இயற்கையும் கலையும்

ஆடம்பரம் பற்றிய குற்றவுணர்ச்சியை காந்தியம் உண்டுபண்ணுகிறது. ஏனென்றால் ஆடம்பரம் என்பது மிகுநுகர்வு. அது ஒருவகையில் இயற்கையை அழிப்பது.காந்தியம் மீது கொண்ட நம்பிக்கை என்னுடைய பலமும் பலவீனமும் ஆகும் இடங்கள் உண்டு. எளிமையான அன்றாடவாழ்க்கையை இயல்பாக அமைத்துக்கொள்ள, பெரும்பாலும் நுகர்வுவெறியில் இருந்து விலகி நிற்க எனக்கு அதுவே அடிப்படை.

ஆனால்  காந்தியம் நுகர்வைப்போலவே அழகுக்கும் எதிரானது. காந்தி அழகுணர்ச்சி அற்றவர் அல்ல. கன்யாகுமரி பற்றி அவர் எழுதியிருக்கும் நான்குவரிகளே அந்த கடல்முனையின் பேரழகு அவரை மயங்கவைத்தமைக்குச் சான்று.

ஆனால் அது அழகுணர்வு என்று சொல்லிவிடமுடியுமா? அது ஆன்மிக உணர்வு அல்லவா? இயற்கையின் மடியில் அதை காந்தி போன்ற ஒருவர் உணராமலிருக்க முடியாது. அது ஓர் உன்னதநிலை, இயற்கையினூடாக இயற்கையைக் கடந்த ஒன்றை அறிதல். அந்நிலையில் இயற்கை முக்கியமே அல்ல

அழகுணர்வு என்பது வேறு. சொல்லப்போனால் அது ஒருபடி குறைவானது. ஏனென்றால் அது உலகியல் சார்ந்தது. அதில் உள்ளது தியானநிலை அல்ல. விடுபட்ட நிலை அல்ல. கடந்த நிலை அல்ல. அது திளைத்தல், முயங்குதல், மேலும் வலுவாக இருத்தல்.

இரண்டும் ஒன்றெனத் தோன்றும், ஆனால் ஒன்றல்ல. இயற்கையின் மடியில் கலைஞனும் ஞானியும் அடையும் உணர்வுகள் முற்றிலும் வேறானவை. கலைஞன் உணர்வுகளால் ஆட்கொள்ளப்படுகிறான். ஞானி உணர்வுகளைக் கடந்துசெல்கிறார்

இதை இசையிலும் சொல்லமுடியும். ராமகிருஷ்ண பரமஹம்சருக்கு இசை ஓர் ஊடகம், காளியை நோக்கிச் செல்வதற்கு. இசையின் நுட்பங்களும் சாகசங்களும் அவருக்குத் தேவையில்லை. ஓர் இசைக்கலைஞனின் நுணுக்கங்களை அவர் அறியாமலேயே போகக்கூடும். கலைஞனுக்கு இசை அவ்வாறல்ல. அது ஒரு முழுமைநிலை அனுபவம், கூடவே அது உலகியல் சார்ந்தது, திறன்வெளிப்பாடு கொண்டது.

சொல்லப்போனால் இயற்கையில் உள்ளது அழகு அல்ல. அது ஒரு திகழ்வு, ஒரு முழுமை. அதில் அழகை உருவாக்கிக்கொள்பவன் கலைஞன். அவன் அந்த அழகை நகல்செய்கிறான். பின்னர் அகவயமாக்கிக்கொள்கிறான். அதனூடாக அதை தன் உணர்வுகளுக்கும் கனவுகளுக்கும் கொண்டு செல்கிறான். அதை மேம்படுத்திக்கொள்கிறான். அதன்பின் அந்தக் கலையினூடாக அவன் இயற்கையைப் பார்க்கிறான்.

நாம் இயற்கையை இலக்கியம் மற்றும் கலை வழியாகவே அறிகிறோம். உண்மையில் நம் கண் ஓவியங்கள் வழியாகவே இயற்கையை அறிகிறது. இன்று புகைப்படக்கலை வழியாக. பார்த்ததுமே நாம் படச்சட்டமாக ஆக்கிக்கொள்கிறோம். சொற்களாக ஆக்கிக்கொள்கிறோம். அங்கே சங்கப்புலவர் முதல் சினிமாக்கவிஞர் வரை வந்து நம் ரசனையை வடிவமைக்கிறார்கள். கலையும் இலக்கியமும் உதவாமல் நம்மால் இயற்கையை ரசிக்க முடிவதில்லை. பெரும்பாலான ஆதிவாசிகளால் இயற்கையில் கரையமுடியும், இயற்கையை ரசிக்கமுடியாது.

இயற்கையின் அழகை நாமே உருவாக்கிக்கொள்கிறோம். இயற்கையில் இருந்து கலைக்கு, கலையில் இருந்து இயற்கைக்கு என ஓர் ஓயா ஊசல் உள்ளது. ஒன்று இன்னொன்றை உருவாக்குகிறது.

கலையில் இருந்து ஆடம்பரத்தை தவிர்க்கவே முடியாது. கலை என்பதே வாழ்வுக்கு ஓர் ஆடம்பரம்தான். பழங்குடிகளிலேயேகூட. உணவுக்கான நேரம் போக எஞ்சிய நேரம் இருக்கும் பழங்குடிகளிலேயே கலை காணப்படுகிறது. கலை என்பது நுட்பம், நுட்பம் என்பது நேரம் செலவிடப்படும் ஒரு தளம். உருவாக்கவும் ரசிக்கவும் நேரம் தேவை. நேரம் என்பது உலகியல் வாழ்க்கையில் ஓர் ஆடம்பரமே

கலையின் உச்சம் என்பது ஆடம்பரத்தின் உச்சமே. நம் பேராலயங்கள் ஒருவகையில் மாபெரும் ஆடம்பரங்கள். அவற்றை அரசர்களே உருவாக்கமுடியும். தலைமுறை தலைமுறையாக அச்சிற்பிகளை அரசு பேணவேண்டும். பெரும்பொருள் செலவிடவேண்டும். நம் சிற்பங்கள், நம் இசை எல்லாமே ஆடம்பரங்கள்தான்

கலை என்பது பெருநுகர்வும்கூட. நண்பர் ராஜமாணிக்கம் எம்சாண்ட் உற்பத்திக்காக மலைகள் சூறையாடப்படுவதைப் பற்றி எழுதியிருந்தார். அது உண்மை, ஆனால் நம் கோயில்களைக் கட்டவும் அதேயளவு பாறைமலைகள் வெட்டி அழிக்கப்பட்டிருக்கும் அல்லவா? அன்று ஏழைகளுக்கு கல்வீடுகள் இல்லை. மணல்தேவையில்லை. அவை குடிசைகள். ஊருக்கு ஒரு வீடே கல்வீடு. இன்று அனைவருக்கும் வீடு தேவையென ஆகிய நிலையில் கல்லின் தேவை கூடிவிட்டிருக்கிறது, அவ்வளவுதான்

எங்கே கலையை வெற்று ஆடம்பரமாக ஆகாமல் நிறுத்திக்கொள்வது? எங்கே கலை ஓர் அழிவுச்சக்தியாக ஆகாமல் கட்டுப்படுத்துவது? வரையறை செய்வது கடினம்தான். நாம் இன்று கொண்டாடும் கலைச்சாதனைகள் எல்லாமே சுரண்டலால், சர்வாதிகாரிகளால் உருவாக்கப்பட்டவைதான்.

எனக்கு கலையே முதன்மையானது- அதிலிருந்து ஆன்மிகமாகத் தாவ தொடர்ச்சியாக முயன்றுகொண்டே இருக்கிறேன் என்றாலும்கூட. இயற்கையை என்னால் ‘மாற்றாமல்’ பார்க்கமுடியாது. நித்ய சைதன்ய யதி சொல்வதுண்டு. இயற்கையைப் பார்க்கச் சிறந்த வழி அதன்முன் அமர்ந்து அதை வரைவதுதான் என்று. நம் ஓவியத்திறன் சாதாரணமாக இருக்கலாம். ஆனால் ஓர் இயற்கைக்காட்சியை நாம் மூன்றுமணிநேரம் கூர்ந்து பார்க்க அதுவே சிறந்த வழி

அவ்வாறு வரையும்போது நாம் அதை நம் ஓவியச்சட்டத்திற்குள் கொண்டு வருகிறோம். ஆச்சரியம் என்னவென்றால் நம் ஓவியச்சட்டகம் அந்த காட்சியையும் நுணுக்கமாக உருமாற்றிக்கொள்ளத் தொடங்குகிறது. ஒரு கட்டத்தில் இயற்கை கலையை பிரதிபலிக்க தொடங்குகிறது. அதைத்தான் ’இயற்கை கலையை நடிக்கிறது’ என்று நித்யா ஒருமுறை சொன்னார்.

என்னால் வரைய முடியாது. ஒரு முட்டையை தப்பில்லாமல் சுழிக்க போட முடியாது. ஒரு வரிகூட, முனகலாகக்கூட பாட முடியாது. ஆகவே ஈரட்டியின் விடுதிமுன் நின்ற மரத்தை விதவிதமாக புகைப்படம் எடுத்து அழித்துக்கொண்டே இருந்தேன். வெவ்வேறு நிலைகளில். பனியில், காலைஒளியில், மழையீரத்தில், இரவில். பின் அவற்றை வேறுவண்ணங்களுக்கு மாற்றிக்கொண்டேன். சிறிது சிறிதாக அந்த மரத்தை என் கனவுக்குள் செலுத்திக்கொண்டேன்.

முந்தைய கட்டுரைமலர்கள் நினைவூட்டுவது- விஷால் ராஜா
அடுத்த கட்டுரைவெண்முரசு வாசிப்பது.