இரு கேள்விகள்

அன்புள்ள ஜெ

சுதாங்கன் மறைவுக்கு நீங்கள் அஞ்சலி செலுத்துவீர்கள் என்று எதிர்பார்த்தேன். உண்மையில் நீங்கள் எவருக்கு அஞ்சலி செலுத்துகிறீர்கள் என்பதே புரியவில்லை. அரசியல்வாதிகள், சினிமா ஆளுமைகள் போன்ற முக்கியமானவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதில்லை. அறியப்படாத எழுத்தாளர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறீர்கள்.

ராம்குமார்

***

அன்புள்ள ராம்

உண்மையிலேயே எனக்கு சுதாங்கன் யார் என்றே தெரியாது. எங்கும் அவர் பெயர் நினைவில் பதியவில்லை. கி.ராஜநாராயணன் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறார் என்று ஒரு வீடியோ பார்த்தேன். அதன்பின்னர்தான் அவர் யார் என்று இணையத்தில் தேடினேன். இதழாளர், டிவியில் தோன்றுபவர் என்று தெரிந்தது. அவருடைய இதழ்களை நான் வாசித்ததில்லை. டிவி பார்ப்பது இருபது வருடங்களுக்கு மேலாக வழக்கமே இல்லை.

அதன்பின்புதான் அந்தப்பெயர் ஆங்காங்கே கண்ணில்பட்டது நினைவில் எழுந்தது. ஆனால் நினைவில் நிறுத்தும்படி அவர் ஏதும் செய்யவில்லை என்பதும் தெரிந்தது. ஒருவர் இதழாளராக இருந்தார் என்பதனால் எந்தப்பெருமையும் இல்லை, அது ஒரு தொழில். அதில் ஏதாவது பண்பாட்டுப் பங்களிப்பு ஆற்றியிருக்கவேண்டும்.வாழ்ந்து மறைபவர் பலகோடி. வாய்ப்பு கிடைத்தும் ஆற்றாதவர் அவர்களை விட ஒரு படி கீழ்.

ஜெ

***

அன்புள்ள ஜெ,

மின்நூல்கள் வாங்கும்பொருட்டு இணைய அங்காடியை திறந்தால் ஓர் ஆச்சரியம். ஜெயமோகன் என்று தேடினால் உங்களை வசைபாடி எழுதப்பட்ட துண்டுப்பிரசுரங்களே முதலில் வருகின்றன. சம்பந்தமில்லாத நூல்களில் கூட உங்களை பற்றி நாலுவரி சேர்த்து, உங்கள் பெயரை பலமுறை டேக் செய்து மேலே கொண்டுவந்திருக்கிறார்கள். இது ஒரு நல்ல மார்க்கெட்டிங் உத்தி.

இணையத்தில் உங்கள் பெயரை ஒரு மார்க்கெட்டிங் லேபிள் ஆகவே பலர் பயன்படுத்துகிறார்கள். பலர் நான்குநாட்களுக்கு ஒருமுறை உங்களைப்பற்றி எதையாவது சொல்லியாகவேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார்கள். ஒருவாரம் உங்களைப்பற்றிச் சொல்லாமலிருந்தால் அவர்களை கவனிப்பவர்களே இல்லாமலாகிவிடும் என்பது அவர்களுக்கு தெரிந்திருக்கிறது

உங்கள் பெயரை நூல்விற்பனைக்கு இணையத்தில் மார்க்கெட்டிங் செய்துகொள்ளாமலிருப்பது நீங்கள் மட்டும்தான்

எஸ்.பிரபுராஜ்

***

அன்புள்ள பிரபுராஜ்

ஜெயகாந்தன் சொன்னதுதான்- இருப்பவர்களிடமிருந்துதானே இல்லாதவன் எடுத்துக்கொள்ள முடியும்.

நான் என் வாசகனின் அறிவையும் நுண்ணுணர்வையும் நம்புபவன். என் வாசகர் அல்லாதவர்களைப் பொருட்படுத்துவதே இல்லை.

தொடர்புறுத்தல்-சந்தைப்படுத்தல் இரண்டும் வேறுவேறு. எழுத்தாளன் சமூகத்துடன் தொடர்புகொள்ள, உரையாட முயன்றபடியே இருப்பவன். காந்தி முதல் இ.எம்.எஸ் வரை, டால்ஸ்டாய் முதல் சுந்தர ராமசாமி வரை அதைச் செய்தனர்.

சந்தைப்படுத்துதல் என்பது தன் எழுத்தை கூவி விற்பது. அதைச் செய்யக்கூடாது என்றல்ல, நான் செய்யமாட்டேன் என்பது என் முடிவு.

அப்படிச் செய்யும்போது தன் எழுத்து ஒரு விற்பனைப்பொருள் மட்டுமே, அதை வாசிப்பது நுகர்வு மட்டுமே என்று எழுத்தாளனே சொல்வதுபோல ஆகிவிடுகிறது என்று ஓர் எண்ணம்.

ஜெ

முந்தைய கட்டுரைநமது மலைப்பாறைகள்- கடிதம்
அடுத்த கட்டுரைடார்த்தீனியம் [குறுநாவல்]-5