வெண்முரசு மறுவாசிப்பு

அன்புநிறை ஜெ,

வெண்முரசு மீள்வாசிப்பு தொடர்ச்சியாக ஜூன் 9 தொடங்கி (கல்பொருசிறுநுரை இறுதியும் முதலாவிண் அறிவிப்பும் வந்த அன்று) நேற்றோடு(செப்டம்பர் 17) வாசிப்பு நிறைவடைந்தது.கடந்த 102 நாட்களாக வெண்முரசன்றி வேறேதுமில்லாத உலகம். ஒவ்வொரு நாளும் குறைந்தது ஆறேழு மணிநேரம், வார இறுதிநாட்களில் முழு நாளும். வேறெதற்கும் பங்கிட்டுக் கொள்ள முடியாத வாசிப்பு மனநிலை.

இறுதிநாவலுக்கான அறிவிப்பு வந்ததும் இந்த மாபெரும் ஆக்கத்தை மீண்டும் முழுமையாக வாசிக்க வேண்டும் எனத் தோன்றியது. அதனால் முதற்கனல் வாசிப்பைத் தொடங்கியிருந்தேன். பின்னர் முதலாவிண் நிறைவுற்று வெண்முரசின் நிலக்காட்சிகள் தொடர்பான குறிப்புகள் எழுதவென்று வாசிப்பை ஒரு முனைப்போடு வகுத்துக்கொண்டு முன் சென்றேன்.

கங்கைக்காடுகளில் நடந்து,சகுனியின் விழிகளோடு பாலையில் சுற்றி, பின்னர் யாதவ நிலங்களில் மேய்ந்து, இளநாகனோடு தென்கடல் முனம்பிலிருந்து அஸ்தினபுரம் வரை பாரதத்தின் பெரும்பகுதி கண்டு, வண்ணக்கடல் வரை கையோடு சிறுகுறிப்புகளும், கட்டுரைக்கான வரைவுகளுமாக வந்த வாசிப்பு திசை மாற, மீண்டும் இக்கரை காணா பெருவெள்ளம் எனை முழுமுற்றாக இழுத்துக் கொண்டது. மீள் வாசிப்பின் சுவடுகளேதுமில்லாத முற்றாளுகை. அவ்வகையில் வீடுறை நாட்கள் பெரும் வரம். உணவு சமைக்கவும், அலுவலக எட்டு மணி நேரமும் தவிர முழுதாக ஆறேழு மணிநேரம் ஒவ்வொரு நாளும் வாய்த்தது.

மற்றுப்பற்றெதுவுமில்லை. வேறெதுவும் வாசிக்கவும் இயலவில்லை. மற்றெந்த எழுத்தும் உட்புகவில்லை. மனம் இதன் தாளகதிக்கு இயைந்திருந்தது. நேற்று இறுதியாக கண்ணன் பிள்ளைத்தமிழ் வாசித்து “மாமழைக்கண்ணா உனக்கே சரண்” என்று நிறைவு செய்கையில் மனம் ஒருவிதமான வெறுமையில் ஒழிந்திருந்தது.

எழுதி முடித்த உங்கள் மனநிலை எவ்விதம் இருந்திருக்குமென எண்ணிக் கொள்கிறேன்.

கங்கையின் நீரையே அள்ளி கங்கையை வணங்க நீர் விடுவதுபோல, வெண்முரசிலிருந்தே இப்படைப்பின் உருவாக்கம் குறித்தும் அதன் ஒட்டுமொத்தம் ஏற்படுத்தும் மனநிலை குறித்தும் விளங்கிக் கொள்கிறேன்.

அஸ்தினபுரியை மண்ணில் நிகரற்ற நகராக அமைப்பதற்கு ஹஸ்தி சிற்பிகளை ஒருக்கும் போது, விலங்கு நோக்கு-மானுட நோக்கு-தேவர் நோக்கு குறித்து வரும்.

தன் தந்தையர் அறிந்ததனைத்தையும் தான் பெற்று தன்னுடையதையும் சேர்த்து மைந்தனுக்கு அளித்துச் செல்வது மானுட நோக்கு என்றும், கால இடங்களுக்கு அப்பாற்பட்டு ஒட்டுமொத்த சாரத்தையும் அறியும் ஆற்றல் கொண்டது தேவர்நோக்கு என்றும் அமைச்சர் சொல்வார்.

இதுவரை வாசித்த பல மாபாரத மறுஆக்கங்களை வழிவழியாக வந்தவற்றின் தொகுப்பில் ஆசிரியன் தனது பார்வையை சேர்த்துப் படைத்தவை என்ற வகையில் மானுட நோக்கென்று கொள்ளலாம். வெண்முரசின் காலமும் இடமும் கடந்த முழுமையும், ஒன்றை ஒன்று மறுத்தும் செறிவு செய்தும் ஒன்றென்றாகும், ஒட்டுமொத்தத்தின் துளியை ஒரு கணமேனும் உணரத் தரும் அனுபவமும் விண்ணவர் நோக்கில் மட்டுமே எழச்சாத்தியமான முழுமை.

அஸ்தினபுரியின் வாஸ்துமண்டலம் அமைக்க முயலும் ஹஸ்திபதன் எனும் சிற்பி எட்டுத்திசையிலிருந்தும் நோக்கிக் குறையகற்றியபின் கனவில் வௌவாலெனத் தலைகீழாகத் தொங்கி அது இன்னும் குறைகள் கொண்டிருப்பதை கண்தொடுவார். மண்ணுக்கு அடியில் உறையும் நாகமெனவும் அது முழுமை கொள்ள வேண்டுமென முயல்வார்.

முழுமையான கலையாக்கம் ஒன்றை எவராலும் எண்ணி எண்ணி செதுக்கிச் செதுக்கி அமைத்துவிட முடியாது. எண்ண எண்ண குறையும். செதுக்கச் செதுக்க பிழைபெருகும். நிறைக்க நிறைக்க எஞ்சிக்கொண்டிருக்கும்

ஒற்றைக்கணத்தில் அது நிகழவேண்டும். ஒரு கனவெழுவதுபோல.

வெண்முரசு அவ்வண்ணம் எழுந்ததென்றே அகம் அறிகிறது. ஒவ்வொரு நாளும் எழுதப் பட்டு வாசிக்கப்பட்டு கண்ணெதிரில் வளர்ந்த இப்படைப்பின் முற்றொருமையும் முழுமையும் இது ஒற்றைக் கணத்தில் தோன்றி மண்நிகழ்ந்த பெருங்கனவென்றே எண்ணச் செய்கிறது.

முழுமுற்றான தொடர் வாசிப்பில் வெண்முரசு பேருருக் கொண்டு
நிற்கிறது. இதை ஆழம் எப்படியெல்லாம் உள்வாங்கியிருக்கிறதென வாழ்நாள் முழுவதும் வாழ்ந்தே அறிய முடியும் என்று நினைக்கிறேன்.

மீண்டும் வெண்முரசின் வார்த்தைகளிலேயே – இக்காவிய வாசிப்பனுபவத்தின் சாரமும் இதிலேயே இருக்கிறது

ஒன்றுடன் ஒன்று முரண்படும் கதைகள் ஒன்றை ஒன்று வளர்க்கும் கதைகள் என மாறும் விந்தையை இதில்தான் பார்க்க முடிகிறது. ஒன்றையொன்று மறுக்கும் கதைகள் ஒற்றைப்பேருண்மையை ஏந்தியிருப்பதைக் கண்டு திகைக்க முடிகிறது. இந்தக் கதைவெளியில் ஒவ்வொருவரும் தீயோரும் நல்லோருமென தென்படுகிறார்கள். தீயோர் நல்லோரென உருமாறுகிறார்கள், நல்லோர் இயல்பாக தெரிகிறார்கள். அது இயல்பென்றும் அதுவே வாழ்வென்றும் தன்னை காட்டுகிறது கதையின் முடிவில்லாத மாயம்.

என்னை தொகுத்துக்கொள்ளும் பொருட்டு இக்கதைகளின் மையமொன்றை எடுத்துக்கொள்ள முயன்றேன். இதன் முடிவில்லா கிளைபிரிதல்களுக்கு ஓர் ஒழுங்கையும் நெறியையும் கண்டடைய முயன்றேன். இதன் அத்தனை வளர்ச்சியும் பின்னலும் செறிவும் வாடலும் கருகலும் மலர்களென கனிகளென விதைகளென ஆவதற்காகவே என்று ஒரு பயன்நோக்கை உருவாக்கிக்கொள்ள என் எண்ணத்திறன் அனைத்தையும் செலவிட்டேன். இக்கதைகளுடன் நான் போரிட்டுக்கொண்டிருந்தேன். கை ஆயிரம் கொண்ட கார்த்தவீரியனுடன், துளியிலிருந்து பெருகும் ரத்தபீஜாசுரனுடன், பாதி வல்லமையை தன்னுடையதெனக் கொள்ளும் பாலியுடன்.
ஒரு புள்ளியில் திகைத்து செயலற்றேன். இக்கதைகளை இவ்வண்ணம் அசுரப்பேருருவாக அரக்கப்பெருவிசையாக மாற்றுவது நானே என்று உணர்ந்த பின் என் முயற்சிகளை முற்றாக கைவிட்டேன்.

இது இவ்வண்ணமே என்றுமிருக்கும், பெருகும், உருமாறும், அழிவின்மை கொண்டு முடிவின்மை நோக்கி செல்லும். இதில் சிக்கி இந்த மாபெரும் வலைப்பின்னலில் ஒரு துளி என்றாவதே இதை கேட்பவருக்கு அளிக்கப்பட்டுள்ள ஊழ்

சில நாட்கள் இடைவெளி விட்டே வேறு எதையும் எழுதவோ பேசவோ இயலும்.

இப்பெரும் காவியத்துள் எமை வாழச் செய்தமைக்கு என்றும் நன்றிகளும் வணக்கங்களும்.

மிக்க அன்புடன்,
சுபா

அன்புள்ள சுபா

முன்பொருமுறை நெல்லையில் ஓர் ஆலயத்தில் திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்கு நான் சென்றிருந்தேன். பொருள்கூறாமல் விரைந்து திருவாசகப் பாடல்களை எட்டுபேர் ஓதிக்கொண்டே சென்றார்கள். பின்னர் அவர்களில் ஒருவரிடம் அப்படி முற்றோதுவதனால், அது ஒரு சடங்கு என்பதற்கு மேல், என்ன பொருள் என்று கேட்டேன். பொருளுணர்ந்து, பொருள் ஆராய்ந்து படிப்பதல்லவா நல்லது என்றேன்

அவர் சொன்னது இது. அவர்கள் அனைவருமே திருவாசகத்தை ஏற்கனவே பொருள் ஆராய்ந்து செய்யுள்களாக பலமுறை படித்தவர்கள்தான். ஆனால் அது வேறொரு அனுபவம். ஒரே மூச்சில் முழு நூலையும் படிப்பது முற்றிலும் வேறு. அதுதான் நூல்பற்றிய முழுமைத்தோற்றத்தை அளிக்கிறது. நூலின் கட்டமைப்பை பற்றிய சித்திரம் துலங்கச்செய்கிறது.

திருவாசகம் தொகைநூல். கம்பராமாயணம் போன்ற காவியநூல்களுக்கு இது மேலும் பொருந்தும். நாவல்களை நாம் நேர் எதிர்போக்கில் வாசிக்கிறோம். நான் பெருநாவல்களை ஒரே வீச்சில் ஒட்டுமொத்தமாக வாசிப்பேன். அதன்பின் பகுதி பகுதியாக ஆங்காங்கே வாசிப்பேன்.

மொத்தவாசிப்பு முழுமைச்சித்திரத்தை அளிக்கிறது. துளித்துளியாக வாசிப்பது நுட்பங்களில் கண்நிலைக்கச் செய்கிறது. இரண்டுமே தேவையான வாசிப்புகள்தான். இரண்டும் இரண்டுவகை பார்வைகளை அளிக்கின்றன. இரண்டு வாசிப்புகளும் ஒன்றையொன்று நிரப்பிக்கொள்கின்றன

வெண்முரசு தொடராக வெளிவந்தது. நாளுக்கு ஒர் அத்தியாயம் என்பது கூர்ந்து வாசிக்க, நுட்பங்களை உள்ளே ஆராய்ந்து அறிய உதவுவது. ஆனால் அதிலுள்ள போதாமை , நாவல் முடியும்போது நம் ஒட்டுமொத்தச் சித்திரம் மங்கலாகவே பதிவாகியிருக்கும் என்பதே. நாம் எண்ணி எண்ணி தொகுத்துக்கொள்ளவேண்டும்.

ஆனால் ஒட்டுமொத்தமாக வாசிக்கைய்ல் நாம் மூழ்கிச்செல்லமுடியும். ஆழ்ந்திருக்க முடியும். அப்போது நிலக்காட்சிகள் ஒட்டுமொத்தமாக இணைந்து ஒரே சித்திரமாக விரியும். உணர்வுகள் நம்மை சூழ்ந்துகொள்ளும். கதைமாந்தர் நம்மருகே வாழ்பவர்களாக ஆகிவிடுவார்கள்.

உண்மையில் நாவல்கள் ஒரே மூச்சான வாசிப்புக்காகவே எழுதப்படுகின்றன. ஆகவே அவற்றை அவ்வண்ணம் வாசிப்பதே உகந்தது. வெண்முரசை முழுக்க வாசித்தவர்கள்கூட ஒட்டுமொத்தமாக தொடக்கத்திலிருந்து ஒரு முழுவாசிப்பை  அளித்தால் அது ஒரு முழுமையான அனுபவமாக இருக்கும்.மிஞ்சிப்போனால் மூன்றுமாதங்களில் முடித்துவிட முடியும்.

ஜெ

முந்தைய கட்டுரைமல்லர் கம்பம்  நிகழ்ச்சி
அடுத்த கட்டுரைபால் சலோபெக்கின் பயணம்