காஞ்சிகோயிலில் சென்னை வழக்கறிஞர் நண்பர் செந்திலின் பண்ணைவீடு இலக்கிய வாசகர்கள், எழுத்தாளர்கள் பலருக்கு நன்றாகத் தெரிந்தது. இன்று தீவிரமான எழுத்தாளர்களாக அறிமுகமாகியிருக்கும் பலர் இளம் வாசகர்களாக அங்கே வந்தவர்கள். அங்கே இதுவரை ஏழு முறை புதியவாசகர் சந்திப்பை நடத்தியிருக்கிறோம்.
ஈரட்டிக்குச் செல்வதற்கு முன்பும் திரும்பிய பின்பும் சிலநாட்கள் அங்கே தங்கியிருந்தேன். காஞ்சிகோயில் பண்ணைவீடு அத்தனை அழகாக எப்போதுமே இருந்ததில்லை. மொத்த ஈரோடு மாவட்டமும் மழையில் நனைந்து பசுமைகொண்டிருக்கிறது. அனேகமாக நாளும் இளமழை, அவ்வப்போது பெருமழை. குளிர்காற்று மதியத்திலும்.
செந்திலின் பண்ணைவீட்டில் அறுபதடி ஆழமான கிணறு இருக்கிறது. எங்களூரில் கிணறு என்றால் ஆறடி விட்டம் கொண்டதுதான். கமலைக்கிணறுகள் நூறடி விட்டம் கொண்ட ஆழமான சிறு குளங்கள். செந்திலின் பண்ணைவீட்டில் கிணறு நிறைந்து ஒரு கருநீலநிறமான படிகக்கல் போல தெரிந்தது. குளிர்ந்த நீர் நிறைந்து அலையற்று ஒரு கண் போல நம்மை பார்ப்பது
அதில் நீந்திக் குளிப்பது தன்னை மறந்த ஒரு நிலை. நீந்தும்போது நாம் புழுவாகிவிடுகிறோம். முழு உடலாலும் திளைக்க புழுக்களாலேயே முடியும். நீச்சல் உடல்முழுக்க ஆனந்தத்தை நிறைக்கிறது. நீந்தும்போது பெரும்பாலானவர்கள் கூச்சலிட்டுச் சிரிப்பார்கள். கரையேறும்போது மூச்சிரைக்க புன்னகைசெய்துகொண்டிருப்பார்கள். நீரில் விளையாட மட்டுமே முடியும், உடல்பயிற்சி செய்யவோ வெறுமே கிடக்கவோ எவராலும் இயலாது என்று தோன்றும்
முகப்பில் இருந்த கூடைநாற்காலியில்தான் பெரும்பாலும் அமர்ந்திருந்தேன். நண்பர்களுடன் சோம்பலாகப் பேசிக்கொண்டு. சோம்பலான பேச்சுக்கு வேறொருவகையான படைப்புத்தன்மை உண்டு. எதிலாவது சட்டென்று முட்டிக்கொண்டு தீவிரமாக சுருளவிழத் தொடங்கிவிடும். புதிய எண்ணங்கள் உருவாகி வரும்.
நண்பர் ஜி.எஸ்.எஸ்.வி.நவீன் மதுரையில் இருந்து வந்திருந்தார். நாமக்கல்லில் இருந்து வரதராஜனும் மகேஷும் வந்தனர். ஈரோடு நண்பர்கள் பாரி, மணவாளன், சந்திரசேகர், சிவா, ஈஸ்வர மூர்த்தி ஆகியோருடன் கிருஷ்ணனும் இருந்தார். கோவையிலிருந்து கதிர் முருகன், அரங்கசாமி வந்திருந்தனர். திருப்பூரில் இருந்து ராஜமாணிக்கம் வந்திருந்தார். தொடர்ச்சியாக நண்பர்கள் உடனிருந்தனர்
அருகே சிறு ஊர்களுக்குச் சென்றோம். ஈரோடு மாவட்டத்தில் இத்தனை இனிய பருவநிலையில் நான் பயணம் செய்ததே இல்லை. மலைப்பாறைகளின் மேல் அமர்ந்திருப்பது பயணத்திலேயே ஓர் அசைவழிந்த நிலையை அளிக்கிறது. நண்பர்கள் சூழ்ந்திருக்கையிலேயே தனிமையை கொண்டுவருகிறது.
செந்திலின் நாய்கள் இரண்டு கொரோனா காலகட்டத்தை கொண்டாடிக்கொண்டிருந்தன. செந்தில் எப்போதும் பண்ணைவீட்டில் இருக்கிறார். பல்வேறு மனிதர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். நான்கு மாதக் குட்டி ஒன்று. அதன்பெயர் சிம்பா. ஸ்வாகிலி மொழியில் சிங்கம்.அதன் அம்மாவும் இளமையானது.
சிம்பா அதிருஷ்டசாலி. அதன் அம்மாவிடம் இப்போதும் பால்குடிக்கிறது. கொஞ்சி விளையாடிக்கொண்டே இருக்கிறது. தான் சாப்பிடுவதை விட அம்மாவிடமிருந்து பிடுங்கிச் சாப்பிட சிம்பா குறியாக இருக்கிறது. ஆனால் சிம்பா அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கையில் செந்திலின் குத்தகைதாரர் நாய்களை சாப்பிட அழைத்தார். அவர் அருகே நின்றுகொண்டிருந்த அம்மா பாய்ந்து எங்கள் அருகே வந்து , தூங்கிக்கொண்டிருந்த சிம்பாவை கவ்வி அழைத்து, கூட்டிச்சென்றது.
ஆனால் அங்கே சென்றதும் சிம்பா அம்மாவை சாப்பிடவிடாமல் இரு தட்டுகளையும் மாறி மாறி காபந்துசெய்து சாப்பிட்டு முடித்தது. அது நிறைதொப்பையுடன் நகர்ந்தபின்னரே அம்மா சாப்பிட முடிந்தது. உறவுகளின் விதிகளை பண்பாடு தீர்மானிப்பதில்லை, இயற்கை தீர்மானிக்கிறது.
சிம்பா அன்பான மனிதர்களை மட்டுமே பார்த்திருக்கிறது. மூத்த நாய்களிடம் கடிவாங்கியதுகூட இல்லை. ஆகவே முற்றிலும் அன்பாலான இனிய உலகம். அது மானசீகமாக நாய்க்குட்டிதான். அருகே வந்து படுத்துக்கொண்டு ‘நான் சின்னக்குட்டியாக்கும்’ என்று அடிவயிற்றை காட்டியது. துள்ளி துள்ளி கவ்வி ‘வெளையாடுவோமா’ என்றது. ஓடிப்போய் திரும்பி வந்து ‘என்னைய துரத்துவியா?”என்று கேட்டது.
இந்நாட்களில் புதிய கனவுகள் பல எழுந்தன. புதிய திட்டங்கள் உருவாகி வந்தன. கனவுகளின்மேல் தொற்றிக்கொண்டுதான் என்னால் முன்னகர முடியும். அவை மிகப்பெரியவையாக இருக்கையில்தான் என் விசையும் அதிகரிக்கிறது.
இங்கே அமர்ந்திருக்கையில் இதுவரை செய்தவற்றை தொகுத்துக்கொள்கிறேன். அவற்றைப் பற்றிய பெருமிதம் எனக்கு இருக்கையிலேயே மேலும் மேலும் என்றே உள்ளம் தாவுகிறது. இதுநாள் வரையிலான வாழ்க்கையில் ஆற்றலின் பெரும்பகுதியை படைப்புக்கு, அதுசார்ந்த உளக்குவிதலுக்கே செலவழித்திருக்கிறேன். ஆனால் ஆற்றலின் ஒரு பகுதியை நம்மைச் சூழ்ந்திருக்கும் அற்பத்தனங்களை, சிறுமைகளை விலக்கவும் செலவழித்திருக்கிறேன். அது ஓர் இழப்புதான். ஆனால் வேறுவழியில்லை. இனிவரும் நாட்களில் மேலும் குறைத்துக்கொள்ளவேண்டும். முழுமை என ஒன்றில்லை, ஆனால் அதுநோக்கிச் சென்றுகொண்டே இருக்கவேண்டும்
காஞ்சிகோயில் பண்ணைவீட்டுக்கு வரும்போதெல்லாம் நான் உணரும் ஒன்றுண்டு. முன்பு கேரளத்தில் அத்தனைபேரும் அவரவர் தோட்டங்களிலேயே வாழ்ந்தனர். ஊர் எனச் சொல்லப்படுவதே தோட்டங்களின் தொகைதான். தெரு என்னும் அமைப்பே இல்லை. நான் பிறந்து வளர்ந்தது முழுக்க எங்கள் நிலத்தில்தான்.இன்று அவ்வாறல்ல. நாம் தெருக்களில், தனி சூழ்சுவர் கொண்ட இல்லங்களில் வாழ்கிறோம். நானாவது நாலைந்து தென்னைகள் மரங்கள் சூழ வாழ்கிறேன். ஈரோட்டில் எல்லாம் பெரும் பங்களாக்களில்கூட சுற்றி கான்கிரீட் போட்டு மேலே தகரக்கூரை அமைத்து முற்றாக மூடிவிடுகிறார்கள்.
தெருவில் வாழ்வதற்கும் விளைநிலத்தில் வாழ்வதற்கும் பெரிய வேறுபாடு உள்ளது. விளையும் நிலம் மங்கலமானது, உயிர்திகழ்வது, அங்கே நாமும் விளைகிறோம்.