டார்த்தீனியம், கடிதங்கள்-5

அன்புள்ள ஜெமோ,

கடந்த விஷ்ணுபுரம் விழாவில் அமிர்தம் சூர்யா டார்த்தீனியம் பற்றி குறிப்பிட்டதிலிருந்து, அந்த குறுநாவலை இணையத்திலும், கடைகளிலும், நண்பர்களிடமும் தேடிக்கொண்டே இருந்தேன். தங்கள் தளத்தில் பதிப்பித்தற்கு நன்றி.

வாழ்வைச் சூழ்ந்து இருக்கி இருளாக்கிடக்கூடிய பல காரணிகளின் பெரும் படிமமாக டார்த்தீனியம் நிற்கிறது. நம்மைச் சுற்றியும் நம்முள்ளும் பல டார்த்தீனியங்கள் வளரத் துடித்தபடியே இருக்கின்றன, பல டார்த்தீனிய விதைகள் வளர இடம் தேடி அலைந்தபடியே உள்ளன.

டார்த்தீனியத்தை இருளுக்குள் இட்டுச்சென்று அழுத்தி அழிக்கும் எதனுடனும் பொறுத்திப்பார்க்கலாம் – போதையாக, கடனாக, நோயாக, அதீதப் பற்றாக (அரசியல், மத, மொழி, இன உட்பட), ஒன்றின் மேலான கண்மூடிப் பித்தாக, மன அழுக்காக, காமமாக, காரணமே இல்லாத/தெரியாத ஒன்றாக.

டார்த்தீனியம் அகத்தில் வளரும் தாவரம், அதன் விதை வெளியில் இருந்தும் வரலாம். டார்த்தீனிய விதையை தந்தவருக்கே தாம் தந்தது நினைவில் இருப்பதில்லை, அதனால் தான் எப்றாய் டாக்டர் விதை எதையும் தரவில்லை என்கிறார். டார்த்தீனியம் ஒரு சேர்ந்தாரைக் கொல்லி, அது மனிதரை மட்டுமல்ல, செடி, மரம், நாய், மாடு எதையும் விட்டுவைப்பதில்லை.

டார்த்தீனியம் என் கண்முன்னால் சரிந்த பல மனிதர்களை, குடும்பங்களை நினைவுபடுத்துகிறது – அவர்கள் ஒவ்வொருவரின் டார்த்தீனியமும் ஒ வ்வொன்று.

கதை சிந்திக்கச் சிந்திக்க  விரிந்து கொண்டே செல்கிறது, டார்த்தீனியம் செல்வத்தை (பசு) அழிக்கிறது, மரணத்தை (நாகம்) ஈர்க்கிறது, செயலின்மையை ஏற்ப்படுத்துகிறது (அப்பா, அம்மாவின் முடக்கம்) , சுற்றத்தை அகற்றுகிறது, இன்னும் பல பல.

அகம் புறம் இரண்டிலும் டார்த்தீனியம் ஆடும் ஆட்டத்தின் சித்திரம் மனமெங்கும் பல்திசை அலைகளாய் நிறைகிறது.

நன்றி,

கோகுல் சந்திரசேகரன்

கேன்பரா.

***

அன்புள்ள ஜெ

நலம்தானே?

நானும் நலமே.

டார்த்தீனியம் படித்தேன். உங்கள் கதைகளில் நான் பலவகையான அனுபவங்களை அடைந்திருக்கிறேன். கொந்தளிப்பான மனநிலைகளை உருவாகியிருக்கின்றன. மகிழ்ச்சியான உல்லாசமான மனநிலைகளையும் அடைந்திருக்கிறேன். ஆனால் டார்த்தீனியம் அளித்த உணர்வுகள் புதியவை. ஒரு திரில்லர் என்று நினைத்துத்தான் படித்தேன். உலகமெங்கும் திரில்லர் நாவல்களுக்கு ஒரு வடிவம் உண்டு. அந்த வடிவிலேயே இந்நாவலும் அமைந்திருக்கிறது.கொஞ்சமாக ஆரம்பித்து மேலே மேலே என எதிர்ப்பார்க்கவைத்து எதிர்பார்த்ததையே கொஞ்சம் புதிதாக அளித்து ஓர் உச்சத்தில் கொண்டுசென்று நிறுத்திவிட்டது

ஆனால் அது வெறும் திரில்லர் அல்ல. திரில்லர்கள் எப்போதுமே ஒரு முடிச்சைப் போட்டு அதை அவிழ்த்துவிடும். இதிலுள்ள முடிச்சு அவிழ்க்கவே முடியாத ஒன்று. ஏன் அந்தக்குடும்பம் அழியவேண்டும்? ஒரு குடும்பம் பழிவாங்கப்படுகிறது. பழிவாங்குவது யார்? அதன் நோக்கம் என்ன? எங்கிருந்து வந்தது? எல்லாமே மர்மம். உண்மையான வாழ்க்கையிலும் அப்படித்தானே? எது கோவிட் ஆக வந்து மனிதகுலத்தைப் பழிவாங்குகிறது? அந்த புரிந்துகொள்ளமுடியாத எதிரிதான் நம் நரம்புகளை சில்லிட வைக்கிறான். அவனே இங்கே உண்மையான அச்சத்தை அளிக்கும் கதைமையம். இந்த அச்சத்துக்கு மருந்தில்லை. திரில்லர்கள் முடிந்துவிடும், டார்த்தீனியம் முடியவே இல்லை

கே. ஆர்.ராஜ்குமார்

***

அன்புள்ள ஜெ

இருபது ஆண்டுகளுக்கு முன்பு டார்த்தீனியத்தை படித்தேன். அன்று அது ஒரு திரில்லர் ஆகத்தான் எனக்கு தோன்றியது. இலக்கியம் என்ற பொதுவான வகைமைக்குள் எல்லா நாவல்களுக்கும் இடமுண்டு என்று நினைக்கிறீர்கள் என்று தெரிந்தது. ஆகவே திரில்லரையும் எழுதிப்பார்த்திருக்கிறீர்கள் என்று நினைத்தேன்.

ஆனால் இப்போது வாசிக்கும்போது என் கைகள் நடுங்கின. ஏனென்றால் சென்ற ஆறாண்டுகளில் என் குடும்பத்தில் இதேபோல ஒரு இருட்டு படர்ந்துவிட்டது. மொத்தம் 9 மரனங்கள். எல்லாமே இயற்கையான மரணங்கள். 6 மரணங்கள் அகாலமரணங்கள். யாரோ திட்டம்போட்டு ஸ்கெட்ச் போட்டு தூக்குவதுபோல என்று நானே நினைத்துக்கொண்டிருந்தேன். சென்ற இரண்டு ஆண்டுகளில் தான் கொஞ்சம் அடங்கி எல்லாவற்றையும் கொஞ்சம் சிரிப்புடன் பார்க்கமுடிகிறது. செயற்கையான சிரிப்புதான். ஆனால் அது இல்லாமல் வாழமுடியாது.

இப்படி ஓர் அழிவு பல குடும்பங்களில் நடக்கும். விலகி நின்று பார்த்தால் grand plan ஒன்று செயல்பட்டிருப்பதும் தெரியும். எதற்கு, ஏன் என்பதெல்லாம் தெரியாது. மனிதர்கள் என்ன செய்யமுடியும் என்றும் தெரியாது. நான் கேரள ஜோதிடரிடம் கேட்டேன். நீ காரோட்டிக்கொண்டு போகும்போது நான்கு தவளைகள் சாகின்றன. சாவு ஏன் என்று தவளைகளுக்கு தெரியுமா என்று கேட்டார். என்னால் பதில் சொல்லமுடியவில்லை

டார்த்தீனியத்தில் மகிழ்ச்சியான குடும்பத்தில் ஒரு இருட்டின் விதை நுழைகிறது. அவர்களில் ஒருவரால் வளர்க்கப்படுகிறது. அந்த வீட்டையே கவ்வி நொறுக்கி உண்டுவிட்டு இன்னும் இன்னும் என்று நஞ்சுவிதைகளுடன் நிற்கிறது. நஞ்சுக்கு அந்த ஆற்றல் உண்டு. அது பசியடங்குவதே இல்லை

மகாதேவன்

முந்தைய கட்டுரைநீலத்தில் மலர்தல்
அடுத்த கட்டுரைஇந்தியா திரும்புதல், இளிப்பியல்- கடிதங்கள்