சமணர் கழுவேற்றம்
சமணர் கழுவேற்றம் தொன்மம்
கழுவேற்றமும் சைவமும்- முனைவர் செங்குட்டுவன்
சமணர் கழுவேற்றம் – சைவத்தின் மனநிலை
அன்புள்ள ஜெ
நான் சமீபத்தில் இரண்டு சமணவரலாற்று நூல்களை வாசிக்க நேர்ந்தது. ஒன்று அஷிம்குமார் ராய் எழுதிய சமணர் வரலாறு [A History of the Jainas” by Ashim Kumar Roy] இன்னொன்று கே.சி.ஜெயின் எழுதிய சமணர் வரலாறு [A History of the Jainas” by K.C.Jain] இரண்டு வரலாறுகளிலுமே தமிழகத்தில் நடந்ததாகச் சொல்லப்படும் சமணர் கழுவேற்றம் என்னும் கொடுமைக்கு வரலாற்று ஆதாரமில்லை என்றே சொல்லப்பட்டுள்ளது. இவை இரண்டுமே சமணர்களால் எழுதப்பட்டவை. அந்த செய்தி ஒரு மதக்காழ்ப்பு அல்லது மதப்பெருமிதத்தால் உருவான கற்பனை என்றே சொல்லப்பட்டுள்ளது.
http://ptst.in/snatak/admin/download/files_suchipatra/A%20HISTORY%20OF%20THE%20JAINS.pdf
அதன்பிறகுதான் நான் தமிழில் தேடினேன். நீங்கள் எழுதிய கட்டுரை, பி.ஏ.கிருஷ்ணன் எழுதிய கட்டுரை, முனைவர் செங்குட்டுவன் எழுதிய நூல் ஆகியவற்றை கண்டுபிடித்தேன். தமிழிலேயே இவ்வளவு பேசப்பட்டுள்ளது. ஆனாலும்கூட சமணர்களை இந்துக்கள், சைவர்கள் கழுவேற்றினார்கள் என்ற பொதுவெளிக்கூச்சல் எழுந்துகொண்டே இருக்கிறது. இது மிக ஆச்சரியமாக உள்ளது.
பி.நேமிகுமார்
அன்புள்ள நேமிகுமார்,
1995ல் நான் திண்டிவனம் அருகே உள்ள மேல்சித்தமூருக்குச் சென்றேன். அதன்பின் நண்பர்களுடன் 2002லும் சென்றேன். அங்கிருந்த சமண மடத்தில் தங்கியிருந்தேன். அந்த மடத்தின் தலைமை பட்டாரகர் ஓர் அறிஞர். அவருடன் உரையாடினேன். அப்போதுதான் சமணர் வரலாறு பற்றிய ஒரு புரிதலை அடைந்தேன். அதுவரை தமிழில் பரவலாகப்புழங்கிய சில சித்திரங்களை நானும் கொண்டிருந்தேன்
சமணர் கழுவேற்றம் பற்றிய வாய்வழிச் செய்திகளின் அடிப்படை என்ன? சமணர்களுக்கும் சைவர்களுக்கும் நடுவே நிகழ்ந்த தத்துவப் போர் ஒரு வரலாறு. ஆனால் அது நிகழ்ந்தது கிபி ஆறாம் நூற்றாண்டு முதல் எட்டாம்நூற்றாண்டுக்குள்.
அது நமக்கு தொன்மையான ஒரு காலம். அக்காலகட்டத்தைப்பற்றி இன்றும்கூட நமக்கு தெளிவான வரலாறுகள் கிடையாது. இலக்கியச் சான்றுகளைக்கொண்டு ஊகிக்கப்படும் ஒரு தோராயமான வரலாறே நமக்குள்ளது. ஆகவே அன்று நடந்த எதையுமே ஆணித்தரமான ஆதாரங்களின்மேல் நிறுவமுடியாது
அந்தக்காலம் முடிந்தபின் சைவம் பெருமதமாக நிலைகொண்டது. பத்தாம் நூற்றாண்டுக்குப்பின் சோழ,பாண்டியப் பேரரசுகளின் ஆதரவைப் பெற்றது. மடங்கள் உருவாயின. அதன்பின்பு சமணர்களுடனான மோதல்களை சைவர்கள் புனைந்துரைத்தனர். அதாவது 13 ஆம் நூற்றாண்டுக்குப்பின். கிட்டத்தட்ட ஐந்து நூற்றாண்டுகள் கழித்து
அவ்வாறு வரலாற்றுச் செய்திகளைப் புராணங்களாக புனைந்துரைக்க சைவர்களுக்கு சில நோக்கங்கள் இருந்தன. ஒன்று, சைவக்குரவர்களின் ‘தெய்வீக மேன்மையை’ நிறுவுவது. இரண்டு , சைவத்தின் முதன்மையை நிறுவுவது.
பிற்காலச் சைவர்களுக்கு சமணத்துடன் எந்த உரையாடலும் இருக்கவில்லை. ஆகவே ஐந்து நூற்றாண்டுகளுக்குமுன் நடந்த அந்த மோதல் எதனாலென்றும் தெரியவில்லை. அவர்கள் அன்று சைவப்பெருமதத்தை கட்டி எழுப்பியிருந்தனர். புனிதர்களைப்பற்றிய தொன்மங்கள், பெரும்பக்தர்களைப் பற்றிய தொன்மங்களை சமைத்துக்கொண்டிருந்தனர். பலநூறு ஆலயங்களை தலபுராணங்கள் வழியாக ஒரே ஆலயச்சரடாக கோத்துக்கொண்டிருந்தனர். துணைப்புராணங்கள் மற்றும் புராண மறு ஆக்கங்கள் வழியாக சிறுதெய்வங்களை உள்ளிழுத்துக்கொண்டிருந்தனர்.
அந்தச் செயல்பாட்டின் ஒரு பகுதியாகவே அவர்கள் சைவ- சமண போராட்டத்தையும் சமைத்துக்கொண்டனர். பலவகையான அற்புதக் கதைகள் உருவாக்கப்பட்டன. சமணர்கள் ஈவிரக்கமில்லா கொடூரர்களாகச் சித்தரிக்கப்பட்டனர். சிவனருளால் சைவக்குரவர்கள் அவர்களை பழிவாங்கியதாக சொல்லப்பட்டது.
சைவ- சமண தத்துவப்போரையே அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. சுவடிகளை தீயில் போட்டு அவை எரியாமல் எஞ்சுகின்றனவா என்று பார்த்தல் [அனல்வாதம்] ஆற்றுநீரில் தூக்கிப்போட்டு ஒழுக்குக்கு எதிராக அவை நீந்தி வருகின்றனவா என்று பார்த்தல் [புனல்வாதம்] என்னும் முறைப்படி உண்மை நிறுவப்பட்டது என்று கூறினார்கள். சைவநூல்கள் அவ்வாறு உண்மை என சிவனருளல் நிறுவப்பட்டனவாம்
உண்மையில் அனல்வாதம் என்பது அனைத்து செய்திகளையும் தொகுத்து சுருக்கி மையமாக எஞ்சுவதென்ன என்று பார்ப்பது. அதாவது, எரித்து விபூதியாக எஞ்சுவதென்ன என்று பார்ப்பது. புனல்வாதம் என்பது அனைத்தையும் ஒன்றாகத் தொகுத்து ஒட்டுமொத்தமாகப் பார்ப்பது. நீர் எல்லாவற்றையும் ஒரு முனையில் குவிப்பதுபோல. இரு உவமைகளும் வேதாந்த விவாதங்களில் இன்றும் உள்ளவை. பிற்காலச் சைவர்களுக்கு அந்த விவாதங்களின் நுட்பங்களுக்குள் செல்லும் அறிவுப்பாதையே இல்லை.
இன்றும்கூட கடுஞ்சைவர்கள் இந்த கொடுமையை அவர்கள் உண்மையில் இழைத்தனர் என்றும் அது அவர்களின் மதப்பெருமைக்கான சான்று என்றும் நம்பி வாதிடுகிறார்கள்.மதமூர்க்கத்தின் வெளிப்பாடு அது.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்திய, தமிழக வரலாற்றை எழுதியவர்கள் ஐரோப்பியர். அவர்கள் இலக்கிய ஆதாரங்களைக்கொண்டே அவ்வரலாற்றை எழுதினார்கள். ஏனென்றால் தொல்லியல் சான்றுகள் பெரும்பாலும் இல்லை. கிடைக்கும் கல்வெட்டுக்களும் அன்று படிக்கப்படவில்லை
அவ்வாறு எழுதியபோது சைவ இலக்கியச் சான்றுகளை அவர்கள் அப்படியே எடுத்துக்கொண்டார்கள். விரிவான வரலாற்றுப்பின்னணியில் வைத்து ஆராயவில்லை.
மேலும் அன்று அவர்கள் தங்கள் ஐரோப்பியப் பின்னணியைக் கொண்டே உலகவரலாற்றை நோக்கினார்கள். அங்கிருந்த சில ஆய்வுமுறைகளையும், வரலாற்றின் முரணியக்கம் சார்ந்த அகப்பதிவுகளையும் இங்கும் கொண்டுவந்தனர்.
அவற்றில் முக்கியமானவை மூன்று.
ஒன்று: ஒரு நிலத்தில் நிலையாக வாழும் மக்கள் தேங்கியவர்களாக இருப்பார்கள், நகரும் பண்புடைய அயலவர் வந்து அவர்களை வெல்வார்கள். அவ்வாறு வருபவர்களே நாகரீகத்தை உருவாக்குவார்கள்
இரண்டு: மேய்ச்சல்நில மக்கள் வேளாண்நிலமக்கள் இருவருக்கும் இடையே நிரந்தரமான போர் நிகழும். அதுவே வரலாற்றின் அடிப்படையான முரணியக்கம்
மூன்று: மதங்கள் வன்முறை மிக்க மதப்போர்கள் வழியாகவே மேலாதிக்கம் பெறுகின்றன. அரசர்களின் போர்களிலும்கூட மதமே உள்ளடக்கமாக இருக்கும்
இந்த மூன்று ‘டெம்ப்ளேட்’களையும் ஐரோப்பியர் ஆப்ரிக்காவிலும் இப்படியே பயன்படுத்தியிருப்பதைக் காணலாம். இந்த மூன்று முன்முடிவுகள் இன்றும் நம் கல்விநிலையங்களை அடக்கியாள்பவை. இவற்றை கடப்பது எளிதே அல்ல
இந்த பார்வைக்கு உகந்ததாக இருந்தது சமணக்கழுவேற்றம் பற்றிய செய்தி. ஆகவே ஐரோப்பியர் அதை அப்படியே ஏற்று அதை இந்திய மதவரலாற்றுக்கே ஒரு முன்னுதாரணமாக சொல்லிக்கொண்டார்கள்.
இருபதாம் நூற்றாண்டில் தமிழகத்தில் இந்துமதத்திற்கு எதிராக நாத்திக அலை ஒன்று எழுந்தது. அவர்கள் இந்துமதம் வன்முறையானது என்று காட்ட சமணர் கழுவேற்றம் என்ற செய்தியைச் சொல்லிச் சொல்லிப் பரப்பினர்
இந்திய கிறிஸ்தவர்கள் இந்துமதத்தின் வன்முறைக்கான முதன்மைச் சான்றாக சமணர் கழுவேற்றம் என்ற கருத்தை வலியுறுத்தினர். கிறிஸ்தவ மதம் என்பது ‘ரத்தசாட்சிகள்’ என்னும் தியாகிகளான புனிதர்கள் வழியாகவே தன்னை நிறுவக்கூடியது. ஐரோப்பாவின் மதப்போர்களில் இருந்து உருவான ஒரு வரலாற்றுச்சித்திரம் அது. அதை ஒரு ’டெம்ப்ளேட்’ ஆக அவர்கள் உலகமெங்கும் கொண்டுசென்றார்கள்
கிறிஸ்தவர்களுக்கு இந்தியாவில் ரத்தசாட்சிகளைக் கற்பனைசெய்ய வேண்டும் என்றால் இந்துமதத்தை கொடூரமான வன்முறைமதமாகச் சித்தரிக்கவேண்டும். அதற்கு அவர்களிடமிருக்கும் ஒரே சான்று இந்த சமணர் கழுவேற்றம் என்னும் தொன்மம். ஆகவே அவர்கள் அதைச் சொல்லிச் சொல்லி நிறுவினர்.அந்த தொன்மத்தின் சாயலிலேயே அவர்கள் புனித தாமஸின் கொலை என்னும் பொய்வரலாற்றை உருவாக்கி சொல்லிச் சொல்லி நிறுவிக்கொண்டிருக்கிறார்கள்
இஸ்லாமியர் இந்த ஆட்டத்தில் இருக்கவில்லை. ஆனால் ராமர்பிறப்பிடம்- பாபர் கும்மட்டம் விவாதத்தை ஒட்டி இஸ்லாமிய அரசர்கள் இங்கே இடித்த ஆலயங்களைப்பற்றிய விவாதம் மேலெழுந்ததுமே இரண்டு எதிர்வாதங்கள் உருவாக்கப்பட்டு, ஆதாரங்களைப் பற்றி கவலையே படாமல் பிரச்சாரம் செய்யப்படுகின்றன. ஒன்று, சமணர் கழுவேற்றம். இன்னொன்று, எல்லா இந்து ஆலயங்களும் பௌத்த, சமண வழிபாட்டிடங்களை இடித்து கட்டப்பட்டவை என்பது
உண்மையில் இந்த மூன்று தரப்புகளுமே இன்று ஒற்றைத்தரப்பாக ஆகிவிட்டிருக்கின்றன. இன்று இந்துமதம் மீதான அவதூறுக்காக மாற்றுமத அமைப்புக்கள் பெருந்தொகை செலவிடுகின்றன. இன்று இத்தரப்பைப் பேசும் கணிசமான அறிவுஜீவிகள் கூலிப்படையினர்தான். அவர்களுக்கு ஆதாரமெல்லாம் பொருட்டே அல்ல. அவர்கள் பேசும் நாத்திகம் கூலி பெறுவதற்கான இந்து எதிர்ப்பு மட்டுமே
மேல்சித்தமூர் பட்டாரகரைப் பார்த்தபோது அவர் என்னிடம் சொன்னவை மூன்று
அ. சமணர்கழுவேற்றம் பற்றி சமணநூல்களில் எக்குறிப்பும் இல்லை. சமணர் தெளிவாக வரலாற்று ஆதாரங்களைப் பேணுபவர்கள்
ஆ. சமண மதம் பதினாறாம் நூற்றாண்டுவரைக்கும்கூட தமிழகத்தில் அரசர்களால் பேணப்பட்டது. ஆலயங்கள் கட்டி அளிக்கப்பட்டன. பல சமண ஆலயங்களை கட்டி அளித்தவர்கள் சைவ, வைணவ மன்னர்கள்
இ.சமணமும் பௌத்தமும் தமிழகத்தில் இருந்து மறைந்தது பக்திமதங்களால்தான். பக்தி எளியமக்களை ஈர்ப்பது. சமணமும் பௌத்தமும் அறிவுத்தன்மை ஓங்கிய, நோன்புகளை வலியுறுத்தும் மதங்கள். சமணத்தின் வீழ்ச்சிக்கு அது சைவ உணவை வலியுறுத்தியதும் விவசாயத்தை பாவமாக கண்டதும் முக்கியமான காரணங்கள். சமணர்கள் இந்துக்களாக ஆவது சமகாலத்திலும் நடந்துகொண்டிருக்கும் ஒரு சமூகமாற்றம். மற்றபடி சமணம் ஒடுக்குமுறையால் அன்னியமாகியது என்பது பொய்
நான் இக்கருத்துக்களை எழுத ஆரம்பித்தேன். அன்று தமிழில் இதைச் சொல்லும் ஒரே குரலாக ஒலித்தேன். என்னை நாத்திகர் மட்டுமல்ல அதே அளவுக்கு சைவர்களும் வசைபாடினர். நான் வரலாற்றாதாரங்களை மட்டுமே முன்வைத்தேன். தத்துவப்புலத்தை பற்றி மட்டுமே பேசினேன்
பின்னர் பி.ஏ.கிருஷ்ணன் எழுதினார். முனைவர் செங்குட்டுவனின் மிக விரிவான ஆய்வுநூல் வெளிவந்தது. இத்தனைக்கும் அவர் ஒரு திராவிட இயக்க ஆதரவாளர். மெல்லமெல்ல இத்தரப்பு வலுவாகி விட்டது. இதை பொதுமக்கள் தளத்திற்கு அடுத்தகட்ட மேடைப்பேச்சாளர்கள்தான் கொண்டுசெல்லவேண்டும். ஆனால் இந்த தொன்மத்தை உண்மையென முன்வைப்பதற்குப்பின்னால் இந்து எதிர்ப்பு ரகசியத்திட்டம் இருப்பதனால் இதைச் சொல்பவர்கள் ஆதாரங்களை பொருட்படுத்தமாட்டார்கள். எளிய இந்துக்களிடமே நாம் பேசமுடியும்
இதைப்போன்ற ஒரு தொன்மம்தான் சைவக்குரவர்கள் அரசர்களால் கொடுமைப்படுத்தப்பட்டனர் என்பது. கிறிஸ்தவர்களின் மதவிசாரணை வரலாறுகளை ஒட்டி சைவர்கள் பிற்காலத்தில் சமைத்துக்கொண்ட தொன்மங்கள் அவை. இந்தியாவில் வன்முறைமிக்க மதவிசாரணை இருந்தது என்பதற்கோ, மதப்புனிதர்கள் கொடுமைப்படுத்தப்பட்டார்கள் என்பதற்கோ சான்றுகள் இல்லை. இந்தியாவின் தத்துவ- மதச்சூழலே அவ்வியல்பு கொண்டது அல்ல.
ஆகவேதான் இங்கே வந்த சேவியர் உள்ளிட்ட மதப்புனிதர்கள் இங்கே எல்லா இடங்களிலும் வரவேற்கப்பட்டார்கள். சூஃபி ஞானியர் அனைவராலும் வணங்கப்பட்டனர். சேவியர் அவரே கோவாவில் கொடிய மதவிசாரணை வன்முறைகளை நிகழ்த்தியவர். ஆனாலும் இந்தியாவின் கண்ணில் அவர் புனிதராகவே கருதப்படுகிறார்.
இன்று, இதை நான் சொல்லும்போது மீண்டும் பொங்கிவருபவர்கள் சைவ மதமூர்க்கர்கள்தான். காலம் போகப்போக இதுவும் ஆதாரபூர்வமாக நிறுவப்படும் என நினைக்கிறேன்
ஜெ