Bob Parsons, a vain insect

காலை எழுந்தவுடன் என் மனைவி இந்தச் செய்தியை MSNBCயில் பார்த்து என்னிடம் காண்பித்தாள். யானை டாக்டர் கதை ஜெ எழுதியிருக்கவில்லையென்றால் எனக்கு இது ஒரு தூரத்து செய்திதான். இனிமேல் எனக்கு இது சாதாரண செய்தி அல்ல. என்னுடைய ஐந்து டொமெய்ன்களை GoDaddy ஹோஸ்ட் செய்கிறது. ஐந்தையும் டிரான்ஸ்ஃபர் செய்யப் போகிறேன். மேலும் GoDaddyயை தொலைப்பேசியில் அழைத்து கடுமையாக எனது எதிர்ப்பை வெளிப்படுத்தினேன். அதற்கு மேல் என்ன செய்வதென்று தெரியவில்லை.

http://www.msnbc.msn.com/id/21134540/vp/42364248#42364248

பகவதிப்பெருமாள்

மோசமான விஷயம் என்னவெனில், இதனை ஒரு சமூக சேவை என ஆக்குவதுதான். ஆப்பிரிக்க விவசாயிகளுக்கு தேவைப்படும் பெரும் உதவியை செய்கிறாராம். அது துப்பாக்கி தூக்காமல் செய்யப்பட வேண்டிய உதவி என்றால் இவர் முன் வருவாரா? நகர வாழ்க்கைக்கு பழகி விட்ட தெரு நாய் கூட தனது எல்லையைத் தாண்டுவதில்லை. யானைகள் அறிவில் மேம்பட்டவை. “பகுத்தறிவு” மேம்பட்ட நாம்தான் அவற்றின் எல்லைக்குள் நுழைந்து “காடு திருத்தி, கழனி செய்து” … பின்னர் யானைகள் அட்டகாசம் என செய்தி போடுகிறோம்.

கொல்லப்பட்ட விலங்கின் தகுதியில் சிறிதும் கூட பொருந்தாத மனிதன், துப்பாக்கி என்ற ஒரே ஆயுதத்தால் மட்டுமே விலங்கின் அனைத்து சிறப்பியல்புகளையும் சிதறடித்து விடும் மனிதன்…. ஆயுதம் இன்றி விலங்கின் அருகில் நிற்கவும் கூசிக் குறுகவேண்டியவன். ஆனால் அந்த மாபெரும் விலங்கு இறந்ததும் அதன்மேல் தன் காலை தூக்கி வைத்துக் கொண்டு , துப்பாக்கியை ஊன்றிக் கொண்டு , குடித்தவனின் இளிப்பைப் போல திமிர் சிரிப்புடன் நிற்பதைப் பார்க்கும்போது அருவெறுப்பாய் இருக்கிறது.

யாராவது யானைகளுக்கும் துப்பாக்கி தந்து, சுடவும் பயிற்சி கொடுத்தி விட்டால் இவர் சென்று விவசாயிகளுக்கு உதவுவதைப் பார்க்கலாம். ஆங்கிலத்தில் ஸ்கம்பாக் என்றொரு வசை உண்டு. இந்த “விவசாயிகளின் காவலன்”க்கும் அது பொருந்தும்.

ராஜகோபாலன்.ஜா, சென்னை

முந்தைய கட்டுரைஅனல் காற்று – கடிதங்கள்
அடுத்த கட்டுரைசாதி ,நூறுநாற்காலிகள்