நாம் ஏன் அழகை உருவாக்க முடிவதில்லை?
நேர்த்தியும் அழகும்-நேற்றும் இன்றும்
அன்புள்ள ஜெ
நாம் ஏன் அழகை உருவாக்க முடிவதில்லை என்ற விவாதமே ஆர்வமூட்டுவது. பல்வேறு கோணங்களில் உதிரி உதிரியாக நாம் எண்ணிக்கொண்டிருப்பதுதான். அதைத்தான் தொகுத்துச் சொல்லியிருக்கிறீர்கள். புதிய வரலாற்றுப்பின்புலம் ஒன்றையும் உருவாக்கி அளித்திருக்கிறீர்கள்
நீங்கள் சொல்வதுபோல நாம் நிலப்பிரபுத்துவ காலகட்டத்தை விட்டு வந்துவிட்டோம். முதலாளித்துவ தொழில்நெறிகளை கற்றுக்கொள்ளவுமில்லை. இன்றைய சூழலில் நீங்கள் காணும் தடைகள் என்ன? அதாவது இன்று ஒரு தொழில் – நிர்வாகச் சூழலில் ஏன் அழகையும் நேர்த்தியையும் உருவாக்கமுடியாமலிருக்கிறது? அதற்கு நிலப்பிரபுத்துவ மனநிலை இன்றும் நீடிப்பதும்தான் காரணமா?
எஸ்.ஆர். மணிவண்ணன்
***
அன்புள்ள மணிவண்ணன்
உண்மை, இன்றும் நீடிக்கும் நிலப்பிரபுத்துவ மனநிலைகளே நம்மை நேர்த்தியில் இருந்து தடுப்பவையாக உள்ளன. நிலப்பிரபுத்துவகால தொழிற்குழு நெறிகள் இன்றில்லை. அவை உருவாக்கிய தேர்ச்சியும் ஒழுக்கமும் மறைந்துவிட்டன. ஆனால் நிலப்பிரபுத்துவத்தின் அடிப்படைகளாக இருந்த
அ. பிறப்புசார்ந்த அடையாளம்
ஆ. அதனடிப்படையிலான குழுமனநிலை
இ. நிலப்பிரபுத்துவகால மேல்கீழ் அடுக்குமுறை
ஈ. அது சார்ந்த மரியாதைகளும் சடங்குகளும்
உ. தனிமனித உரிமைகளையும் தன்மதிப்பையும் பொருட்படுத்தாமல் மனிதனை வெறும் உயிராக மட்டுமே கருதுவது
-ஆகியவை அப்படியே நீடிக்கின்றன.
சொல்லப்போனால் அவை இன்னும் மோசமாக ஆகிவிட்டிருக்கின்றன. நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் மேலிருப்பவர் கீழிருப்பவரின் மேல் முழு உரிமையை கொண்டிருந்தார், கூடவே முழுப்பொறுப்பையும் கொண்டிருந்தார். தன் அடிமை பட்டினி கிடக்காமல் பார்க்கவேண்டியது, அவன் பாதுகாப்பை பேணவேண்டியது ஆண்டானின் கடமை. இன்று முழுஉரிமையை கோருகிறார்கள், ஆனால் எந்தப்பொறுப்பையும் ஏற்றுக்கொள்வதுமில்லை
நடைமுறையில் இன்றைய தொழில்-நிர்வாக முறைக்குள் எப்படி இந்த மனநிலைகள் தடையாக அமைகின்றன? இவை என் அனுபவம், என் அவதானிப்பு சார்ந்த கருத்துக்கள்
ஒரு சூழலில் திறமையும் நேர்த்தியும் திகழவேண்டும் என்றால் அங்கே திறமையாளர்கள் உருவாகிக்கொண்டே இருக்கவேண்டும். அவர்கள் நடுவே திறமையில் போட்டி வேண்டும். அதற்கு முதன்மையான தேவை, திறமையை வெளிப்படுத்துபவனுக்குரிய இடம் தொழிற்சூழலில் உருவாகவேண்டும் என்பது.
ஒர் ஊழியன் தன் திறமையை மேம்படுத்திக்கொண்டு, அதை வெளிப்படுத்திக்கொண்டே இருந்தால் அவன் அதற்கான இடத்தை அடையவேண்டும். அவனுக்கு பாராட்டு, ஊதிய உயர்வு, பரிசு, பதவு உயர்வு ஆகியவை கிடைக்கவேண்டும். அப்படி கிடைக்காவிட்டால் அவன் ஆர்வமிழப்பான்.
ஒரே ஒரு ஊழியனுக்கு அப்படி அங்கீகாரம் கிடைக்காமல் இருந்தால்கூட அந்த மொத்த நிறுவனத்திலும் அத்தனைபேருமே ஆர்வமிழந்து எல்லாவற்றிலும் ‘சமாளிக்க’ ஆரம்பிப்பார்கள். அங்கே அதன்பின் நேர்த்தியும் திறனும் உருவாவதே இல்லை.
ஆனால் இந்தியத் தொழில்துறையில் மிக அரிதாகவே திறமை அடையாளம் காணப்படுகிறது. இங்கே விற்பனைத் துறையில் மட்டுமே திறமைக்கு உடனடியான நேரடியான அங்கீகாரமும் வெற்றியும் உள்ளது. மற்றத்துறைகளின் அமைப்பு மிகச்சிக்கலான பல உள்ளோட்டங்களால் ஆனது.
மற்ற துறைகளில் பணிமூப்பும், மேலிட ஆதரவும்தான் ஒருவர் மேலே செல்ல முக்கியமான அளவுகோலாக உள்ளன. அத்துடன் தனிமனிதனுக்கு இடமில்லாமல் ஒரு மொத்தக்குழுவாகவே ஒவ்வொரு அமைப்பும் செயல்படுவது, தனிமனித சாதனைகளை அங்கீகரிக்காமல் குழுவின் சாதனையாகக் கொள்வது ஆகியவை.
அரசுத்துறையில் திறமை வெளிப்படவே முடியாது. அங்கே பணிமூப்பு மட்டுமே அளவுகோல்.‘நான்லாம் எவ்ளவு சீனியர், என் சர்வீஸ் என்ன’ என்பதுதான் இங்கே கேட்டுக்கொண்டே இருக்கும் குரல். என்னதான் திறமையாக இருந்தாலும் மூப்பு மட்டுமே மேலே செல்ல வாய்ப்பளிக்கும் என்றால் ஏன் வேலைசெய்யவேண்டும், ஏன் திறமையை வெளிக்காட்டவேண்டும்?
அப்படி இருந்தும் திறமையும் வேகமும் எங்கே வெளிப்படுகிறது என்று பாருங்கள், அந்த திறமையான ஊழியருக்கு தனிப்பட்ட லாபம் இருக்கும். நம் அரசு அமைப்புக்களில் நன்றாக வேலைசெய்பவர்கள் பொதுவாக ஊழல் செய்பவர்கள்தான். அவர்களே நேரம்காலம் பார்க்காமல் உழைப்பார்கள், சாத்தியமான புதியவழிகளை தேடிச் சொல்வார்கள்.
அரசுநிர்வாகத்தில் நேர்மையானவர்கள் பெரும்பாலும் நேர்மையாக இருப்பதை மட்டுமே செய்வார்கள். ‘எனக்குச் சொன்ன வேலையை சொன்ன நேரம் மட்டும் செய்வேன்’ என்பார்கள். அரசுத்துறைகளில் அது வெறும் சடங்காற்றுவது மட்டுமே. விதிகளை உறுதியாக கடைப்பிடிப்பேன் என்று ஒருவர் நிலைபாடு எடுத்தாலே அவர் எந்த வேலையும் செய்யமாட்டேன் என்று சொல்கிறார் என்றுதான் பொருள்
இதுவே இந்தியத் தொழில்துறையிலும் உள்ளது. பெரிய நிறுவனங்களில் புறவயமான அளவுகோலாக இருப்பது பணிமூப்பு மட்டுமே. பணிமூப்பை மட்டுமே தகுதியாகக் கருதும் ஊழியர்கள் இருக்கையில் திறமைக்கு மதிப்பளித்தால் சக ஊழியர்களை சமாதானப்படுத்த முடியாது.“நான்லாம் நாப்பது வருசமா விசுவாசமா உழைச்சேன். நேத்துவந்தவனை தூக்கி வைச்சுட்டாங்க” என்று குமுறுபவரிடம் அவருடைய மூப்பு என்பது தகுதி அல்ல, தகுதிக்குறைவுதான் என்று புரியவைக்க முடியாது.
இந்தியாவின் தொழிற்சூழலில் உள்ள முதன்மையான நிலப்பிரபுத்துவப் பண்பாடு இதுதான். மூப்புவழிபாடு, மூப்புக்கான மரியாதைகள்.பணிமூப்பு என்பது தன்னளவில் ஒரு தகுதியே கிடையாது, அந்த பணிமூப்பால் கற்றுக்கொண்டது என்ன என்பது மட்டும்தான் அளவுகோலாக இருக்கவேண்டும். இதை நம் தொழிற்சூழலில் நிறுவவேண்டியிருக்கிறது. “நம்ம வயசுக்கு ஒரு மதிப்பிருக்கா?” என்று சொல்லும் ஒருவர் நவீன தொழிற்சூழலுக்கே எதிரான பழையகால மதிப்பீட்டை முன்வைக்கிறார். இது இன்றுகூட, படித்தவர்களுக்கேகூட தெரியாத ஒன்று.
ஒரு நிறுவனத்தில் மேலிட ஆதரவால் முன்னேறிப் போகலாம் என்ற வழி இருந்தால் அங்கே படிப்படியாக திறமை இல்லாமலாகும். அங்கே கீழ்க்கண்டவை நிகழும்
அ. ஒவ்வொருவரும் மேலிட ஆதரவை நாடுவதற்கு முயல்வார்கள். அதற்கு முண்டியடிப்பார்கள். நயந்தும் குழைந்தும் மேலிடத்தயவை நாடுவார்கள்.
ஆ. நிலப்பிரபுத்துவச் சூழலில் மேலே இருப்பவர் எஜமானர். கீழிருப்பவர் அடிமை. அடிமைத்தனம் மெல்ல மெல்ல அந்நிறுவனத்தில் நிலைகொள்ளும். அடிமைகள் ஒருபோதும் திறனாளர்கள் அல்ல. திறனாளர்கள் அடிமைகளாக இருக்க மாட்டார்கள்
இ. அத்தகைய சூழலில் கீழிருந்து எந்த உண்மையான எதிர்வினையும், புதியசிந்தனையும் எழுந்து வராது. கீழே என்ன நடக்கிறதென்றே தெரியாது. ஒவ்வொருவரும் மேலே இருப்பவர் மகிழ்ச்சி அடையும் செய்திகளை மட்டுமே அளிப்பார்கள்.
உ.திறமையாளர்களை நயந்துவாழ்வோர் ‘போட்டுக்கொடுக்க’ ஆரம்பிப்பார்கள். காலப்போக்கில் திறமையே ஒரு குற்றமாக ஆகிவிடும்
நம் அரசிலும், அரசியல்கட்சிகளில்கூட இன்று இதுதான் நடைபெறுகிறது. ஒருவர் மேலே செல்லச்செல்ல அவருக்கு எதிரிகளும் கூடிக்கூடி வருவார்கள். அவர் பலரை போட்டுக்கொடுப்பார். அவரை பலர் சேர்ந்து போட்டுக்கொடுப்பார்கள். ஆகவே மிக நெருங்குபவர்கள் ஒரே நாளில் வீழ்ச்சியும் அடைவதைக் காணலாம்
பலசமயம் மேலிடம் ‘நம்பகமானவர்களை’ மேலே கொண்டு சென்று தனக்கு அணுக்கமாக அமரவைக்கிறது. உண்மையில் இந்த மனநிலை மிகப்பெரிய பலவீனம். ஓர் அமைப்பை நம்பாமல் ஆட்களை நம்புகிறீர்கள் என்றாலே உங்களுக்கு நிர்வாகத் திறமை இல்லை என்று பொருள். நம்பகமானவர்களை வைத்து நிர்வாகம் செய்பவர்கள் அத்தனைபேருமே தோற்றுத்தான் போவார்கள். நம்பவேண்டியது அமைப்பை மட்டுமே
ஏனென்றால் அமைப்பு புறவயமானது, நிலையானது. மனிதர்கள் வந்தாலும் சென்றாலும் மாறாதது அது. அமைப்பு திறம்படச் செயல்பட்டாகவேண்டும், இல்லையேல் அழியும். அமைப்புக்கு கொள்கை இல்லை, உணர்ச்சிகளும் இல்லை. வெற்றிகரமான அமைப்புகள் தானாகவே செயல்படக்கூடியவை. ஆகவே விரிவடைந்து கொண்டே செல்லக்கூடியவை.
முதலாளித்துவத்தின் சாதனையே அது தனிமனிதர்களில் இருந்து அமைப்புகளுக்கு தன்னை மாற்றிக்கொண்டதுதான். தனிமனித உணர்ச்சிகள் , உறவுச்சிக்கல்களுக்கு இடமே இல்லாத புறவயமான அமைப்புக்களை அது முந்நூறாண்டுகளாக கட்டியெழுப்பியிருக்கிறது. அவை விதிகளின்படிச் செயல்படுபவை. விதிகள் புறவயமானவை
அவ்வாறு உருவாக்கப்பட்ட அமைப்புக்களில் தனிமனித உணர்ச்சிகளைக் கலந்தாலே அவை வீழ்ச்சியடையும் என்பதில் சந்தேகமில்லை. தனிமனித உணர்ச்சி எதுவானாலும் அமைப்புக்கு எதிரானதே. ‘நான் இந்த அமைப்புக்காக உசிரைவிடுவேன் சார்’ என்று ஒருவர் சொன்னாலே அவர் அந்த அமைப்பை நிலப்பிரபுத்துவ ‘செண்டிமெண்டுகளால்’ அழிக்கிறார் என்றுதான் பொருள்
இந்தியச் சூழலில் மேலும் கடைப்பிடிக்கவேண்டிய ஓர் அறம், தனிமனித உரிமை. அவற்றை மூன்றாக நான் பிரிப்பேன். அறிவுரிமை, தன்மதிப்புரிமை, தனிவாழ்வுரிமை
அறிவுரிமை என்பது இங்கே கல்வித்துறையில் இருந்தே காணப்படுவதில்லை. தன் கீழ் ஆய்வுசெய்பவர்களின் ஆய்வேடுகளைத் திருடி தன்பெயரில் வெளியிடாத பேராசிரியர்கள் மிகமிக அரிதானவர்கள். எனக்குத்தெரிந்து அ.கா.பெருமாளும் வேதசகாயகுமாரும் அவ்வாறு செய்யலாகாது என்னும் தன்னுறுதி கொண்டவர்கள். விளைவாக ஒரு மாணவர் படையை உருவாக்கியவர்கள். புகழ்பெற்றிருக்கும் பலர் உழைப்புத்திருடர்கள்.
தொழிற்சூழலில் ஒருவரின் சிந்தனை, உழைப்பு ஆகியவற்றை இன்னொருவர் கைப்பற்றுவது கீழ்மை, குற்றம் என நிறுவப்பட்டாகவேண்டும். அது தண்டிக்கப்பட்டாகவேண்டும். ஒருவர் தன் திறமையை வெளிக்காட்டினால் அதன் பயன் அவருக்கு கிடைக்காது என்றால் அந்த திறமை வெளிப்படாமலே போகும்
என் நண்பரான ஊடகத்துறையினர் ஒருவர் சொன்னார். ஊடகத்துறையில் ஒரு புதிய கருத்தைச் சொன்னால் அது உடனே மேலிருப்பவரால் திருடப்படும். ஆகவே எவரும் தங்களுக்கு தோன்றும் புதிய எண்ணத்தை வெளியே சொல்லுவதில்லை. தங்களுக்கு ஒரு வாய்ப்புவரும், அப்போது செய்வோம் என்று நினைத்து ரகசியமாக வைத்திருப்பார்கள்.
ஆனால் அந்த வாய்ப்பு அவருக்கு வரவேண்டும் என்றால் அவர் எதையாவது சாதிக்கவேண்டும். அதற்கு அவர் புதியவிஷயங்களைச் சொல்லி, செய்து காட்டவேண்டும். ஆகவே அவருக்கு அதற்கான வாய்ப்பு வருவதே இல்லை. அவருடைய எண்ணங்கள் அப்படியே பழையனவாகி பயனற்றதாகி மறையும். ஊடகத்துறையில் புதிய எண்ணங்கள் வராமல்போவது இதனால்தான்.
இரண்டாவது, தனிமனிதரின் தன்மதிப்பு உரிமை. இங்கே தொழில்துறைகளில் நுழையும் ஒருவர் மேலிருப்பவரால் மிகக்கேவலமாக வசைபாடப்பட்டு அவமதிக்கப்படுவார். அவருடைய தன்மதிப்பு சிதையும், அவ்வாறு தன்மதிப்பு சிதைந்தவர் மிக ஆழமான தாழ்வுணர்ச்சி கொண்டவராக இருப்பார். அவர் மேலே வரும்போது தன்னை பிறர் மதிக்கிறார்களா என்று பார்த்துக்கொண்டே இருப்பார். சிறிய செயல்களையும் சந்தேகப்படுவார், வசைபாடி அவமானப்படுத்தி தன் மதிப்பை உருவாக்க முயல்வார்
இந்த நச்சுச்சூழல் உண்மையில் திறமையானவர்களை ஒடுக்குகிறது. திறமையானவர் எவரானாலும் தன்மதிப்பு கொண்டவராகவே இருப்பார். தன்மதிப்பை இழக்க விரும்பாமல் தொழில்களில் இருந்து ஒதுங்குபவர்கள் உண்டு, எங்கும் முன்னால் நிற்காமலேயே சென்றுவிடுபவர்கள் உண்டு.
ஒரு மெய்யான நிர்வாகி, ஐரோப்பா உருவாக்கிய நவீன தொழில்நிர்வாகத்தில் அறிமுகம் கொண்டவர், ஒருபோதும் வசைபாடமாட்டார். வசைபாடுபவர்களை சகிக்கவும் மாட்டார். ஒரு நவீன நிர்வாக அமைப்பில் வசைபாடுபவர் எவராயினும் உடனே அவர் ஈவிரக்கமில்லாமல் தூக்கி வீசப்படவேண்டும். அவர் எத்தனை திறமையானவராயினும், உண்மையானவராயினும் அவர் உண்மையில் மிகப்பெரிய இழப்பையே உருவாக்குகிறார். தொழிற்சூழலை அழிக்கும் பெரிய நஞ்சு அவர்.
வசைபாடுபவர் திறமைகளை அழிப்பவர், தொழிற்சூழலின் இனிய மனநிலையை சீரழிப்பவர், துதிபாடிகளை வளர்ப்பவர். மேலோட்டமான பார்வைக்கு அவர் நேர்த்தியையும் நம்பகத்தன்மையையும் எதிர்பார்ப்பவர், அதில் கறாராக இருப்பவர் போலத் தோன்றும். ஆனால் உண்மையில் அவருடைய உளச்சிக்கல்தான் அது. அவரால் நேர்த்தியை உருவாக்கவே முடியாது. அவர் நம்பகமானவரும் அல்ல.
தனிவாழ்வுரிமை என்பது ஊழியர்களின் அடிப்படைத்தேவை. ஒரு நிர்வாகம் ஓர் ஊழியரின் முழுவாழ்க்கைநேரத்தையும் கோருகிறது என்றால் அது அவரை திறமையற்றவராக ஆக்குகிறது என்று மட்டுமே பொருள். அவர் மகிழ்ச்சியாக, நிறைவாக வாழ்ந்தாலொழிய அவரால் திறமையை வெளிப்படுத்த முடியாது.
ஓய்வொழிவின்றி வேலை செய்பவர் சலிப்படைந்தவராக , எரிச்சல்கொண்டவராக, ஒப்பேற்றுபவராகவே மாறுவார். அவருக்கு தனிவாழ்க்கைப் பிரச்சினைகள் வரும், அதை தொழிலில் கலந்துகொள்வார். வாழ்க்கையையும் தொழிலையும் பிரித்துக்கொள்ளாத ஒருவரால் எதையும் நேர்த்தியாகச் செய்யமுடியாது. அவ்வாறு பிரித்துக்கொள்ள ஊழியர்களை அனுமதிக்காமல், அவர்களின் தனிவாழ்க்கையையே விலைக்கு வாங்கியதுபோல நடந்துகொண்டுவிட்டு, நேர்த்தியை எதிர்பார்க்கமுடியாது
இதையெல்லாம் பேசிக்கொண்டிருந்துவிட்டு என்னிடம் ஒருவர் சொன்னார், ‘இதெல்லாம் பேசத்தான் நல்லாருக்கும், அடிச்சு வேலைவாங்காம இங்க ஒண்ணும் நடக்காது’. இதுதான் கிளம்பிவரும் என எனக்கு தெரியும். ஏனென்றால் நான் நிலப்பிரபுத்துவமனநிலை என்று சொல்வதே இதைத்தான். ‘எத்தனைபேரை அப்டி அடிப்பீங்க?’என்று கேட்டேன். ‘அடிபட வாய்ப்பில்லாதவங்க என்னவேணுமானாலும் செய்யலாமா?” என்றேன். அவரால் பதில் சொல்லமுடியவிலை
நிலப்பிரபுத்துவ மனநிலை, ஆண்டான் மனநிலை, அபாரமான ஒரு ஆணவநிறைவை நிர்வாகிக்கு அளிக்கிறது. ‘டேய் மாட்டை பிடிச்சு கட்றா’ என்ற மனநிலையில் நிறுவனங்களை நடத்துவது அதனால்தான். அந்த பண்ணையார் மனநிலை அடிமைகளையே உருவாக்கும்.
நான் மிகவெற்றிகரமான மாபெரும் தொழில்முனைவோர் சிலரை அருகிருந்து கண்டவன். நான் சொல்வது அவ்வாறு அவதானிப்பையே
ஜெ