தியடோர் பாஸ்கரன் சந்திப்பு- கடிதங்கள்

அன்புள்ள ஜெ

விஷ்ணுபுரம் அமைப்பின் ஆசிரியர் சந்திப்பு நிகழ்ச்சிகள் மிகப்பயனுள்ளவை. நீங்கள் முக்கியமான ஆளுமைகளை மட்டுமே தேர்வுசெய்கிறீர்கள். சரியான தயாரிப்புடன் வரும் வாசகர்கள் பங்கெடுக்கிறார்கள். சிறப்பான மட்டுறுத்துதலும் இருக்கிறது. ஆகவே எல்லா சந்திப்புகளுமே மிகத்தரமானவையாக உள்ளன. உங்கள் குழுவுக்கு என் வாழ்த்துக்கள்

தியடோர் பாஸ்கரன் அவர்களின் நூல்கள் வாசித்திருக்கிறேன். கல்மேல் நடந்த காலம் எனக்கு பிடித்தமான நூல். அவரை இப்போதுதான் பார்க்கிறேன். நான் நினைத்ததை விட கொஞ்சம் வயதானவராக இருந்தாலும் ஒரு முதுநிலைப் பேராசிரியருக்குரிய ஆழ்ந்த நிதானமான குரலில் பேசுகிறார்.

அவருடைய பன்முகத்தன்மை வியக்கவைக்கிறது. சினிமா ஆய்வாளர், சூழலியல் ஆய்வாளர், சிற்ப ஆய்வாளர் என்று எல்லா தளத்திலும் சாதித்திருக்கிறார். ஒவ்வொரு துறையிலும் புதிதாக ஏதேனும் சொல்வதற்கு இருக்கிறது. மகத்தான ஆளுமை ஒருவரை சந்திக்க நேர்ந்ததற்கு மகிழ்ச்சி

கெ.ஆர்.ரகுநாதன்

அன்புள்ள ஜெ

தியோடர் பாஸ்கரன் அவர்களின் உரையாடல் அற்புதமான அனுபவமாக அமைந்தது. அவருடைய நிதானமும் அவ்வப்போது கண்களில் வந்த சிறு சிரிப்பும் மனசிலேயே நிற்கிறது

அவர் சொன்ன ஒரு விஷயம் முக்கியமானது. எழுத்தாளன் இருமுறை வாழ்கிறான். அனுபவங்களில் ஒருமுறை, அவற்றை எழுதும்போது இன்னொருமுறை. உண்மைதான். அவர் காட்டில் ஒருமுறை எழுத்தில் இன்னொரு முறை வாழ்கிறார்

இருபிறப்பாளர் என்று அறிஞர்களைச் சொல்வார்கள். அது ஒரு சாதிச்சொல்லாக இன்றைக்கு இருக்கிறது. ஆனால் உண்மையான அர்த்தத்தில் இதுதான்.ஞானத்தில் மறுபிறப்படைபவனே அறிஞன்

சுவாமி

அன்புள்ள ஜெ

தியோடர் பாஸ்கரன் அவர்களின் பேட்டி மிகச்சிறப்பாக இருந்தது .ராஜகோபால் வழக்கம்போல சிரித்தமுகத்துடன் சிறப்பாக தொகுத்து வழங்கினார். தியோடர் பாஸ்கரன் எல்லா கேள்விகளுக்கும் அழகான பதிலைச் சொன்னார். சுதந்திரப்போராட்டம் முதல் சூழலியல்போராட்டம் வரை எல்லாமே மேல்தட்டு படிப்பாளிகள் தொடங்கி நடத்தியதுதான். ஆனால் அவர்கள் பேசியதும் கருத்தில்கொண்டதும் அடித்தளமக்களின் நலனைத்தான். மேல்தட்டினர் பேசுவதனாலேயே ஒன்று மேல்தட்டுவிஷயம் ஆகிவிடாது என்று அவர் சொன்ன வரி ஒரு கூர்மையான கருத்து

சினிமா பற்றி அவர் சொன்னவை, சூழலியலில் இருக்கும் மேல்தட்டுப்பாவனைகளைப் பற்றிச் சொன்னவை எல்லாமே மிகச்சிறப்பானவை. அவருக்கு என் வணக்கம். ஒருவாசகி, லோகமாதேவி, தேசியக்களைகள் என்ற கருத்தைப்பற்றிச் சொன்னார். அதுவும் முக்கியமனா கருத்து. களை என்பது பயிருக்குத்தான். ஆனால் எல்லா செடியும் சூழலுக்குத்தேவை. களை என ஒரு செடியை முழுமையாக அழித்துவிட்டால் அது ஒரு இழப்புதான். களைகளும் பாதுகாக்கப்படவேண்டியவைதான். மிகப்புதிய கருத்து

அன்புடன்

ஜெ.அபுதுல் றஹிம்

முந்தைய கட்டுரைமுதற்கனல் – நோயல் நடேசன்
அடுத்த கட்டுரைஉடையாள்- கடிதங்கள்-4