திரு ஜெயமோகன் அவர்களுக்கு,
உங்களுடைய டார்த்தீனியம் படித்தேன். எனக்கு மிகவும் பிடித்தது. ஒரு தாந்த்ரீகமான கதை போல இருந்தது. படிக்குபோது படபடப்பாக இருந்தது. ஆனாலும் எனக்கு முழுவதுமாக புரிந்ததா அல்லது புரியவில்லையா என்று குழப்பமாக இருக்கிறது. நான் கடைசியாக அந்த செடியை பற்றியும் யார் அதை கொடுத்தார்கள், எதனால் அது விஷ செடியாக உள்ளது, ஏன் அந்த குடும்பமே அழிகிறது, அவர்கள் என்ன தவறு செய்தார்கள் மற்றும் ஏதோ ஒன்று விடுபட்டது போல ஒரு குழப்பத்துடன் தான் படித்து முடித்தேன்.
அதையும் தாண்டி என்னை இந்த கதை ஏதோ ஒன்று செய்தது. என்னால் இந்த கேள்விகளுக்கு பதில் கண்டு கொள்ள முடியவில்லை. நீங்கள் சொல்வதுபோல வாசகர்கள் தம்முடைய கற்பனையில் விரித்து கொள்ள வேண்டும் என்று நினைத்தாலும் என்னால் முழுமையாக அதை உணர முடியவில்லை. என்னுடைய வாசிப்பில் ஏதாவது குறை இருக்கிறதா அல்லது நான் மிகவும் ஆரம்ப நிலையில் உள்ள வாசகனா அல்லது நான் தீவிரமாக பல வகையான இலக்கிய படைப்புகளை வாசித்தால் மட்டுமே இது போன்ற கதைகளை முழுமையாக உணர்ந்து கொள்ள முடியுமா?
நன்றி
டாக்டர் அருண்குமார்
***
அன்புள்ள ஜெ
டார்த்தீனியம் என்னை மிகவும் தொந்தரவுள்ளாக்கிய கதை. உங்கள் வழக்கமான வட்டார வழக்கோ, வரலாற்றுப்பார்வையோ இல்லை. கதை எங்கே நிகழ்கிறது, எந்த வகையான சூழல் என்பதெல்லாம்கூட இல்லை. எங்கும் நிகழக்கூடிய ஒரு பொதுவான தளத்தைச் சார்ந்த கதையாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
அது ஏன் என்று யோசித்துப் பார்த்தேன். கதையை எங்கேனும் ஒரு குறிப்பிட்ட பண்பாட்டுச்சூழலில் நிறுத்தியிருந்தால் கதையில் நிகழும் நிகழ்ச்சிகளுக்கும் அழிவுக்கும் நாம் அந்த குறிப்பிட்ட கலாச்சாரச்சூழலில் காரணம் தேடியிருக்கக்கூடும். இது ஒரு பொதுவான மானுடப்பிரச்சினை என்பதனால்தான் பொதுவான இடத்தை அளித்திருக்கிறீர்கள் என நினைக்கிறேன்
அழிவை மனிதர்களின் ஆழத்தில் இருந்து ஏதோ ஒன்று விரும்புகிறது. ஆட்டத்தைக் கலைப்பது நாமேதான். நமக்கு அந்த ஆணை எங்கிருந்தோ வருகிறது. இந்தக்கதையை சிறிய மாற்றத்துடன் என் கதையாகவும் சொல்லலாம். அதில் அப்பா அல்ல அம்மா அந்த டார்த்தீனியத்தை வீட்டுக்குள் கொண்டுவந்தார்கள். மொத்த்தத்தையும் அழித்தார்கள். இப்போது வாழ்க்கை ஒரு வட்டம் சுற்றி இன்னொரு இடத்துக்கு வந்துவிட்டது.
ஆனால் ஒன்று, ஒவ்வொரு வீட்டிலும் ஒரு டார்த்தீனியத்தின் விதை புதைந்து கிடக்கிறது. அதன்மேல் நீரூற்றாமலிருப்பது மட்டும்தான் நாம் செய்யவேண்டியது
கே.
***
அன்புள்ள ஜெ
டார்த்தீனியம் குழப்பத்தையும் பயத்தையும் உருவாக்கிய கதை. உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் என் வாழ்க்கையில் கண்டிருக்கிறேன். செய்வினை என்று ஒன்று கண்டிப்பாக உண்டு. வாழ்க்கையில் நான் என் வீட்டிலேயே அதைப்பார்த்தேன். அதை யார் ஏவினார்கள் என்று தெரியாது. ஆனால் வேறு எவ்வகையிலும் ஒரு குடும்பத்தில் கூட்டாக உருவாகும் தற்கொலைமனநிலையை புரிந்துகொள்ளமுடியாது.
செய்வினை பலிக்கவேண்டும் என்றால் மூன்று அம்சங்கள் தேவை என்பார்கள். கிரகநிலை அதற்கு உரியதாக இருக்கவேண்டும். நாம் பூர்வஜென்ம பாவம் ஒன்றைச் செய்து அது தொடரவேண்டும். செய்வினை செய்பவர் சரியான மந்த்ர பலத்துடன் இருக்கவேண்டும். மூன்றும் அமைந்தால் அப்படியே அழித்துவிடுகிறது.
அந்தக்குடும்பத்திற்கு அப்படி ஒன்று நடந்தது என்றுதான் கொள்ளவேண்டும். ஏன் எவ்வாறு என்றெல்லாம் நம்மால் சொல்லமுடியாது. அந்த கதைசொல்லி பையனின் பார்வையில் அதைச் சொல்லமுடியாது.அ வனுக்கு அது கடைசிவரை தெரிய வாய்ப்பில்லை. ஆனால் அந்த அழிவு உண்மையானது
நித்யானந்தன் சண்முகலிங்கம்
***
அன்புள்ள ஜெ
டார்த்தீனியம் கதை அளித்த பயத்தை பகிர்ந்துகொள்ளவே இதை எழுதுகிறேன். நாம் சின்ன உயிர்கள். இந்த பூமியின் மேல் நாமறியாத பல்லாயிரம்கோடி சக்திகள் உலாவுகின்றன. நம்மைச் சுற்றிப் பறக்கும் கொசுக்களுக்கு அடுத்த நொடி எவர் அதை அடித்துக்கொல்வார்கள் என்று தெரியாது. அத bliss of ignorance அவற்றை வாழச்செய்கிறது. மனிதன் என்னமோ எல்லாவற்றையும் அறிகிறான், எல்லாவற்றையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான் என்று நினைக்கிறான். அது உண்மை இல்லை. மனிதனும் அந்தக்கொசுதான்.
அந்தக்கொசுவை நம் கையருகே வரச்சொல்வது என்ன, நம்மை அதை அடிக்கவைப்பது என்ன என்று புரிந்துகொள்ள முடியாது. ஆனால் சில கொசுக்கள் சுற்றிச்சுற்றி வந்து பிடிவாதமாகச் சாவதை கவனித்திருக்கிறேன். அதைப்போலத்தான் நாமும். சில அழிவுகளை நாமே தேடித்தேடிச் செல்கிறோம் இல்லையா? வாழ்க்கை அப்படித்தான் இருக்கிறது. எனக்கு சொந்த அனுபவம் அது. நானே என் வீட்டுக்கு கொள்ளிவைத்துக்கொண்டேன். அது இன்றைக்கு நாலுபேருக்குச் சொன்னால் பைத்தியக்காரத்தனமாகவே தோன்றும்.அப்படி ஒரு அனுபவம்
ஆர்.ஜேம்ஸ் கிருபாகரன்