நீருடன் உறவாடல்

காட்டாறுகளைப் பற்றிய ஒரு ஈர்ப்பு எனக்கு எப்போதுமுண்டு. அவை ரகசியமானவை என்று தோன்றும். காட்டில் நாம் பார்க்கும் பெரும்பாலான சிற்றாறுகள் வெறும் நீர்த்தடங்களாகவே காட்சியளிக்கின்றன. அவை பெருகும்போது நாம் பெரும்பாலும் காட்டுக்குள் செல்வதில்லை. அவற்றின் ஒரு முகத்தை மட்டுமே நாம் பார்க்கிறோம்

மழைக்காடுகளில் காட்டாறுகளிலும் நீரோடைகளிலும் எப்போதும் கொஞ்சம் நீர் இருக்கும். நீர்தழுவிய வடுக்கள் கொண்ட பெரும்பாறைகளின் நடுவே நுரைத்து ஒலித்து இறங்கிக்கொண்டிருக்கும். நீர்ப்படலம் பரவிச்சொட்டும் இலைகள் சூழ ஓடையாக வழியும். பாசிப்படலம் மூடிய வழுக்குக் கற்பாதைகளில் நடந்து அவற்றை அடையலாம்

ஆனால் அவை அபாயகரமானவை. காட்டில் குடிநீர் இருக்குமிடமே விலங்குகள் அதிகமாக புழங்கும் பகுதி. யானைகள் சிறுத்தைகள் சாதாரணமாகக் காணலாம். புலியைக்கூட கண்டிருக்கிறோம். பாம்புகளும் அங்கேதான் நிறைய இருக்கும், குறிப்பாக விரியன்கள்.

தமிழகத்தின் வரண்ட காடுகளில் கோடைகாலத்தில் இந்த காட்டாறுகள் வெறுந்தடங்கள். பாறைகளில் உப்புபடிந்த அடுக்கடுக்கான எல்லைகள் சென்ற நீரின் அளவை காட்டும். உருளைப்பாறையின் தசைமென்மை அந்த பெருக்கின் விசையை காட்டும். நீர் சென்ற இடங்களில் மென்மணலும் பொருக்கு மணலும் படிந்திருக்கும். சில இடங்களில் ஊற்றுபோல நீர் தேங்கியிருப்பதும் உண்டு.

ஆனால் ஓடைகளில் நீர் இல்லையென்றாலும் மண்ணுக்கு அடியில் நீர்ப்பெருக்கு உண்டு என்பதை சூழ்ந்திருக்கும் மரங்களின் வன்மை காட்டும். பெரும்பாலும் நீர்மருது போன்ற பேருருக்கொண்ட நீர்மரங்களே அங்கே நின்றிருக்கும்.கான்கிரீட் கோபுரம் போன்ற அடித்தூர் கொண்டவை, பருத்த கிளைவிரித்து நிழல்பரப்பி நின்றிருப்பவை.

நீர் இருக்கும் இடங்களில் எப்படி அந்த மரங்கள் மட்டும் வளர்கின்றன? தாவரவியலாளர் ஒரு விளக்கத்தை அளிக்கின்றனர். நீர் மரங்கள் நீரை நிறைய உறிஞ்சி , மென்மையான தசைத்தடி கொண்டு விரைவாக வளர்பவை. அவற்றுடன் மெல்ல வளரும் பிறமரங்கள் போட்டி போட முடியாது. நீர்மரங்கள் மேலெழுந்து வெயிலை மறைத்துவிடுவதனால் அதன்பின் கீழிருந்து வன்மரங்கள் எழுவதில்லை.

ஏன் நீர்மரங்கள் எழவேண்டும்? நீர்மரங்கள் நீர்ப்பகுதிகள் மேல் காடு விரித்த பெருங்குடைகள். அங்கே வெயில் விழாதபடி அவை காப்பதனால்தான் நீர்த்தடங்களில் ஊற்றுகள் எஞ்சுகின்றன. கோடையில் மொத்தக் கானுயிரும் அந்த நீருற்றுகளையும் நீர்க்கசிவுகளையும் நம்பியே வாழ்கின்றன.

காட்டுக்கு தன்னை காப்பாற்றிக்கொள்ளத் தெரியும். அது பலகோடி ஆண்டுகளாக அவ்வண்ணம் பரிணாமம் அடைந்தது. காட்டில் நீரோடையின் அருகே உள்ள மரங்களை மட்டும் மனிதன் தொடர்ந்து வெட்டிக்கொண்டிருந்தால் போதும், ஐம்பதாண்டுகளில் முழுக்காடே அழிந்துவிடும். நீண்டகாலமாக அதைச் செய்துகொண்டிருந்தனர். ஏனென்றால் காட்டுக்குள் நீரோடை வழியாகச் செல்வது நல்ல பாதை. இன்று கொஞ்சம் கட்டுப்பாடு உருவாகியிருக்கிறது. அதற்கு நம் சூழியலாளர்களையே நன்றியுடன் எண்ணிக்கொள்ளவேண்டும்.

காட்டாறுகளின் பெருக்கு மிகக்குறைவாகவே மானுடக் கண்களால் பார்க்கப்படுகிறது. விலங்குகளும் அவற்றிலிருந்து விலகிவிடுகின்றன. ஏனென்றால் அவை எவ்வகையிலும் நம்பத்தக்கவை அல்ல. அவற்றைப்பற்றி அவையே எந்த உறுதியும் அளிக்கவியலாது. பாம்பென சென்றுகொண்டிருந்த நீரோடை யானைகளை புரட்டிச்செல்லவும்கூடும்

அவை பெருகுவது பெரும்பாலும் இருளில். இரவின் இருள் அல்லது மழையின் இருள். காட்டுக்குள் ஓலமிட்டபடி அவை ஓடி மெல்ல அடங்குகின்றன. ஒரு மாபெரும் நடனக்கலைஞனின் அக எழுச்சி கலையாகி, அவன் மட்டுமே அறியும்படி நிகழ்ந்து, தடமில்லாது மறைவதுபோல. காட்டாறுகளின் நீர் என்பது நம் கற்பனையில் பெருகுவதுதான், பெரும்பாலும்.

ஈரட்டி விடுதிக்குச் செல்லும் பாதையில் காட்டாறு குறுக்கிடுகிறது . ஆண்டில் எட்டுமாதம் மிகமெல்லிய நீர்க்கசிவே இருக்கும். மூன்றுமாதம் நீரோட்டம். அவ்வப்போது நீர்ப்பெருக்கு. அதன் சாதாரண தோற்றத்தைக் கண்டு மதிப்பிட்டு ராஜமாணிக்கம் கட்டிய பாலம் ஒரே ஆண்டில் துண்டு துண்டுகளாக சிதறியது. அடுத்த பாலம் இப்போது இருக்கிறது. ஆனால் அதுவும் அடியில் அத்தனை வலுவாக இப்போது இல்லை

மழை பெய்துகொண்டிருந்தது. நானும் கிருஷ்ணனும் ஈஸ்வரமூர்த்தியும் அந்தியூர் மணியும் பேசிக்கொண்டிருந்தோம். நீரின் பேரோசை கேட்டது. மழையின் ஓலம் காட்டை மூடியிருந்ததை மீறி எழுந்த முழக்கம். நாங்கள் சென்று பார்த்தபோது காட்டாறு கொந்தளித்துக்கொண்டிருந்தது. செந்நிற நீரின் ஆர்ப்பரிப்பு, கொப்பளிப்பு, குழைவு, அலைக்கழிவு, சுருள்வு, நீள்வு, ஒசிவு, வளைவு.

நீரை நோக்கிக்கொண்டே இருக்கலாம்.மிக அடிப்படையான ஒரு நிகழ்வு அது என தோன்றும். இயற்கையின் அசைவுகளே அடிப்படையானவை. அவற்றை நகல்செய்யும் அசைவுகள் அடுத்த படி. அவை புறத்தே நிகழ்கையில் நம் அகத்திலும் நிகழத் தொடங்குகின்றன. நம் எண்ணங்களும் அந்த அசைவுகளை அடைகின்றன. கொப்பளிக்கும் நீருடன் நின்று அகம் கொப்பளிப்பதுதான் அருவிகளும் காட்டாறுகளும் அளிக்கும் அனுபவம்.

நீரின் அசைவையே நோக்கிக்கொண்டு நின்றிருந்தேன். அசைவனவற்றை ஒரு கணத்தில் அசைவற்றவையாகவும் காண்கிறது நம் கண்- அல்லது நம் அகம். ஒரு ரகசிய காமிரா. நீரில் அடிக்கடி அது நிகழும். அப்போது மலரிதழ் போல, பட்டாடை போல, பளிங்குக்கல் போல நீர் தோன்றுகிறது. ஒருகணம் அந்த மாயத்தை காட்டி உடனே அசைவென்று தன்னை ஆக்கிக்கொள்கிறது.

இயற்கையுடன் இரண்டு உறவுகளையே மனிதன் கொள்ளமுடியும். அதை நோக்கி ஊழ்கத்தில் அமரலாம், அதனுடன் விளையாடலாம். பலரும் வழக்கமாகச் செய்வது, தன் அகத்தை இயற்கையின்மேல் ஏற்றிக்கொள்வதுதான். துயரை, சலிப்பை, கேளிக்கையை அல்லது பயன்பெறு நோக்கை. அது இயற்கையுடனான உறவாடல் அல்ல, இயற்கையை வெளியே நிறுத்தி தன்னுடன் தான் உறவாடல் மட்டுமே.

முந்தைய கட்டுரைடார்த்தீனியம்- கடிதங்கள் 3
அடுத்த கட்டுரைவெண்முரசும் வாசகர்களும்