இளிப்பியல்- கடிதங்கள்

இளிப்பியல்

அன்புள்ள ஜெயமோகன்,

‘இளிப்பியல்’ வாசித்தேன். நான் சமூக ஊடகங்களில் activeவாக இருப்பவன் அல்ல. அது எனக்கு ஒரு ஒவ்வாமையையே அளிக்கிறது. நண்பர்கள் “ஏன்?” என்று கேட்கும் போது “ஆர்வமில்லை” என்று மட்டும் சொல்லிவிடுவேன். ஆனால், ஏன் அது ஒவ்வாமை அளிக்கிறது என்று எனக்குள் வினவி ஒருவாறு தொகுத்துக்கொண்டேன்.

முதலாவதாக, அது உருவாக்கும் ‘நிலையற்ற உணர்ச்சி நிலை’. உதாரணமாக, ஒரு பெரும் தலைவர் மறைவையொட்டி ‘நெஞ்சை நெகிழ’ வைக்கும் ஒரு பதிவுக்கு அடுத்ததாகவே ஒரு ‘குபீர் சிரிப்பு’ பதிவு இருக்கிறதென்றால் உடனே நம் மனம் switchஐ on-off செய்வதைப்போல் அடுத்த உணர்வுக்குத் தாவிவிடுகிறது. இதனால் மனம் குளத்தில் வீசப்பட்ட கல்லைப்போல்  தத்திதத்தி ஓர் அர்த்தமற்ற சூன்ய நிலையைச் சென்றடைகிறது. அதனால் தான் ஒவ்வாமை ஏற்படுகிறது. மேலும், புறவுலகில் ஓர் அர்த்தமற்ற உணர்வுச் சமநிலை குலைவையும் ஏற்படுத்துகிறது என்று நினைக்கிறேன்.

ஒரு நோக்கத்திற்காக வாழ்வை அர்ப்பணித்த லட்சியவாத காலகட்டத்திலிருந்து இந்த போலிபாவனைவாத காலகட்டம் வரை ஏற்பட்டிருக்கும் தனிமனித அகநிலை சரிவின் விளைவுகளை நம் வருங்காலம் தான் நமக்குக் கூறும்.

இப்போது அரசியல் கட்சிகள் ‘மக்களை’ கவரப் புத்தகங்கள் எழுதி, சொற்பொழிவுகள் ஆற்றி, திரைப்படங்கள் எடுத்து பணத்தை வீண் செலவு செய்ய வேண்டியதில்லை. தன்னைப் பற்றி அவதூறாகவோ ஆதரவாகவோ தொடர்ச்சியாக மீம்கள் வெளியானாலே போதும், ஒட்டு போடும் போது ‘சரி – தவறு’ என்று முடிவெடுப்பதை விட இவரை நமக்கு ‘தெரியும் – தெரியாது’ என்று முடிவெடுப்பது தானே நம் வழக்கம்.

அவர்கள் புறவயமாக மக்களைத் திரட்ட வேண்டியதில்லை. இடையன் கையில் உள்ள கோல் போல் இன்று பல IT செல்கள் செயல்படுகின்றன.

இதற்கு மறுபுறத்தில், முகமிலிகளின் கெக்களிப்பை தாண்டி ஏன் மீம்கள் தேவைப்படுகிறது?

முதலாவதாக, இன்று ஊடகங்கள் நமக்குச் செய்திகளை அளிப்பதில்லை. செய்திக்குவியல்களைக் கொட்டுகிறது, அரசியல், சினிமா, அறிவியல் என ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை ஒரு புது செய்தி update ஆகிறது என்றால் ஒரு நாளைக்கு சுமார் 250+ செய்திகள். இதை எப்படி அறிந்து கடப்பது? அதைச் சுருக்கி பொதுமைப்படுத்தி நமக்கு தெரிந்த ஒன்றுடன் (சினிமா) இணைத்துத் தொகுத்துக்கொள்வது தானே ஒரே வழி. அதனுடன் கொஞ்சம் நக்கலும் சேர்ந்தால் மீம்கள் ரெடி.

மேலும், நீங்கள் சொல்வதைப்போல் ஆற்றலுள்ளவர்களும் இதில் சிக்கிக்கொள்ள வாய்ப்புள்ளது. வேறுவழியில்லை. இது ஒரு பெரிய filterஐ போல் செயல்பட்டு வடிகட்டும் பணியை ஆற்றுகிறது. ஏனென்றால், இவ்வுலகம் தன் அளவுகோல்களை மாற்றி அமைத்துள்ளது. ‘அதிஆற்றல்’ உள்ளவர்களே இனி ‘ஆற்றல்’ உள்ளவர்களாக கருதப்படுவார்கள். அவர்கள் இதைக் கடந்து சென்று தான் ஆக வேண்டும். இல்லையென்றால், தன்னை கச்சிதமாகப் பகுத்துக்கொண்டு அவர்கள் செயலாற்ற வேண்டும்.

தங்கள்,

கிஷோர் குமார்

திருச்சி.

***

அன்புள்ள ஜெ

இளிப்பியல் கட்டுரை வாசித்தேன். ஒன்று யோசித்துப்பாருங்கள், இப்போது இப்படி ஒரு கட்டுரையை தமிழில் வேறு எவர் எழுதமுடியும்?

அத்தனைபேருக்கும் ஏதாவது வலுவான அரசியல்தரப்பு இருக்கிறது. அவர்கள் அதைச்சார்ந்தே செயல்படுகிறார்கள். அந்தத் தரப்பும் தொடர்ச்சியாக மீம் போட்டுக்கொண்டிருக்கும். அவர்கள் அதை ஃபார்வேர்ட் செய்து ஹாஹாஹா போட்டுக்கொண்டே இருக்கவேண்டும். இன்னொரு தரப்பு மீம் போட்டால் கொந்தளிக்க முடியுமே தவிர மீம் போடுவது நம்மைச் சிந்திக்கவிடாமல் செய்கிறது என்று சொல்லமுடியாது

இதுதான் நிலைமை. மீம் ஏன் தேவைப்படுகிறதென்றால் இங்கே ஒவ்வொருவருக்கும் எளிமையான அரசியல் தரப்புகள் மட்டுமே உள்ளன என்பதனால்தான். அத்தனைபேரும் ஆளுக்கொரு ஐம்பது வார்த்தைகளை மட்டுமே வைத்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதில் முப்பது வார்த்தைகள் கேலிச்சொற்கள். இருபது வார்த்தைகள் க்ளீஷேக்களான கொள்கைச் சொற்கள். அவ்வளவுதான். எங்கே இருக்கிறது இங்கே பொதுவெளிச்சிந்தனை?

மீம்கள் சிந்திக்கும் கொஞ்சபேருக்காவது அருவருப்பானவை என்று தெரியவேண்டும். ஒரு சின்னவட்டாரத்திலாவது அவற்றின்மேல் ஒவ்வாமை உருவாகவேண்டும். இல்லாவிட்டால் வேறுவழியில்லை

ஆர்.கண்ணன்

***

முந்தைய கட்டுரைபால் சலோபெக்கின் பயணம்
அடுத்த கட்டுரைடார்த்தீனியம்- கடிதங்கள் 3