இந்தியா திரும்பலாமா?
இளிப்பியல்
அன்பு ஜெ
இரண்டு முக்கியமான சமூகம் சார்ந்த கட்டுரைகள்.
இந்தியா திரும்பலாமா? புலம்பெயர்ந்து அங்கு பலவிதமான வசதிகளோடும், அங்குள்ள வாழ்வியலு டன் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி இருக்கக்கூடிய பலருக்கு இந்த கட்டுரையை அனுப்பி வைத்தேன். கிட்டத்தட்ட எனக்கே ஒரு தெளிவு பல பேருக்கு இந்தியா வந்து விடலாமா? என்று கேட்கும்போதெல்லாம் நான் அளிக்கும் ஒற்றை பதில் யோசித்துச் செய்யுங்கள். நீங்கள் எதிர்பார்த்த வண்ணம் இந்தியா இருக்கும் என்று நம்பாதீர்கள் என்றே சொல்வேன்.இனி என்னால் ஒவ்வொன்றாய் அடுக்கி அவர்கள் முடிவுகளை எடுக்கச் செல்ல முடியும்.மிகச்சரியான தெளிவான பார்வை.
சமீபத்தில் என் நண்பர் குடும்பத்தில் அமெரிக்காவிலிருந்து திரும்பிய ஒருவர் அவருடன் அவருடைய பெற்றோர் அனைவரும் மிகப் பெரிய மன அழுத்தத்தில் இருப்பதாக அறிகிறேன். இந்தக் கட்டுரை அதுபோன்ற மனிதர்களுக்கு மனிதர்களுக்கு திறவுகோல்.
இன்று படித்த ‘இளிப்பியல் ‘ (எனக்கு புது வார்த்தை) என் எண்ண ஓட்டத்தை தெளிவான நேர்த்தியான வடிவத்தில் பார்த்த உணர்வு . தன்
இயலாமையை (முகமிலி – இதுவும் புது சொல்) பல்வேறு வடிவங்களில் வெளிப்படுத்தும் மனிதர்களில் அற்பத்தனத்தை சுரீரென சுட்டியது. இந்த இரண்டு கட்டுரைகளும் சிறு உதாரணங்கள்தான்.சுற்றியுள்ள மனிதர்களின் சமூகத்தை இன்றைய வாசகனுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டி தன் எண்ணத்தை மேம்படுத்தி வாழ்வை வளப்படுத்திக் கொள்ள பொக்கிஷம் உங்கள் வலைத்தளம். வருங்காலத்தில் உங்கள் தளம் தத்துவத்தில் ,வாழ்வியலில் ,இலக்கியத்தில்,சூழலில், பண்பாட்டில், மரபில் , பயணங்களில், கல்வெட்டுக்களில்,வரலாற்றில் இன்னும் ஆயிரக்கணக்கான தேடல்களில்,எங்கெங்கெல்லாம் சந்தேகம் வருகிறதோ அங்கெல்லாம் தலைமுறைகளுக்கு அறிவு ஒளி வீசி பயனளிக்கும் என்பது நிச்சயம்.
அன்புடன்
நடராஜன்
கோவை
***
அன்புள்ள ஜெ
இந்தியா திரும்பலாமா ஒரு கூர்மையான கட்டுரை. நாமே யோசிக்கக்கூடிய விஷயங்கள்தான். ஆனால் அதை இப்படி கட்டுக்கோப்பாக, நம்பர் போட்டுச் சொல்லுவதுபோல முன்வைக்கையில் பெரிய தெளிவு உருவாகிறது. கடந்தகால ஏக்கத்தாலோ, அல்லது அங்கே உள்ள தனிமையினாலோ எவரும் இங்கே வந்துவிடமுடியாது.இங்கே வந்து இன்னொரு வாழ்க்கைக்குச் சென்றுவிடலாம் என்று நினைப்பது எளிது. செய்வது மிகக்கடினம்.
நம்மை நாமே கறாராக பார்க்கச்செய்யும் குறிப்பு
லோகநாத்
***
அன்புள்ள ஜெ
இளிப்பியல் ஒரு கசப்பான உண்மையை முன்வைக்கும் கட்டுரை.
மக்கள் ஆட்சியாளர்களை கிண்டல்செய்கிறார்கள் என்று பொதுவாக இந்த மீம்களைப் பற்றிச் சொல்லுவதுண்டு. மக்கள் என்று எவரும் இல்லை. அனைவரும் ஏதோ நோக்கத்துடன் எவராலோ திரட்டப்படுபவர்கள்தான். மக்கள் என சிலர் இங்கே அப்படிச் சில கிண்டல்களை உருவாக்கினாலும்கூட அது டிரெண்ட் ஆகமுடியாது. திரட்டப்பட்டவர்கள்தான் பொதுவெளியை ஆக்ரமிப்பார்கள். அவர்கள் எதையும் சில்லறைத்தனமாக ஆக்கிவிடுவார்கள். எதையும் எவருக்கும் பொருட்டில்லாமல் ஆக்கிவிடுவார்கள். அதுதான் இன்றைக்கு நடந்துகொண்டிருக்கிறது
அர்விந்த்குமார்
***