“ஆழ்நதியைத் தேடி” புத்தகத்தை நான் முதல் தடவை வாசித்தது 2014ல். அந்த நேரத்தில் கட்டுரைகளை முழுமையாக உள்வாங்கவில்லை என்பது இப்போது மறுவாசிப்பில் புலப்படுகிறது. இலக்கிய இயக்கங்கள், அழகியல்கள், நோக்கங்கள் பற்றி மிகத் தோராயமான ஒரு சித்திரமே அன்று என்னிடம் இருந்தது. வாசிப்பினூடே வெவ்வேறு பிராந்தியங்களில் சுற்றியலைந்து ஆறு வருஷங்கள் கழித்துதற்போது மீண்டும் இந்த நூலை படிக்கும்போது ஒவ்வொரு கருத்தையும் அதற்குரிய பின்புலத்தில் வைத்து புரிந்துகொள்ள இயல்கிறது. அதனாலேயே நூலின் முக்கியத்துவமும் ஸ்தூலமாக பிடிபடுகிறது. உங்கள் இலக்கியத் திறனாய்வு நூல்களில், “ஆழ்நதியைத் தேடி” தனித்துவமான இடம் கொண்டது எனக் கருதுகிறேன். “நாவல்” போல் கோட்பாட்டு நூலோ அல்லது “நவீன தமிழ் இலக்கியம்”போல் அறிமுக நூலோ அல்ல. “இலக்கிய முன்னோடிகள்” போல் படைப்பாளிகளை மதிப்பிடும் நூலும் அல்ல. மாறாக, தத்துவ நோக்கில் இலக்கியத்தை வரையறை செய்யும் நூல். நீங்களே குறிப்பிடுவதுப் போல் இலக்கியத்தின் “ஆன்மீக சாரம்” பற்றிய விசாரனை.
இதுவரை பல நூறு பக்கங்களில் இலக்கிய திறனாய்வுகள் எழுதியிருப்பதோடு தொடர்ச்சியான உரையாடல்கள் வழியாகவும் அவற்றை சூழலில் முன்நிறுத்தியிருக்கிறீர்கள். எனவே, “ஆழ்நதியைத் தேடி” எந்த வகையில் விசேஷமானது என்று ஒருவருக்கு நிச்சயம் கேள்வி எழும். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் முதல் பதிப்பு கண்ட நூல். இடைப்பட்ட காலத்தில் அதில் உள்ள கருத்துக்களை பல்வேறுஇடங்களில்நீங்கள் முன்வைத்திருக்கிறீர்கள்– இன்னும் துல்லியமான சொற்களாலும், நேர்த்தியான படிமங்களாலும்.ஆனால் முக்கியமான வித்தியாசம். மற்ற இடங்களில் எல்லாம், அம்முடிவுகளை நீங்கள் எப்படி அடைந்தீர்கள் என்பதை வாசகர்கள் கண்டுபிடிக்க முடியாது. அல்லது அந்த பாதை வெளிப்படையாக இருக்காது. தம் துல்லியத்தினாலேயே அவை ஆதாரம் தேவைப்படாத உண்மைகளாக நிலைகொண்டிருக்கின்றன. எளிமையினாலேயே மறுக்க முடியாததாகவும். ஒருவகையில் அவைஆசிரியரின் சொற்கள். தடம் இதழில், வெளியான “நத்தையின் பாதை” தொடர் ஒரு நல்ல உதாரணம். ஆனால் “ஆழ்நதியைத் தேடி”நூலில் உறுதி இருக்கும்போது கூடுதலாக நெருக்கமும் வெளிப்படுகிறது. பேசுபொருளே காரணம் என நினைக்கிறேன். பிற நூல்களில் இருப்பது இலக்கியத் தேடல் என்றால் இதிலிருப்பது ஆன்மீகத் தேடல்.ஆனால் இரண்டும் தனித்தனி இருப்புகள் அல்ல. ஒன்று கனிந்து இன்னொன்றாக மாறுகிறது.
புத்தகம் முழுக்க,வெவ்வேறு விதங்களில் நீங்கள் உத்தேசிக்கும் ஆன்மீகத்தின் பொருளை விளக்குகிறீர்கள்.அதில் நான் முதன்மையாக எண்ணுவது, முன்னுரையில் இருக்கும் வரையறையையே. தன்னுள் அதை உணராதவர்களுக்கு ஒருபோதும் விளக்கமுடியாத உள எழுச்சி.இந்நூலின்அடிப்படைக் கூறாக இதையே குறிப்பிடுவேன். சொல்ல முடியாத ஒன்றை சுட்டிக் காட்டிஅதன் முக்கியத்துவத்தை தக்கவைக்க, அதை சூழ்ந்திருக்கும்பிற விஷயங்கள் –வரலாறு முதல் தனிமனிதனின் மனம் வரை- குறித்து பேசும் நூல் இது. ஆழ்நதியின் ஓட்டத்தை நிலத்தின் மேலிருந்து கண்டுபிடிப்பது. எனவே இலக்கியம் அளிக்கும் ஆன்மீக அனுபவத்தை தன் வாழ்க்கையில் ஒருபோதும் உணர்ந்திராத ஒருவரோடு இது பற்றி பேசுவதில் அதிகம் பயன் இருக்க முடியாது.
கி.ராவின் கோபல்ல கிராமம் வெளியானபோது அதை நாவலாக ஏற்றுக் கொள்வதில் பலருக்கும் தயக்கம் இருந்திருக்கிறது. அதுக் குறித்து எழுதும்போது கி.ரா சொல்கிறார்.“ஒட்டகச்சிவிங்கியைமுதன்முதலில்பார்த்தவன்சொன்னானாம்இதுமிருகமேஇல்லைஎன்று”.அறியாத ஒன்றை அவசரமாக நிராகரிப்பது தொடர்ந்து நடப்பதே.பாதுகாப்பின்மையால் பதற்றம் கொள்பவர்கள் சௌகர்யத்திற்காக மூர்க்கமான நிராகரிப்பில் தஞ்சம் புகுவார்கள். அவர்களே இலக்கியத்தை பயன்பாட்டுத் தளத்தில் மட்டும் எதிர்கொள்பவர்கள். அல்லது தம்வீட்டின் எல்லைக்கு அப்பால் இலக்கியத்தை விரித்து எடுக்கும் கற்பனை இல்லாதவர்கள்.அத்தகையோரிடம், இலக்கியத்தின் ஆன்மீகத் தேடல் பற்றி பேசவே முடியாது. ஒருமுறையாவது வாசிப்பின் வழியேஅதை உணர்ந்தவர்களிடம்தான் இதை முன்வைக்க முடியும். முதல் தடவை படிக்கையில் இக்கட்டுரைகளை தர்க்கபூர்வமாக நான் ரொம்ப தூரம் தொடரவில்லை. எனினும் அனுபவத் தளத்தில் அதன் விளைவுகள்பதிந்ததற்கும் அதுவே காரணம் என நினைக்கிறேன்.
அகத்திலும் புறத்திலுமாக, இலக்கியம் இரண்டு விதமான பணிகளை மேற்கொள்கிறது. புறம் என்று பொருள்வய உலகின் எல்லா அடுக்குகளையும் அவற்றை நகர்த்தும் வெவ்வேறு விசைகளையும் சுட்டலாம். நான்கு பேர் இருப்பதால் சமூகம் என்றும் அதை சொல்லலாம். எல்லா அறிவுத் துறைகளையும் போல் இலக்கியத்திற்கும் சமூக அளவில் பெறுமானமும் அது மட்டுமே ஆற்றக்கூடிய பாத்திரமும் உண்டு. பலர் பலவிதமாக அவற்றை வரையறுக்கக்கூடும். “இலட்சியக் கனவுகளுக்கும் அறவுணர்வுகளுக்கும் வரலாற்றில் பீடம் தேடித் தருவது” என்றுஅதை நீங்கள் குறிப்பிடுகிறீர்கள். (இரு இணைப்பறவைகள்).
புறம் என்பது சமூகம் என்றால் அகம் என்பது அந்த நான்கு பேர் இல்லாத இடம். அங்கே விழிப்பு தனித்திருக்கிறது. அறிதல் கூர்மைப்படுகிறது.எனவே ஒவ்வொரு அனுபவமும் தூய நிலைக்கு போய்விடுகிறது. இலக்கியத்தின் இந்த அகவயமானப் பணியை சமூகத் தளத்தில் வைத்து உரையாட முடியாது. அதையே நீங்கள் ஆன்மீகத் தளம் என்று கூறுவதாக புரிந்துகொள்கிறேன். சற்று தாராளமாக “இறையனுபவம்”என்றும் அதை வகுக்குறீர்கள். “வாழ்வின் அனைத்து அனுபவங்கள் மூலமும்இறையனுபவத்தை தேடியிருக்கிறான் மனிதன். அல்லது அனைத்து அனுபவ உச்சங்களிலும் இறையனுபவத்தை அடைந்திருக்கிறான்”. (தணியா பெருவேட்கை). மதம் நீக்கப்பட்ட இறையனுபவம் என்று நவீன உரையாடலில் அதை குறிப்பிடலாம்.
(அகம், புறம் என்பது தோராயமான பிரிவினையே. வெப்பம் மழையாவதுப் போல் ஒன்று இன்னொன்றை மாற்றியமைத்தபடியே உள்ளது. நூற்றாண்டுகளில், விவிலியத்தின் தரிசனங்கள் புறத்தில் சமூக விழுமியங்களாகிவிடுகின்றன. தஸ்தாயெவ்ஸ்கியின் நாவல்களில் அதே தரிசனம் திரும்ப ஆன்மீகத் தளத்தை அடைந்துவிடுகிறது.)
இந்த நூலின் இரண்டு முக்கிய அம்சங்களை மட்டும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
முதலாவதாக, இலக்கியத்தின் புற மதிப்பை எந்த விதத்திலும் குறைத்துக் காட்டாமல் அதன் தொடர்ச்சியாகவே அக அனுபவமான ஆன்மீகத் தளத்தை கட்டமைத்திருப்பது. சொல்ல முடியாததன் இருப்பை, பேசாமல் இருப்பதன் வழியே நிறுவ முடியும் என்பது ஒரு தவறான பொது அபிப்ராயம். அது ஒருவகையில் அந்த ரகசிய இருப்பை நிராகரிப்பதே ஆகும். மாறாக, சொல்லக்கூடியதை எல்லாம் சொல்லி முடித்தப் பின்பும் தீராமல் இருப்பதே அதன் நிரூபணம். சொல்லி சொல்லியும் எஞ்சுவது. எனவே இலக்கியத்தின் “இறையனுபவம்” பற்றி பேசுவதற்கு முன்னால் கலாச்சாரத்தில், சமூக மாற்றத்தில், அரசியல் வரலாற்றில் இலக்கியத்துக்கு என்ன இடம் இருக்கிறது என்பதையும் பேச வேண்டியிருக்கிறது. தொகுப்பில் இடம்பெற்றுள்ள “பண்பாட்டின் மறைபிரதி” போன்ற கட்டுரைகள் அந்த பணியை நிவர்த்தி செய்கின்றன. நம் ஆழ்மனதின் கட்டமைப்பை அவை பரிசீலிக்கின்றன. ஆழ்மனதை பரிசீலிப்பது அன்றாடத்தை பரிசீலிப்பதே.
இரண்டாவதாக, இறையனுபவத்தை விழுமியங்களுக்கு அன்னியமானதாக சித்தரிக்காதது. நல்ல எடுத்துக்காட்டு – பஷீருடனான சந்திப்பை விவரிக்கும் “அழியாத நீதி” கட்டுரை. இலக்கிய அனுபவம் மனிதர்களின் அறிவுப் பரப்பில் நிகழ்வதில்லை. அதன் உச்சநிலை உள எழுச்சியாகவே இருக்கிறது. தலைக்கு மேல் வானம் முடிவற்று திறந்திருப்பதை ஒருவர் சட்டென்று உணர்வதுப் போல் அது ஒரு திடுக்கிடல்.அல்லது நன்றியறிதல். தன் மர்மத்தினாலேயே அந்த உச்சநிலையில் மானுட விழுமியங்கள் பொருட்படுத்தப்படாமல் போகலாம். நீதியின் இடம் பற்றிய குழப்பங்கள் மேலிடலாம். ஆனால் பஷீர் சொல்கிறார் நீதியே இலக்கியத்தின் முதன்மை அடிப்படை என்று. அவருடைய கூற்றின் மூலம் நீதி என்பது இலக்கிய அனுபவத்தின் மறுஎல்லையில் இருக்கும் வஸ்துவாக இல்லாமல், இலக்கிய அனுபவத்தில் திரள்வதாக மாறுகிறது. உண்மைப் போல, அழகுப் போல அதுவும் இலக்கிய வெளிப்பாடாகிறது. இக்கட்டுரைகள் வழியேதொடர்ச்சியாக அறத்தையும் நீதியையும் இலக்கியத்தின் அடிப்படை அனுபவத்தோடு இணைத்திருப்பது அவசியமான பங்களிப்பு என நம்புகிறேன். “கவிதையும் நீதியும்” கட்டுரை இன்னும் துல்லியமாக இதை பேசுகிறது. மரபான நீதி அல்ல; கவித்துவ நீதியே முக்கியமானது என்று சுட்டுகிறது.
தற்போது, அமெரிக்க எழுத்தாளர் மெர்லின் ராபின்சனின் “வீடு” நாவல் வாசித்துக் கொண்டிருக்கிறேன். அதில் ஒரு காட்சி. நாவலின் மையப்பாத்திரமான க்ளோரி இளமையில் தன் சகோதரிகளோடு சேர்ந்து தோட்டத்துக்குச் சென்று கை நிறைய மலர்கள் பறித்து வருவாள். அதை பார்த்ததும் அவள் தந்தையின் கண்கள் நீரில் மினுங்கிவிடும். அப்போது வரக்கூடிய வாசகங்கள். “அவர் ஆம், ஆம் என்று சொல்வார். அவர்கள் ஏதோ ஞாபகச் சின்னத்தை கொண்டு வந்ததுப் போல். இந்த மலர்கள் ஒரு இனிய நினைவூட்டல் மட்டுமே என்பதுப் போல். மலர்கள் பற்றிய நினைவூட்டல்”. இலக்கியமும் அதையே செய்கிறது என எண்ணுகிறேன். மலர்கள், மலர்களையே நினைவூட்டுவதுப் போல். அழகும் பக்தியும் சூடக்கூடிய மலர்களுக்கு பின்னால் இருப்பது ஆற்றல். அதுவே ஒளியிலிருந்துமலர்தல் எனும் முதல் செயலை மேற்கொள்கிறது. அழகும் பக்தியும் அதிலிருந்து முளைத்து வருபவையே. ஜீவிதத்தை அல்லது இருப்பின் புதிரையே உணர்வெழுச்சியாக தந்தை அங்கு அறிகிறார். அப்படியாக மலர்கள் மலர்களின் சாரத்தை நினைவூட்டுகின்றன. இலக்கியத்தின் ஆன்மீகத் தளமும் அதுவே.மலர்கள் நமக்கு நினைவூட்டுவது. இந்த நூல் அதை இழக்காமல் இருப்பதற்கான பயிற்சியை அளிக்கின்றது.
பின் குறிப்பு:சுந்தர ராமசாமி பற்றி பேசும் அளவுக்கு நீங்கள் பிரமிள் பற்றி தொடர்ந்து பேசுவதில்லை. ஆனால் படைப்பு ரீதியாக உங்கள் தொடர்ச்சி சு.ராவைக் காட்டிலும் பிரமிளிடமே அதிகம் இருப்பதாக எனக்குத் தோன்றும். “லங்காபுரி ராஜா” கதையை படிக்கும் யாருக்கும் அப்படிதான் தோன்றும். பிரமிளிடம் இருக்கக்கூடிய மெய்யியல் தேடல் சு.ராவிடம் கிடையாது. ஒருவேளை பிரமிளின் கட்டற்றத் தன்மையை உங்கள் வரையில் தர்க்கத்திற்குள் அடைக்கவே சு.ராவின் ஆசிரியத்துவம் தேவைப்பட்டிருக்கக்கூடும். இந்த புத்தகம் பிரமிளுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டிருப்பதைக் கண்டதும் எனக்கு எதுவோ புரிந்ததுப் போல் இருந்தது.
அன்புடன்,
விஷால் ராஜா.