நண்பர் ஷாகுல் ஹமீது இந்த மின்னஞ்சலை இன்று அனுப்பியிருந்தார்
ஆசிரியருக்கு வணக்கம் ,
இன்று அதிகாலை தொழுகைக்குப்பின் வைகறையில் புறப்பட்டு, சுசீந்திரம் கோயில் அருகே சுசில் உடன் இணைந்து ,மலைகள் சூழ்ந்த திருக்குறுங்குடி கிராமத்தில் தங்கியிருந்த வெண்முரசின் இணைஆசிரியர்கள் ஸ்ரீநிவாசன் சுதா தம்பதியரை நேரில் சந்தித்து மரியாதை செய்து வந்தோம். அது எனது நல்லூழ் என்பேன்.
சாகுல் ஹமீது.
எனக்கு மிகவும் நிறைவளித்த செய்தி இது. ஸ்ரீனிவாசன் , சுதா ஸ்ரீனிவாசன் தம்பதிகள் இல்லையென்றால் வெண்முரசு இயன்றிருக்காது. வெண்முரசு ஒரு கனவென எழுந்தபோது அதன் அறைகூவல் என்ன என்று நான் நினைத்திருக்கவில்லை. என் திறமையைப் பற்றியோ என் வாழ்க்கைச்சூழலைப் பற்றியோகூட நினைக்கவில்லை. இறங்குவதென்று முடிவெடுத்த இருபதாவது நிமிடத்தில் அறிவித்துவிட்டேன், தொடங்கிவிட்டேன். எடுத்த முயற்சி பழுதற்றது என்றால் அதற்கென உரியவர்கள் வந்து சூழ்வார்கள் என்பது என் எண்ணம். அவ்வாறே நடந்தது.
வெண்முரசின் ஆக்கத்துடன் நேரடியாகத் தொடர்புள்ள பலர் உண்டு. ஆனால் எவ்வகையிலும் முதன்மையானவர்கள் ஸ்ரீனிவாசன், சுதா தம்பதியினரே. வெண்முரசின் இணையாசிரியர்கள் என்று ஷாகுல் சொல்கிறார். அது என் சொல். இதன் வெற்றிப்புகழ் என்னுடையது, அல்லல்களில் அவர்களுக்கு பாதிக்குமேல் இடமுண்டு. பெரிய பணிகள் முழுதளிப்புள்ளவர்களை கண்டடைகின்றன என்பதற்காக நான் கொள்ளும் வாழும் சான்று அவர்கள்தான்.
வெண்முரசு 2014ல் தொடங்கிய நாள் முதல் இந்த ஆண்டு முடிந்தது வரை ஸ்ரீனிவாசனும் சுதாவும் ஒவ்வொரு நாளும் பகுதிகளை மெய்ப்பு நோக்கியிருக்கிறார்கள். தகவல்களைச் சரிபார்த்திருக்கிறார்கள். முன்பின் முரண்பாடுகள் இல்லாமல் பிரதியை ஒருங்கிணைத்திருக்கிறார்கள். சுதாவுக்கு வெண்முரசின் இருபத்தாறாயிரம் பக்கங்களில் வரும் பல்லாயிரக்கணக்கான கதைமாந்தர் அனைவர் பெயரும் தெரியும். அவர்களுக்கிடையேயான உறவுமுறைகளும், கதைப்பின்னலில் அவர்களின் இடமும் தெரியும். ஒவ்வொரு பகுதியையும் இருவரும் தனித்தனியாக சரிபார்ப்பார்கள். பிழையிருந்தாலோ, விளக்கம் தேவைப்பட்டாலோ என்னை அழைப்பார்கள்.
பலசமயம் படல்களை இரவு பதினொருமணிக்கு மேல் வலையேற்றம் செய்வேன். தூங்காமல் காத்திருந்து பிழைதிருத்தங்கள் முடித்தபின்னரே அவர்கள் அந்த நாளை முடிப்பார்கள். ஒருமுறைகூட இது தவறியதில்லை. சிலசமயம் முன்னரே அழைத்து நினைவூட்டுவதும் உண்டு. ஒரு பகுதி வெளியானபின்னரும்கூட பிழைதிருத்தங்களும் செப்பனிடல்களும் செய்வார்கள். ஒரு நாவல் முடிந்து அடுத்த நாவலுக்கான இடைவெளியில் எனக்கு ஓய்வுண்டு. அவர்கள் அந்த நாவலை மீண்டும் செப்பனிட்டு அச்சுக்கு தயார் செய்வார்கள். ஏழாண்டுக்காலம், ஒவ்வொருநாளும் வெண்முரசுடன் வாழ்ந்திருக்கிறார்கள்.
ஒரு நாவலுக்கு உகந்த பிழைதிருத்துநர்- தொகுப்பாளர் கிடைப்பது இன்று எளிய நிகழ்வு அல்ல. ஊதியம் அளித்தாலும்கூட தகுதியுடையோர் கிடைப்பதில்லை. பிழைதிருத்துநர்கள் இயந்திரத்தனமான மொழிப்புரிதல் கொண்டவர்களாக இருந்தால் படைப்பை அழித்துவிடுவார்கள். பெரும்பாலான பிழைதிருத்துநர்களின் இயல்பு அதுதான். அவர்களுக்கு மொழிநடை, இலக்கணம் பற்றிய ஒரு பொதுப்புரிதல் இருக்கும். அதை நிகழ்காலச் செய்தித்தாள்நடையில் இருந்து அல்லது நிகழ்காலப் புனைவில் இருந்து அல்லது இலக்கணநெறிகளில் இருந்து உருவாக்கிக்கொண்டிருப்பார்கள். அதில் பெரும் நம்பிக்கை இருக்கும். அதை அத்தனை புனைவுமொழிமேலும் கண்மூடித்தனமாக போட்டுப்பார்ப்பார்கள்.
ஆனால் புனைவுமொழி ஒவ்வொரு புனைவுக்கும் புதிதாக எழுவவது. எப்போதுமே அது ஒரு மீறல்வழியாகவே உருவாகிறது- பாரதி முதல் நாம் அதைப் பார்க்கலாம். இலக்கணங்களை, வழக்குமொழியை அது தாண்டுகிறது. வழக்கமான வாசிப்புமுறைக்கு ,பொருட்கோள் வழிகளுக்கு அறைகூவல் விடுக்கிறது. ஒரு படைப்பாளியின் புனைவுமொழியின் தனித்தன்மையை அறிந்த பிழைதிருத்துநர் மட்டுமே மொழியை மேம்படுத்த முடியும். அவரே கூட அந்தப் படைப்பாளி அந்த குறிப்பிட்ட படைப்புக்கு உருவாக்கியிருக்கும் தனிமொழியை அறிந்தவராக இருக்கவேண்டும். நான் இரவு நாவலை எழுதிய மொழியில் வெண்முரசை எழுதவில்லை.
புனைவுமொழியின் இந்த தனித்தன்மையை அறியாதவர்கள் படைப்பூக்கம் கொண்ட பகுதிகளை எல்லாம் பிழைகளாக எண்ணி பிடுங்கி வீசிவிடுவார்கள். இது எனக்கு பலமுறை நிகழ்ந்துள்ளது. ’அகாத சுழலில்’ என நான் எழுத ’ஆகாத சூழலில்’ என திருத்தியவர்கள் உண்டு. நானோ என் எழுத்தை மீண்டும் படிக்கச் சோம்பல்படுபவன். எழுதியதுமே உளத்தே அதிலிருந்து விலகி புதியதிசை நாடுவது என் இயல்பு. ஆகவே என் படைப்புக்களில் பிழைதிருத்துநர் உருவாக்கிய பிழைகள் பல உண்டு. நானே அவற்றை பின்னர்தான் கண்டுகொள்வேன். வெண்முரசு மாபெரும் பிழைதிருத்துநர்களை கண்டுகொண்டது என்பது ஊழின் ஆணையேதான்.
புனைவில் செய்திப்பிழைகளையும் தொடர்புப்பிழைகளையும் கண்டறிவதற்கு மேலும் நுண்ணுணர்வு தேவை. இங்கே இலக்கியவிமர்சகர் என்பவர்களுக்குக்கூட புனைவு எடுத்துக்கொள்ளும் கற்பனைத்தாவல்களுக்கும் தகவல்பிழைக்கும் வேறுபாடு தெரிவதில்லை. புனைவின் அழகியல் சார்ந்த மந்தணங்களும் திட்டமிட்ட அமைதிகளும் அவர்களுக்கு ஆசிரியரின் தெளிவின்மைகளாகவும் புனைவின் போதாமைகளாகவும் தெரிகின்றன. தேர்ந்த வாசகர்கள் எடுத்துச் சொன்னால்கூட அவர்களின் அறியாமை அளிக்கும் ஆணவத்தைக் கடந்து அதை கொண்டுசெல்ல முடிவதில்லை.அப்படிப்பட்ட உளம்கொண்ட பிழைதிருத்துநர்கள் என்றால் அவர்களிடம் புனைவை விளக்கி, அதன் நோக்கத்தையும் செயல்முறையையும் விளக்கிப் புரியவைப்பது இயல்வதே அல்ல.
ஸ்ரீனிவாசனும் சுதாவும் இந்த நீண்ட நாவல்தொடரில் அவ்வண்ணம் ஒருமுறைகூட தவறான ஒர் ஐயத்தைக்கூட அடையவில்லை. ஒரு தகவல் ஏன் விடப்பட்டிருக்கிறது, ஏன் ஒரு தகவல் பிறிதொருவகையில் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை அவர்கள் மிக இயல்பாக முன்னரே ஊகித்துவிடுவார்கள். நான் அந்த முடிச்சை அவிழ்க்கவிருப்பது பல ஆயிரம் பக்கங்களுக்குப் பின்னராக இருக்கும். சுதாவுக்கும் ஸ்ரீனிவாசனுக்கும் இப்படைப்பில் முன்பறியாப்பகுதிகளே இல்லை. ஆகவேதான் அவர்களை இணை ஆசிரியர்கள் என்கிறேன்.ஒருவேளை தமிழின் நீண்ட புனைவிலக்கிய வரலாற்றிலேயே இப்படி ஒரு நூல்செப்பனிடுபவர்கள் வேறெந்த புனைவெழுத்தாளனுக்கும் அமைந்திருக்க மாட்டார்கள்
இன்றைய தமிழ்ச்சூழலில் உண்மையில் நெடுங்கால முழுதளிப்புள்ள செயல்பாடு என்பது எத்துறையிலும் இல்லை. நமக்கு முந்தைய தலைமுறையினரில் இருபது முப்பதாண்டுக்காலம் கடுந்தவம் புரிந்து இயற்றப்பட்ட படைப்புக்கள் பல உண்டு. சிங்காரவேலு முதலியாரின் அபிதான சிந்தாமணி, பெரியசாமி தூரனின் தமிழ் கலைக்களஞ்சியம், எஸ்.வையாபுரிப்பிள்ளையின் தமிழ்ப்பேரகராதி போன்றவற்றை உதாரணமாகச் சொல்லலாம். இந்த தலைமுறையில் அத்தகைய தன்னளிப்புக்கு உலகியல் மதிப்பு இல்லை. அது ஒருவகை மடமை என்றே இன்றைய பயன்சூழ் தலைமுறை கருதுகிறது
ஆனால் முழுதளிப்புள்ள செயல்பாடு வேறு எதையுமே ஈட்டித்தரவில்லை என்றாலும் நம் வாழ்வுக்கு பொருளை உருவாக்கி அளிக்கிறது. நம்மைப்பற்றி நாமே பெருமிதம் கொள்ள வழிவகுக்கிறது. இன்று எட்டுத்திசையிலிருந்தும் நம்மைச் சூழும் சிறுமைகளில் இருந்து நம்மை விடுவிக்கிறது. பெருஞ்செயல்புரிபவர்களுக்கு தனிமையும் சலிப்பும் இல்லை. ஸ்ரீனிவாசனும் சுதாவும் வெண்முரசின் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்கள். என்னைப்போன்றவர்களுக்கு புகழேனும் உள்ளது, ஸ்ரீனிவாசனும் சுதாவும் அடைவது தன் அகநிறைவை மட்டுமே.
வெண்முரசுக்குப் பின் ஸ்ரீனிவாசன் நித்ய சைதன்ய யதியின் ஆக்கங்களை மொழியாக்கம் செய்யும் பணியை ஏற்றுக்கொண்டார். அவர்கள் ஸ்ரீனிவாசனின் தாத்தாவின் ஊரான திருக்குறுங்குடிக்கு சென்று அங்கே ஓய்வுக்காலத்தை செலவிட முடிவெடுத்து ஒரு வீடு பார்த்திருந்தனர். ஸ்ரீனிவாசன் ஆளுநர் அலுவலகத்திலும் சுதா காப்பீட்டுத்துறையிலும் பணியாற்றி ஓய்வுபெற்றவர்கள். அவர்கள் திருக்குறுங்குடி செல்வது கோவிட் நோய் அலை காரணமாக தாமதமாகியது. இப்போதுதான் சென்றிருக்கிறார்கள்.
ஸ்ரீனிவாசனின் தாத்தாவின் ஊர் திருக்குறுங்குடி. அவருடைய அப்பா சிறுவனாக இருக்கும்போதே அங்கிருந்து வந்துவிட்டார்கள். ஆனால் அவருக்கு அந்த ஊருடன் ஆழுளத்தொடர்பு இருந்திருக்கிறது. அங்கே சென்று வாழவேண்டுமென்ற கனவு அவரை பல்லாண்டுகளாக மீட்டியிருக்கிறது. அது ஒரு மிகச்சிறந்த முடிவு என்பதே என் எண்ணம்.திருக்குறுங்குடி நெல்லையில் இருந்தாலும் நிலத்தின் தன்மை, பருவநிலை ஆகியவை குமரிக்குரியவை. மேற்குமலைகளின் மறுபக்கம் அமைந்த ஊர். சொல்லப்போனால் எங்கள் இருவருக்கும் நடுவே ஒரு மலைதான் இப்போது உள்ளது.
தென்பாண்டி நாட்டின் மிகப்பெரிய வைணவ ஆலயங்களில் ஒன்று திருக்குறுங்குடி. அங்குள்ள சிற்பங்களும், சூழ்ந்திருக்கும் அகன்ற தெருக்களும் பேரழகு மிக்கவை. இன்னும் அது வரலாற்றின் பொற்காலத்திலேயே நீடிக்கிறது. ஸ்ரீனிவாசனும் சுதாவும் இருக்கவேண்டிய இடம் அதுதான். ஸ்ரீனிவாசன் அவருடைய பெயர்சொல்லும் சில முதன்மையான மொழியாக்கங்களைச் செய்யவேண்டும் என விரும்புகிறேன்
ஸ்ரீனிவாசனையும் சுதாவையும் நண்பர்கள் சென்று பார்த்து வாழ்த்தியது எனக்களிக்கப்பட்ட் ஒரு பரிசு. இந்த பயணங்கள் முடிந்தபின் அருண்மொழியுடன் திருக்குறுங்குடி செல்லவேண்டும்