உடையாள்- கடிதங்கள்-4

உடையாள்- கடிதங்கள் – 3

உடையாள் – கடிதங்கள் – 2

உடையாள்- கடிதங்கள் – 1

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

என் பெயர் தீபிகா. பத்தாம் வகுப்பு எனும் பெரிய பதட்டம் முடிந்து இப்போது அமைதியாய் வீட்டில் இருக்கிறேன். பொன்னியின் செல்வனில் ஆரம்பித்து சிறிது சிறிதாக எனது மாமா இலக்கியத்தை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள். யானை டாக்டர் சிறுகதையே நான் படித்து வியந்த முதல் சிறுகதை. தெய்வங்கள் பேய்கள் தேவர்கள் ஆர்வமாக படித்தேன்.

அதன்பிறகு உங்கள் சிறுகதைகளை ஆர்வமாக படிக்கலானேன். ‘அன்னை’ சிறுகதை என்னை பெரிதும் ஈர்த்தது, ‘தேவகி சித்தியின் டயரி’, ‘நெடுந்தூரம்’ போன்ற கதைகள் என்னை மேலும் சிந்திக்க வைத்தன. நாவல்களை படித்ததில்லை என்று மாமாவிடம் சொல்லிக்கொண்டிருந்தேன், சரியாக உடையாள் குறுநாவல் ஆரம்பித்து விட்டது.

உடையாள் குறுநாவலை ஆறு தினங்களாக வாசித்து வருகிறேன். முதல் பாகம் வாசிக்கையிலேயே எனது ஆர்வத்தை தூண்டியதற்குக் காரணம் அதில் இடம்பெற்ற விண்வெளிப் பயணமே. என் கனவாக என்றும் இருந்து வருவது என்றே சொல்லலாம். நாம் வாழ்வதற்கு ஏற்ற ஒரு விண்கலத்தை அமைத்தாலே போதும் அதில் பயணம் செய்யத் தொடங்கி நம் தலைமுறையினர் நாம் விரும்பியதை சென்று அடைவார்கள் என்று நினைத்துக் கொண்டேன்.

ஐந்தாவது பாகம் படிக்கும்போதுகூட அந்தக் குமிழ் நாம் வாழும் பூமியைப் போன்றே இருந்ததால், முதன் முதலில் நாமி வெளி உலகத்தில் காலடி எடுத்து வைக்கும்போது எனக்கும் அந்த அனுபவம் அதிர்ச்சியாய் இருந்தது. நானே அங்கே சென்றேன். அங்கே நான் ஏகையாக நின்றிருந்தேன். இந்த வீடடங்கு காலத்தில் பள்ளிக்குக் கூட செல்ல முடியாமல் இருக்கையில் வேறொரு கோளிற்கு கூட்டிச் சென்றதற்கு நன்றி.

அன்புடன்,

தீபிகா

அன்புள்ள அப்பாவுக்கு

நீங்கள் எழுதும் உடையாள் கதை மிகவும் நன்றாக இருக்கிறது. அந்த கதை எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது. நானும் என் அக்காவும்(காயத்ரி த) படித்து வருகிறோம். நான் என் நண்பர்களிடம் இந்த கதையை படிக்க கூறுவேன்.

காலிகை பெயர் மிகவும் பிடித்துள்ளது.

நன்றி

பாரதி. க

7 வகுப்பு

ஆறுமுகநேரி.

அன்புள்ள ஜெமோகன் ,

உடையாள், நான் முதல் முதலில் வாசித்த அறிவியல் புனைகதை.என்னை கட்டி போட்டதும் இக்கதை தான்..இப்பொழுது நான் 12ஆம் வகுப்பு படித்து கொண்டிருக்கிறேன். 10ஆம் வகுப்பு வரை அறிவியலை நன்றாக படித்து விட்டு.11ஆம் வகுப்பு வந்த பின்பு அறிவியலை முற்றிலும் வெறுத்தேன்.அதன் பிறகு இக்கதையில் தான் அறிவியலை ஆர்வத்தோடும் உற்சாகமாகவும் கற்றுக்கொண்டேன்.முன்னரே கற்ற அறிவியல் செய்தியாக இருந்தாலும் இப்பொழுது அதை செய்தியாக மட்டுமின்றி சிந்தனையாகவும் தத்துவார்தமாகவும் கற்று கொண்டேன்.இக்கதையில் வரும் கற்பனைகள் என்னை மிகவும் உற்சாகம் அடைய செய்தது.நாமியாகவே இந்த 10 நாட்கள் வாழ்ந்தேன் என்று தான் சொல்லுவேன்.இவ்வளவு அற்புதமான கதையை கொடுத்த ஜெயமோகன் uncle க்கு நன்றி.மேலும் பல அறிவியல் கதைகளை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறேன்.

இப்படிக்கு,

ஸ்ரீ பாக்ய லஷ்மி

முந்தைய கட்டுரைதியடோர் பாஸ்கரன் சந்திப்பு- கடிதங்கள்
அடுத்த கட்டுரைடார்த்தீனியம் [குறுநாவல்]-2