாக அவனே தன் படைப்பை மீண்டும் மீண்டும் வாசித்துக் கொண்டிருக்கிறான். மீண்டும் மீண்டும் அவன் தன்னைக் கண்டடைகிறான். நாஞ்சில் நாடனை அவன் மேலிருந்து ரசித்துக் கொண்டிருக்கிறான்.
“நூறாண்டிரும்!” என்று நெஞ்சு நிறைவதல்லாமல் இக்கணம் வேறென்ன சொல்ல?
முற்றும்.
==================================
கமண்டல நதி – நாஞ்சில் நாடனின் புனைவுலகு
ஆசிரியர் : ஜெயமோகன்
வெளியீடு : யுனைடட் ரைட்டர்ஸ்.
விலை: 50.00 ரூபாய்
==================================
மறுபிரசுரம் /முதற்பிரசுரம் Dec 28, 2007